ஆவிகளுக்கு வாசம் உண்டா?

நேற்றிரவு உறங்கப்படுத்து இன்று அதிகாலைக்கு முந்திய இரவு 2 மணி வரையில் விழித்துதான் இருந்தேன். உறக்கம் வர ஆரம்பித்த முதற்சில நொடிகளில் உறங்கிக் கொண்டிருந்தேனா? இல்லையா? என்பதில் ஒரு சிறுகுழப்பம் இருக்கிறது. ஆனால் என்னால் நன்கு உணரவும், நுகரவும் முடிந்தது... ஏதோ ஒரு பௌடரின் மென்மையான மணம் தீவிரமாக எனது அறையில் வீசியது.. இந்த வேளையில் எப்படி இந்த மணம் என்ற உள்மனக்கேள்வியோடு, தலையணையில் இருந்து தலையைத் தூக்கினேன்... பின்னால் திரும்பி கதவு வாயிலைக் காண சற்று தயக்கமாக இருந்தது.... இதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முன்னரும் இவ்வாறான வாசனையை உணர்ந்திருக்கிறேன்.2006ம் ஆண்டு அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப் போது நான்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா ஒரேபக்கத்தில் படுத்திருந்ததால், அவருக்கு உடற்காயம் ஏற்படக்கூடும் என்று வைத்தியர்கள் சொன்னார்கள். அதனால் ஒடிகொலனும், பௌடரும் கலந்து அவருக்கு பூசிவிடுவேன். ஒடிகொலனும் - பௌடரும் இணைந்த மணம் வித்தியாசமானதும் மென்மையானதும்... அப்பாவின் இறப்பு என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அவரது மரணத்தின் பின்னர் பலதடவைகள் அந்த மணத்தை உணர்ந்திருக்கிறேன். அப்போதேல்லாம் என்னைச் சுற்றி ஒரு நேர்மறை சக்தி சூழ்ந்திருப்பதாக உணர்வேன்.

எனக்கு என் தந்தையே மகனாக பிறக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பிள்ளைகளையும்போல் இருந்தது. மனைவியின் மகப்பேறு நிகழ்ந்துக் கொண்டிருந்த அறையில் மருந்து மணம் கூட பெரிதாக இருக்கவில்லை. வயிற்றைக் கிழித்து மகனை வெளியில் எடுத்தப் போது நானும் அருகில்தான் இருந்தேன். எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை, அதே ஒடிகொலனும்- பௌடரும் கலந்த அந்த நூதனமான மணத்தை என்னால் முழுமையாக உணர முடிந்தது. இப்போதும் அப்பாவை நினைக்கும் போதெல்லாம் அந்த வாசத்தை உணர முடியும்.

இது ஒருபுறம் இருக்க... ஆவிகளுக்கு வாசம் பிடிக்கும் என்பது ஆவி ஆராய்சியாளர்கள் முன்வைக்கின்ற கருத்து. ஆராய்ச்சியாளர்களா? கிராமங்களில் சிறுபிள்ளைக்கு கூட இந்த விடயம் தெரியும். நான் உயர்தரம் படிக்கும் போது செயல்திட்டத்துக்காக எடுத்துக் கொண்ட பொருள் ஆவிப் பற்றிய ஆய்வு என்பதை முன்னமே பல தடவைகள் கூறி இருக்கிறேன். அப்போது நான் செய்த ஆய்வுகளில் பலவற்றில் பத்தியும், சூடமும் முக்கியமான வாசனைப் பொருட்களாக இருந்தன. இவை ஆவிகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் பொருட்கள் இல்லை. எம் மக்கள் மல்லிகைப் பூவையும், ஆங்கிலப்படங்களில் ரோஜா மலரையும் ஆவிகளின் தேசியப் பூவாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆவிகளுடன் தொடர்பு கொண்ட உண்மைக் கதைகள் என்று கூறப்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில், இந்த வாசனை முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. சில இடங்களில் சந்தேகமான வாசனை ஏற்பட்டதன் பின்னர்தான், அங்கு ஆவிகளது நடமாட்டம் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு தோழி, தமது ஆவிகள் குறித்த அனுபவத்தை என்னிடம் சொன்னார். அவர் நெடுகாலமாக இந்த அமானுஷ்யங்களுடனேயே வாழ்ந்துவந்தவர். அதைப்பற்றி ஒரு தனிப்பதிவை எழுதுவதாக அவருக்கு உறுதியளித்து இபோது 2 வருடங்களுக்கு மேல் இருக்கும். இன்னும்தான் எழுதுகிறேன். என்றாலும், அவர் கூறிய பெரும்பாலான கதைகளில் பொதுபொருளாக இருந்தது பத்திக்குச்சி.

சரி, நேற்று இரவு நான் சுவாசித்த மணம் என்னவாக இருக்கும்? இன்று நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் நான் உறக்கத்தில் இருந்து எழுந்ததாகவே நினைக்கிறேன். ஒரு சொற்ப நேரத்துக்குள் ஒரு கனவும் ஏற்பட்டிருந்தது. அந்த கனவில் ஒரு டப்பாவில் இருந்து பௌடர் கீழே கொட்டப்படுகிறது... ஆனால் இங்கு ஏற்படுகின்ற கேள்வி, முட்டை – கோழி பிரச்சினை போன்றது... பௌடர் கொட்டியதைப் போன்று கனவு வந்ததால்தான் வாசனை வந்ததா? இல்லை, அந்த வாசனை ஏற்பட்டப் போது பௌடர் கனவில் வந்ததா?.... நான் கண்விழித்து தலையணையில் இருந்து தலையைத் தூக்கியப் போதும் கூட அந்த வாசனை சிறிது நேரம் இருந்தது.

கனவில் வாசனை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறதா? என்று தேடினால்... உண்டு... பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அறிய முடிந்தது. ஆனால் வெகுசொற்பமானவர்களுக்கு மாத்திரமே கனவில் காணும் பொருட்களின் வாசனையை உணர முடியும் என்று பல ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில் நாம் உறங்குகின்ற சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களின் தாக்கம் கனவில் தென்படுவதுண்டு.. அதில் ஒரு பெருங்குழப்பமும் உண்டு. நாம் உறங்கும் போது நாம் அறியாமல் நிஜத்தில் நடக்கின்ற செயற்பாடுகள், எம் கனவில் பிரதிபலிக்கும்.


இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது, காரணம், இப்போதும் அவ்வாறே நிகழ்கிறது. என் பாடசாலைக் காலங்களில் அதிகம் வெறுக்கின்ற நிகழ்வு, அப்பாவினால் அதிகாலையில் நிகழ்த்தப்படும். அப்பா எழுந்த உடனேயே வானொலியை ஒலிக்கச் செய்வார். எந்நேரமும் பழையப் பாடல்களே ஒலிபரப்பாகும் அந்த வானொலி எனக்கு எரிச்சலையும், உற்சாகம் இன்மையையும் ஏற்படுத்தும். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடலுக்கும், அந்த தருணத்தில் நான் கண்டுக் கொண்டிருக்கும் கனவுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுவிடும். ஆனால் குழப்பம் ஆரம்பிக்கும் இடத்தைப் பாருங்கள்... அப்பா வானொலியை ஒலிப்பதற்கு முன்பிருந்தே நான் கனவில்தான் இருந்திருப்பேன். அந்த கனவு சுற்றிவளைத்து ஒரு பாடலை உணர்த்தும்... அந்த பாடல், நிஜத்தில் ஒலிபரப்பாகும்...

இது ஒரு நுட்பமான காலவேறுப்பாட்டைக் கொண்டதாக இருக்கிறது. முழுமையாக விளக்க ஆர்வமாக இருக்கிறேன். காரணம் இதைப்பற்றி நீண்டநாட்களாக நான் குறிப்புகளை எடுத்து வைத்திருக்கிறேன். பிரிதொருநாள் விரிவாக எழுதலாம்.

உண்மையில் நாம் உறங்கு முழுநேரமும் கனவு காண்பதில்லை. எம் கனவு உலகின் நேரத்தில் 5 நிமிடங்கள் கூட இருப்பதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. உலகின் நேரத்துக்கும், கனவின் நேரத்துக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு கணக்கில் சொன்னால், உலகில் ஒரு நிமிடம், கனவில் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமிருக்காலாம். ஒரு கணக்கிற்குதான், உறுதியாக இல்லை. அதனால் நான் ஒரு முழு திரைப்படம் அளவுக்கு கனவுகளை கண்டுவிடுகிறேன். என் கனவில் வர்ணங்கள் இருக்கும், விசேடமாக பின்னணி இசை ஒலிக்கும். கனவைப் பற்றிக்கூட மிக நீண்டதாக எழுதிக் கொண்டிருக்கலாம். நான் எழுதிய சிறுகதைகள் பல என் கனவுகளாகவே அமைந்திருக்கின்றன. என் கனவுகள் சிலவற்றைக்கூட பேஸ்புக்கில் பதிந்திருக்கிறேன். அவற்றுக்கு ஆன்மீக ரீதியான விளக்கங்கள் பல கிடைத்திருப்பது ஒரு வித்தியாசமான உணர்வு.

இப்போது விடயத்துக்கு வருகிறேன்..., செவ்வாய்கிழமை காலையில் மகனுக்காக பௌடர் டப்பா ஒன்றை வாங்கிவந்தேன். சாதாரணமாக பௌடர் வாங்கும் சம்பவங்கள் மனதில் பதிவதில்லை. அன்று காலை கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பௌடர் டப்பாவை எடுத்தப் போது, அங்கிருந்த பல டப்பாக்கள் விழுந்துவிட்டன. அந்த சம்பவம் நினைவில் இருந்தது. நேற்று மாலை வீடு திரும்பும் போது, கதவைத் திறந்ததும் ஒரே பௌடர் மணம். உள்ளே விராந்தை முழுக்க என் பெருமைக்குரிய மகன் பௌடரை கொட்டி வைத்திருந்தான். பௌடரை கொட்டி அதன் மேல் கார் ஓட்டி விளையாடுவது அவனுக்கு பிடித்தவிடயம்.

இந்த சம்பவங்கள் என் கனவை உந்தி இருக்கும் என்றாலும், கனவில் நின்று நான் விழித்தப் பின்னரும், அந்த அதிகாலைக்கு முந்தியப்பொழுதில் நான் சுவாசித்த வாசனை எங்கிருந்து வந்திருக்கும்? அது என் அறையில் அத்தனை அருகில் எப்படி வந்தது? விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வுகளின் முடிவுகளை வைத்து மனதைத் தேற்றிக் கொண்டாலும்கூட, சந்தேகம் வலுக்கிறது.

இதோ, இப்போதுகூட அப்படியான ஒரு மென்மையான வாசனையை உணர்ந்துக் கொண்டே இந்த பதிவை முடிக்கிறேன்...

2 கருத்துகள்: