அவளின் கடிதம் 1

நீ வேண்டாம் என்றுதான் சொல்வாய் என்று எனக்கு தெரியும்..

உன் அளவுக்கு உன்னிலை அறிந்தவள் நான்...

இருந்தாலும் என்னைப்பற்றிக் கொஞ்சம் யோசி...

எனக்கும் பாவக்கறைகள் உண்டென அறி...


காலையில் எழுந்து கண்ணாடி யன்னல் வழியே உடற்பயிற்சி செய்தவன் கண்டு உனை என விழித்தேன்..

பாதையில் நடக்கும் ஆடவர் எல்லாம் நீயாக இருக்குமோ என்று நிமிர்ந்து பார்க்கிறேன்...

தலை, பணிந்து செல்ல தடுமாறுகிறது..

கால்கள் படிதாண்ட துடிக்கின்றன..

இதோ, இப்போது கூட இந்த கணினி கூடத்தின் முதலாளி நீயாக இருப்பாயோ என்றே சந்தேகிக்கிறேன்..

இப்படி எத்தனை ஆண்களை சந்தேகிப்பேன்..

திருட்டுக் கொடுத்தவன் பார்ப்பவர்களை எல்லாம் சந்தேகத்து பாவம் சேர்ப்பதைப் போல, நானும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறேன்..

இத்தனை ஆண்களையும் பார்த்து உனக்காக சேர்த்து வைத்து சிரிப்பின் சில துளிகளை சிந்தித் தொலைக்கிறேன்...

பின்னர் வருந்துகிறேன்...
ஏமாந்து போகிறேன்...
ஏமாற்றிவிடுகிறேன்...

அன்றும் அப்படித்தான, பேருந்து சீட்டு கொடுத்தவன் என் விரல் பிடித்துக் கொண்டபோது, நீயாய் இருப்பாயோ என்று சில நிமிடங்கள் அனுமதித்துவிட்டேன்...

சீ... கூசுகிறது...
எத்தனை பாவம் இது...

உன் பாவத்தை பற்றி யோசிக்கும் நீ, என்மீது இப்படித்தான் பாவக் கற்களை ஏற்றி வைப்பாயா?
சுமைதாங்க முடியவில்லை உயிரே..

ஒரு பெண்ணுக்கு உரிய எல்லாமே இழந்து விடுகிறேன்..
எந்த பெண்ணாகிலும் இங்கனம் வழிவந்து தருவாளா நிழற்படம்?
நான் தருகிறேனே...

நானே உனை இவ்வளவு நம்புகையில் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாய்?
முகம் பார்க்காமல் வந்த அன்பும், உருவம் காணாமல் கொண்ட காதலும், காணும் போது எங்கனம் காணாது போகும்?

நீயாய் நானும், நானாய் நீயும் மாறிப்போய், தொலைந்து கிடந்து, சுகம் கண்டு, காணாது வதைப்பட்டு, இப்போது உனைக் காண துடிக்கிறேன்...
எனைக் காட்ட நினைக்கிறேன்...

இனியும் மறுப்பேன்?

இலக்கே இல்லாமலேயே நகர்கிறோமா?
இலட்சியமே இல்லாமல் காதலித்து தொலைத்தோமா?
வெட்கமே இல்லையா உனக்கு?
ஏன் இப்படி சொன்னாய்...?

காதலித்து, காணாமல் போய், தொலைந்தே போய், தேடப்படாமலேயே இருந்துவிடுவதுதான் நீ 'காதல்' என்பதற்கு தரும் விளக்கமா?
மூடனாய் இராதே முதல்வனே..

உன் தொலைதல் இன்பத்தை நான் துடைத்தெறிய மாட்டேன்..
தொலைவதுதானே உன் சுகம்...?

வா...
என்னோடு வா...
என்னுள்ளே தொலைந்து போ...
என்னுள்ளே ஒழிந்துபோ...
காதலுக்குள் தொலைந்து நான் காணாமல் போகாதே...
என்னுள்ளே தொலைந்து இன்புற்றிரு..
இப்போது என் படம் பார்..
தலையில் ஆரம்பி..
தலைமுடி கோது..
நெற்றியல் இதழ் மோது...
விழி விழி பொருத்து...
என் இதழ் பார்,
தடையை பதம் பார்...
கழுத்தை விரல் வைத்து அள...
காதலில் திளை,
காமுறு,
கட்டியணைக்க நினை,
நேரில் காண துடி...
இனி எனக்கு பதிலிடு..
காத்திருக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக