கதிர்காமத்தில்

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.

எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.

திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.

பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். 'உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'


கதிர்காமம் செல்வதற்கு கூட அப்படித்தான் தோன்றியது... 2 தினங்களுக்கு முன்னர் அங்கு செல்லவேண்டும் என்று தோன்றியபோது, கையில் போதுமான பணம் இருக்கவில்லை. 'போக வேண்டுமாக இருந்தால் பணமும் கிடைக்கும்' எண்ணி இருந்தேன். அதற்கு ஏற்ப ஏதோ ஒருவழியில் அங்கு சென்று திரும்ப போதுமான பணம் கிடைத்திருந்தது.

தம்பியையும் கூட்டிக் கொண்டும் இருவருமாக சனிக்கிழமை இரவு கதிர்காமம் சென்றோம்...

திட்டமிட்டபடி எல்லாமே நடந்தது...

பெரியக்கோவில், செல்ல கதிர்காமம், ஏழுமலை என்று எல்லா இடத்துக்கும் போய் அன்றிரவே திரும்பிவிட்டோம்...

பயணம் நிம்மதியாக இருந்தது.

கதிர்காமத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்ற ஆதங்கம் (எனக்கு மட்டும் இல்லை) கடவுள் இந்துதான், ஆனால் பூஜை முறைகள் பௌத்தமோ என்னவோ... அங்கு கண்டிப்பாக பௌத்த ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது... அந்த ஆதங்கம் இன்னும் அதிகரிக்கும் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் இந்தமுறை அப்படி இல்லை.

கிரிவேஹெர என்று சொல்லப்படுகின்ற சூரன்கோட்டை

அங்கு இந்துவும் - பௌத்தமும் கலந்த ஒரு கலவை உருவாகிக் கொண்டிருக்கிறது. சிங்களவர்கள் எல்லோரும் அரோஹரா என்று சொல்கிறார்கள். மலையேறுகின்றவர்களிடம் இருந்து 'புதுசரணை' என்று கேட்க முடியவில்லை. பௌத்த கோவில்களைத் தவிர வேறு எங்கும் புதுசரணை வாசகங்களை கேட்க முடியவில்லை.

அங்கு ஒலிபெருக்கிகளில் ஒலிக்கப்படுகின்ற பாடல்கள் தமிழும், சிங்களமும் கலந்ததாக இருக்கின்றன. சிங்களப் பாடல்களில் பெரும்பாலும் முருகனையும், இந்துக் கடவுள்களையும் போற்றுகிறார்கள்.

ஆனால் அங்குள்ள சிறுசிறு கோவில்களுக்கும் புதுப்புது வரலாறுகளை சொல்கிறார்கள். செல்ல கதிர்காமத்துக்கு வரலாற்றை சொன்ன ஒரு பிக்கு, 'சோலை' என்ற சொல்தான் திரிபடைந்து செல்ல என்று உருவானதாக குறிப்பிட்டார். சோலை என்ற தமிழ் சொல்லை ஏற்றுக் கொண்டார்களே என்று திருப்தி அங்கு கிடைத்தது. ஆனால் அவர்களின் சிங்களத்தை விரைவாக விளங்கிக் கொள்ள சிரமப்பட்டேன்.

இன்னொருபக்கம் இராவணனுக்கு கோவில் அமைத்து அதற்கு ஒரு பெரிய வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். தனி சிங்களத்தில் அங்கு எழுதப்பட்டதை என்னால் வாசிக்க முடியவில்லை. தேடி பதிவிடுகிறேன். கதிர்காமத்துக்கும் இராவணனுக்குமான தொடர்பு என்ன? என்று புரியவில்லை.

மாணிக்க கங்கையில் மக்கள் நீராடிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து சில மீற்றர்களுக்கு அப்பல் யானைகள் நீராடின. யானைகளின் லத்திகள் நீரில் மிதப்பதைக் கண்டும் மக்கள் தொடர்ந்து நீராடிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தம் என்பதற்கும் புனிதம் என்பதற்குமான வித்தியாசம் இருப்பதாக படுகிறது. புனிதமானவை சுத்தமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது போல. புனிதம் என்பது மனிதனின் எண்ணத்தில்தான் இருக்கிறது. எனக்கு அந்த புனிததத்தின் மீது அவ்வளவு பற்றில்லை. கங்கையை அணுகி இருக்கவில்லை.

எப்படியோ, அந்த ஒருநாள் வாழ்க்கை மிக வித்தியாசமாக இருந்தது. தங்குவதற்கான ஒழுங்கை எமது செய்தியாளர் சதீஸ் ஏற்பாடு செய்திருந்தார். அன்னதானங்களில் உண்டோம். அது ஒரு புது அனுபவம். அங்கு வந்திருந்தவர்களில் பலர் பெரும் கோடீஸ்வரர்களைப் போல தெரிந்தார்கள். கார்களை மணற்தரையில் நிறுத்தி அதற்கு அருகிலேயே கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி இருந்தார்கள். எங்கும் எளிமை நிறைந்திருந்தது.

மதங்களை ஒரு 'ஒழுக்க நெறியாகவே' எப்போதும் பார்த்துவருகிறேன். கடவுள் பற்றிய குழப்பம் இருக்கிறது என்னிடம். இப்போதெல்லாம் அந்த குழப்பத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டேன். தீரவேண்டியயை தீர்க்கப்படும். பூஜைகளில் கலந்து கொள்வதெல்;லாம் கிடையாது. அதில் என்னால் உடன்பட முடிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும், எல்லா நம்பிக்கையிலும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நிச்சயமாக உணரமுடிகிறது. அண்மைக்காலமாக அந்த அனுபவம் கிடைத்தபடி இருக்கின்றன. அந்த உணர்வு கதிர்காமத்திலும் கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக