ஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு

ஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.

நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.

சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.


இலங்கையில் உருவான மெல்லிசைப் பாடல்களில், 'என் நாட்குறிப்பு ஏடுகளில் உன் ஞாபகங்கள் பதிந்து வைத்தேன்' என்றப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...

இன்னும் சில பிடித்தமான பாடல்களுக்கு வரிகள் நினைவில் இல்லை. ஆனால் அந்த பாடல்களின் மெட்டுகள் வசப்படுத்திக் கொள்வன.

அவ்வாறான பாடல்கள் இணையத்தளங்களில் கேட்பதற்கில்லை.

இலங்கை இசைக்கலைஞர் கருப்பய்யா பிள்ளை பிரபாகரன் பதிவேற்றியிருந்த காணொளியும், அதன் உள்ளடக்கமும் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதாகும்.

உள்நாட்டு கலைஞர்களுக்கு ஊடகங்களும், மக்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும், கலையையே நம்பி இருக்கின்ற உள்நாட்டு தமிழ் கலைஞர்கள் தற்போது அநாதரவாகி இருப்பதாகவும் அவர் தமது காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் டிஸ் ரீ.வி பாவனையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த எச்சரிக்கையும் அவர் காணொளியில் இருந்தது.

குறிப்பாக கலைஞர்களின் வருவாய் தற்போது பாதி அளவில் குறைவடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு முன்னர்கூட இலங்கைக் கலைஞர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்களா? என்றால் அதுவும் இல்லை.

கிடைத்த சொட்சபட்ச வருவாயையும் இழக்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

இந்திய தொலைக்காட்சிகளை பார்வையிடுவதற்காக டிஸ் அன்டனாக்களை பயன்படுத்துகின்றவர்கள், பெரும்பாலும் உலக அறிவு மிக்கவர்களாகவும், இலங்கை அறிவு அற்றவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது நிஜம்.

இதுபல்வேறு பாதிப்புகளைத் தருகிறது.

இலங்கையில் விலைவாசி ஏற்றம் முதல் அரசியல், பொருளாதார, சமுக செய்திகளுடன் அனர்த்தங்கள் குறித்த தகவல்களைக் கூட பெரும்பாலானவர்கள் மிகவும் காலம்தாழ்ந்தே அறிந்துக் கொள்கின்றனர்.

இது சமுகத்துக்கு ஆரோக்கியமான விடயம் இல்லை.

அண்மைக்காலமாக சம்மந்தமே இல்லாவிட்டாலும், தமிழகத்திலும் இந்தியாவிலும் இடம்பெறுகின்ற 'சர்ச்சைக்குரிய' சம்பவங்களுக்காக இலங்கையில் இருந்துக் கொண்டு கருத்துக்கூறவும், ஆதரவளிக்கவும் செய்யும் நிலைமைகள் அதிகரித்துள்ளன. (நானும் ஜல்லிக்கட்டு விடயத்தில் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்தேன்.)

ஆனால் உள்ளுரில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களில் போராட வேண்டியவர்கள் அவ்வாறு ஈடுபடவில்லை.

இதற்கு பிரதான காரணம் இந்திய தொலைக்காட்சிகளை பார்வையிடுகின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே.

இவ்வாறான நிலையில் ஏற்கனவே ஜனரஞ்சமான இந்திய கலைஞர்களின் படைப்புகள் இலங்கை மக்களை இன்னும் இன்னும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

அவற்றுக்கு இடையில் இலங்கைக் கலைஞர்களால் போட்டியிடுவது சுலபமான விடயம் இல்லை.

இந்தநிலையிலேயே கலைஞர்கள் மக்களின் ஒத்துழைப்பை கோரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்தவிடயத்தை பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எங்களது படைப்புகளுக்கு மக்களது அங்கீகாரம் கிடைக்கவில்லை, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கலைஞர்களின் கோரிக்கை நியாயமானது.

ஆனால் ஒருவிடயத்தை நாம் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். நல்ல படைப்புகளுக்கு இலங்கையில் எப்போதும் அங்கீகாரம் இருந்திருக்கிறது.

மக்கள் அதனை கொடுத்து வந்திருக்கிறார்கள்.

கலைத்துறையில் நல்ல முயற்சியாளர்கள் சிறந்த முன்னேற்றத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டுவிடுகிறார்கள்.

மொஹமட் ஷமீலின் மழைவிழியில் பாடல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்த பாடலை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துக் கொள்ள தேடி அலைந்தார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

முன்புள்ள காலம் போன்றது இல்லை இப்போது. பழையகாலத்தில் இசைக்கு கொடுத்த முக்கியத்துவம், ஒலிநயத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. சாதாரண மெட்டுகள் கூட எத்தனையோ விதமான சப்த சோடிப்புகளுடன், ஒலிகலவையில் ஜாலங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

மக்கள் அதற்கே பழகிவிட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் இக்காலத்தின் தரத்துடன் ஒப்பிட முடியாத படைப்புகளை செய்து, இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை மக்கள் உள்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வாதம் நியாயமாக இருக்கலாம். அனால் கலைஞர்கள் தங்களை காலத்துக்கு ஏற்ற நுட்பங்களுக்கு பழக்கப்படுத்தி, தங்களது படைப்புகளையும் செம்மைப்படுத்திக் கொள்ளாதிருப்பது எந்தவகையில் நியாயமாகும்?

மக்கள் ரசிக்க வேண்டும் என்றுதான் படைப்புகள் செய்யப்படுமாக இருந்தால், அதில் அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டும். காலத்துக்கு ஏற்ற புத்தாக்கங்களை தமக்குள் ஏற்று, அதனை மக்களுக்கு வழங்குபவன்தானே சிறந்த கலைஞன்?

இந்த ஒலிநய, இசை நய விடயங்களில் இலங்கையைச் சேர்ந்த பலக்கலைஞர்கள் முன்னேற்றகரமாக செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் வரவேற்கத் தயங்கவில்லை என்பதே நிஜயம். யார் புறக்கணித்தாலும், மக்களை சென்றடையும் படைப்புகள் மகத்தானதாக இருந்தால், அதற்கு ஏற்ற அங்கீகாரத்தை மக்கள் வழங்கத்தான் செய்கிறார்கள்.

யாழ்தேவி என்ற இசை ஆல்பத்தில் வந்த பாடல்கள், தினேஸ்-கஜனின் க்ரொஸ் கல்சர்ஸ், ஷமீலின் முதல் பாடலான கனவின் கருவில்.... இப்படி எத்தனையோ பாடல்கள் தற்கால தரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அண்மையில் வடக்கை மையமாகக் கொண்ட இளம் கலைஞர்கள் உருவாக்கி வரும் சில பாடல்கள் ஒலிநயத்திலும், இசை நயத்திலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இங்கு எத்தனையோ உள்நாட்டு கலைஞர்கள் அதிதிறமையானவர்களாக இருக்கிறர்கள். வாத்தியங்களை மீட்டுவதிலும், பாடுவதிலும், இசையமைப்பதிலும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இசைப்பணி என்றால் அதில் உள்ள உப பணிகளை அவரது இயலுமைக்கு ஏற்ப பிரித்துக் கொண்டு, ஒரு கூட்டாக பணியாற்றுகிறார்களா? ஏனை ஒவ்வொரு விடயத்திலும் சிறப்பான திறமைப் பெற்றுள்ளவர்கள் இணைந்து, இலாப நோக்கில் மாத்திரம் அல்லாமல் நல்ல படைப்புகளை தர முடியாது?

இவை உள்ளுர் கலைஞர்கள் மீது நான் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்று கருதினால், ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் மக்கள் நாங்கள் தருகின்றதைதான் கேட்க வேண்டும் என்று ஒரு கலைஞன் நினைப்பானானால், அவன் மக்களது அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு விடயம் அதனிலும் முக்கியமானது. உள்நாட்டு கலைஞர்களை (எழுத்தாளர்கள் உட்பட) பாதுகாப்பதற்காக, அல்லது அவர்களின் சேமத்துக்காக பல்வேறு அமைப்புகள் செயற்படுவதாக அறிகிறேன். பல தமிழ் அமைப்புகள், பிராந்தியம் சார்ந்தும் இயங்குகின்றன. அவை இதுவரையில் கலை, இலக்கிய வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கின்றன? கலைஞர்களை ஊக்கவிக்கவும், இலங்கையின் உள்நாட்டு படைப்புகளின் தரத்தை மேம்படுத்தவும் அவ்வாறான அமைப்புகள் எவ்வளவு உழைத்திருக்கின்றன? அல்லது சும்மா பொதுவான பெயர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு பம்மாத்தும் செயற்பாடுகளை மட்டும்தான் முன்னெடுத்து வருகின்றனவா? இதுதொடர்பான நீண்ட ஆய்வு ஒன்று இப்போதே அவசியப்படுகிறது.

கலைத்துறை வளர்ச்சி என்பது கலைஞர்களால் மாத்திரம் தனித்து மேற்கொள்ளக்கூடியது இல்லை. கலைசார்ந்த படைப்பையும் படைத்துவிட்டு, அதனை வணிக சந்தைக்குள் திணித்து, தங்களது வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வருமான மார்க்கங்களையும் கலைஞர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கோர நிலைமை. அந்த நிலைமையே இலங்கையில் இருக்கிறது. கலைப் படைப்புகளை உரிய வகையில் மக்களுக்கு கொண்டு செல்ல எத்தனை அமைப்புகள் இருக்கின்றன? வணிகம் சார்ந்தோ, சேவை சார்ந்தோ இயங்குகின்ற பல அமைப்புகளை எனக்குத் தெரியும். ஆனால் அவை ஒரு குறுகிய வட்டத்துக்குள், அரைத்தமாவையை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருந்தால், எப்படி கலையை வளர்க்க முடியும்?

இப்படி நாளாந்தம் ஒரு கலைஞனின் காணொளி வெளியாகும் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.

கலைத்துறை வளர்ச்சி என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு, அந்த பொறுப்பின் பங்குகள் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும். ஒன்றித்து செயற்பட வேண்டும். அதற்கு முன்னர் கலையின், படைப்பின் பெயரை மட்டும் பயன்படுத்தி சுயலாபம் ஈட்டிக் கொள்கின்ற புள்ளுருவிகளை அடையாளம் கண்டு களைய வேண்டியதும் கட்டாயமாகும்.....

விக்கிவிக்னேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக