தனியன் காதல்



மெசெஞ்சரில் காட்டும் அதே அவசரத்தை இங்கும் காட்டிக்கொண்டிருந்தேன். அவள் வகுப்பில் எனக்கு மிக அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒருமுறை என்னிடம் எதையாவது கேட்கவோ, சீண்டவோ, பென்சிலால் என்னை அல்லது என் புத்தகத்தை தட்டவோ அவள் தவரவில்லை.

பெரும்பாலும் எங்களது பேச்சு வகுப்பு ஆசிரியரின் உடை தொடர்பிலும், படிப்பிக்கும் போது அவர் விடும் பிழைகள் தொடர்பிலுமாக இருந்தன.

எனக்கு அப்படி இன்னொருவரை கிண்டல் செய்வது, முக்கியமாக அவர் அறியாமல் அவரை பரிகாசம் செய்வதெல்லாம் பிடிப்பதில்லை.

ஆனால் இவளென்பதால் அவை பிடித்திருந்தன.


சும்மா பிடித்திருந்தன என்று மட்டும் சொன்னால் எப்படி? இரசித்துக் கொடிருந்தேன்.

எனக்கும் அவளுக்குமான சம்பாசணைகளுக்கு இடையிலான நேர வித்தியாசத்தை கணிக்க முடியவில்லை.

கணக்கிட முயற்சிக்கும் சிறு நொடியிலும் அந்த இடைவெளி கரைந்து போய்விட்டிருக்கும்.

ஆனாலும் அடுத்த சம்பாசணைக்கான ஏக்கம் மேலோங்கும்.

அவள் இன்னும் இன்னும் நெருக்கமாகிக்கொண்டுதான் இருந்தாள்.

அவளுக்கு என்னை பிடிக்காமல் இல்லை.

ஆனால் எனக்கு எதுவோ போதவில்லை.

எல்லாம் விரைவாக வேண்டும்.

மெசஞ்சரிலும் அப்படித்தான்.

இந்த நொடி இனி இப்படியாகவே திரும்பவும் வராது என்ற நம்பிக்கை எத்தனை கொடுமையானது தெரியுமா?  அனுபவித்துப்பாருங்கள்.

வழி சொல்கிறேன். ஒரு அழகான பெண்ணோடு வட்செப்பிலோ மெசெஞ்சரிலோ தொடர்ந்து பேசுங்கள்.

அவள் உங்கள் மனைவியாக வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.

அப்படி வாய்ப்பு கிடைக்காது. ஆனால் கிடைக்கவே கிடைக்காது என்றில்லை.

அரிதாக ஆனால் நிச்சயமாக எப்போதாவது வாய்க்கலாம்.

அப்படியான ஒரு பொழுதில், இன்னும் கொஞ்சம் நேரம்தான் அவள் ஒன்லைனில் இருப்பாள் என்பதை நீங்கள் அறிந்துக் கொண்டதன பின்னர், உங்களுக்கு இடையிலான பேச்சின் சுவாரஷ்யத்தையும் இன்பத்தையும் உங்களால் அனுபவிக்கவே முடியாது.

நாளையும் அவள் வருவாள் என்பது நிஜம்தான்.

ஆனால் உங்கள் மூளை அதனை ஏற்காது.

அவள் உங்களுடன் உண்மையாகவும், நேர்மையாகவும் கூட பேசிக்கொண்டிருக்க கூடும்.

ஆனால் உங்களுக்கோ, விருப்பமே இல்லாமல் மென்மையாக ஒரு ஐயம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

எப்படி அகற்றினாலும் அந்த ஐயம் அகழாது.

பின்னர் அதனை அகற்ற நினைக்க மாட்டீர்கள்.

அவளுடனான உங்களின் ஒவ்வொரு வார்த்தை பிரயோகத்திலும் அந்த ஐயம் உடன்கட்டையேறும்.

ஆனால் சாகாது.

அதனால்தான் உங்கள் உறவு செத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.....

நீங்கள் எப்படியோ? தெரியவில்லை.

ஆனால் எனக்கென்றால் பேசிக்கொண்டிருக்கும் அந்தத் தருணத்திலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட வேண்டும்.

எல்லாம் என்றால், நட்பு, நெருக்கமான நட்பு, மிக நெருக்கமான நட்பு, அதைவிட நெருக்கமாகி பின்னர் காதல், திருமணம், குழந்தைகள் என்று எல்லாம், அப்போதே நடக்க வேண்டும்.

அது எப்படி சாத்தியம்? எல்லாம் உறுதிப்பாடுதான்.

அதற்கெல்லாம் அவள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

மானசீகமாக. அதுவும் என் நச்சரிப்பு தாங்காமல் அவள் ஒப்புகொண்டதாகவும் இருக்க கூடாது.

எல்லாம் இயல்பாக நடக்க வேண்டும்.

அவள் அன்பாக சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருக்கக்கூடும்.

ஆனால் நான் ஆதாரத்தை தேடுவேன், கேட்பேன்.

அவளும் கொடுப்பாள். சத்தியம் செய்வாள்.

ஒரு கட்டத்தில் அவள் செய்யும் சத்தியத்தைக்கூட நான் நம்பமாட்டேன்.

அவள் ஒரு சமயத்தில் வெறுத்துப் போய்விடுவாள்.

பின்னர் உங்களுக்கே தெரியுமே, என்ன நிகழும் என்று.

இப்படி பல பத்து அனுபவங்கள் எனக்குண்டு.

ஆனால் முதல் முறையாக மெய் நிகர் உலகத்தில் அல்லாமல் மெய்யான ஒரு உலகத்தில், மெய்யான ஒரு அழகியோடு, மெய்களுக்கு இடையில் இடைவெளிக் குறைந்த ஒரு இதத்துடன் மெய்யாகவே உறவாடிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் பொய்யான ஒரு ஐயம் என்னைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அத்தனை அழகி என்னிடம் ஏன் இவ்வளவு நெருக்கமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

தொடரும்.........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக