புதிதாய் புலம்பல்

நான் மட்டும்
நனைந்திடும் வகையில்
வான் தூவிற்று மழை....
இத்தனை நீர்க்கீற்றும்,
எனை மட்டுமேன் நனைக்க?
தொட்டுப்பார்க்கும் எந்த பரப்பிலும்,
சொட்டு நீரில்லை அவள் மேனியில்.... 

வறண்ட உதட்டின் வெடிப்பும்
வயதான நெற்றியின்
வரிகளும்
திரண்டு நிலத்தில்
தேங்கி அழைக்கின்றன...
"வா மகனே,
வந்துப்பார்"
பனிக்காலத் தோல்போல
பரவிக்கிடக்கும் வெடிப்புகளை
பார்த்திருப்பது எங்கனம்?
"அம்மா,
நீர் உனக்கு மட்டுமாவது கொஞ்சம்
தேக்கி இருக்கலாம்....."
வறட்சி வெடிப்புகளின்
வழியே,
வார்த்தைகள் அனைத்தும்
ஓலங்களாய் தெரித்தன....
இந்த காட்சி,
எத்தனைக் கண்களில் ஆடி இருக்கும்?
என் கண்கள் மட்டுமேன் கரைகின்றன?
அழாதக் கண்கள் கண்டு
ஆதங்கிக்கிறேன்...
ஒருவருக்கும் இரக்கமில்லையா
உலகில்?
இரக்கமற்ற மனங்களால்தான்
ஈரமில்லாது போகிறதா
மண்?
இரக்கமில்லாதோர்க்கு
இடம் கொடுத்தும்,
தீங்கடனைத்
தீர்க்கிறது பூமி....
இவை,
இத்தனை நாட்களாய்
எல்லோரும் புலம்பியவைதாம்...
அழுது மருத்த
அவயங்களை உடையவர்கள் சொன்னார்கள்...
"நீ புதிதாய் புலம்ப ஆரம்பித்திருக்கிறாய்...."
நான் மட்டும்
நனைந்திடும் வகையில்
வான் தூவிற்று மழை....
என்வான்,
என் கண்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக