மகன் வருவான் - (சிறுகதை)

அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.

கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.


ரமேஷ் வீட்டின் இரண்டாவது பிள்ளை - 26 வயது. முதல் பிள்ளையான ராஜேஸ்வரி பிறந்து 8 வருடங்களின் பின்னர் பிறந்தவன். பொறுப்பான பிள்ளையாக இருந்தான்.  அவன் மீது செல்லம்மாளுக்கு அளவில்லா பிரியம். அவனுக்கும்தான். அம்மா மீதும் அப்பா மீதும், தமது தங்கை இளவரசி மீதும் அளவற்ற அன்புடன் இருந்தான்.

'எத்தனை நாளைக்குதான் இப்படி அப்பா கஷ்டப்பட்டுட்டு இருப்பாரு. பேசாம அவர வேலய விட்டு நிற்க சொல்லுமா. எனக்கு கொஞ்சம் காசு தந்தா நான் டுபாய்க்கு போய் 2 வருசம் இருந்துட்டு வந்தா போதும். கஷ்டம் எல்லா போயிடும்'

டுபாய்க்கு போவதில் குறியாக இருந்த ரமேஷ் தம்மிடம் சொன்னதை அம்மா செல்லம்மா நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் எப்போதும் நேரடியாக தந்தையிடம் பேசியது கிடையாது. எல்லாமே தாய்வழியே தகவல் அனுப்பப்படும். தந்தை தோட்டத்தில் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.  அவருக்கு என்று ஒரு ஆதரவு கூட்டமே தோட்டத்தில் இருந்தது.

தமக்கு கிடைக்காத கல்வி பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இருந்தாலும் மூத்தமகள் ராஜேஸ்வரி அவ்வளவாக கற்றுக் கொள்ளவில்லை.
பாடசாலைக் காலத்திலேயே பக்கத்து வீட்டு ராமுடன் பழகி, 20 வயதை எட்டுவதற்கு முன்னதாகவே ஓட்டம் எடுத்தவள்.  இப்போது 16 வருடங்கள் ஆகின்றன.
அவளுக்கு 3 பிள்ளைகள். கொழும்பில் வசிக்கிறார்கள்.  கடந்த வாரம் வரையில், இத்தனை வருடத்தில் எத்தனையோ மன்னிப்புக் கடிதங்கள் எழுதியும் ராஜேஸ்வரிக்கு வீட்டில் இருந்து எந்த பதிலும் அனுப்பப்பட்டதில்லை.
ரோசக்கார அப்புசாமியின் கண்டிப்புக்கு பயந்து வீட்டாரும் அவளை மறந்தே போனார்கள். ஆனால், ரமேஷ் அப்படி இல்லை. அக்காவின் காதலுக்கு அவ்வப்போது உதவிகளைப் புரிந்ததும் அவன்தான். அதனால் அப்பா அப்புசாமிக்கு கொஞ்சம் அவன்மீது கோபம் இருந்தது. அவன் அவர்களோடு தொடர்பில் இருந்தான்.
நாளை அவர்கள் வீட்டுக்கு வருகிறார்கள்.
 செல்லமாவின் உடல் சிலிர்த்து அவர்களை காண்பதற்காக ஏங்கிக் கொண்டிருந்தது. பொத்திபொத்தி வளர்த்த மகள் 16 வருடங்களுக்குப் பின்னர் பேரன் பேத்தியுடன் வரப்போகிறாள் என்றால் சும்மாவா?  ஆனாலும் கூட அவளது மனம் ஒருகணம் மகிழ்வும், மறுக்கணம் ரணத்துடனும் பெண்டுலம் ஆடிக் கொண்டிருந்தது.  எல்லாம் மகனை நினைத்துதான்

டுபாய் சென்று 2 வருடங்கள் கடந்துவிட்டன.
இரண்டு வருடங்கள் இருந்தால் போதும் என்று
சொன்னவன் இன்னும் திரும்பவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்கு ஒப்பந்தத்தை நீடித்துக் கொண்டதாக இன்று காலையே தொலைபேசியில் அழைத்தவன் சொன்னான். நேற்று இரவு வரையில் நாளைய தீபாவளிக்கு வந்துவிடுவான் என்றுதான் தாய் நம்பிக் கொண்டிருந்தார். 'லீவ் போட்டுட்டாவது வந்திருக்கலாம்தானே கண்ணு.. உன்ன பார்க்கனும் போல இருக்குடா' செல்லம்மாள் கெஞ்சிப் பார்த்தார். பலன் இருக்கவில்லை.

அவன் டுபாய் செல்வதில் அப்பாவிற்கு உடன்பாடிருக்கவில்லை.
சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத அப்புசாமியிடம் எதிர்ப்பை சம்பாதித்தபடியே ரமேஸ் டுபாய் சென்றிருந்தான்.
திருமணம் முடித்த காலத்தில் இருந்து அப்புசாமியிடம் ஒருசில தடவைகள் மட்டுமே செல்லம்மாள் சண்டை பிடித்திருக்கிறாள். அந்த சில தடவைகள் என்பது எல்லாமே ரமேஷிற்காகத்தான்.

ரமேஷ்தான் அவளின் கௌரவம், உலகம் எல்லாமே. இன்று கூட ரமேஷ் தம்மை ஆச்சரியப்படுத்துவதற்காக சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிடுவான் என்றுதான் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

நள்ளிரவை கண்ட பொழுதாக இருந்தது அது. இன்னும் அவள் கண்ணில் தூக்கம் குடியேறவில்லை.
காலையில் தீபாவளிக்கான வேலைகள் இருந்தன. எல்லாம் அவள்தான் செய்ய வேண்டும். இன்று மூத்த மகளின் மீள் பிரவேசம். இளைய மகளுக்காக பேசி இருந்த மாப்பிள்ளை வீட்டாரும் வரக்கூடும். பகல் பொழுது வீட்டில் கூட்டம் நிரம்பி இருக்கும். அத்தனைப் பேருக்கும் சமைக்க வேண்டும். மாப்பிள்ளை வந்தால் இளைய மகள் அவரோடுதான். தமது வேலைக்கு துணையில்லை. பகல் விருந்துக்கு முன்னர் வீட்டில் பூஜைகளை முடித்துவிட வேண்டும்.


காலை 5 மணி.
 இன்னும் சேவல் கூவி இருக்கவில்லை.
தமது அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் செல்லம்மாள். வடை, பலகாரங்களுக்கான மாவரைப்பு வேலைகள் நேற்றிரவே முடிந்திருந்தன.
இன்று அவற்றை பொரித்தெடுப்பது மட்டும்தான்.
மாப்பிள்ளைக்கு தொதொல் பிடிக்குமாம்.
முறுக்கும் விரும்பி உண்பாராம்.
7 மணிக்கு எழும்பிய இளவரசி தம்மை மினுக்கி தயார்படுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் முடிவிலி.
அப்புசாமியின் ஆழ்ந்த தூக்கம் களைந்து மூத்தமகளுக்கான வருகைக்காக காத்திருந்தவராய் ஆளுக்கு முதலே அவர் தயாராகிவிட்டார்.

மகளின் வருகைக்கு முன்னர் அவர் எதிர்ப்புதான். இருந்தாலும் ரமேஷின் எடுத்துரைப்பு, நிர்ப்பந்தம் எல்லாமாக அவரது மனம் முற்றாக மாறிப்போய் இருந்தது.
நேற்று முன்தினம் இருந்த மனநிலையில் அப்புசாமி இன்று காலை இருக்கவில்லை. அவ்வப்போது சமையல் அறைக்கு வருவதும், முன்னே சென்று வீதியைப் பார்ப்பதும், தொலைபேசியை உற்றுப் பார்ப்பதுமாக இருந்தார்.

ஆனால், செல்லம்மாள் அந்த வீட்டில் நிலவும் சூழ்நிலையை மனதிற்கொண்டவளாக தெரியவில்லை.
அவள் முழுக்க முழுக்க மகனின் நினைப்பிலேயே இருந்தாள். மகன் மீதான செல்லக் கோபம் தேங்காய் துருவுவதில் இருந்து, பொரியல், அடுக்கல் என்று அனைத்திலும் வெளிப்பட்டது. அவளது கோபத்தால் எல்லா உறைப்பு பண்டங்களிலும் உறைப்பு மிகுந்திருந்தன. பாசத்தால் எல்லா இனிப்பு பண்டங்களும் இன்னும் கொஞ்சம் இனித்திருந்தன.
மகன் வரவில்லை
என்பதும், அன்பு அம்மாவிற்கு
ஒரு புடவையாவது அனுப்பவில்லை என்பதும் செல்லம்மாவிற்கு மிகப்பெரிய கௌரவக் குறைச்சலாக இருந்தது.
அதைச் சொல்லித்தான், இந்த வாரம் முழுக்க
அப்புசாமியும், இளவரசியும் அவரை சீண்டிக்கொண்டே இருந்தார்கள்.
மகன் பணம் அனுப்பி புடவைகளை வாங்கிக் கொடுக்குமாறு இளவரசியை கேட்டிருந்தான். ஆனால் அம்மாவிற்கு அவன் கையாலேயே ஒரு புடைவை வாங்கி அனுப்பி இருக்க வேண்டும்தானே?
மனம் முழுவதும் அவள் இதே சிந்தனையுடன் இருந்தாள்.

நேரம் எண்ணெய் சட்டியில் பொரிந்துக் கொண்டிருந்தது.  முற்பகல் 10 மணி ஆயிற்று. எல்லா பண்ட தயாரிப்புகளும் நிறைவடைந்தன. செல்லம்மாள் சமைத்துவிட்டாள்.
அப்புசாமி பூஜை வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
வீட்டில் முதல் விருந்தாளியாக இளவரசியின் வருங்காலக் கணவர் அமர்ந்திருந்தார்.  இன்னும் மூத்தமகள் வரவில்லை. பொறுக்காத அப்புசாமி தாமே தொலைபேசி அழைப்பையும் எடுத்து கேட்டுவிட்டார்.
இன்னும் 10 நிமிடங்களில் வந்துவிடுவார்கள் என அறிந்தார். வாசல்வழியே வீதியை பார்த்தபடி இருந்த அப்புசாமிக்கு அந்த 10 நிமிடங்களை கழிப்பது மிகப்பெரிய சிரமமாக இருந்தது. தாய்க்கு அவ்வளவு பெரிய உற்சாகமாக அது இருக்கவில்லை.  மகளின் வருகையைக் காணும் ஆவல் இருந்தாலும், மகன் குறித்த நினைப்பு செல்லம்மாளை இன்னொரு உலகத்தில் வைத்திருந்தது.
மகன் இல்லாமல் நடக்கும் மூன்றாவது தீபாவளி இது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு தீபாவளி தினம் வருவதற்கு சில தினங்கள் இருந்த போதுதான் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.
அவன் இல்லாத பண்டிகை நாள் என்பது செல்லம்மாளுக்கு வழமையான நாள்தான்.

மூத்தமகளின் மகிழ்ந்து வீட்டின் முன்னால் வந்து நின்றது.
இத்தனை நிமிடம் இல்லாத பரபரப்பு செல்லாமாளுக்கு ஏற்பட்டது.  அப்புசாமியை தள்ளிவிட்டு ஓடிச்சென்றவள் மகளை அரவணைத்து அழுது உள்ளே வரவேற்றாள்.
இரண்டு பேரப்பிள்ளைகளையும் அப்புசாமி தூக்கிக் கொண்டார்.  மருமகனின் அமைதியான சுபாவம் அவர்களுக்கு பிடித்திருந்தது. 16 வருட இழப்புகளைப் பற்றியெல்லாம் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மூத்தமகள் ராஜேஸ் தாம் வாங்கி வந்த புதிய உடைகளை அப்பாவிற்கும், அம்மாவிற்கும், இளவரசிக்கும் கொடுத்தாள்.
அதனையே அணிந்து கொண்டு எல்லோரும் கோவில் போவதாக முடிவானது.  தாய்க்குதான் உடன்பாடில்லை.
இருந்தும் மகள் சங்கடங்கொள்வாளே என்ற எண்ணம்  செல்லம்மாள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

செல்லம்மாளின் முகத்தில் சற்றும் தீபாவளிக் கலை இருக்கவில்லை. முகம் சோர்ந்துப் போய் இருந்தது. மகன் தம்மையிட்டு அக்கறை இல்லாதிருக்கிறானோ? என்ற               சந்தேகத்தில் அவள் இருந்தாள்.
வீட்டில் தனித்து நின்று அவ்வப்போது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
அம்மாவை மூத்தமகள் ராஜேஸ்வரி அவதானிக்காமல் இல்லை.
'என்னம்மா யோசிச்சிட்டு இருக்க?'
'ஒன்னுமில்லமா'
மெதுவாக அங்கிருந்து செல்லம்மாள் நகர முற்பட்டாள்..
'அம்மா.. உனக்கு ஒன்னு தெரியுமா நீ கட்டி இருக்க இந்த சாரி ரமேஷ் உனக்கு குடுக்க சொல்லி அனுப்பினதுதான்'

முகமும் அகமும் மலர்ந்த செல்லாம்மாளின் தீபாவளி அந்த தருணத்தில் இருந்து ஆரம்பமானது...


விக்கிவிக்னேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக