இறைவி....

அண்மைய காலமாய் நான் கடந்து கொண்டிருக்கும் வலி நிறைந்த சூழ்நிலை இதுதான்..

ஆண்களின் ஒவ்வொரு செயலும் ஏன் பெண்களை அதிகம் பாதிக்கிறது..

கடந்த வருடம் வித்தியாவில் ஆரம்பித்தது இந்த வலி...

இப்போது வினுப்பிரியா, சுவாதி என்றும்.. இடையில் பலரும்...



வலி தொடர்ந்தபடியே செல்கிறது...

இந்த வலியை நிறையவே எழுத நினைத்தாலும், ஓரிடத்துக்கு மேல் நகராமலேயே இருந்தது..

நிறுத்தி விட்டு நான் நகர முற்பட்டேன்..

நேற்றிரவு இறைவி பார்த்தேன்...

சில நொடிகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது...

மனைவியையும் கூடவே வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அதன் வலி இன்னும் அதிகம்...

உலகத்தை விடுவோம்...

எமது சமுகத்துக்குள்ளேயே இந்தப் பெண்களின் நிலை ஏன் இப்படி இருக்கிறது?

எமது வீட்டில் திருவிழா தீபாவளி என்று விசேட தினங்களில் அதிகாலையிலேயே எழுப்பி விடுகிறார்களே என்று ஆத்திரப்படுவேன்...

கண்விழிக்கும் போது அம்மா தேநீரோடு நிற்பார்...

அவர் எத்தனை மணிக்கு விழித்திருப்பார்? நேற்றிரவு எத்தனை மணிக்கு உறங்கி இருப்பார்?

நான் அப்பா தம்பிகள் எல்லோரும் புத்தாடையோடு வெளியில் கொண்டாட்டத்தில் இருக்க, அம்மா மட்டும் புகைக்குள் அடுப்பை ஊதிக் கொண்டிருப்பார்...

அவசர அவசரமாக குளித்து அவருக்காக வாங்கிய புது உடையை உடுத்தத் தயாராகும் போது வீட்டுக்கு முன்னால் தேரோ, கரகமோ நிற்கும்..

அப்பா கடிந்து கொண்டிருப்பார்...

உடுத்துவதற்கு இலகுவாகப் பழைய உடை ஒன்றையே உடுத்திக் கொண்டு அம்மா வந்து நிற்பார்...

பொருளியல் பாடத்தில் நாட்டின் 'தலா வருமானம்' குறித்த ஒரு பாடம் இருக்கும்..

இந்த 'தலா வருமான கணிப்பீட்டின் போது வீட்டுத் தலைவிகளின் உழைப்பு கருத்தில் கொள்ளப்படுவதில்லை'

க.பொ.த. உயர்தர வகுப்பில் பொருளியல் பாடத்தில் இந்த வசனத்தைப் படிக்கும் போது நெஞ்சில் 'சுருக்' என்றது...

ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 15 மணித்தியாலங்கள் எங்களுக்காக உழைக்கும் அம்மா என்ற ஒரு பெண்பற்றிய நினைப்பு அது...

இது ஒரு துளிதான்...

இறைவி ஒரு மரணவலி...

நான் எப்போது ஆணாதிக்கவாதியாக இருக்க விரும்பியதில்லை....

அதேநேரம் நான் பெண்மைவாதியே, பெண்ணுரிமை போராளியோ கிடையாது...

ஆனால் எனக்கே தெரியாமல் எனக்குள்ளும் கொஞ்சம் ஆணாதிக்க மனப்பாங்கு இருந்து கொண்டிருந்தது என்பதை இந்த இறைவி நினைக்கவைத்தாள்..

கோபம், அவசரம், காதல் என ஆண்களின் உணர்வுகள் எல்லாவற்றிலும் பெண்களுக்கு அதீத பாதிப்புகள்....

சுரேஷ் என்பவன் ஒரு நொடி நிதானமாய் இருந்திருந்தால் வினுப்பிரியா தற்கொலை செய்திருக்க மாட்டாள்...

ராம்குமார் என்பவன் ஆத்திரப்படாமல் இருந்திருந்தால் சுவாதி செத்திருக்க மாட்டாள்...

இறைவியிலும் அதே நிலைதான்...

படத்தைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை..

நீங்களே பாருங்கள்..

இறைவி கண்திறந்தாள்...

எனக்குள் இருந்த கொஞ்ச ஆணாதிக்கத்தையும் அவளால் எறிக்க முடிந்தது...

இறைவி வாழ்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக