சூரியன் வானொலியும் நானும்........ (01)

2004-05

அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.

குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.


அதுவரையில் அறிவிப்பு என்ற துறைக் குறித்து நினைத்தும் பார்த்ததில்லை.

சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது அதனை அவதானித்த மணி அண்ணா, என்னை 'என்னைக் கவர்ந்த கானங்கள்' என்ற நிகழ்ச்சிக்காக வரச்சொல்லி இருந்தார்.

அதில் ஒரு நேயராக கலந்துக் கொண்டிருந்தேன்.

என்னில் ஒரு அறிவிப்பாளரை அடையாளம் கண்டது முதன்முதலில் மணி அண்ணாதான்.

பின்னர் கொஞ்சம் அறிவிப்பு மீதான ஆசை பிறந்தாலும், அதன்பால் நான் செல்லவே இல்லை.

இசையின் அடிப்படைக்கூட தெரியாதவனாக, ஆனால் இசையமைப்பாளனாக ஆக வேண்டும் என்ற வெறியுடையவனாக திரிந்துக் கொண்டிருந்தேன்..

நண்பன் மனோஜ்தான் முதன்முதலில் ஒருவரிடம் என்னை 'பியானோ' (கின்னரப்பெட்டி) வகுப்பில் கொண்டு சேர்த்தான்...

முதன்முறையாக பியானோவை தொட்ட போது, 'இந்த கட்டைகளில் எல்லாம் ஒரே மாதிரி ஒலி வந்தால் வாசிக்க இலகுவாக இருக்குமே, வித்தியாசமான சுரங்கள் வருவதுதான் சிக்கல்' என்று நினைத்துக் கொள்ளும் ஞானசூனிய நிலையில் என் இசைப் பயிற்சி ஆரம்பமானது.

என் எதிர்காலம் இசையோடே பயணிக்க வேண்டும் என்று திட்டவட்டமான தீர்மானத்தில், அதற்கான கருவிகளை தேடுவது கொள்வனவு செய்வது எல்லாம் எப்படி? என்பதை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்த போதுதான், இந்த துறையின் சவால்கள் புரிந்தன.

என்னாலும் இசையமைப்பாளராக முடியும், இலங்கையில் நல்ல இசையை வழங்கினால் கண்டிப்பாக அதற்கு வரவேற்பு இருக்கும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்த உதவியது மொஹமட் ஷமீலின் கனவின் உருவில் பாடல்தான்...

அந்த பாடலை தொடர்ந்து எத்தனையோ தடவைகள் வானொலிகளில் கேட்டு பெருமிதம் அடைந்திருக்கிறேன்..

இடையில் டிரோன் ஃபெர்ண்டோ, திமோதி இன்னுமொருவர் பெயர் நினைவில்லை... அவர்கள் ஊடாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் மூலம் கணினியில் இசையமைக்கலாம் என்ற ஒருவிடயத்தை கேள்வியுற்றேன்...

அதைப்பற்றி தேட ஆரம்பித்தப் போது எல்லாமே எனக்கு தானாக கிடைக்க ஆரம்பித்தது.

யாரென்றெ அறியாத ஒருவர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஃப்ரூட்டி லூப்ஸ், ஈஜேய், சோனார், கியூபேஸ் போன்ற இசையமைப்பு மென்பொருட்களை அவரது கணினியில் பதிந்து சொல்லிக் கொடுத்து, அந்த சீடீகளையும் தந்தார்.

இப்படியே இசை குறித்த என் வாழ்க்கை போய்க்கொண்டிருக்க, தந்தை இருந்தவரையில் வருமானம், தொழில் குறித்த சிந்தனை எதுவும் வரவில்லை.....

ஆனால் ஒருபக்கத்தில் சிறுவணிகம் ஒன்றையும் செய்துக் கொண்டு, என் நாளாந்த தேவைகளை நானே பார்த்துக் கொண்டிருந்தேன்...

தந்தையின் திடீர்மரணம்.... பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் என் இசை எதிர்காலத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது..

அப்போது ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த வேலாயுதம் (மறைந்த அமைச்சர்) மற்றும் அவரது மகன் ருத்திரதீபன் ஆகியோரை அறிந்திருந்ததால், பதுளையில் இயங்கிய அரச சார்பற்ற பவர் நிறுவனத்தின் முழக்கம் என்ற ஊடகப்பிரிவில் இணைந்துக் கொள்ள வாய்ப்பளித்தார்கள்.

இது 2007ம் ஆண்டில்....

அங்கு என் உத்தியோபூர்வ ஊடக வாழ்க்கை ஆரம்பமானது.

இதற்கு முன்னர் பரீட்சார்த்தமாக பல தொழில்களுக்கு சென்று, பிடிக்காமல் ஒருசில நாட்களிலேயே விலகி வேறு தொழிலுக்கு சென்றிருக்கிறேன்..

முழக்கம் ஊடகத்தில் இருந்து கலைகூடம்(ஸ்டூடியோ) என்னை வேறெங்கும் செல்லமுடியாத படிக்கு ஈர்த்திருந்தது...

நாளாந்தம் 10 நிமிடங்கள் அந்த கலைக்கூடத்தினுள் தனித்திருப்பது, ஆலயம் ஒன்றில் தியானம் செய்வதற்கு நிகராக பட்டது....

அங்கும் அறிவிப்பாளராகவே நான் உள்ளீர்க்கப்பட்டாலும், அதன்பால் என் நாட்டம் மிகமிகக்குறைவாகவே இருந்தது.

ஆனாலும் முழக்கம் என்ற சஞ்சிகை வெளியீட்டிலும், நாடகம் உள்ளிட்ட சில நிகழ்சிகளை தயாரித்தலிலும், குறிப்பாக வாசிகசாலையை (உண்மையில் புத்தக அலுமாரி) ஒன்றை பேணுவதிலும், கள பயணங்களிலும், பத்திரிகளுக்கு எழுதுவதிலும் ஈர்ப்புடன் பணியாற்றினேன்..

அரசியல் சார்ந்த விடயங்களில் என்னால் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

அந்த நாட்களில் எனக்கு ஊடகம் சார்ந்த வழிகாட்டியாக இருந்தவர், சமுக செயற்பாட்டாளர் புஸ்பகாந்தன்.

ஆனாலும், அங்கு எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று வாதம் நான் வேலைக்குச் சென்ற சில காலங்களிலேயே தொடக்கி வைக்கப்பட்டது.

ஊடகம்தான் வாழ்க்கை என்று ஆனப்போது, ஏதாவது பிரதான ஊடகம் ஒன்றில் பணியாற்றச் செல்லலாம் என்ற எண்ணம் ஊடகவியலாளர் அருள்ஜேசுவால் விதைக்கப்பட்டது.

அதன்பால் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் நிறுவனத்தலைமைக்கும் எனக்கும், அருளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள், வேறொரு தொழிலைத் தேட வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தின..

அப்போதுதான் சூரியன் வானொலியில் இருந்து வாய்ப்பு எட்டியது....

அப்போது சூரியனின் செய்தி முகாமையாளராக இருந்த எம்.இந்திரஜித், அருள்ஜேசுவின் ஊடாக என்னை அழைத்து சூரியன் செய்திப்பிரிவில் இணைய விருப்பமா? என்று கேட்டார்...

விருப்பம்தான்.. ஆனால் வீட்டாரை விட்டு 225 கிலோமீற்றர் தூரம் தள்ளிச் சென்று எங்கேயோ தங்கி இருந்து பணியாற்றுவது என்பது மிகக்கடினமாக பட்டது......

ஆனாலும் சரியென்றேன்...

முதலில் தொலைபேசிவாயிலாகவே ஒரு வித்தியாசமான நேர்காணல் நடத்தப்பட்டு, அதில் தெரிவானேன்...

பின்னர் சூரியன் பணியகத்துக்கு நேரடி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

இதெல்லாம் வெறும் 2-3 நாட்களில் நடந்து முடிந்ததுதான் ஆச்சரியம்.....

தொடரும்....

சூரியனும் நானும் - பாகம் 2

https://www.vikeywignesh.com/2018/04/2.html






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக