அஞ்சி அஞ்சு

சனிக்கிரகமும், அதனை சுற்றிய வலையங்களையும் போன்றன அவர் கண்களும், இமைகளும், புருவங்களும்…
பார்வையில் சிக்கியவர்களின் நிலை பெரும்பாலும் பரிதாபம்.
ஒருவிதமான கிளியை நினைவுப்படுத்தும் மூக்கும், உதடுகளும். பொன்னிற முகம்.

ஆறாம் வகுப்பில் படிக்கும் என்னால் பதினோராம் வகுப்பில் படிக்கும் அஞ்சு அக்காவை அவ்வளவுதான் ரசிக்க முடிந்தது.
அதற்கு மேல் ரசிக்க கிராமத்தின் ஒரேஒரு “தார்” வீதியின் கீழ்முனையில் உள்ள செலவுக்கடையின் உரிமையாளர் மலர் அக்காவின் தம்பி இருக்கிறார்.
யோகராஜோ, யோகசந்திரனோ அவர் பெயர்.
சரியாக நினைவில் இல்லை.
அவர்தான் அந்த அக்காவின் காதலன்.
பாடசாலை விட்டு போகும் போது அந்த அக்காவிடம் கதைப்பதற்காக கடைக்கு வெளியில் வந்து நிற்பார்.
எப்படியும் அதனை தடுக்க அஞ்சு அக்காவின் வீட்டார் கடைக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.
பெரும்பாலும் சண்டைதான்.
அஞ்சு அக்காவின் குடும்பம் எங்களின் குடும்ப நண்பர்கள் என்பதால், சண்டை முடிய அந்த அக்கா என்னோடுதான் வீட்டுக்கு செல்வார். அதற்காகவே நேரசூசி சமைத்து காத்திருந்தவனாக, நண்பர்களை திட்டமிட்டு ஒதுக்கியவனாக நான்…
ஆனாலும் சண்டை நடக்கும் அதே தினத்தின் மாலை வேளையில் எங்கள் வீட்டுக்கு கொஞ்சம் தொலைவில் உள்ள ரயில் பாதையில் ரெயில் வண்டி செல்லும்… இந்த ஜோடியும் செல்லும்.
கைகளை கோர்த்தபடி நடப்பதை அன்று மாலையே ஏதோ ஒரு கூட்டம் இரண்டு வீட்டிலும் வத்திவைக்கும்.
எதிர்ப்பு அஞ்சு அக்காவின் வீட்டில் மட்டும்தான்.
அந்த அக்காவின் காதலன் யோகராஜோ, யோகசந்திரனோ: எனக்கு நன்கு தெரியும்.
என் மாமாவுடன் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
எனக்கு கண்டாலே பிடிக்காது.
என்னை விட பெரியவர், என்னைவிட வெள்ளையானவர், என்னமோ தெரியவில்லை, அந்த அக்காவுக்கும் அவருக்கும் பொருத்தம் இருப்பதாக எனக்கு தோன்றியதே இல்லை.
இது 2003ம் ஆண்டு.
நான் இப்போது சாதாரண தரம் படித்து கொண்டிருக்கிறேன்.
ஒருமுறை சரஸ்வதி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இரவு பாடசாலையில் தங்கி இருந்த போது, அவரும் வந்திருந்தார்.
என்னையும் வைத்து கொண்டு எனது ஆசிரியருடன் தம் காதல் குறித்து நிறைய பேசினார்.
அவர் என்னிடமும் கதைகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அன்று மட்டும் அவர் கொஞ்சம் பாவமாக தெரிந்தார்.
ஆனால் ஏதோ திட்டமிட்டிருப்பதை போல தோன்றியது.
அஞ்சு அக்கா சாதாரண தரத்துக்கு பிறகு படிக்கவில்லை.
வீட்டில்தான் இருந்தார்.
அவரை காண்பதே அரிதாகிவிட்டது.
சில தினங்களின் பின்னர் நானும் என் நண்பர்களும் நகருக்கு செல்ல ரயில் நிலையத்தில் நின்றிருந்தோம்…
அஞ்சு அக்கா தனது அக்காவின் பிள்ளையை தூக்கிக் கொண்டு, பாட்டியின் பாதுகாவலுடன் ரயில் நிலையத்துக்கு வந்தார்.
அவருடன் மற்றும் சிலரும் இருந்தார்கள்.
அவர்கள் அந்த அக்காவின் உறவினர்கள்.
அதில் ஒரு உயர்ந்த அண்ணாவும் இருந்தார்.
பார்க்க அப்பாவியாக தெரிந்தார்.
அவர்களை ரயில் ஏற்றிவிடத்தான் அந்த அக்கா பாட்டி சகிதம் வந்திருக்க வேண்டும்.
ரயில், மேடை அருகில் வந்து நிறுத்தப்பட்டது.
நாங்களெல்லாம் ஓடும் ரயிலில்தான் ஏறுவோம்.
நின்றுக் கொண்டிருக்கும் போது ஏறுவது எங்கள் வயதுக்கு ஏற்றதல்ல.
ரெயில் ஓட ஆரம்பிக்கும் போது நானும் என் நண்பர்களும் ஒரு பெட்டியில் ஏறினோம்.
அந்த உயர்ந்த அண்ணா மற்றும் அவருடன் இருந்தவர்களும் எங்களுக்கு அடுத்தப்பெட்டியில் ஏறினார்கள்.
ரயில் சற்று வேகமாக்கப்பட்டது.
தன் கையில் இருந்த பிள்ளையை பாட்டியின் கையில் திணித்த அஞ்சு அக்கா, உயர்ந்த அண்ணனின் கையை பிடித்தபடி ரயிலில் ஏறினார்.
ஒருகணம் அங்கு பதட்டமானது.
“ஐயயோ… ட்ரெயின நிப்பாட்டுங்க… நிப்பாட்டுங்க” பாட்டி கூச்சலிட்டார்…
அது நிறுத்தப்படவில்லை…. ரயில் வேகமாக சென்றது.
அஞ்சு அக்காவும் அந்த அண்ணனும் ஓடிப்போவதாக சக பயணிகள் சொன்னார்கள்.
இருவரும் ஒரு ரெயில் பெட்டிக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.
நாங்களும் போய் தேடிப்பார்த்தோம், அவர்களை காணமுடியவில்லை. அவர்களுடன் வந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்க்க, ஏதும் தெரியாதவர்கள் போல ரயிலின் கதவுக்கு அருகில் நின்று வெளியே எட்டி பார்த்தோம்..
அஞ்சு அக்காவின் காதலனாக இருந்த யோகராஜாவோ, யோகசந்திரனோ, ரயிலின் பின்னாலேயே ஓடி வந்தார்.
எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவசர மணியை அடித்து ரயிலை நிறுத்துவோமா? என்று ஒருகணம் யோசித்தோம்.
ஆனால் தண்ட பணம் கட்ட தயாரில்லை.
ரெயில் வண்டி நகரத்தின் நிலையத்தில் நிறுத்தப்பட்ட போது, அஞ்சு அக்காவின் முன்னாள் காதலர் எப்படியோ ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டார்.
காதலி வேறொருவனுடன் போவதை அவரால் எப்படியும் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.
சுமார் 7 கிலோமீற்றர் தூரம் சரியாக நேரத்துக்கு வந்துவிட்டார் என்பது ஆச்சரியமாகவும், ஆழ்ந்த வேதனையாகவும் இருந்தது.
ஆனால் அதற்குள் அவர்கள் ரயில் நிலையத்தின் மறுபக்கமாக சென்று வான் ஒன்றில் ஏறி எங்கேயோ போய்விட்டார்கள் என்பதை நான் அவதானித்திருந்து, யோகா அண்ணாவிடம் கூறினேன்.
தற்போது அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.
அவர் என்னிடம் விம்மி விம்மி அழுதார்.
அந்த அக்கா அவருக்கு இறுதியாக வழங்கிய கடிதத்தை என்னிடம் படிக்கும்படி கொடுத்தார்.
“அன்பின் யோகி…
நாம் இருவரும் சேர்வது யாருக்கும் பிடிக்கவில்லை.
இப்போதே இப்படி என்றால், திருமணத்துக்கு பிறகு எத்தனை பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்?.
மீண்டும் மீண்டும் ரோட்டில் வைத்து அவமானப்பட நான் தயாராக இல்லை.
நீங்கள் அழகானவர். நல்லவர்.
நீங்கள் என்னை முயற்சி செய்து மறந்துவிட்டால் போதும். உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்.
என்னை மன்னித்து விடுங்கள்……”
இப்படியே தொடர்ந்தது அந்த கடிதம்.
என் வயதுக்கு அந்த இடத்தில் எப்படி செயற்படுவது என்பது எனக்கு புரியவே இல்லை. அவர் என்னை கட்டிப்பிடித்து அழுதார். எனக்கும் அதனையே செய்ய தோன்றியது. அதனையே செய்தேன்.
இப்போது 2005ம் ஆண்டு,
முன்னர் நாங்கள் இருந்த ஊரை விட்டு தற்போது வேறொரு ஊருக்கு சென்றுவிட்டோம்.
எனது பாடசாலையும் மாற்றப்பட்டது.
ஒரு முறை அஞ்சு அக்கா அவரது கணவர் மற்றும் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தார்.
தற்போது அஞ்சு அக்காவை வீட்டார் ஏற்றுக் கொண்டதாக ஆன்ரீ கூறினார்.
2 வயதில் மகள் ஒருவரும் இருந்தார்.
எனக்கு அஞ்சு அக்காவை பார்க்க, அன்று ரயில் நிலையத்தில் யோகா அண்ணா அழுததுதான் நினைவுக்கு வந்தது.
அந்த அக்காவை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
வெறுப்பாக இருந்தது.
அதன் பின்னர் அஞ்சு அக்காவும் அவரின் கணவரும் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்.
நான் அஞ்சு அக்காவின் கணவருடன் கொஞ்சம் பேசுவேன்.
அவர் நிறைய பேசுவார்.
அஞ்சு அக்காவோடு கொஞ்சமும் பேசவே மாட்டேன்.
அக்கா முறைத்து பார்த்துக் கொண்டே இருப்பார்.
இப்போது 2008ம் ஆண்டு, நான் கொஞ்சம் வளர்ந்த பையன்.
வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்தேன்.
வெள்ளவத்தையில் நான் தங்கி இருந்த அறைக்கு செல்லும் வழியில்….
“ராகவன்……….”
தூரத்தில் இருந்து ஒருவர் என்னை அழைத்துக் கொண்டே ஓடி வந்தார்.
அஞ்சு அக்காவின் கணவர் தன் குழந்தையுடன்…
அவரும், அஞ்சு அக்காவும் கொழும்பிலேயே தங்கிவிட்டார்கள் என்பது நினைவுக்கு வந்தது.
அவர்களை சந்தித்து ஒரு வருடமேனும் இருக்கும்.
“அண்ணா, எப்படி இருக்கீங்க… இங்கயா வீடு… அக்கா எப்படி இருக்காங்க…?”
அடுத்தடுத்த என் கேள்விகளுக்கு சோகமான முகத்தை பதிலாக வெளிப்படுத்தினார்.
அவர் அழுதுவிடுவார் போல இருந்தது.
“ஏன் அண்ணா… எதும் பிரச்சினைiயா?”
அவர் சோகத்தை தள்ளிவிட்டு, பதட்டமாக பதில் சொன்னார்…
“அஞ்சு பொலிஸ்காரன் ஒருத்தனோட ஓடி போய்ட்டாள்…”
அவர் விளையாட்டாக சொல்கிறாரா? என்று கூட முதல் நொடி தோன்றியது.
பின்னர் நீண்ட நாட்களாக மறந்து போயிருந்த ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வர, இப்படியும் நடந்திருக்கலாம் என்று எண்ண வைத்தது.
விடயம் என்னவென்று விளக்கினார்.
எனக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது அந்த அக்காவின் மீது.
அவரின் அழகுதான் இவ்வளவும் செய்ய வைத்திருக்கிறது என்பதே வெளிப்படை உண்மையாக தெரிந்தது.
அண்ணாவிடம் இருந்து விடைபெற்று அம்மாவுக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை கூறினேன்.
“ஆமாப்பா… அஞ்சுவுட்டு அம்மா வந்து சொன்னாங்க… அந்த பொலிஸ்காரன், அஞ்சுவுட்டு புள்ளைய கடத்தி வச்சு மிரட்டினானாம்… அவரும் சந்தேகப்பட்டு அடுத்தடுத்து சண்ட போட்டாறாம். அடிச்சாருனும் சொல்றாங்க… பாவம்…. பட்ட இடத்திலயேதான் படும்…”
அம்மா அந்த அக்காவை நியாயப்படுத்தும் வகையில் பேசினார்.
ஆனால் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அதன்பின்னர் அவர்கள் குறித்து நான் கேள்விப்படவே இல்லை.
இப்போது 2015,
தற்போது என் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள். கண்டியில் வேலை, அங்கேயே மனைவியுடன் தங்கிவிட்டேன்…
கொழும்பில் என் நண்பன் ஒருவரின் திருமணத்தில் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
திருணம் நடந்து சில வாரங்களின் பின்னர் நண்பரின் வீட்டுக்கு செல்வதற்காக நானும் மனைவியும் கோட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினோம்.
ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் போது, பக்கத்தில் இருந்த பழக்கடையில் பழங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றாள் என் மனைவி.
சரி என்று அருகில் இருந்த கடையில் பழங்களை தெரிவு செய்து கொடுத்த போது, அங்கே “அஞ்சு அக்கா…!”
“அக்கா… இங்க எண்ணா பண்றீங்க” – நான்
“இப்ப இங்கதான்.. இப்ப ஒரு மூனு மாசம் ஆகுது” – அஞ்சு அக்கா….
கடையில் இருந்து மீதி பணத்தோடு வெளியில் வந்த ஒருவர் “கௌத?” என்று அஞ்சி அக்காவிடம் கேட்டார் எங்களை பார்த்து…
“மேயா ராகவன்… கமே… மகே அல்லப்பு கெதரே ஹிட்டியா”
நான் ஊரில் அவரது பக்கத்து வீட்டில் இருந்ததை அவர் தெரியப்படுத்திவிட்டு….
“இது என்னோட ஹஸ்பண்ட்…” என்றார்….
“பொலிஸ்லதானே வோர்க் பண்றதா சொன்னாங்க…” – நான்
என் கேள்விக்கு பின்னர் அவர்கள் இருவரின் முகங்களும் சற்று மாறின…
நாகரிகம் கருதினார் போலும், அஞ்சு அக்காவின் புதிய கணவர் கடைக்குள்ளேயே சென்றுவிட்டார்…
“அவர் இல்ல இது… அவரும் என்ன சந்தேகப்பட்டு கொடும படுத்தீட்டாரு…, பொலிஸ்காரன் சரியான பிரச்சின குடுத்திட்டான்… அப்ப இவருதான் எனக்கு ஆறுதலா இருந்தாரு… பிறகு இவரையே கட்டீட்டேன்… இப்ப எந்த பிரச்சினையும்…..” – அஞ்சு அக்கா…
இப்போது அந்த அக்கா மீது எனக்கு கோபம் வரவேயில்லை…
அருகில் நின்றிருந்த என் மனைவியை காட்டி….
“இதுதான் என் வைஃப் ஆரணி” – நான்…
அஞ்சு அக்கா ஒருகணம் யோசித்தார்….
“பிரியாவ டிவோர்ஸ் பண்ண பிறகு, ராதிகாவ தானே நீங்க கல்யாணம் பண்ணி இருந்திங்க… அவளுக்கு என்னா ஆச்சு?” – அஞ்சு அக்கா….
உடனே என் கையை பிடித்து இழுத்து தன்பக்கம் திருப்பி…
“என்னது…???
செல்விய டிவோர்ஸ் பண்ண முதல்ல ராதிகா, பிரியானு ரெண்டு பேர கல்யாணம் பண்ணி இருந்தியா நீ”
ஆத்திரத்துடன் கேட்டாள் என் “அஞ்சாவது” மனைவி ஆரணி….