அமல்ராஜ் பிரான்ஷிஸ்


http://www.rajamal.com/

அண்மையில் தினக்குரலில் வெளியான “அய்டா 2035” என்னும் ஒரு சிறுகதையை வாசித்தேன். அது ஒரு புதிய தொழில்நுட்ப புனைவு. அதை எழுதியிருந்தவர் Vikey Wignesh.

ஈழத்தில் இப்பொழுது பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தரிசிக்க முடிகிறது.

அவ்வாறான ஒரு நம்பிக்கையூட்டும் பேர்வழி இந்த விக்னேஸ். இந்த கதைதான் அவர் எழுதி நான் முதல் முதல் வாசித்த கதை. சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” வின் மினி வேர்ஷன். வாசித்தபோது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.


சுஜாதாவின் நிலைத்தலை இன்னுமொருவரால் இன்றுவரை கைப்பற்ற முடியாமல் போனதற்கு அவரது இந்த “யுனிக்னஸ்” தான் காரணம். அதுவும் அவரது “தொழில்நுட்ப புனைவுகள்”.

அவரது மூளையின் முக்கால்வாசியை தொழில்நுட்ப அறிவே நிரப்பியிருந்தது. இந்த ரகத்தில் இதுவரை வேறொருவரும் வந்துசேரவில்லை (எனக்குத்தெரிந்து). அதாவது தொழில்நுட்ப இலக்கிய சாயலோடு.


விக்கி விக்னேசினுடைய இந்தக் கதை அந்த “தொழில்நுட்ப இலக்கிய” வகையறாவிற்குள் முழுவதுமாக விழுகிறது. அவரிற்கு வாழ்த்துக்களைச் சொன்னேன்.

சிறுகதைத்தொகுதி ஒன்றை வெளியிடுவது தொடர்பாகவும் சிந்திப்பதாகச்சொன்னார். நிச்சயம், இவர்போன்றவர்கள் ஈழத்து இலக்கிய ஆட்டத்திற்குள் வரவேண்டும்.

சிக்சர்களை விளாசி ஜெயிக்க வேண்டும். அவரிற்கு எனது வாழ்த்தோடு இறுதியில் இன்னொன்றையும் சொன்னேன்.

“தொடர்ந்து எழுத ஆரம்பியுங்கள். அவற்றை நூலாக்குங்கள். ஆனாலும் சுஜாதாவையும், ஜேமோவையும், சாருவையும் மட்டும் கொண்டாடும் ஈழத்து வாசிப்பு மேதாவிகள் கூட்டமொன்று இருக்கிறது. அதனிடம் மட்டும் கைதட்டல்களையும் தட்டிக்கொடுப்புக்களையும் எதிர்பார்த்து பின்னர் மனமுடைந்து வீணாய்ப்போய்விடாதீர்கள்.

மற்றும்படி நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்”.
வாழ்த்துக்கள் விக்னேஸ்.