சூரியன் FMமும் நானும்... பாகம் 3


இசையைத் துறந்த இரண்டு வருடங்கள்... 

எனக்கு எப்போதும் எதனையும் முதலாம் திகதி ஆரம்பிப்பதில் கொள்ளை விருப்பம். அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையெல்லாம் இல்லை. 1 என்பது ஆரம்ப புள்ளி என்ற மனநிலை இருக்கும். எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கக்ககூடும்.

ஜுன் 28ம் திகதியே என்னை சூரியன் செய்திப்பிரிவில் இணையுமாறு அழைக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைக்கால நினைவின் பலனாக பாட்டி ஒருவரை 'கொலை' செய்துவிட்டு, மரண செய்தி அனுப்பி, 1ம் திகதி இணைந்துக் கொள்வதாக கூறி இருந்தேன்.


அதன்படியே முதலாம் திகதி தொழில் ஆரம்பித்தாலும், 3ம் திகதி மட்டில் அதன்பால் ஈடுபாட்டை காண முடியாமல் இருந்தது.

வேலையில் இருந்து விலகிச் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு அலுவலகம் சென்ற போதுதான் முதன்முறையாக செய்தி ஆசிரியரின் ஆசனம் வழங்கப்பட்டது.

ஒரு ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய முதல்தகுதி, என்னைப்பொறுத்தவரையில், அந்த தொழில்பால் அவருக்கு இருக்கும் ஈடுபாடும், மரியாதையும்.
எனக்கு மரியாதை இருந்தது. ஆனால் ஈடுபாடு அவ்வளவாக இருக்கவில்லை. ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடே பயணத்தை ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஊடகத்துறை என்ற விடயத்தில் வேறுபாடுகளை நான் சற்று அறிந்திருந்தாலும், முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை. குறிப்பாக வானொலி செய்திக்கும், பத்திரிகை செய்திக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தையே என்னால் அறியப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆரம்ப நாட்களில் செய்திகளை தயார்ப்படுத்தும் போது மிகவும் சிரமப்பட்டேன்.

முழக்கம் ஊடகப்பிரிவில் இருந்த காலப்பகுதியில் ஒரு மாதாந்த சஞ்சிகையை தனித்து சில மாதங்கள் நடத்தி இருக்கிறேன். அது ஒரு சுவையான, பெறுமதியான அனுபவம். அந்த துணிச்சலை முழுமையாக எனக்குள் ஏற்றியவர் சமுக செயற்பாட்டாளர் புஸ்பகாந்தன் தான். அப்போது சுயமாக எதனையும் தேடிக்கற்றுக் கொள்ளும் பழக்கமும், ஆர்வமும் என்னில் பெருகி இருந்தது. இப்போதும் அந்த ஆர்வம்தான் எனக்கு கைக்கொடுக்கிறது.

இசையில் சாதிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த வேட்கையோடே கொழும்புக்கு சென்றிருந்தாலும், செய்தி ஆசிரியர் ஆசனத்தில் அமர்ந்து பணியாற்ற ஆரம்பித்த ஆரம்ப நாட்களும், நான் விட்ட பிழைகளும், என் அறியாத்தனமும், செய்தி ஊடகத்தின் வலிமை, பெறுமதி, முக்கியத்துவம், உன்னதம், முக்கியமாக நான் வகிக்கின்ற பதவியின் முக்கியத்துவம் என்பவற்றை அனுபவரீதியாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

அதனால் ஆரம்ப நாட்களில் என்னை மிகவும் தாழ்மையாக உணர்ந்தேன். என் நண்பர்களிடம் தொலைபேசியில் அழைத்து என்நிலை குறித்து சொல்லி வேதனைப் பட்டிருக்கிறேன்.

அறியாமை என்பது தெளிவான ஆரம்பமே. எல்லாம் அறிந்துக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இதனை சரியாக புரிந்துக் கொண்டவர்கள் இருவர் என்னுடன் இருந்தார்கள்.. ஒருவர் இந்திரஜித், மற்றையவர் டிட்டோ குகன்... அவர்கள் இருவரும் என் அறியாத்தனத்தை பெரிதுப்படுத்தவில்லை. மாறாக அதனை சுட்டிக்காட்டினார்கள். வேறுசிலரோ அதனை வைத்து என்னை தாழ்மைப்படுத்த முற்பட்டனர்.

நான் சிலருக்கு ஆலோசனை சொல்கிறேன், நான் சிலரிடம் ஆலோசனை பெறுகிறேன். எனக்கு ஆலோசனை சொல்பவர்களும் ஆலோனைப் பெற சிலரை பேணுகிறார்கள். இங்கு கரைக்கண்டவர்கள் என்று யாரும் இல்லை. கரைக்கண்டுவிட்டதாக நினைத்துக் கொள்பவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. அவ்வாறானவர்களால் பலர் மட்டம் தட்டப்படுகின்றனர். அதில் இருந்து தப்பித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.

நாட்கள் செல்லசெல்ல இதுதான் வாழ்க்கை என்று தீர்மானமாகிவிட்டது. இந்த தொழிலின் சூட்டை உணர்ந்து சுவைக்க பழக்கிக் கொண்டேன். என் தொழிலை நான் நேசிக்காத வரையில் எனக்கு அது சூடாகவே இருந்தது. எப்போது தொழிலை நேசிக்க ஆரம்பித்தேனோ, அப்போது முதல் அதன் இனிமையான பக்கம் என்னை ஆட்கொண்டுவிட்டது. என்னை நான் இந்த பாதையில் முன்னேற்றிக் கொள்ள முடிவு செய்தேன். இந்த தொழிலை நேசிக்க ஆரம்பித்த நாள்முதல் எனக்கு டயரி எழுதும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.. நாளாந்தம் டயரியை எடுத்து எழுதலாம் என்று நினைத்தால், எதனை எழுதுவது என்ற கேள்விதான் வரும்... ஆனால் மனம் நிரைவாக இருக்கும்.

என் குறைகள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவற்றில் முதலில் இருந்து தீர்க்க வேண்டிய விடயங்களை வரிசைப் படுத்தினேன். ஊடகத்துறையில் நான் எப்போது எனக்கான முன்மாதிரியாக கருதுவது டிட்டோகுகன் அண்ணாவை. செய்திகளை அவர் கையாளும் முறை, சேகரிக்கும் முறை, தொடர்புகளை பேணும் முறை என்று அனைத்தையும் அப்படியே எனக்குள் பிரதிபண்ணிப் பழகினேன்.

அந்த காலத்தில் எனக்கான பெரிய பிரச்சினையாக இருந்தது தமிழ் மொழியில் தட்டச்சி செய்வது. இரவு நேரம் முழுவதும் அலுவலகத்தில் தங்கி இருந்து, அன்றைய வீரகேசரி பத்திரிகையில் வரும் அத்தனை பக்கங்களையும் தட்டச்சி செய்வேன். நாட்போக்கில் அதிவேகமாக தட்டச்சி செய்ய பழகிக் கொண்டேன். இது எனக்கு பெரிய நம்பிக்கையையும், விருப்பத்தையும் ஏற்படுத்தியது.

என்னை இந்தத்துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், இசை குறித்த தேடல்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போட்டிருந்தேன். அது ஒரு வலியாக இருக்கவில்லை. இசைக்கு நிகராக இந்த தொழிலும் பிடித்துப்போய்விட்டது. நாளாந்தம் புதுப்புது விடயங்கள், அதுவும் எந்த செய்தியையும் முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் ஒருசில நபர்களில் நானும் ஒருவன் என்பது பெருமையாக இருந்தது.

செய்தி அறையை தேடி வரும் செய்திகளுக்கு மேலதிகமாக புதிய செய்திகளை தேடி அறிந்து வெளியிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். அதுதான் இன்று வரையில் நான் இந்த துறையில் நீடிப்பதற்கான உயிர்நாடியாக இருக்கிறது. அவ்வாறான செய்தியறிதல் இல்லையென்றால், மிக விரைவில் வானொலி செய்திதுறையில் பணியாற்றுகின்றவர்களுக்கு அலுப்பைக் கொடுத்துவிடும். நாளாந்தம் ஒரே வேலைதானே என்ற மனநிலை வந்துவிடும். அந்த மனநிலை ஏற்பட்டால் பாதிப்பு அவர்களுக்கு மட்டும் இல்லை. அவரால் வழங்கப்படுகின்ற செய்திகளை கேட்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் உண்டு.

இப்போதும் அவ்வாறானவர்களை நான் பார்த்து பழகிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை, நாளாந்தம் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளுங்கள், அனைத்தையும் அறிந்தவராக இருக்க முடியாது, குறைந்தபட்சம் அனைத்தையும் அறிந்துக் கொள்ள முற்படுபவராக இருங்கள். அதுவே உ ங்கள் வாழ்க்கையை முன்கொண்டு செல்லும் ஊக்கியை வழங்கும்.

அனுபவ ரீதியாக வானொலி செய்தி தயாரிப்பு என்பது அத்தனை திருப்திகரமான விடயம் இல்லை. அங்கு எம் பணி குறுகிய நேரத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு சென்று திரும்பினால், அங்கு கிடைக்கப்பெற்ற அத்தனைத் தகவல்களையும் வானொலி செய்தி ஊடாக கூறிவிட முடியாது. மொத்த செய்திக்கும் 15 நிமிடங்களே ஒதுக்கப்படும். மிஞ்சிமிஞ்சி போனால் 20 நிமிடம் வரையில் செய்தியை நீடிக்கலாம். ஆனால் ஒரே செய்தி 3 நிமிடங்களுக்கு மேல் நீள்வது என்பது அரிதான விடயம். ஆனால் வேறெந்த ஊடகத்தை விடவும், வானொலி செய்தி உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. கவன ஈர்ப்பும் இற்றைப்படுத்தலும் என்ற உத்தி இங்கு வெகுவாக கையாளப்படுகிறது.

ஆனால் பத்திரிகை அவ்வாறான துறை இல்லை. அங்கும் பக்கக்கட்டுப்பாடு இருந்தாலும், அந்த கட்டுப்பாட்டுக்குள் பெரும்பாலான விடயங்களை சொல்லிவிடலாம். எழுதி தீர்த்துவிடுவது என்பது ஒரு மனத்திருப்தி. அது வானொலியில் கிடைப்பதே இல்லை. அந்த திருப்தியை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட அனுபவமும், வானொலி செய்தியின் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு வரைமுறைக்குள்ளே சொல்லவந்த விடயங்களை சொல்லி முடிக்கக்கூடிய ஆற்றலை பெற நீண்ட உழைப்பு அவசியம்.

நான் முதன்முறையாக சென்ற ஊடக சந்திப்பு, அந்த நாட்கள் சுகாதார அமைச்சராக இருந்த நிமால் சிறிபால டி சில்வாவினுடையது, பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் இருந்தார். தாதியர் பயிற்சிப்பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அது. முதலாவது அரசியல் சந்திப்பே படுசுவாரஷ்யமானதாக இருந்தது. அத்துடன் கடந்தகாலத்தில் என்னை தாழ்மைப்படுத்திய ஒருவர், என்னிடம் சரணடைந்த சம்பவமும் அங்கு நடைபெற்றது. பெரும்பாலும் சினிமாக்களில் மட்டும்தான் அவ்வாறான சம்பவங்கள் நடக்கும். அன்றைய அந்த சம்பவம், வாழ்க்கை குறித்த பிடிப்பை, காலம் காயங்களை ஆற்றும் என்பதன் மீதான நம்பிக்கையையும் எனக்கு ஏற்படுத்தியது....

அதனை நாளை சொல்கிறேன்....

முதற்பாகம்... 

https://www.vikeywignesh.com/search/label/சூரியனும்%20நானும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக