
அங்கிருந்த மனிதர்களைப் போலவே...
நெடுந்தெருவில் தூரப் பயணத்தின் பின்னர், ஆரம்பிக்கும் ஒரு தனிவழிப் பாதையின் முடிவில் அந்த வீடு அமைந்திருந்தது.
பாதை ஓரங்களில் புற்கள் படர்ந்திருந்தாலும், வீட்டு வாசல் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.
சிறிய வாயிற்கதவு, சில இடங்களில் பூச்செடிகள், விளக்கு வைப்பதற்கான ஒரு பெட்டி, ஆங்காங்கே உடைந்த கூரை, திறந்த கதவு.... மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையானவற்றை மாத்திரம் கொண்டிருந்தது அந்த வீடு.
வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த கதிரையில் கதிரேஷன் மாஸ்டர் அமர்ந்திருந்தார்...
பக்கவாதத்தால் ஒரு கையும் காலும் பாதிக்கப்பட்டவராய் தெரிந்தார்.
'எப்ப அப்பா வாரீங்க... உங்கள எல்லாம் பார்க்கனும் போல இருக்கு, வந்து எத்தன வருஷம் ஆயிடுச்சி....'
சேலைத் தலைப்பில் கண்களைத் துடைத்தபடியே கண்ணம்மா கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் கதிரேஷன் மாஸ்டரின் மனைவி...
இருவரும் 60 வயதினை கடந்தவர்களாக இருந்தனர்.
கதிரேஷன் மாஸ்ட்டர் முன்னர் அந்த கிராமத்தில் மிகப்பிரபலம். அந்த ஊரிலேயே முதன்முறையாக கராட்டே பழகினவர் அவர்தான். கறுப்பு பட்டியையும், தங்கப் பதக்கங்களும் வாங்கிக் குவித்தவர்.
ஊரிலேயே கராட்டே பயிற்சிக் கூடத்தை நடத்தினார்.
அதனாலேயே அவரை மாஸ்ட்டர் என்பர்.
இப்போது ஓய்வில் இருக்க செய்துவிட்டது அவருக்கு ஏற்பட்ட பக்கவாதம்.
இரண்டு பிள்ளைகள்...
மூத்தமகன் கொழும்பில் இருக்கிறான்... திருமணம் முடிந்து அங்கேயே குடும்பம் கண்டுவிட்டான்.
இளையவள் மகள், ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு கனடா சென்றுவிட்டாள். காதல் திருமணம்தான்.
அவர்கள் இருவருமே இங்கு வந்து சில வருடங்கள் கடந்திருந்தன. யாருக்கும் சட்டென நினைவில் வரவில்லை.
கனடாவில் இருக்கும் மகள்தான் மாதாமாதம் பணம் அனுப்புகிறாள். அது கதிரேஷனுக்கு தெரியாது.
கொழும்பில் இருக்கும் மகன்தான் பணம் அனுப்புவதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
மகள் மீது அவருக்கு கடும் கோபம்.
அவரை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டதால் அல்ல... அவரைப் பிரிந்து கனடா சென்றதுதான்...
கதிரேஷன் மாஸ்ட்டரின் பிரதான தொழில் கராட்டே பயிற்சியளிப்பதாக இருக்கவில்லை.
அந்த காலத்தில் அவர் செல்வச் செழிப்போடு இருந்தவர்.
புதையல் கிடைத்ததாக கூறுவார்கள்.
இப்போது அவர் இருக்கும் வீட்டுக்கு நேரே முன்னால் இருக்கும் மலையின் ஒரு குகைக்குள் புதையல் தோண்டும் போது அவருக்கு இந்த பக்கவாதம் வந்துசேர்ந்தது.
கூட இருந்தவர்கள் எல்லோரும் கொண்டுவந்து அவரை வீட்டில் போட்டனர்... இப்போது 15 வருடங்கள் இருக்கும்... அவர் அப்படியேதான் இருக்கிறார்.
காலைவேளையில் கண்ணம்மா அவரை வெளியில் அழைத்து வந்து அமரச் செய்வார்... இருவருக்கும் இருவர்தான் ஆறுதல்... கதிரேஷனுக்கு எப்போதும் அந்த புதையல் இருக்கும் மலையை பார்த்தபடியே அமர வேண்டும்.
அதைப்பற்றி எதையோ சொல்லிக் கொண்டிருப்பார். இத்தனை வருடங்களில் கண்ணம்மாவிற்கு அதன் அர்த்தம் புரிந்ததில்லை.
ஆனாலும் கேட்டுக் கொண்டிருப்பார்.
கதிரேஷன் மாஸ்ட்டரின் இந்த புதையல் தோண்டும் பழக்கத்துக்கு கண்ணம்மா ஒருபோதும் ஆதரவு தந்ததில்லை.
ஆனால் புதையல் தோண்டுவதற்காக கண்ணம்மாவின் ஊர்பக்கம் சென்ற போதுதான், கதிரேஷன் மாஸ்டரும் அவரும் சந்தித்துக் கொண்டனர்.
அந்த காலத்திலேயே கதிரேஷன் மாஸ்டர் மிகப்பிரபலம்.
முதல்சந்திப்பிலேயே கண்ணம்மாவிற்கு அவரை பிடித்துப் போய் இருந்தது...
இளம் வயதில் விறகுக் கட்டைகளை சுமந்தபடி கண்ணம்மா சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்..
'புள்ள... எவளோ நேரந்தான் இப்படியே நிப்ப... என்ன புடிச்சிருக்கா? கட்டிகிறியா?'
மாஸ்ட்டர் கண்ணம்மாவின் கண்ணை பார்த்து துணிச்சலாக கேட்டுவிட்டார்...
தம்மோடு விறகுக்கு வந்த பிள்ளைகளும், கதிரேஷனுடன் புதையல் தோண்டவந்தவர்களும் கூடவே இருந்தனர்.
கண்ணம்மாவிற்கு வெட்கம் வந்தது...
ஆனாலும் அப்போதே அவருடன் போய்விடுவோமா? என்று கூட தோன்றியதாம்..
மாஸ்ட்டர் அத்தனை கம்பீரமாம்..
இப்போது ஓய்ந்துக் கிடக்கும் அவரது கால்களையும் கைகளையும் பிடித்துவிட்டப்படியே கண்ணம்மா யோசிப்பதுண்டு..
'கட்டிக்கிறேன்... ஆனா இப்புடி பொதயல் எடுக்குறேனு சுத்தாம இருப்பியா?'
முதல்சந்திப்பன்றே கண்ணம்மா கேட்டுவைத்தார்...
'நீயே பெரிய பொதயல்தானே... நீ கெடச்சா புதுசா என்னாத்த தேடப்போறன்..'
மாஸ்ட்டர் உறுதியளித்தார்...
கண்ணம்மா நம்பினார்.
அதுமுதல் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரையில் அவர் எந்த புதையலைத் தோண்டவும் செல்லவில்லை.
அவ்வப்போது விடயம் அறிந்தவர்கள் இவரை நாடுவதுண்டு..
ஆலோசனை வழங்குவதோடு சரி...
மூத்தமகன் திருமணம் முடித்து கொழும்பிற்கு சென்றப் பின்னர், இளையவள் அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்து படித்தாள்...
அங்கேயே அவளுக்கு ஏற்ற ஒருவனை காதலும் செய்யக் கற்றுக் கொண்டாள்...
வீட்டில் பெரிதாக அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இல்லாத போதும், திருமணத்துக்குப் பின்னர் அவர்கள் கனடா செல்வதற்குதான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கடைசி காலத்தில் பிள்ளைகள் இருவரும் தம்முடன் இருக்க வேண்டும் என்றே கதிரேஷன் மாஸ்டர் விரும்பினார்.
ஆனால் அவர்கள்தான் எதிர்காலம், பணம், பிள்ளைகள் என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக் கொண்டு அவர்கள் இஸ்டத்துக்கு செய்துக் கொண்டனர்.
பணத்தினால் அவர்களின் பிரச்சினை எல்லாம் தீரும் என்றால், அவர்கள் தம்முடன் இருந்துவிடுவார்கள் என்று மாஸ்ட்டர் கருதினார்.
அதற்காகவே புதையல் தோண்டவும் புறப்பட்டார்..
கண்ணம்மாவிற்கு தெரியாது...
ஒரு கூட்டமே அவரை சுமந்து வந்து கட்டிலில் போடும் வரையில் கண்ணம்மாவிற்கு இந்த விடயம் தெரியவே தெரியாது..
முதல் சந்திப்பில் கதிரேஷன் மாஸ்ட்டர் கொடுத்திருந்த உறுதிமொழி, அத்தனை வருடங்களின் பின் அன்றுதான் மீறப்பட்டிருந்தது..
கண்ணம்மா கண்களாலேயே கேள்வி கேட்டார்... கதிரேஷன் மாஸ்டரால் வாயால் கூட பதில் சொல்ல முடியவில்லை...
மகனோ, மகளோ அருகில் இல்லை.
இருந்திருந்தால் ஒருவேளை காப்பாற்றி இருக்கலாம் என்பது கண்ணம்மாளின் எண்ணம்.
இப்போதும் அதையே சொல்லி அழுவாள்...
அவர் புதையல் தோண்டப் போன விஷயம், மகனுக்கோ, மகளுக்கோ பிடிக்கவில்லை.
அதனை அவர்கள் பெரும் குற்றச் செயலாகவே நினைத்துக் கொண்டனர்.
மகன் தாய்தந்தையின் மீது அன்பில்லாதவன் அல்ல.
ஆனால் அவன் நினைத்தப்படிக்கு செயற்பட முடியாத குடும்த்தலைவனாக இருந்தான்.
இன்றும் கதிரேஷன் அந்த மலைக் குகையை பார்த்தபடியே அமர்ந்திருந்தார்..
கொஞ்சம் சிரமப்பட்டு அந்த மலைக் குகையை அடைந்து புதையலை தோண்டிவிட்டால், தம் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்பது அவர் கனவாக இருந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் பால் போத்தலை பார்த்து ஏங்கும் குழந்தையைப் போல, கதிரேஷனும் ஏங்கிக் கொண்டிருந்தார்.
15 வருடங்களுக்கு முன்னர் தமக்கு பக்கவாதம் வரும் தினத்தில் அவர் அந்த புதையல் பானையை கண்டுவிட்டார்..
தோண்டி வெளியில் எடுப்பதற்கு முன்னர் குகையின் மேற்பரப்பு வெடித்து விழ ஆரம்பித்தது...
அப்போது அதிர்ச்சியில் ஏற்பட்டதுதான் இந்த நிலைமை...
இப்போது கம்பினை ஊன்றியபடி இயங்கும் ஒற்றைக் காலில் அவ்வப்போது நடந்து செல்ல முயற்சிப்பார்...
இப்போதும் அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
கண்ணம்மா தன் மகளுடனான கைப்பேசி உரையாடலில் தீவிரமாக இருந்தாள்.
அவர் மெதுவாக மலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார்....
ஓரடி.. ஈரடி என்று மெதுவாக அவரது முன்னேற்றம் இருந்தது...
ஊரார் யாரும் காணும் முன்னம் அந்த மலையை அடைந்துவிட வேண்டும் என்ற தீவிரம் அவரிடம் இருந்தது...
கொஞ்சம் கொஞ்சமாக அவர் வேகம் எடுத்திருந்தார்...
மீண்டும் தாம் பழைய மாஸ்ட்டராக மாறிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார்..
எத்தனை மணிநேரமா? நாட்களா தெரியவில்லை..
கதிரேஷன் மாஸ்டர் அந்த மலைக்குகையை அடைந்துவிட்டார்..
மலையில் சுற்றித் திருந்த சில இளைஞர்களையும் கூட்டி, வாயில் மூடிக்கிடந்த அந்த குகையை மீளத் தோண்டி உள்ளே சென்றார்.
அதோ புதையல் பானை...
தன் ஒற்றைக் கையால் இழுத்து வெளியில் எடுத்தார்...
பானையை அவர் திறக்கவேயில்லை. அவற்றில் என்ன இருக்கும் என்பதை பல வருடங்களுக்கு முன்னமே அவர் அறிந்திருந்தார்.
முதன்முறையாக கண்ணம்மாவைக் கண்டபோது ஏற்பட்ட அத்தனை மகிழ்ச்சியும், இப்போது இந்த பானை அவருக்கு வழங்கியது.
தன்பிள்ளைகளை இனி தன்னோடே வைத்துக் கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியும் அதனுடன் சேர்ந்துக் கொண்டது.
கால் - கைகளை முன்னரைப் போலவே இயக்கி நடக்க வழிபிறக்கும் என்றும் எண்ணிக் கொண்டார்...
கதிரேஷன் மாஸ்ட்டர் மலையில் இருந்தவர்களால் கொண்டாடப்பட்டார்.
அவரை, அவரது பானையுடன் மக்கள் தூக்கிச் சென்று வீட்டு வாசலில் விட்டனர்..
புதையல் பானையுடன் கண்ணம்மாவைத் தேடி ஓடினார்.
'புள்ள... அப்பா செத்துட்டார்டி... இப்பவாவது வருவியா....'
கண்ணம்மா கைப்பேசியில் கதறிக் கொண்டிருந்தார்....
கதிரேஷனின் உடல் கண்ணாமாளின் மடியில் கிடந்தது.
உயிர் மட்டும் புதையல் பானையை சுமந்திருந்தது....
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு