கவிதாயினி ராஜ்சுகா


http://suga-elizabeth.blogspot.com/2015/09/2035.html

விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.

டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா 2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம் வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர் சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.


தற்காலத்தை கடந்து எதிர்காலத்தின் ஓர் தினத்தில் வாழ்ந்துவிட்ட உணர்வு, புதுமையான கற்பனைத்துவம் கலந்த இக்கதை நிஜமானதாக இருக்குமோ என எண்ணுமளவிற்கு கதைப்புனைவு நம்மை அதிசய உலகிற்கு அழைத்துச்செல்கின்றது.

கொஞ்சம் நீளமானதாகவே இருப்பினும் சலிப்புத்தன்மையில்லாது விறுவி(ரு)றுப்பாக நகர்ந்துசெல்கின்றது எழுத்தாளர் தன்னையொரு விஞ்ஞானியாக வெளிப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.வார்த்தையமைக்குக்கள், விடய‌க்கோர்வைகள் மேலைநாட்டு சம்பவமொன்றை நேரடியாக பார்க்கும் நெகிழ்ச்சியை தருகின்றது.

இப்படி அதிரடியாய் தொடரும் கதை, முடிவடையும் இடத்தில்தான் படைப்பாளருக்கு பெரிய சபாஷ் போடத்தோன்றுகின்றது. பொதுவாகவே சிறுகதை, நாவல்களில் 'முடிவு' என்பது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் போட்டியாய் அமையும் இடமென்று கூறலாம். சில நேரங்களில் வாசகன் எதிர்பார்த்த முடிவினையே தந்து எழுத்தாளர் தோற்றுப்போகின்றார், பலநேரங்களில் எழுத்தாளனின் எதிர்பாரா முடிவிலே வாசகன் மகிழ்வோடு தோற்றுப்போகின்றான் இடண்டுமே ஆரோக்கியமான நிகழ்வுதான். 

அதனையே விக்னேஸ் அவர்களும் அழுத்தாமான கதையின் முடிவைத்தந்து வாசகர்கள்மத்தியில் வெற்றி பெறுகின்றார். கதையின் கனமும் இந்த முடிவிலேதான் வலுபெறுகின்றது.

அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் தொழினுட்ப புனைவாக வியக்கச்செய்கின்றது சுஜாதா போல ஒரு சிறந்த படைப்பாளி ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் கால்பதித்திருக்கின்றார் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுகளுமில்லை.

வாசிக்கத்தொடங்கிய விழிகள் வாசிப்பைமுடித்தும் கதைக்குளேயே நிலைத்திருந்ததை மறுப்பதற்கில்லை அத்தனை தரம் வாய்ந்த படைப்பாக காணப்படுகின்றது. இதற்குமேலும் என் ரசனையினை வெளிப்படுத்த திறமையில்லையெனக்கு. நான் வாசித்த இம்மூன்று கதைகளுமே மூன்று நாவல்களுக்கு சமம் அப‌ரீதமான கற்பனை வளம், மொழியாள்கை, அணுகுமுறை, விறுவிறுப்பான கதை நகர்வு எல்லாமே இப்படைப்பை முழுமையடையச்செய்துள்ளது.

ஊடகவியலாளரான‌ விக்கி விக்னேஸ் அவர்களை நல்ல சகோதரனாக, தோழனாக அறிந்த நான் ஓர் வாசகியாக அவரை வாழ்த்துவதிலேயே பெறுமையடைகின்றேன். மிக விரைவில் அவரது சிறுகதை நூலினை வாசிக்கக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

http://suga-elizabeth.blogspot.com/2015/09/2035.html