சூரியன் FMமும் நானும் - பாகம் 5

சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்

நான் ஏன் எழுதுகிறேன்....?

அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...

கவிதை நூல் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் அதில் அத்தனை தீவிரம் காட்டவில்லை. பின்னாட்களில் கலைசார்ந்த எழுத்து மீதான நாட்டம் குறைவடைந்தது.... உயர்தரம் படிக்கும் போது உயர்தர மாணவர் ஒன்றியத்தில் ஏதோ ஒரு பதவிக்கு தெரிவானப்போது, சஞ்சிகை ஒன்றை வெளியிட முயற்சித்து தோற்றோம்.
எனினும் அந்த நாட்களில்தான் பாடசாலை மட்ட கவிதைப் போட்டி ஒன்றில் ஜனாதிபதி கௌரவிப்புடன், இன்னும் சில பரிசில்களும் கிடைக்கப்பெற்றன.
அவற்றைவிட, ஒரு கவியரங்கம் செய்தேன்.
அப்போது எழுதிய நீண்ட கவிதை ஒன்று இன்னும் இருக்கிறது. எங்கேனும் பதிவு செய்ய வேண்டும்.
அந்த கவிதைக்கு கிடைத்த பாராட்டும், ஊக்குவிப்பும் மீண்டும் எழுத தூண்டினாலும் கூட, இசைமீதான நாட்டம் எழுத்தின்பால் அக்கறைக் கொள்ளச் செய்யவில்லை.


பின்னர் ஊவா சமுக வானொலி, முழக்கம் ஊடகப்பிரிவு என்பவற்றுடன் இணைந்து செய்தியாளராகவும், அறிவிப்பாளராகவும் செயற்பட்ட வேளையில் கவிதை சார்ந்த எழுத்துக்களை முன்னெடுக்க தேவை ஏற்பட்டதில்லை.
வீரகேசரி, தினக்குரல், மெட்ரோ நியுஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்கு முகம் அறியாத செய்தியாளராக ஒரு வருடத்துக்கும் மேல் செயற்பட்டு வந்திருக்கிறேன்.
அந்தக் காலப்பகுதியிலும் கவிதைகள் சிலவற்றை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிய போது, எந்த கவிதையும் பிரசுரமானதாக தெரியவில்லை.
நேரடியாக வீரகேசரியின் தேவராஜ் அண்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவிதைகளை பிரசுரித்து உதவுமாறு கோரி இருந்தேன்.
என்றாலும் பின்னர் ஆர்வம் காட்டவில்லை.
நான் எழுதி அனுப்பிய செய்திகள் அனைத்தும் பெரும்பாலான பத்திரிகைகள் பிரசுரமாகின. அது ஒருவகையான திருப்தியையும், நான் எதை எழுத வேண்டும் என்ற முடிவையும் எனக்கு தந்ததாக கருதினேன். வெறுமனே கவிதைகளை எழுதி, எதிலும் பிரசுரித்துக் கொள்ள முடியாமல் வைத்திருந்து நேரத்தை வீணடிப்பதைவிட, இப்படி எதாவது பிரயோசனமான செய்திகளை அனுப்பி அவை பிரசுரமாவதை பார்த்து இன்புறலாம் என்றிருந்தேன்.

பதுளை பவர் நிறுவனத்தின் முழக்கம் ஊடகப்பிரிவில் இருந்தப்போது, புஸ்பகாந்தனுடன் இணைந்து முழக்கம் என்ற மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டோம். இது ஒரு அரசியல் மற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் சார்புடையது என்றாலும், சுய எழுத்துகளுக்கு ஓரளவு இடமிருந்தது. புஸ்பாந்தன் சுகவீனமுற்றிருந்த காலப்பகுதியில் 3 அல்லது 4 இதழ்களை நானே ஒழுங்குப்படுத்த நேர்ந்தமை ஒரு வரம். அப்போது அதில் பிரசுரமான கட்டுரைகள், கவிதைகள் என்று அனைத்து ஆக்கங்களையும் நானே எழுதி வெளியிட்டிருந்தேன் என்பது ஒரு ஆத்மதிருப்தியை கொடுத்தது. எழுத்து எத்தனை ஆத்மத்திருப்தியைக் கொடுக்கும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்துக் கொண்ட தருணங்கள் அவை.

சூரியனில் இணைந்துக் கொண்டதன் பின்னர், எழுத்து சார்ந்த திருப்தியை செய்திகளில் பெறமுடியாது திண்டாடினேன். நேரச்சிக்கனம் கருதி, மிகவும் சிறிய அளவான பந்திகளுடனேயே என் எழுத்துகள் முடக்கப்பட்டிருந்தன. அது நியாயமானதும் கூட. வானொலி செய்தி வாசிப்பில் சுய எழுத்தின் புத்திசாலித்தனம் பிரதிபலிப்பதில் தவறில்லை. ஆனால் அநாவசியமான கலைநயங்கள் அதில் தவிர்க்கப்பட வேண்டும். செய்தி வார்ப்புக்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அந்த வரைமுறைக்கு உட்பட்டதாக என் எழுத்துகள் சுருங்கிப் போய் இருந்தன.

அதேகாலப்பகுதியில் வீரகேசரியின் ஜீவா அக்கா (அப்போது தினக்குரலில் இருந்தார்), பாரதி அண்ணா(தினக்குரல்) இசை உலகம் சஞ்சிகையை நடத்திய மதன் (விபத்தில் சிக்கி வீட்டில் ஓய்வில் இருந்துகொண்டே இந்த சஞ்சிகை செயற்பாட்டை முன்னேடுத்தார்) போன்றோருடன், சுடரொளி, மெட்ரோ நியுஸ் போன்ற பத்திரிகைகளை சார்ந்தவர்களும் என் கட்டுரைகள், கவிதைகளுக்கு இடமளித்தனர். சிறுகதைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்த போது உதயசூரியன் பத்திரிகையும் போன்றோரும் அதிகம் ஒத்துழைத்தனர், ஒத்துழைக்கின்றனர்.

இங்கு இசையுலம் சஞ்சிகை குறித்து குறிப்பிட்டாக வேண்டும். என் உயர்தர வகுப்பு காலம் முதல் இசையுலகம் சஞ்சிகையின் பரமவிசிரி நான். எந்த பத்திரிகையையும் காத்திருந்து வாங்கியதில்லை என்றாலும், இசையுலகத்துக்காக காத்திருப்பேன். பண்டாரவளை பராசக்தி புத்தகசாலை உரிமையாளரின் மகன் எனக்கென்றே ஒரு பிரதியை எடுத்து வைத்திருப்பார். (அவரது பெயரும் மதன்தான், அவரும் ஒரு இசைக்கலைஞராகத்தான் இருந்தார். அவரது வீட்டில் ஒரு ஒலிப்பதிவுக்கூடமும் இருந்தது) அந்த காலத்தில் நினைத்தும் பார்த்ததில்லை அதில் எனது கட்டுரைகளும் இடம்பெறும் என்று.

கர்நாடக சங்கீதத்தை நான் முறையாக நீண்டகாலம் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்ட சிலபாடங்களையும், புத்தக மற்றும் இணையவாசிப்பு என்பவற்றை வைத்து, ராகங்கள் பற்றிய தொடர்கட்டுரைகளை எழுதிவந்தேன். அப்போது நான் இருந்த பொருளாதார நிலைமையில், எனக்கு இது உதவியாகவும் இருந்தது. மதனுக்கு நன்றிசொல்லவேண்டும்....

ஆனால் 2015ம் ஆண்டு வரையில் எழுத்துறையில் நிலைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருந்ததில்லை. ஒரு கனவு குறித்த விபரிப்பு, அதன் பின்னர் கிடைத்த பாராட்டுகள், ஊக்குவிப்புகள் என்பன இதில் கொஞ்சம் முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் நீட்சிதான் இப்போது...... சிறுகதைகள் வளர்ந்து நாவலை எழுதும் அளவிற்கு தூண்டிவிட்டிருக்கிறது. ஜெயகுமரன் அண்ணா எழுதிய 'சப்புமல்குமாரயா' என்ற சிறுகதை என் எழுத்துவாழ்வில் ஒரு திருப்பம். அந்த கதையை வாசித்தப்போதுதான், எழுத வேண்டும் என்ற தீவிர மனநிலை தோற்றம்பெற்றது. அவரிடம் நான் எழுதிய 'ட்ரிசோ எனப்படும் திரிவுந்து' சிறுகதையை முதல்தடவையாக வாசிக்கச் செய்து கருத்துப் பெற வேண்டும் என்று அழுத்தம் வற்புறுத்திப் பெற்றுக் கொண்ட பாராட்டு ஏதோ ஒரு ஊக்கமருந்தாக இருந்தது. பின்னர் அவர் வெளியிட்ட 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்' நூலை வாசித்தப் போது, வாசிப்பின் முக்கியத்துவமும், அதில் உள்ள சுவையையும் அனுபவிக்க முடிந்தது. அதன்பின்னர்தான் எனக்கென்று ஒரு நூலடுக்கையே உருவாக்கிக் கொள்ள பழகினேன். நான் எழுதுவதில் ஜெயகுமாரன் அண்ணாவிற்கு பெரும்பங்குண்டு.

சரியாக நினைவில் இல்லை, 2009-10ஆக இருக்க வேண்டும். எனது கவிதைகளை அறிந்த நவா அண்ணா, சூரியனின் நேற்றையக்காற்று நிகழ்சியை செய்யுமாறு கோரினார்.. அதன்படி ஒரு மாதம் அளவில் நேற்றையக்காற்று நிகழ்ச்சியை செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தை அடுத்தப் பதிவில் பகிர்கிறேன்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக