சூரியன் FMமும் நானும்... பாகம் 4

2006ல் அப்பா இறந்தப் பின்னர், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எம்மை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெற்றன... 

முகாமைத்துவமும், வேலைக்காலத்தில் அப்பாவிற்கு எதிரிகள் போல் இருந்தவர்களும் அதற்கான பெரும் சூழ்ச்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டனர். 


மாற்றுவழிகள் எவையும் இல்லாமல், செய்வதறியாத மனநிலையுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அது...

அப்போது பலரும் எங்களுக்கு சொன்ன ஆலோசனை, பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷை சந்தித்து விடயத்தை கூறி உதவிகோரலாம் என்பதாகவே இருந்தது. 

அதற்கு முன்னர் அவ்வாறான அரசியல்பிரமுகர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கற்பனையும் செய்ததில்லை.

அவரை சந்திப்பதற்கு அவருடன் நெருங்கிய யாருடைய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். 

ஊரில் இருந்த அவரது பிரதிநிதி, அவரது பிரத்தியேக செயலாளர் என்று பலரையும் அணுகியும் இறுதிவரையில் அவரை தொடர்பு கொள்ள முடியாமலேயே இருந்தது..... 

எப்படியோ ஒரு வருடத்தின் பின்னர், சூரியனில் இணைந்து முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு செல்கிறேன். 

முதல்நாள் இரவு முழுவதும் அலுவலகத்தில் கழித்துவிட்டு, காலை உறங்கச் சென்ற சில நிமிடங்களிலேயே எழுப்பப்பட்டு அந்த செய்தியாளர் சந்திப்பு விருப்பம் இன்றி அனுப்பப்பட்டேன். 

ஏதேட்சையாக இடம்பெறும் சில சம்பவங்கள் எம் மனநிலையை மாற்றவல்லன. அன்றும் அப்படித்தான், என் வகுப்புத்தோழிகள் பலருக்கு, தாதியர் பயிற்சிக்கான நியமனங்கள் அன்று வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, பின்னர் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் உடன் ஏனைய செய்தியாளர்களும் சென்று கதைத்தோம்... 

அதற்கு முன்னர் அவருடன் பல தடவைகள் தொலைபேசியில் கலந்துரையாடி இருக்கிறேன். நேரில் கண்டதில்லை என்றாலும், மிகவும் நெருக்கமான ஒரு நண்பராக அந்த நாட்களில் பழக்கம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

சூரியனில் இருந்து வந்திருக்கும் விக்கி என்று அறிந்து கொண்டதன் பின்னர் அவர் என்னைக் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. 

சில நிமிடங்களில் அந்த சந்திப்பு முடியவே அருகில் ஒருவர் வந்தார்.... 

'சுரேஷ்ட்ட சொல்லி எதுவும் செய்து கொள்ளணுமா? இருந்தா சொல்லுங்க... செய்துதாறன்' என்றார்... 

அவர் வேறு யாரும் இல்லை... நாங்கள் வசித்துவந்த வீட்டில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொண்டிருந்த போது, வடிவேலு சுரேஷிடம் அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றியவர்களில் ஒருவர்.... 

'உங்களுக்கு ஏதும் தேவையா இருந்தா சொல்லுங்க அண்ணன்.... சொல்லி செய்துதாறன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தேன்....

ஒருகாலத்தில் எட்டாத உயரமாய் இருந்த ஒன்றை அடைவதற்கு இந்த ஊடகம் எனக்கு செல்வாக்கை வழங்கியது... என்ன, அதற்குள் காலம் கடந்து போய் இருந்தது... 

என்றாலும், எந்த மனிதரும் எப்போதும் தாழ்வாகவே இருக்க மாட்டார்கள், அவர்களும் உயரும் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கையை அன்றைய நாள் ஏற்படுத்தியது... 

வாழ்க்கை என்பது மிகவும் விசித்திரமானது.... நேற்றைய பொழுதைப் போன்றே நாளைய பொழுதும் அமைந்து விடுவதில்லை. திருப்பம் எந்த தருணத்திலும் வரும்.. அங்குதான் வாழ்க்கையின் சுவாரஷ்யமே தங்கி இருக்கிறது. 

அந்த செய்தியாளர் சந்திப்பில் இடம்பெற்ற மற்றுமொரு உன்னதம், ஜீவா அக்கா.... சூரியனில் இணைந்த பின்னர் நான் முதன்முதலில் பழக ஆரம்பித்த வெளியூடக செயற்பாட்டாளர்.. அந்த நாட்களில் அவர் தினக்குரலில் இருந்தார். அவரும் மலையகம் என்பதால் இயல்பாகவே ஒரு அன்பு உருவானது... அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும், அடிநாதமாக ஒரு அன்புத்தொடர்பு இருந்து கொண்டே வந்துள்ளது. முக்கியமான கட்டங்களில் அவரது ஆலோசனைகள் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன. எனக்குள் மறைவாக இருந்த எழுத்தாற்றலுக்கு அதிக களம் வழங்கி ஊக்கப்படுத்தியவர். இப்போதும் என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். 

அதே, செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், வடிவேலு சுரேஷும் ஆற்றிய உரைகள் இப்போதுகூட எனக்கு நினைவிருக்கிறது. 

'மலையக மக்களுக்கு ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருந்தும், அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை' என்றார் நிமால் சிறிபால டி சில்வா....

அவர்கள் இருவரின் உரைகளின் முக்கியமான விடயங்களை ஒரு செய்தியாக தொகுத்து வழங்கிய போது, 70 சதவீதமான பகுதி நீக்கப்பட்டுவிட்டது. தணிக்கை அல்ல... நேரப்பிரச்சினை... வானொலி செய்தி என்பது இதுதானா என்ற அதிருப்தி நிலையின் உச்சம் அன்றைய தினம்தான் புரிந்தது. 

வானொலி ஊடகத்தில் செய்திக்காக ஒதுக்கப்படுகின்ற நேரம், இலக்கு வைக்கப்படும் நேயர்கள் என்ற அடிப்படையில், எவ்வளவு சுருக்க முடியுமோ, அவ்வளவு சுருக்கமாக செய்தியை சொல்லி ஆக வேண்டும். 

அங்கு பந்திப்பந்தியாக எழுதிக் கொண்டிருந்தால் எடுபடாது. நியாயமும் இல்லை.

ஆரம்பத்தில் அது ஒரு பிரச்சினையாக நான் எடுத்துக் கொண்டாலும், பின்னர் உண்மை நிலையை அனுபவரீதியாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது. 

வானொலி செய்திகள், நேயர்களால் மீட்டுப் பார்க்க முடியாதவை. பெரும்பாலும் ஒருமுறை, அரிதாக இரண்டு தடவைகள் மாத்திரமே ஒரு செய்தி வாசிக்கப்படும். 

ஒரு நேயர் செய்தியை கேட்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதனை நினைவில் வைத்துக் கொள்ளும்படி அல்லது புரிந்து தகவலை உள்ளீர்த்துக் கொள்ளும் வகையில் செய்திகள் அமைய வேண்டியது கட்டாயமாகும். 

அந்த வகையில் சூரியன் ஆரம்ப காலத்தில் இருந்தே சிறப்பான செய்தி வடிவத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அதற்கான நுட்பங்களை நான் இந்திரஜித் அண்ணாவிடம் இருந்து படிப்படியாக கற்றுக் கொண்டேன்.

செய்திகளை அறிக்கையிடும் நுட்பங்களைப் பற்றி விபரிப்பதென்றால் ஒரு புத்தகமே எழுதலாம். 

அண்மையில் எமது குழுவில் இணைந்துக் கொண்ட புதியவர்களுக்கு வழிகாட்டுவதற்காக செய்திக் கட்டமைப்பு குறித்த சில வரையறைகளை எழுதி கொடுக்கலாம் என்று நினைத்து தட்டச்சி செய்ய ஆரம்பித்தேன். அங்கம் அங்கமாக பிரித்து பாதி அளவில் எழுதி பக்கங்களை எண்ணினால், 40 பக்களைத் தாண்டி இருந்தது... பின்னால் உதவும் என்று அப்படியே வைத்திருக்கிறேன்..... 


குறிப்பு: 

தொடர்ந்து இவ்வாறு சூரியனில் எனது அனுபவம் குறித்து எழுதுவது எனக்கு சுகமாக இருக்கிறது. பழைய நினைவுகளை மீட்டுப்பார்ப்பதும், என் அனுபவம் இன்னும் சிலருக்கு உதவும் என்பதும் என்னளவில் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்ளும் விடயம். ஆனாலும் இதனை வாசிக்கின்றவர்களுக்கு இது எத்தனை பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன். அதிகம் வாசிக்கும் அநேகமானவர்கள் கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல விரும்புவதில்லை. இந்த தொடரில் வேறு எந்தவிடயங்களை சேர்க்க வேண்டும் போன்ற குறிப்புகளை, மின்னஞ்சல் (vikey18@gmail.com) அல்லது பேஸ்புக் உட்பெட்டி வாயிலாக அறியத்தாருங்கள்... ஊக்கமாகவும் இருக்கும். 


தொடரும்.... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக