கதைக்கு முன்னர் விதை...


#பேய் இருக்கா இல்லையா? 
என்று என்னிடம் கேட்டால், 'இல்லை' என்று சொல்ல துணிகையில், சில கேள்விகள் என் முன் வந்து நிற்கும்...
பராய வயதில் நடத்திய ஆய்வின் பின்னர் பெற்ற பக்குவம், இதனை இல்லை என்று மறுக்க முற்பட்டாலும், #சிறுவயதில் இருந்து நான் அனுபவித்த சில விந்தைகள், இல்லை என்று சொல்வதை சற்று தள்ளி வைக்க தூண்டும்.
எத்தனையோ பேர் பேய்கள் குறித்து #ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்... 
என் அறிவுக்கு எட்டியவரையில் 80 சதவீனதமானவர்கள் பேய் இருக்கிறது என்பதை ஏதோ ஒரு வகையில் நம்புகிறார்கள். 
1992ம் ஆண்டு காலப்பகுதியில் #அக்கரபத்தனையில் உள்ள ஒரு ஊரில் அப்பா வெளிக்கள உத்தியோகத்தராக இருந்த போது, நாங்கள் வாழ்ந்த வீடு பெரிய ஒரு பிரதேசத்தில் தனித்து இருந்தது.
பக்கத்தில் ஒரு #வீடு இருந்தாலும் அதில் யாரும் இருக்கவில்லை.
சற்று தொலைவில் மேலும் இரண்டு வீடுகளில் இரண்டு குடும்பங்கள் இருந்தன.
பகல் முழுக்க பச்சை பசேலாக அழகாக இருக்கும் அந்த பிரதேசம், இரவாகிவிட்டால், உள்ளுர அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
வெளியில் செல்லவே அச்சமாக இருக்கும்.
அப்போது எனக்கு ஆறு வயது. 
மாலை 6 மணிக்கெல்லாம் ஒருவிதமான #இருள் சூழ்ந்துக் கொள்ளும். 
பகலெல்லாம் தைரியமாக இருக்கும் அம்மா, மாலைக்கு பின்னர் அப்பா வரும் வரையில் சமயல் அறையில் இருந்து வெளியே வர மாட்டார்.
அந்த வீட்டின் வலது பக்கத்தில் இருக்கும் யன்னலை பூட்ட அப்பாதான் வரவேண்டும்.. அம்மா அதனை பூட்டச் சென்றால் அவரால் அதை இழுத்து பூட்ட முடியாது... 
யன்னலை பூட்டுவது ஒன்றும் கடினமான விடயம் இல்லை.
ஆனால் மாலை ஆறு மணிக்கு பின்னர் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடும்... 
அதுவே எங்கள் அச்சத்துக்கு முக்கிய காரணம்.
சில சமயம் அந்த வீட்டில் உறங்கும் போது அப்பா ஓரடி உயரத்துக்கு தூக்கப்பட்டு பின் கட்டில் விழுவதையும் நான் பார்த்திருக்கிறேன்... 
அது ஒரு #அமானுஸ்யமான வீடுதான்... 
பின்னர் 1996ம் ஆண்டளவில் அப்பாவின் தொழில் நிமித்தம் நாங்கள் பதுளைக்கு மாறிவிட்டோம்... 
அப்போது எனக்கு 10 வயது... 
மறக்க முடியாத பல அமானுஸ்யங்கள் அங்கு இடம்பெற்றிருந்தன...
ஒருநாள் மாலை 7 மணி அளவில் அப்பாவும், நானும் தோட்ட முகாமையாளரை சந்திக்க சென்றோம்... 
வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் இருக்கும் முகாமையாளரின் வீடு.. 
செல்லும் வழியின் இன்னொரு திசையில் #மயானம் இருக்கிறது.
நாங்கள் நடந்து செல்லும் போது மயானம் இருக்கும் திசையில் இருந்து ஒருவர் நடந்துவந்தார். 
தேயிலைச் செடிகளின் ஓரமாக அவர் எங்களைக் கண்டதும் நின்றுக் கொண்டார். 
அப்பா அவரை அதிகாரமாக அழைத்த போதும், அவர் அங்கேயே நின்றிருந்தார்.
அவர் முகமோ உடலோ வர்ணமாக எதுவுமே தெரியவில்லை.
ஒரு #நிழல் போல இருந்தது.
கையில் தேயிலைக் கொழுந்திலை ஒன்றை பறித்து வைத்திருப்பது போன்று இருந்தது...
நீண்டநேரம் அப்பா அவரை அழைத்த போதும் அவர் எந்தவிதமான சமிக்ஞையும் செய்யவில்லை.
நடக்கவும் இல்லை.
நான் அருகில் செல்ல முனைந்த போது அப்பா தடுத்து முகாமையாளரின் வீட்டுக்கே இழுத்துக் கொண்டு போக முற்பட்டார்.
அதற்குள் திடீரென அந்த நிழலை காணவில்லை.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிழல் மாயமானது எங்கனம்...
அப்பாவிடம் கேட்டேன்;...
'யாருப்பா அது..?' - நான்
'சும்மா வாங்க.... அம்மாட்ட சொல்ல வேணாம்' - அப்பா
அப்போது அது எனக்கு புரியவில்லை... அதை பற்றி யோசிக்கவும் இல்லை...
ஆனால் அந்த நிழல் என்னவாக இருக்கும் என்று பின்னர் அடிக்கடி யோசித்த வைத்ததுண்டு... 
அதே எண்ணம்தான் #ஆவிகள், பேய்கள் குறித்த ஆய்வை நடத்தவும் தூண்டுதலாக இருந்தது.... 
பின்னர் நாங்கள் தனித்து செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒன்று அமானுஸ்யமாக இருக்கும்...
ஒருகட்டத்தில் இல்லாமல் இருந்த #அச்சம், அந்த காலப்பகுதியில் எனக்கு அதிகமாகிவிட்டது.
தனியாக எங்கு செல்லவும் பயமாகவே இருக்கும். பகலில் கூட... 
1998ம் ஆண்டின் பின்னர் #ஹப்புத்தளைக்கு அப்பா இடம்மாற வேண்டி ஏற்பட்டது. 
2003ம் ஆண்டு #உயர்தரம் படிக்கும் போது வழங்கப்பட வேண்டிய செயல்திட்டத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில் வந்த திட்டம் பேய் பற்றிய ஆராச்சி....
#பாடசாலை அதிபரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது...
ஆரம்பத்தில் பேய் பற்றிய பழங்கால செய்திகளை மாத்திரம் சேகரித்து ஆய்வு நடத்துவதாக இருந்தது... 
பழைய பத்திரிகைகளில் வந்த #பேய்க்கதைகள், பேய் சம்மந்தமான ஆவணங்கள் போன்றவற்றை தேடி சேகரித்தேன்...
டொக்டர் கோவூர் போன்றோரின் கருத்துக்களையும் சேகரித்தேன்... 
அப்போது ஒரு பழைய #புத்தகம் கிடைத்தது... 
அதில் ஆவியை வரவழைப்பது எப்படி என்றொரு கட்டம் இருந்து...
பண்டாரவளை மத்திய கல்லூரியின் வாசிகசாலையில் உள்ள ஒரு அறையில் இதனை சோதித்து பார்த்தேன்.... 
பூட்டப்பட்டிருந்த கண்ணாடிக் கதவு சற்றே ஆடி திறக்கப்பட்ட போது ஆய்வை நிறுத்திக் கொண்டேன்... 
அது முழுமை பெறவில்லை. முழுமை படுத்த அப்போது தைரியம் இருக்கவில்லை.
இப்போது செயல்முறையில் ஆவிகள் குறித்து ஆராய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது...
குறிப்பாக ஒருமுறையாவது ஆவியை புகைப்படம் எடுத்துவிட வேண்டும். 
இரவில் பல ஊர்களில் சுற்றித் திரிந்து, சிலரிடம் அடிவாங்கியும் இருக்கிறேன்... 
ஆனால் ஆவி கிடைக்கவில்லை.
2005ம் ஆண்டு உயர்தர படிப்பும் முடிந்துவிட்டது. 
என் #செயல்திட்டம் நிறைவடையாத நிலையில், ஒரேநாளில் வேறொரு செயல்திட்டத்தை செய்து சமர்ப்பித்துவிட்டேன்...
ஆவி பற்றிய ஆய்வுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும் இதற்கு காரணமாக இருந்தது... 
பின்னர் இந்த ஆய்வு அப்படியே கிடப்பில் இருந்து.... 
2006ம் ஆண்டு அப்பா இறந்துவிட்டார்... 
அத்தோடு #கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது.... 
2007ம் ஆண்டளவில் மீண்டும் ஆவிகள் பல சந்தர்ப்பங்களில் தென்பட ஆரம்பித்தன....
அதற்கு நான் முன்னர் மேற்கொண்ட ஆய்வுகளும் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்...
2007ம் ஆண்டு ஒருநாள் தம்பிமார்கள; பக்கத்துவீட்டு நண்பன் மற்றும் #அருள்ஆகியோர் வீட்டுக்கு வெளியே கெரம் விளையாடிக் கொண்டிருந்தோம்...
#அருள் வாங்கி இருந்த புதிய கைப்பேசியில் உள்ள கமராவில் நான் வீட்டை சுற்றி படம் பிடித்துக் கொண்டிருந்தேன்... 
அந்த காணொளியை பின்னர் பார்க்கும் போது அதில் பிரமாண்டமான உருவம் ஒன்று இருப்பதை கண்டோம்...
சாட்சி அருள்தான்... 
எமது வீட்டின் வாசலுக்கு முன்னால் இருந்த உயர்ந்த ஆனைக்கொய்யா மரத்தையும் விட உயர்ந்ததாக இருந்தது அந்த உருவம்... 
மிகப்பெரிய மனித உருவமாக அதுகாட்சி அளித்தது.
துரதிஸ்டவசமாக அந்த காணொளியை சேகரித்து வைக்க முடியவில்லை.
அது குறித்து பலரிடம் காண்பித்தும் விளக்கம் பெற முடியவில்லை...
ஹப்புத்தளை - தங்கமலையில் தங்கை #நிலாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்த போது, நண்பர் ஒருவரின் கணனியை பழுதுபார்த்துவிட்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினேன்...
அப்போது என்னுடனேயே ஒருவர் நடந்து வந்தார்...
என்னுடன் பேசிக் கொண்டே வந்தார்.
நீண்டகாலத்துக்கு பின்னர் தாம் ஊருக்குள் வருவதாக கூறினார்...
குறிப்பிட்ட ஒரு இடம் வரும் போது அவரை காணவில்லை. சற்று இருள் சூழ்ந்துவிட்டால், உடனடியாக அவரை அடையாளம் காணவும் முடியவில்லை.
அருகில் வீடுகள் எவையும் இல்லை.
எங்கு மறைந்தார் என்று தெரியவில்லை.
ஆனால் அது என்னை ஏமாற்றுவதற்காக யாரோ செய்த தந்திரமாக இருக்கும் என்றே நம்புகிறேன்...
காரணம், இதற்கு முன்னர் நான் எதிர்கொண்ட ஆவி சம்மந்தமான சம்பங்களை ஒத்ததாக அது இல்லை. 
ஆவி அவ்வளவு நேரடியாக வரும் என்று நான் நம்பவில்லை. 
அதன் பின்னர் ஏற்பட்ட குடும்ப சூழ்நிலைகள் ஆவிகள் குறித்தே மறக்கடித்துவிட்டன.
2012ம் ஆண்டளவில் கொட்டாஞ்சேனையில் இதற்கு முன்னர் நானும் மனைவியும் வசித்த வீடொன்றில், நாங்கள் அதிகம் பயன்படுத்தாத ஒரு அறை இருந்தது.
அந்த வீட்டில் இரண்டு அறைகள் தான்.. 
பெரும்பாலும் நாங்கள் இருவரும் முன் அறையிலேயே தங்கிவிடுவதால், அந்த அறை பயன்படுத்தப்படுவதே இல்லை.
ஒருநாள் எங்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தை அடுத்து நான் குறித்த அறையில் உறங்க சென்றுவிட்டேன்... 
எங்கள் வாக்குவாதங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை...
சிறிது நேரத்தில் எழுந்து பார்க்கும் போது பக்கத்தில் மனைவி படுத்திருந்தார்.. 
திரும்பி பார்த்துவிட்டு சண்டை தீர்ந்துவிட்டதாக நினைத்தேன், ஆனால் கதைக்கமுற்படாமல் அப்படியே தூங்கிவிட்டேன்...
சற்று நேரத்தில் தேனீருடன் வந்த மனைவியிடம் 
'எப்ப எழும்பின' - நான்
'நா தூங்கவே இல்லையே.' - அவள்
'அப்ப பக்கத்துல படுத்திருந்தியே?' - நான்
'நா இப்பதான் ரூம்குள்ளயே வாறேன்' - அவள்...
அப்படியன்றால் எனக்கு அருகில் படுத்திருந்தது யார்?
சில நேரங்களில் நாம் காணும் பொருள் திரிபடைந்து பேய் போன்று தெரியும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அது நமது மனநிலையை பொறுத்த விடயம்.
அச்சத்துடன் இருக்கும் போது ஆடும் பொருளெல்லாம் ஆவிபோலதான் தோன்றும்.
ஆனால் அன்று நான் அச்சத்துடன் இருக்கவில்லை... ஆவி பற்றிய நினைப்பே இல்லை... திரிபடைந்து தெரிவதற்கு அருகில் எந்த பொருளும் இல்லை.. 
(நல்லநேரம் கட்டிப்பிடிக்கவில்லை) 
அதன் பின்னர் அந்த அறைக்குள் மனைவியை தனித்து உறங்க அனுமதித்தில்லை... சிறிது நாட்களில் அந்த வீட்டில் இருந்து மாறிவிட்டோம்...
ஆனால் ஆவிகள் பற்றிய சுவாரஷ்யம் அடிமனதுக்குள் இருந்துக் கொண்டே இருந்து...
அதன் பிரதிபளிப்புகள் சில சிறுகதைகளில் வெளியாக்கப்பட்டன...
கடந்த 10ம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவம் பாரதூரமானது இல்லை எனினும், மீண்டும் ஆவிகள் பற்றிய சுவாரஷ்யத்தை தூண்டிவிட்டுள்ளது.
மீண்டும் அந்த ஆய்வில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்... 
ஏற்கனவே செய்த ஆய்வின்படி ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்...
அதன் முடிவினை வெளிப்படுத்த என்னிடம் ஆதாரங்கள் இல்லை.
விரைவிலோ, தாமதமாகவே அது வெளியாகும்... 
நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக