சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை - பழைய வீடு II

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன.
23 வருடங்களுக்கு முன்னர் இந்த வீடு இப்படி இருக்கவில்லை. இன்னும் நேர்த்தியாக, அழகாக இருந்ததாக நினைவு. சுற்றிலும் வாழைத் தோப்பு இருந்தது. இந்த அளவுக்கு புற்கள் மண்டி இருக்கவில்லை. கீழே எப்போதும் சலசலப்புடன் ஆறு ஒன்று கிளைபிரிந்து ஓடிக்கொண்டிருக்கும். அந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி போய் கொண்டிருக்கும்.
அந்த பலா மரங்களில் எப்போது காய் இருந்துகொண்டே இருக்கும். மங்குஸ் மரம், குரட்டைச் செடிகள் என எத்தனையோ பழ மரங்கள், ரோசா, கானேசன் என்று பெயர்தெரியாத பல மலர்கள் அந்த வீட்டை சுற்றிலும் இருக்கும். 

அப்போது நான், 2 தம்பிகள், அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் அங்கே வசித்தோம். என் கடைசி தம்பி 2 வயதில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்த்தப்பியதும் அங்குதான்.

அண்மையில் 15 வருடங்களுக்கு முன்னர் வசித்த ஒருவீடு குறித்து எழுதி இருந்தேன். அது ஹப்புத்தளை இதல்கஸ்ஸின்னையில் இருக்கிறது. இது பதுளை - மொரகொல்லையில் உள்ள மற்றுமொரு வீடு. இந்த வீட்டின் தோற்றம் தற்போது சிறியதாக இருப்பதைப் போல இருக்கிறது. என் நினைவின்படி நான் வசித்த வீடுகளிலேயே இராட்சத அறைகளைக் கொண்ட வீடு இதுதான். மொத்தமாக 11 அறைகள் இருந்ததாக நினைவு. சமையல் அறை, அதற்கு அருகில் ஒரு சாப்பாட்டு அறை, பிறகு அதற்கு அருகில் இன்னொரு அறை, அதெல்லாம் எதெற்கொன்றே தெரியவில்லை. 
இரண்டு படுக்கை அறைகளுக்கு இடையிலான விராந்தையும், படுக்கை அறை அளவிற்கே இருக்கும். வரவேற்பறை இரண்டு-மூன்று படுக்கை அறைகளின் அளவை விட பெரியது. அப்பாவுக்கு தனியான அலுவலக அறையும் கூடவே இருந்தது. 
வீட்டை சுற்றிலும் பெரிய வீட்டுத்தோட்டம். சீத்தாப்பழ மரங்கள், தோடம்பழ மரம் ஒன்று, தேசியக்காய் மரம் ஒன்று. வீட்டுக்கு சற்று மேலே கஜு மரங்களும் இருந்தன. 
முதன்முதலில் பாத்தி கட்டி தோட்டம் வளர்த்தது அங்குதான். நான் மட்டுமே குளிக்கும் ஒரு சிறிய கிணறும் இருந்தது. வாழ்ந்த மனிதர்களுக்கு அப்பால், மாடுகளும், ஆடுகளும் எங்களோடு சேர்ந்தே வளர்ந்தன. எப்போதும் உறவினர்கள் போல வீட்டில் வேலை ஆட்கள் நிரம்பிய மகிழ்வை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒருநாளும் அந்நியராக பார்த்ததே கிடையாது.
வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே பாடசாலை. இடைவேளை மணி அடித்தால் நானும் தாசனும் வீட்டுக்கு ஓடிச் சென்று சாப்பிட்டுவிட்டு வருவோம். நாங்கள் வீட்டுக்கு வரும் போது செல்வராஜ் சேரும், ஆனந்த் சேரும் வீட்டில் மாமாவோடு சேர்ந்து கிரிக்கட் மெட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புலிவாய் தப்பி வேடன் கையில் சிக்கிய மான்கள் போல நாங்கள். இந்த படங்களை எடுத்து அனுப்பியது தாசன். நான் 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து என் நண்பன். 
அந்த நாட்களில் தாசன் பட்ட கஷ்ட்டங்களுக்கு நானே சாட்சி. தாத்தா பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து இன்று இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறார் என்பது எனக்கு கௌரவங்களில் ஒன்று. 
மாலையில் தாசனின் வீட்டுக்கு சென்று அவரது தாத்தாவிடம் கெஞ்சி தாசனை வீட்டுக்கு அழைத்து வருவது என் நாளாந்த வேலை. 

இரவில் என்னோடுதான் உறங்குவார். காலையில் விழித்துப் பார்க்கும் போது இருக்கமாட்டார். 5 மணிக்கெல்லாம் ஆள் எஸ்கேப். 
சின்னச் சின்ன சண்டைகள், பெரிய அன்பு. இடைவெளிகளுக்கு இடையில் எங்கள் நட்பு இன்றுவரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தாசனைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இன்னொருத் தனிப்பதிவே எழுதலாம். 
வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய கிணறு அமைத்து அதில் ஆற்றில் கிடைக்கும சிறிய அழகழகான நிறங்களில் ஆன வால்களைக் கொண்ட மீன்களை வளர்த்தேன். அந்த மீன்கள் தங்களது வர்ண வால்களை ஆட்டி ஆட்டி நீந்திச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது அலாதியானது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும், சீலா, ஜீலா, கெண்டா இப்படி.... 
தாசனின் வீட்டில் இருக்கும் குரட்டை பழங்கள், எமது வீட்டிற்கு சற்று மேல் கிடைக்கின்ற மாம்பழங்கள், மாங்காய்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு, பழரசம் செய்துக் கொண்டு வார இறுதி நாட்களில் தாசன், நான், தம்பி சுதா உடன், கிரிமாத்தியா(அமர சிரீ கலங் சூரிய) என்ற ஒரு சிங்கள நண்பனும் சேர்ந்து காடுகளில் நடமாடுவோம். 
வீட்டில் இருந்த ஒரு குட்டி நாயை அழைத்துக் கொண்டு, வீட்டில் காவல் பணியில் இருந்த உக்குபண்டா ஐயாவை ஏமாற்றி டயருக்குள் சிறிய ஈட்டி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டு தேன் எடுப்பதற்காக செல்வோம். 
எமது வீட்டுக்கு அருகில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்துதான் பதுளை நகருக்கு நீர் விநியோகிக்கப்பட்டது. நாங்கள் குளிக்க வேண்டும் என்றால் அந்த நீர்த்தேக்கத்தின் ஒருகுழாயை திறந்துவிடுவார் அந்த நல்லமனிதர். சுமித் ஐயா. 
வாவ்... 
அந்தநாட்கள் மிகமிக அழகானவை. சுமையே இல்லாதவை. மொரகொலை என்ற அந்த ஊர் எத்தனை சுகமானது என்று சொற்களில் கூற முடியாது. விளையாட்டு என்ன? வேடிக்கைகள் என்ன...? 
வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் தேயிலைத் தவரணை. அங்கு இருக்கின்ற இறப்பர் குழாயில் அத்தனை வேகமாக நீர் வரும். குழாயில் நீர் வரும் துவாரத்தை கையால் அழுத்தினால் அந்த நீர் நீண்ட தூரத்துக்கு பாயும். அதுஒரு அலாதியான சந்தோசம். அதற்காகவே அப்பாவுக்கு தெரியாமல் தவரணைக்கு சென்று தேயிலைக் கன்றுகளுக்கு நீர் பாய்ச்சி இருக்கிறேன். சில நேரம் அப்பாவிடம் மாட்டுப்பட்டதும் உண்டு. ஆனாலும் கடிந்து கொண்டதாக நினைவில் இல்லை. 
தவரணையில் இருக்கும் பெஞ்சிமன் அங்கள் அருமையான மனிதர். அவர்தான் தவரணை கண்காணி. அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். ஒருவர் எனது வகுப்பில் படித்தார். நாளாந்தம் அவரும் வீட்டிற்கு வருவார். ஒன்றாக விளையாடுவோம். தாசனுக்கு பிடிக்காது. முத்துகுமார் என்று இன்னொரு நண்பனும் இருந்தான். அப்போது ஏதோ ஒரு பிரச்சினையால் கதைக்காமல்விட்டது. இதுவரைக்கும் காணக்கூட கிடைக்கவில்லை. 

வீட்டில் இருந்து இன்னொருபக்கமாக 1 கிலோமீற்றர் தொலைவில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி உண்டு. அந்தநாட்களில் எந்த நேரமும் அங்கு நீர் ஊற்றிக் கொண்டே இருக்கும்.
வீட்டின் அருகிலேயே 40-50 அடியில் ஒரு பெரிய செங்குத்தான பாறை இருந்தது. அதில் தொங்கும் வேர்களைப் பிடித்து பாறையில் ஏறிச் சென்று நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய காட்டில் இருக்கும் அன்னாசி பழங்களை பறித்து சுவைப்போம். 
முடிவே இல்லாமல் எழுதிக் கொண்டே போகலாம். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. அந்த வீடுகூட இப்போது முன்னரைப் போல இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் அந்த இடங்களுக்கு சென்று பார்த்தேன். மனம் எதற்காகவே வீங்கி பெருத்து சிலநாட்கள் கனத்துக் கிடந்தது. 
எல்லா வீட்டிலும் ஆன்மா இருக்கிறது. சுவர்கள் ஒன்றும் சும்மா இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன. அவை எம் நினைவுகளை சுமந்துக் கொண்டிருக்கின்றன. அதன் ஆன்மா, வாழ்வின் இறுதிவரைக்கும் எம்மை வரச்சொல்லி அழைத்தபடியே இருக்கும். எமக்கே தெரியாமல் ஏக்கம் என்ற இரசாயனம் அந்த ஆன்மாவுடன் எம்மை இணைத்தே வைத்திருக்கும்.