உஷ்ணம் - சிறுகதை

என்னையெல்லாம் எந்தப் பெண்தான் பார்ப்பாள்.

அழகானப் பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.

அழகானப் பெண்கள் என்றும் சொல்லமுடியாது.

அநேகமாக என்னைக் கடந்து போகின்ற எல்லா பெண்களையும் நான் பார்ப்பதுண்டு.


வயது, நிறம் என்று எதனையும் வகைப்படுத்தி பார்ப்பதில்லை.

சமயத்தில் அவர்களிடம் எதைப்பார்க்கிறேன் என்றுகூட நினைவில் இருப்பதில்லை.

ஆனால் பார்க்கிறேன்.

எப்போதும் அவர்கள் யாரும் என்னைப் பார்ப்பதில்லை.

பார்த்தாலும் அதனைக் காட்டிக் கொள்வதில்லை, அல்லது மீண்டும் பார்ப்பதில்லை.

ஆரம்பத்தில் எனக்கு அது கஷ்டமாகத்தான் இருந்தது.

பெண்கள் என்னை பார்க்காமல்விடுவது என்பது, என்னை உலகில் இருந்தே தள்ளிவைப்பதைப் போல இருக்கும்.

நான் நிற்கும் எல்லா இடங்களிலும், எல்லாப் பொழுதுகளிலும் ஏதோ ஒருப் பெண்ணால் நான் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.

அதனாலோ என்னவோ, உலக நடவடிக்கைகளில் இருந்து வெகுத்தொலைவில் தனிமைப்பட்டு வாழ்கிறேன்.

இப்போது பழகிக் கொண்டுவிட்டேன்.

பெண்களோடு மட்டும் அல்ல, அனைத்து மக்களோடும் உலக இயக்கத்தில் ஒன்றித்துதான் செல்ல வேண்டி இருக்கிறது.

அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக, எனக்கு விதிக்கப்பட்ட செயல்களை, சம்பவங்களை கடந்துச் செல்லாமல் தவிர்க்க முடியுமா என்ன?

இப்போது பேருந்தின் ஆசனங்களுக்கு இடையிலான மையப்பகுதியில் நின்றுக் கொண்டிருக்கிறேன்.

எத்தனைக் கூட்டம்? கூட்டமான இடங்களை நான் பெரிதும் விரும்புவேன். அதுவும் மழை நேரக் கூட்டம் என்றால் இன்னும் பிடிக்கும்.

கூட்டம் தருகின்ற நெருக்கடியிலும், அசௌகரியத்திலும், மக்களுக்கு என்னை மாத்திரம் தள்ளிவைத்துப் பார்ப்பதற்கான அவகாசம் கிடைக்கப்பதில்லை.

அதிகாலை மழை அழகு.

அதிகாலைப் பேருந்து பயணத்தை நான் விரும்புவதில்லை.

அந்த சமயத்தில் பேருந்தில் பெரிதாக கூட்டம் இருக்காது.

நான் வெளிப்படையாக பலராலும் ஒதுக்கப்படுவதாக உணர்வேன்.

உணர்வேன் என்று ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட முடியாது.

வலிக்கும், 'இது வழமைதானே' என்று பழகிவிட்டாலும் கூட, அவர்களின் தூரத்தள்ளும் பார்வை இருக்கிறதே... ஒரு பெண்டுலம் போல, என்னை வலிக்கும் பழக்கப்பட்ட மனநிலைக்கும் இடையில் ஆட்டி ஆட்டி வதைக்கும்.

வழமைக்கு மாறாக இன்று கூட்டம் அதிகம் இருந்தது.

யாரும் யாரையும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.

என்னையும் சேர்த்து பயணிகள் கூட்டம் அணைத்துக் கொண்டிருந்தது.

பெரிதாக பிடிமானம் இல்லாமலேயே என்னால் நிற்க முடிந்தது.

சோசலிசம் பழக பேருந்து பயணங்களை மேற்கொள்வது சிறந்தது.

எனக்கு அருகில் சிறிய சிறிய இடைவெளிகளும் இருந்தன.

அவற்றையும் நிரப்பிக் கொள்ளும் படி நெருங்கி வாருங்கள் என்று சொல்ல வாய் துடித்தது.

அந்த இடைவெளி அடுத்த தரிப்பில் ஏறக்கூடிய யாரோ ஒருவருக்கு உரியதாக இருக்கலாம்.

ஏன், அந்த இடைவெளி ஒரு அழகான பெண்ணால் நிரப்பவும் படலாம். காத்திருந்தேன்.

அடுத்தப் தரிப்பில் பேருந்து நின்று கடந்தது.

நிறையபேர் ஏறினார்கள்.

நான் இன்னும் நெருக்கப்பட்டேன்.

இல்லை, உலகத்துக்குள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.

பேருந்து கூட்டத்தின் அணைப்பும், உஷ்ணமும், அசைவுகளும், துள்ளல்களும் நிறைந்த அதன் பயணமும், தாய்மடியில் இருக்கும் ஒரு குழந்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

நான் எதிர்பார்த்தது சரிதான், ஏற்கனவே கணிப்பிட்டப்படி எனக்கு அருகில் இருந்த இடைவெளியை ஒரு பெண் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

எனது இடது பக்க நெஞ்சோடு அவளது உடல் உரசியப்படி இருந்தது.

என்னைவிட குள்ளமாக இருந்தாள்.

வயது ஒரு 25 இருக்கும். கைகள் மாநிறத்தில் இருந்தன.

என் கழுத்தை சற்று வளைத்துப் பார்க்க அவள் உருவம் முழுமையாக தெரிந்தது. முகம் தெரியவில்லை.

அண்ணார்ந்து என்னை அவள் பார்த்தாலே ஒழிய, நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவள் அறியமாட்டாள்.

நான் அவளை பார்க்கிறேன் என்பதை மற்றப் பயணிகள் அறிந்திருக்கக்கூடும்.

எனக்கு கவலையில்லை.

அவர்களும் அவர்களுக்கு எட்டிய யாரையோ பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

மழையில் முழுமையாக நனைந்துவிடாமலும், ஆனால் நனையவே இல்லை என்று சொல்லிட முடியாத அளவிலும், அவளது உடையில் ஈரம் இருந்தது.

அரைக்குடையை மடித்து ஒருகையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஆசனத்தின் பிடியை பிடித்துக் கொண்டிருந்தாள்.

உடையின் ஈரம், அவளது உடலை ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது.

அவளது தலைக்கு மேல் எரிந்துக் கொண்டிருந்த பேருந்தின் மின்விளக்கு, ஈர உடையை இன்னும் சல்லடையாக்கிக் கொண்டிருந்தது.

நின்று நிதானமின்றி செல்லும் பேருந்தின் அசைவுக்கு ஏற்ப எங்களது உடல்கள் மோதிக் கொண்டன.

அவ்வப்போது என் வாழ்நாளில் நான் பார்த்திராத அங்கங்களும் என்னில் மோதுவதுண்டு.

அவற்றை அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

ஒருகையால் அணைத்துக் கொள்வோமா? என்றும் தோன்றியது.

45 வயதாகிறது, இத்தனை வயதில் எத்தனையோ பேருந்து பயணங்களைச் செய்திருக்கிறேன்.

இதுவரையில் இப்படி ஒன்று வாய்த்ததில்லை.

என்னைச் சூழ்ந்திருந்த பயணிகள் கூட்டத்தால் விளைந்த உஷ்ணத்தில் இருந்து, அருகில் பாதி ஈரத்துடன் இடித்துக் கொண்டிருந்த பெண்ணின் உஷ்ணம் வேறுப்பட்டுத் தெரிந்தது.

இதுதான் எனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக கூட இருக்கலாம்.

பயணத்துக்கான சீட்டு இன்னும் எடுக்காமல் இருந்தது வசதியாய் போய்விட்டது.

இறங்க வேண்டிய இடம்கடந்தும், அந்த உஸ்ணத்தில் இருந்து விடுபட விரும்பவில்லை.

சற்றே இறுக்கி அணைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது.

கழுத்துக்கு அருகில்சில அங்குலங்கள் ஆடை விலகி வெளியில் தெரிந்த பகுதியை, ஈரதுணி ஒட்டி இருந்த இடுப்புப் பகுதியை அல்லது அங்கு... எங்காவது ஓரிடத்தை சீண்டிப் பார்த்தால்தான் என்ன?

சபலம் வில்லங்கமான எண்ணங்களைத் தூவிக் கொண்டே இருந்தது.

பாதணியின் எல்லையைத் தாண்டி வெளியில் நீண்டுக் கொண்டிருந்த ஒருவிரலையாவது உரசிவிடுவோமா?

எதிர்பார்க்கவில்லை, திடீரென முறைத்துப் பார்த்தாள்.

பின்னர் கீழே குணிந்துக் கொண்டாள்.

எனக்கு புரியாமல் இருந்தது.

கூடாத இடமெதிலும் சீண்டிவிட்டேனா? இல்லை இவ்வளவு நேரம் அவளைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்துக் கொண்டிருப்பாளா? எனக்கே தெரியாமல் ஒரு சந்தேகம் வந்தது.

எனக்கு அப்படித்தான், சிறுவயதில் தந்தையுடன் இருக்கும் போது அவர் அடிக்கடி யாராவது சாமியாரிடம் கூட்டிப்போவார்.

அந்தசாமியார் சாமியாடி நடந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்.

எனக்கு அவரை பார்க்கவே பயமாக இருக்கும்.

அறிந்தோ அறியாமலோ நான் செய்த சின்னசின்ன தப்புகளை அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ? என்று அஞ்சிவேன்.

சாமியாரைக் கண்டு வீடு வந்த சில நாட்கள் அந்த தப்புகளை எல்லாம் செய்ய மாட்டேன்.

காலம் செல்ல மீண்டும் செய்வேன்.

இப்போதும் அதேபோன்ற ஒரு அச்சம் சூழ்ந்துக் கொண்டிருந்தது.

இந்தமுறை முறைத்துப் பார்த்ததோடு இல்லாமல், கன்னத்தில் பளார் என்று ஒரு அறையும் கொடுத்தாள்.

விரும்பியோ விரும்பாலோ ஒரு பெண் என் கன்னத்தை தொடும் முதல் சந்தர்ப்பம் அது.

கன்னத்தில் தோன்றிய எரிச்சலும், பயணிகளின் சலசலப்பும் அந்த அற்புதத்தருணத்தை ரசிக்கவிடாமல் செய்தது.

பூனைகளாக இருந்தவர்கள் பலர் புலிகளாக மாறிப் போனோர்கள்.

என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதைவிட, என்னை தாக்க வேண்டும் என்பதில் இளசுகள் குறியாக இருந்தனர்.

எனக்கும் நடந்தது விளங்காமலேயே இருந்தது.

என் காலால் அவளை சீண்டியதாக கத்திக் கூச்சலிட்டாள்.

அங்கும் இங்கும் இருந்து இன்னும் சில கரங்கள் என்னைத் தாக்கின.

பேருந்தில் இருந்து இறங்குமாறு கூச்சலிட்டார்கள்.

மீண்டும் உலகம் என்னை வெகுதூரம் தள்ளிவைக்கும் வலியை உணர்கிறேன்.

இதோ, சில கணங்கள் மெய்மறக்கச் செய்திருந்த அந்த உஷ்ணத்தை விடுத்து வெளியேறுகிறேன்.

வேகமாக நடக்கச் சொன்னார்கள்.

எனக்கும் சீக்கிரம் வெளியேறத்தான் தோன்றியது.

கூட்டத்தில் ஒரு காலால் மட்டும் உந்தி உந்தி நடக்க சிரமமாக இருந்தது.

இன்னொரு காலும் இருந்திருந்தால் இன்னும் இலகுவதாக இருந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக