புதையல் - சிறுகதை - விக்கிவிக்னேஷ்

அந்த வீட்டுக்கு அதீத வயதாகி இருந்தது...
அங்கிருந்த மனிதர்களைப் போலவே...

நெடுந்தெருவில் தூரப் பயணத்தின் பின்னர், ஆரம்பிக்கும் ஒரு தனிவழிப் பாதையின் முடிவில் அந்த வீடு அமைந்திருந்தது.

பாதை ஓரங்களில் புற்கள் படர்ந்திருந்தாலும், வீட்டு வாசல் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சிறிய வாயிற்கதவு, சில இடங்களில் பூச்செடிகள், விளக்கு வைப்பதற்கான ஒரு பெட்டி, ஆங்காங்கே உடைந்த கூரை, திறந்த கதவு.... மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையானவற்றை மாத்திரம் கொண்டிருந்தது அந்த வீடு.