பார்த்தீபனும் பட்டாசும்


காலை 7 மணி....

பதுளை நகரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாய் உள்ள இரண்டு பெரிய மாடி வீடுகளுக்கு இடையில் சம்மந்தமே இல்லாமல் இருந்த குட்டிச்சுவரை பார்த்தபடியே மேன்மாடத்தில் நின்றிருந்தார் முருகேசு ஐயா...

ஒரு அடி அகலத்தில் சில அடி நீளத்துக்கும் உயரத்துக்குமாக இருந்த அந்தச் சுவர் வேலை தெரியாதவர்களாலோ, அல்லது அவசரஅவசரமாகவோ கட்டப்பட்டிருந்தமை தெளிவாகத் தெரிந்தது..


பக்கத்து வீட்டின் கீழ் தரையில் நடந்து வந்த சின்னசாமியை கண்டதும் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, ஏதோ முணங்கிக் கொண்டே வீட்டுக்குள் போனார்...

குட்டிச் சுவரை இடது கையால் தடவியபடி, முருகேசு ஐயா நின்றுவிட்டு மறைந்த மேன்மாடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, சின்னசாமியும் வீட்டுக்குள் நுழைந்தார்...

முருகேசு ஐயா மீண்டும் வெளியில் எட்டிப்பார்த்த போது, சின்னசாமியும் மேலே பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்ட இருவரும் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்கள்..

இப்போதுதான் இவர்கள் இப்படி...

20 வருடங்களுக்கு முன்னர் முருகேசு பதுளையில் இருந்து ஒரு தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகஸ்தராக இருந்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு உதவியாளராக இருந்தவர்தான் சின்னசாமி..

அவர் உள்ள10ர்வாசி..

இருவருக்கும் 60 – 65 வயதுகளுக்கு இடையில் இருக்கும்...

தொழிலைத் தாண்டி இருவருக்கும் இடையில் நீண்டகால நட்பு இருந்தது..

ஒரே குடும்பமாக பழகினார்கள்.

இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள்...

இருவரும் தங்களின் தொழில்களில் இருந்து ஏக சமயத்தில் ஓய்வு பெற்றனர்...

ஓய்வுப் பணத்தை வைத்து அருகருகே இரண்டு காணிகளை வாங்கினார்கள்..

அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது..

இந்த இரண்டு வீடுகளும் அமைந்துள்ள காணியின் எல்லைப் பிரச்சினையால் ஏற்பட்ட முறுகல்..

20 வருடங்களாக தணியவில்லை..

இரண்டு காணிகளுக்கும் இடையில் உள்ள வரைபடத்தில் வராத ஒரு அடி அகலமுள்ள காணித்துண்டினால் வந்த பிரச்சினை இது...

அப்போது எழுப்பப்பட்டதுதான் அந்த சுவர்...

இந்த இரண்டு வீடுகளுக்கும் முன்னால் இன்னுமொரு வீடும் உண்டு...

முத்தையன் அந்த வீட்டு உரிமையாளர்...

அவரும் இவர்களுக்கு நல்ல நண்பர்தான்..

இப்போது இரண்டு வீடுகளுக்கும் உறவுப்பாலமாக இருப்பது அவரது குடும்பந்தான்...

இந்த காணிகளை இருவரையும் வாங்கச் செய்ததே அவர்தான்...

முருகேசும், சின்னசாமியும் ஒருவரை ஒருவர் கண்டும் காணாமல் போனபோது, முன்வீட்டில் இருந்து இருவரையும் பார்த்து கொண்டு ஏதும் அறியாதவராய் இருந்தார்...

அவர் நினைவு பிறழ்வடைந்து 20 வருடங்கள் ஆகின்றன....

'குண்டு வெடிச்சிருச்சி.....'

முத்தையன் சத்தமாகக் கத்தினார்...

முருகேசும், சின்னசாமியும் முத்தைய்யனை பார்த்துவிட்டு சாதாரணமாகத் திரும்பிச் சென்றனர்...

கடந்த 20 வருடங்களாக முத்தையன் பேசும் இரண்டே வார்த்தைகள் இவைதான்...

முருகேசும், சின்னசாமியும் காணி எல்லைப் பிரச்சினைக்காக 20 வருடங்களுக்கு முன்னர் சண்டை பிடித்துக் கொண்டிருந்த போது, முத்தையன்தான் அவர்களை விலக்க முயற்சித்தார்...

முரடர்களாக இருந்த முருகேசுவும், சின்னசாமியும் மாறிமாறி அறைந்த போது நிலத்தில் விழுந்த முத்தையன் 'குண்டு வெடிச்சிரிச்சி' என்றுதான் கத்தினார்...

அப்போது தப்பிய நினைவு...

20 வருடங்களாகியும் இன்னும் திரும்பவில்லை...

இவர்கள்தான் இப்படியென்றால் அவர்களின் குடும்பத்தினர் அப்படி இல்லை...

இன்னும் அவர்களுக்கிடையில் நல்ல உறவு நீடிக்கிறது...

வெளிப்படையாக முருகேசுவுக்கும், சின்னசாமிக்கும் தெரிய அவர்கள் பழகிக் கொள்வதில்லை இல்லை என்றாலும், முத்தையன் வீட்டில் வைத்து அவர்கள் ஒன்று கூடுவது வழக்கம்..

சின்னசாமியின் மகனுக்கு இரண்டு பிள்ளைகள்...

பார்த்திபன், படித்துவிட்டு வீட்டில் இருக்கிறான்... 25 வயதாகிறது...

இன்னும் தொழில் கிடைக்கவில்லை...

விஞ்ஞானி என்றும் வெட்டி என்றும் வௌ;வேறு பெயர்கள் அவனுக்கு உண்டு...

அவனது தங்கை பார்வதி... பெயர் பிடிக்காமல் பாரு என்று சுருக்கிக் கொண்டாள்...

பார்வதி என்றால் அவள் பத்திரகாளியாக மாறிப்போவாள்...

முருகேசனுக்கு ஒரே பேத்தி....

பெயர் கீதா... மிக அழகானவள்... முத்தையனின் பேரன் கார்த்திக்... முத்தையன் செய்த இரும்பு கடை வியாபாத்தை இப்போது அவனே பார்த்துக் கொள்கிறான்...

பொறுப்பான பையன்....

கீதாவுக்கு தாத்தா முருகேசன் மீது மிகப்பிரியம்...

இருவருக்கும் இடையில் மிக நெருங்கிய அன்பிருந்தது...

முருகேசனுக்கான எல்லா கவனிப்பு வேலைகளையும் கீதாவே முன்னின்று பார்த்துக்கொள்வாள்..

அவரையும் யாரும் கடிந்து கொள்ள அனுமதிக்கமாட்டாள்...

முத்தையனுக்கு ஏற்பட்ட கதிக்கு தான்தான் காரணம் என்ற குற்றஉணர்வில் சில வருடங்களுக்கு முன்னர் கார்த்திக்குக்கும், கீதாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்போவதாக முருகேசர் வாக்குறுதி வழங்கிவிட்டார்..

இதனை அவர்களது குடும்பத்தார் முக்கியமாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை..

ஆனால் கீதாவோ, தாத்தாவின் மீதுள்ள அன்பில் கார்த்திக்கையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியில் இருந்தாள்...

மேன்மாடத்தில் இருந்து உள்வீட்டில் நுழைந்து மாடிப்படியில் கீழ் இறங்கிய போது வந்த வாசனைதான் முருகேசருக்கு இன்று தீபாவளி என்றதையும் நினைவுபடுத்தியது..

ஏதேதோ நினைவு வந்தவராய் வீட்டு வெளிவாசல் நோக்கி நடந்தார்...

20 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற தீபாவளி தினத்தில்தான் அவருக்கும், சின்னசாமிக்கும் சண்டை ஏற்பட்டது...

'எத்தன வருசமா கேட்டுட்டு இருக்கன்.. ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்கோ'

சின்னசாமியின் பேரன் பார்த்தீபன், கீதாவிடம் நாளாந்தம் சொல்லிக் கொண்டிருக்கும் காதலை இன்னும் சொல்லிக் கொண்டிருந்தான்...

'சொந்தமா ஒரு பட்டாசு வாங்கி வெடிக்கக் கூட உன்னால முடியல்ல.. நீ எப்படி என்ன வச்சி காப்பாத்துவ'

கீதாவின் பதில் முருகேசனுக்கு கோபத்தை வரவழைத்தது...

நண்பனின் பேரன் அவமானப்படுத்தப்படுவதை அவர் விரும்பி இருக்கவில்லை...

'கீதா... வீட்டுக்குள்ள போ...'

சத்தமாக கத்தினார் முருகேசர்...

கீதாவும் தலையை குனிந்தவாறே வீட்டுக்குள் ஓடி போனாள்...

கீதாவுக்கு பார்த்தீபன் மீது காதல் இல்லாமல் இல்லை...

எல்லாம் தமது தாத்தாவுக்காகத்தான்..

ஆனால் கார்த்திக் இன்னொரு பக்கம்...

அவன் சின்னசாமியின் பேத்தி பாருவை பார்த்துக்கொண்டிருக்கிறான்..

பாருவிடம் காதலை சொல்லி பல மாதங்களாக பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்...

கீதா மாடியில் உள்ள தாத்தாவின் அறைக்கு சென்று, மேன்மாடத்தில் எட்டிப்பார்த்த போது, சின்னசாமியின் வீட்டில் இருந்து எறியப்பட்ட கடிதம் ஒன்று வீழ்ந்து கிடந்தது..

'எனக்கு தெரியும், நீ கார்த்திக்கதான் லவ் பண்றனு.. ஆனா அவன் என்னோட தங்கச்சிக்கு ரூட்டுவிட்டுட்டு இருக்கான்.. வேணுனா அவன்ட மொபைல்ஃபோன வாங்க பாரு... பாரு.. பாரு... எவ்வளவு கெஞ்சி இருக்கானு தெரியும்...'

அந்தக் கடிதத்தை பார்த்தீபன்தான் எழுதி இருந்தான்...

இப்படி ஒரு கடிதம் வரும் என்று தெரிந்துதான் கீதா உடனே மேன்மாடிக்கு ஓடி வந்திருந்தாள்...

அதே கடிதத்தின் பின்பக்கத்தில் இவளும் பதில் அனுப்பினாள்...

'நீ சொல்றது உண்மையா இருந்தா பிறகு பார்க்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி நீ உன் சொந்த உழைப்பில வாழ்ந்து காட்டு. பட்டாசு வாங்கக் கூட தாத்தாக்கிட்ட காசு கேட்டுகிட்டு... சை'

அந்தக் கடிதம் கீதாவைப் போலவே, பார்த்தீபனுக்கு வலியை தந்தது...

கீதாவுக்கு வேண்டியதெல்லாம் கார்த்திக் அவனது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதாய் இருந்தது..

ஓரத்தில் கொஞ்சம் காதலும் இருந்தது...

ஆனால் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளும் உறுதியில் இருந்ததாலோ என்னவோ, அவன் மீது அவளுக்கு காதலெல்லாம் ஒன்றும் இல்லை...

எல்லாம் தாத்தாவுக்காக..

கீதாவின் கடிதத்தை கண்டு கொந்தளித்துக் கொண்டிருந்த பார்த்தீபன் ஒரு முடிவுக்கு வந்தான்...

சொந்தமாக ஒரு பட்டாசு வாங்குவது... இல்லை செய்வது...

நேரம் 8 மணி ஆகிக் கொண்டிருந்தது..

வெளியில் கதிரையில் அமர்த்தப்பட்டிருந்த முத்தையனுக்கு இனி வெயில் தாங்காது என்பதால் அவரது மகள் அவரை எழுப்பி அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்தாள்...

'குண்டுவெடிச்சிருச்சி'

'க்ம்க்ம்...'

சலித்துக் கொண்டே போனாள் சரோஜா...

அதுதான் முத்தையனின் மகளின் பெயர்..

அவளுக்கு தீபாவளிக்குப் பலகாரம் தயாரிக்கும் பணி அதிகமாய் இருந்தது...

தன் வீட்டின் மேன்மாடத்தில் இருந்த கீதா, சின்னசாமியின் பேத்தி பாரு கைப்பேசியுடன் வெளியில் வருவதை கண்டாள்...

முன்வீட்டில் கார்த்திக்கும் அப்படியே நின்றிருந்தான்...

பார்த்தீபன் கடிதத்தில் சொல்லி இருந்தது தெரிந்தது...

கீதா மெதுவாக முத்தையாவின் வீட்டுக்கு செல்லலானாள்...

பார்த்தீபன் வெளியில் தெருவோரமாக வெடித்து சிதறிக்கிடந்த பட்டாசுத் துண்டுகளை எல்லாம் திரட்டிக் கொண்டிருந்தான்...

'என்ன.. ரோட சுத்தம் பண்றீயா?'

கீதா கேட்ட போதும் பார்த்தீபன் அமைதியாக இருந்தான்...

' மிஸ்டர் விஞ்ஞானி பாத்தீபன்'

என்று கீதா அழைத்ததும் பார்த்தீபன் மெதுவாக சிரித்தான்...

அவனது இலட்சியமே விஞ்ஞானி ஆவதுதான்...

சில பொருட்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறான்...

வெளியில் காட்டினால் பேஸ்புக்கில் திட்டித்தீர்ப்பார்கள் என்ற அச்சத்தில் அப்படியே வைத்திருக்கிறான்..

கீதா முத்தையன் வீட்டின் மேல் மாடிக்கு சென்ற போது, கார்த்திக் ஷோஃபாவில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே இருந்தான்....

கீதா ஷோபாவின் பின்னால் மறைந்து கொண்டாள்..

மறைந்திருந்து அவன் யாருடன் பேசுகிறான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பது அவளின் எண்ணமாக இருந்தது...

கார்த்திக் வேறெவற்றிலும் அவதானமற்றவனாக இருந்தான்...

அவன் ஜன்னல் வழியாக முன்வீட்டில் பாரு அன்போடு வளர்க்கும் பச்சை ரோஜா பூக்கள் தெரிந்தன...

கார்த்திக் இதுநாள்வரையில் சின்னசாமியின் வீட்டுக்குச் சென்றதில்லை...

அமைதியாய் இருப்பது, அடுத்தது வியாபாரம்... இதனைத் தாண்டி அவன் நேரம் செலவிடுவது பாருவோடு செட்டிங்கில்தான்...

வேறு யாருடனும் பேசுவதில்லை...

பாருவும் சொல்லக்கூடிய அளவுக்கு அழகானவள்... சட்டம் படித்துக் கொண்டிருக்கிறாள்...

இலகுவாக யாருடனும் பேச மாட்டாள்..

அடிக்கடி முத்தையாவின் வீட்டுக்கு வந்து போனவளாக இருந்தாலும், கார்த்திக் காதலை சொன்னபிறகு வருவதில்லை...

அவளைப் பொறுத்தவரையில் கார்த்திக்கின் காதலை ஏற்பதா? இல்லையா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை...

கார்த்திக் போலவே அவளும் தன் வீட்டில் இருந்த ஷோபாவில் அமர்ந்து கைப்பேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்...

கடைசியாக கார்த்திக்கிடம் இருந்து வந்த கேள்வி...

'ப்ளீஸ்.. இனி நான் உன்ன டிஸ்ட்டர்ப் பண்ண மாட்டேன்.. என்ன லவ்பண்ண விருப்பம்னா யஸ் என்றும் இல்லையான நோ என்றும் ஒரே ஒரு வார்த்தைய மட்டும் அனுப்பு... இனியும் என்ன காக்க வைக்காத...'

அதையே அவள் திரும்ப திரும்ப படித்துக் கொண்டும்..

'யஸ்' என்று எழுதி அழிப்பதும், பின்னர் 'நோ' என்று எழுதி அழிப்பதுமாக இருந்தாள்...

அவள் இந்த நிமிடம் வரையில் ஒரு முடிவுக்கு வந்திருக்கவில்லை..

ஆனால் அவள் தொடர்ந்து அப்படியே எழுதுவதும், அழிப்பதுமாக இருந்தாள்...

சின்னசாமியின் வீட்டின் கீழ் பகுதியில் இருந்த பார்த்தீபனின் ஆராய்ச்சி கூடத்தில் தான் திரட்டி வந்த பட்டாசுகளில் இருந்த மருந்துகளை எல்லாம் திரட்டி 200 கிராம் அளவுக்கு சேர்த்திருந்தான் பார்த்தீபன்..

பத்திரிகைகள் சிலவற்றை ஒன்று சேர்த்து ஒட்டி ஒரு பொட்டலம் போல செய்து, அதன்அடியில் மண்ணை நிரப்பி, பின்னர் பட்டாசுகளில் இருந்து திரட்டிய வெடி மருந்துகளை நிரப்பினான்...

பழைய பட்டாசு திரிகளை பிணைத்து ஒரே நீண்ட திரியாக செய்து, அந்த வெடிபொட்டலத்துடன் சேர்த்து, நீண்ட துணி ஒன்றினால் இறுகச் சுற்றி முடிய மேலும் கீழுமாக போட்டுப் பிடித்தான்...

அவன் பட்டாசைத் தயாரித்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தான்...

அடுத்தது அதனை வெடிக்க செய்ய வேண்டும்...

இதனை இரகசியமாக செய்ய வேண்டும் என்றே நினைத்தான்...

தோல்வி என்றால் அவமானம் தன்னோடே போய்விடும் என்பது அவன் எண்ணம்...

சின்னசாமி தன் அறையில் இருந்து கதிரை ஒன்றில் அமர்ந்து பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார்...

மறுபக்கம் முருகேசர் தமது வீட்டில் இருந்து அந்த சுவரையே பார்த்துக் கொண்டிருந்தார்...

கீதா கார்த்திக் அமர்ந்து கொண்டிருந்த ஷோஃபாவுக்கு பின்னர் மறைந்திருந்தாள்..

இதுவரையில் அவனது கைப்பேசியில் இருந்து எதனையும் அவளால் காணமுடியவில்லை...

இந்தத் தருணத்தில் பார்த்தீபன் மீது கீதாவின் காதல் மேலோங்கி இருந்தது...

கார்த்திக் பாருவை காதலிப்பது உறுதி என்றால், பார்த்தீபனிடம் தமது காதலை சொல்லிவிடலாம் என்ற எண்ணமும் தைரியமும் கீதாவிடம் இருந்தது..

கார்த்திக் இன்னும் தன் கைப்பேசியை பார்த்துக் கொண்டே இருந்தான்...

மெசங்சரில் மறுபக்கம் பாரு எழுதுவதும், பின்னர் அழிப்பதுமாக இருப்பதை மெசஞ்சரில் ஒரு குறியீடு காட்டிக் கொண்டே இருந்தது...

பாரு இந்த தருணத்தில் 'நோ' என்று டைப் செய்து அனுப்புவதற்கான பொத்தானை அழுத்தத் தயாராக இருந்தாள்...

முத்தையன் தன் வீட்டில் படுத்திருந்தபடியே 'குண்டுவெடிச்சிருச்சி' என்றார்...

பார்த்தீபன் தான் தயாரித்த பட்டாசைக் கொண்டு குட்டிச் சுவரின் ஒரு ஓரத்தில் வைத்து பற்றவைத்தான்...

பாரு 'நோ' என்று எழுதியதை செய்ததை அழித்துவிட்டு, பின்னர் யெஸ் என்று எழுதலானாள்...

படார்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

பட்டாசு வெடித்தது......

இது வழமையாக வெடித்துக் கொண்டிருந்த பட்டாசுகளிலும் பார்க்க அதிக சத்தமாக இருந்தது...

அதிர்ச்சியில் பாரு 'யஸ்' என்று டைப் செய்திருந்ததை அப்படியே அனுப்பிவிட்டாள்...

வெளியில் இருந்த வந்த சத்தம் என்னவென்று பார்ப்பதற்காக கார்த்திக் தன் கைப்பேசியை ஷோஃபாவிலேயே போட்டுவிட்டு ஓடினான்...

மனப்பிறழ்வடைந்து கட்டிலில் கிடந்த முத்தையா, 'குண்டு வெடிச்சிருச்சி' என்றபடி எழுந்து அமர்ந்தார்...

சின்னசாமியாவும், முருகேசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்து குட்டிச் சுவர் இடிந்து வீழ்ந்திருந்தது...

ஷோபாவில் வைக்கப்பட்டிருந்த கார்த்திக்கின் கைப்பேசியை எடுத்து கீதா பார்த்துக் கொண்டிருந்தாள்...

அதில் கார்த்திக்கின் கடைசி கேள்விக்கு பாரு அனுப்பி 'யஸ்' என்ற பதில் இருந்தது...

கீதா பெருமூச்சு விட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்...

மீண்டும் ஷோபாவை நோக்கி திரும்பி தன் கைப்பேசியை எடுத்து பார்த்து பாருவிடம் இருந்து வந்த 'யஸ்' என்ற பதில் கண்டு கார்த்திக் ஆனந்தத்தில் குதித்தான்...

அதே மகிழ்வோடு சின்னசாமியின் வீட்டை நோக்கி ஓடினான்..

எல்லோரும் வெளியில் இருந்தார்கள்...

முருகேசரும் சின்னசாமியும் அருகருகே நெருங்கி இருந்தார்கள்...

அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்..

கார்த்திக் பாருவிடம் போய் தன் கைப்பேசியைக் காட்டினான்.

தலையில் கையை வைத்த பாரு...

'சொரி... அதிர்ச்சியில மாற்றி அனுப்பிட்டன்' என்றாள்...

ஆனால் பார்த்திபனின் கைகளை கீதா இறுக பிடித்திருந்தாள்...

விஞ்ஞானி ஜெயிச்சிருந்தான்...

'முருகேசா, சின்னா... அடிச்சிக்காதீங்கடா...'

முத்தய்யா இருவரையும் நோக்கி ஓடிவந்து மூவருமாக கட்டி அணைத்துக் கொண்டார்கள்...

'எப்படிடா இத்தன வருசத்துக்கு பிறகு உனக்கு நினைவு வந்துச்சி' முருகேசர் கேட்டார்..

'அதான் குண்டு வெடிச்சிரிச்சே...'

முத்தய்யா சொன்னார்...

எல்லாரும் சிரித்தார்கள்...

'ஆனா.... அதுதான் என்னோட முடிவும்'

கார்த்திக்கை பார்த்து பாரு சொன்னாள்...

கார்த்தில் காற்றிப் பறக்க ஆரம்பித்திருப்பான்...

நான் யரென்று சொல்லவில்லையே...

இந்த வீடு முழுக்க சுற்றித்திரியும் சுதந்திரம் இதுநாள் வரையில் எனக்கு மட்டும்தான் இருந்தது..

என் பெயர் பப்பி...2 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்கு பன் ஒரு கதையை முழுமையாக வாசித்து மகிழ்வடைகிறேன் நண்பா .உண்மையாகவே பாராட்டுகிறேன் .அருமை அருமை அருமை

    பதிலளிநீக்கு