
சூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்..
இன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.
லிஃப்ட் வாசலுக்கு அருகில் 'ரை' அணிந்து, வெள்ளை நிறத்தில் காதில் ஹெட்செட் மாட்டியபடி நடந்த திடகாத்திரமான மனிதரை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது...
அதுதான் நவா அண்ணா என்று ஊகித்துக் கொள்ள சில நொடிகள் தேவையாக இருந்தன.
ஆனால் அவர் என்னை அறிந்தவர் போல அளவான சிரிப்போடு கடந்து போனார்.
அந்த நாட்களில் எங்கள் ஊரில் இவ்வாறு ஹெட்செட் மாட்டிக் கொண்டு நடப்பதெல்லாம் மிகவும் அரிது. ஆனால் கொழும்பில் அப்போதே அது சாதாரணமாக இருந்தது.
என்னை அவர் யாரோ சிங்களவன் என்று நினைத்திருக்கக்கூடும்...
பின்னாட்களில் அதுப்பற்றி அவருடன் கதைக்க நினைக்கவில்லை...
10 மணி அளவில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. செய்தி அறைக்கு என்னை அழைத்துச் செல்லவில்லை. கூட்டங்கள் நடைபெறும் அறையில் வைத்து நேர்காணல் நடத்தப்பட்டது..
முடிந்தப் பின்னர் தொலைப்பேசி அழைப்பை எடுப்பதாக சொல்லி ஜித் அண்ணா போக சொன்னார்.
நேர்முகத் தேர்வில் பயங்கரமாக சொதப்பினேன் என்பதை நன்கு அறிந்த நான், அலுவலகத்தில் இருந்து சிறிது தூரம் சென்றப் பின்னர் ஜித் அண்ணாவிற்கு அழைப்பை எடுத்தேன்.
'அண்ணா, செலக்ட் ஆகல்ல என்றாலும் பிரச்சினையில்ல.. தயங்காம சொல்லுங்க, நான் என் வேலைய பார்க்கிறன்' என்றேன்...
'இல்ல... செலக்டட்தான்... நாளைக்கே வேலைக்கு வாங்க' என்றார்...
உண்மையில், பெரிதாக மகிழ்ச்சியெல்லாம் அடையவில்லை. ஒருவேளை, எனக்கு இந்த வேலை கிடைக்காமல் இருந்தால் அந்த தருணத்தில் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒரேயொரு காரணம்தான்... சொந்த ஊரில் இருந்து கொழும்பு வந்து வேறொரு இடத்தில் தங்கி இருந்து வேலை செய்வதை நினைக்கும் போதே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. அம்மா, தம்பிகள், நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு எப்படி இங்கு தனித்திருப்பது? என்ற அபத்தமான யௌவன வலி எனக்கும் அப்போது இருந்தது.
ஆனால் வருவதாக சொன்னேன்.
28ம் திகதியே வரச் சொன்னார். நான்தான் முதலாம் திகதி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்...
அதேபோல ஆரம்பத்திலேயே சிலபல பொய்களைச் சொல்லி, 28ம் திகதி இல்லாமல், 1ம் திகதியே சூரியன் செய்திப்பிரிவில் இணைந்துக் கொண்டேன்..
முதல்நாள் ஜித் அண்ணாவோடு, டிட்டோ குகன் அண்ணா மற்றும் காஞ்சனா ஆகிய இருவரும் இருந்தார்கள்.
என்போன்ற ஒரு அப்பாவியும் இருந்தார்... அவர்தான் சதீப்குமார்...
முதல்நாளில் இருந்தே இப்போது வரையிலும் என்னோடு அனுசரித்து செல்லும் ஒருநபர் சதீப்குமார். முதலில் சதீப் என்று அறிமுகமானபோது முஸ்லிமாக இருக்கும் என்று நினைத்;தேன். ஆனால் சைவர் கடைக்கு சென்று உண்ணும் போது, தனக்கு பிடித்தக் கடவுள் முருகன் என்று சொன்னார். அப்போதுதான் முழுப்பெயரைக் கேட்டறிந்தேன்..
முதல்நாள், இரண்டாம் நாள் வேலைகள் அவ்வளவு பிடித்தமானதாக இருக்கவில்லை. அங்கு என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் பக்குவத்துடன் பகுப்பாய்ந்து புரிந்துக் கொள்ள முடியவில்லை. பின்னாளில்தான் புரிந்தது அங்கு பகுப்பாய்வு செய்து புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று....
ஆனாலும் மூன்றாம் நாள் வேலைக்கு வரும் போது பேருந்தில் வைத்து மனோஜிடம் சொல்லிக் கொண்டுதான் வந்தேன்... 'இன்றோடு வேலையில் இருந்து விலகப்போகிறேன்....'
மனோஜ் ஒன்றும் சொல்லவில்லை...
என் மனமறிந்துக் கொண்டாராக இருக்கலாம்... அலுவலகத்துக்குள் வந்ததுமே செய்தி ஆசிரியர் கதிரையில் இருக்க வைத்து டைப் செய்ய சொன்னார் ஜித் அண்ணா...
சில உண்மைகளை ஒத்துகொண்டுதான் ஆக வேண்டும்... என் தொழிலை ஆரம்பிக்கும் போது எனக்கு தெரிந்த ஒரே விடயம், தமிழ்மொழி மட்டும்தான்... அரசியலோ, சமுகவியலோ எதுவுமே தெரியாத 'பச்சை மண்ணாக' இருந்தேன்.. தட்டச்சுகூட அத்தனை இலகுவாக வராது...
ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் என்னை அப்படியே மாற்றி, மெருகேற்றியது சூரியன் செய்தி அறை... அது எனக்கு ஒரு பல்கலைக்கழகம் போலதான் பட்டது....
ஆரம்ப நாட்களின் அனுபவங்களை எல்லாம் டயரியில் எழுதும் வழக்கம் இருந்தது... கசப்பான பல அனுபவங்கள் உண்டு, கசப்பானவற்றை நினைத்துப் பார்க்கும் தருணம் இதுவல்ல என்கிறது உள்மனம்...
ஒன்றை மாத்திரம் நினைத்துக் கொள்ள விரும்புகிறேன்...
சமுகத்தில் எல்லா தமிழர்களும், இன்னொரு தமிழனுக்கு நல்லமாதிரியானவர்களாகத்தான் நடந்துக் கொள்வார்கள் என்ற மனநிலையோடே என் கொழும்பு வாழ்க்கை ஆரம்பித்தது. ஆனால் அது சற்றும் நிஜமில்லை. சமுகப்பிரிவினை எந்த இடத்தையும் விட்டுவைப்பதில்லை என்பது புரிந்துக் கொள்ள நேர்ந்த போது மனக்கனமாக இருந்தது.
ஆனால் மனக்கனங்களின் புள்ளிகள் உடே பக்குவ மனநிலை கட்டியெழுப்பப்படுகிறது என்ற அளவில், எந்த கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளே...
அத்தனையும் முதல்நாள் டயரிகளுக்குள் அடக்கப்பட்டு, மறுநாள் காலை அடுத்த அடியைத் தாங்கிக் கொள்ளும் தயார்நிலையுடன் என் பயணங்கள் ஆரம்பித்தன.... தொடர்ந்தன... தொடரும்....
முதற்பாகம்...
https://www.vikeywignesh.com/search/label/சூரியனும்%20நானும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக