சிம்டாங்காரன் - தாளத்தின் ஜாலம்ஒரு குத்துப்பாட்டை, மேற்கத்தேய சங்கீதத்தின் முக்கியமான நுட்பங்களைக் கொண்டு எப்படி உருவாக்கலாம் என்றால், அது சிம்டாங்காரன்தான்...

பாடலின் மொழி என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை. அதுதேவையும் இல்லை. தமிழ் பாடல் என்றாலும் கூட அதன் வரிகளை நான் கேட்பதில்லை, இசையே எமக்கு முதன்மை.....

விஜய் ரசிகர்களுக்காக ஒரு குத்துப்பாட்டும் வேண்டும்.. ஆனால் தனக்கே உரிய இசை அந்தஸ்த்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.


சிறுவயதில் நான் வாசித்த ஏ.ஆர்.ரகுமானின் செவ்வி ஒன்றில், குத்துப்பாட்டைக் கேட்டாலே தலைவலிக்கிறது என்று சொல்லி இருப்பார். அதுமுதல் நான் குத்துப்பாட்டுகளை ஒருதடவைக்கு மேல் கேட்பதில்லை.

குத்துப்பாட்டு தமிழ் இசையின் அடையாளம் 'ம' என்றெல்லாம் வருவீர்கள் என்றால் மூக்கை உடைக்கும் அளவுக்கு எனக்கு ஆத்திரம் வரும்.

சீனாவின் பாரம்பரிய இசை உருவாக அடிப்படையாக அமைந்ததாக நம்பப்படுகின்ற பண் இசை என்ற தமிழ் இசை வடிவத்தை உயிரோடு புதைத்துவிட்டு வந்த குடியினர் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

விசயத்துக்கு வருவோம்...

சிம்டாங்காரன் பாடல் ஆரம்பிக்கும்போதே சும்மா ஏதோ என்று அந்த சொற்களை பாடிவிடாமல், அங்கு ஒரு சிங்கோபேசன் நுட்பத்தை புகுத்தி இருக்கிறார் ரகுமான்.

பாடல் முழுவதும் ஒரே தாளத்தில் அமையவில்லை. பொதுவாக மேற்கத்தேய இசையின் தாள அமைப்பு இலகுவானதாகவே இருக்கும். ஆனால் அதற்குள் ஒரு ஏமாற்றுவித்தையும் உள்ளது. இதனை இசை ஜாம்பவான்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு இசையை கேட்பவர்கள் அதனை உனடியாக உணர்ந்துக் கொள்ளாத படிக்கும் ஆனால் ரசிக்கும் படிக்கும் செய்திருப்பார்கள். அந்தவித்தை இங்கும் நிகழ்ந்திருக்கிறது..

நமது உடலுக்கு என்று ஒரு தாளக்கட்டு இருக்கிறது. அது நாம் வாழ்ந்த சூழ்நிலையின் அடிப்படையில் நாம் ஏற்றுக் கொண்டு எமது இயல்பாக மாறிவிட்டது. அந்த தாளக்கட்டு 4/4 என்பர். பின்னர் ¾ என்ற தாளக்கட்டும்தான்.

சிங்களவர்களின் உடல் தாளம் 6/8ஆக இருக்கும் என்பது என் கணிப்பு. குத்துப்பாட்டுகள் பெரும்பாலும் 3/4வில் இருக்கும். அது இன்னும் வேகமாகும் போது 6/8ல் வரும். (அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்) சிங்கள பாடல்கள் அநேகமாக 6/8ல் இருக்கும். சிங்கள மொழியில்தான் 6/8 அதிகம் துஸ்பிரயோகமாகியுள்ளது. அதனால் எம்மால் பெரும்பாலான சிங்கள பாடல்களை ரசிக்க முடிவதில்லை.

சிம்டாங்காரனின் 4/4 , ¾ ஆகிய இரண்டு தாளக்கட்டுகளும் கொம்போ டைம் என்ற அடிப்படையில் மாறிமாறி வரும். மற்றையது பாடலின் கதி அல்லது டெம்போவும் மாறுப்பட்டு வருகிறது.

இந்த பாடலின் முதல் ஒரு நிமிடம் 20 செக்கண்டுக்கு முற்பட்ட பகுதி விஜய் பிரியர்களுக்கானதாக இருக்கும். இந்த பாடலை விஜய் ரசிகர்கள் காட்சிப் படுத்தல் அடிப்படையிலேயே விரும்புவார்கள். காட்சிப்படுத்தல் சொதப்பினால் அவர்கள் பாடலைத்தான் குறைசொல்வார்கள்.

ஒரு நிமிடம் 20 செக்கண்டுக்குப் பின்னர் எங்களுக்கான பாடல் அது. ஏ.ஆர்.ரகுமான் பிரியர்களுக்கான ஏற்பாடுகள் அங்குதான் ஆரம்பிக்கிறது.

தந்திவாத்தியங்களின் ஒழுங்கமைப்பு அல்லது எரேஞ்ச்மெண்ட்ஸ் எந்த இசையையும் ஒரு மேன்மையான தளத்துக்கு கொண்டு சென்றுவிடும்.

ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். தந்திவாத்தியங்களுடன் புல்லாங்குழலை பயன்படுத்தும் போது அது இயல்பாகவே மேற்கத்தேய இசை வாசனையை சேர்த்துவிடும். ஆனால் பயன்படுத்துகின்ற புல்லாங்குழல் தெரிவில் அதனை இந்திய கலாசாரத்துக்குள் கொண்டுவந்து விடும் பக்குவம் இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் கைவந்தக்கலை.

குத்துப்பாட்டுக்குள்ளும் ஒரு கவுன்டர்பொய்ன்ட் ஹார்மனியுடனான தந்திவாத்திய மற்றும் காற்றுவாத்திய கலப்பை நிகழ்த்தி இருக்கிறார் ரகுமான்.

இன்னுமொன்று, அந்த பாடலில் பறை அல்லது டேப் அல்லது தப்பு பயன்படுத்தப்பட்டிருக்கின்ற விதம்... என்பேரு படையப்பாவில் எப்படி அந்த வாத்தியம் பயன்படுத்தப்பட்டது? பல்லேலக்காவில் எப்படி? கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா பாடலில் எப்படி? ஒவ்வொரு பாட்டிலும் ஏ.ஆர்.ரகுமான் இந்த வாத்தியத்தை வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்தி இருப்பார்.

கடல் படத்தில் ஏலே கீச்சான் பாட்டில் தீடீர் திடீர் என்று 6/8 தாளக்கட்டுக்கு மாறி பறை பயன்படுத்தப்பட்டிருக்கும். அது அந்த பாட்டை திரும்பத்திரும்ப கேட்கவைத்தது(என்னை)

அச்சம் என்பது மடைமையடா படத்தின் சோக்காலி பாட்டிலும் அதே நுட்பம் இருக்கும்.

சிம்டாங்காரனில் பறை வாத்தியம் விரல்களால் பருவுவது போன்று வாசிக்கப்படும் ஒலி அலாதியாக இருக்கும்.

எனது எண்ணத்தின்படி அந்த ஒலி வெறும் பறை ஒசை மட்டும் இல்லை. அதற்கு பின்னால் அதே நுட்பத்தில் சிந்திசைசர் ஒலியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப்பாடலை ஒருவித ரகசிய நிலையில் வைத்திருக்கும் சப்தம் அதுதான்.

இன்னும் ஏதேதோ எழுத நினைத்தேன், ஒன்றை கேட்க ஒன்று மறக்கிறது. எதுவும் தோன்றினால் பதிவிடுகிறேன்.

இந்த கருத்துகள் எல்லாமே எனது குறுகிய இசை அறிவுக்கு எட்டிய விடயங்கள்தான்.. ஒரு இசை நிபுணர் இந்த பாட்டை கேட்டு, எழுதுவாராக இருந்தால் மேலும் எழுதலாம்.

எத்தனையோ பாடல் இருக்க ஏன் இந்த பாடலைப் பற்றி மட்டும் எழுத வேண்டும்? என்று கேட்டால், இந்த பாடலை சிலர் கேலி செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அவ்வளவுதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக