எலிசபத்…

என் வீட்டு யன்னலுக்கும், எதிர்வீட்டு யன்னலுக்கும் இடையில் நேரே 25 அடி துரம் இருக்கும்…

எங்கள் வீடுகள் அடுத்தடுத்துள்ள அடுக்குமாடிகளில்…. ஏழாவது மாடியில்….

கட்டிலில் இருந்து மேலே தலையை தூக்கினால் என் யன்னல் வழியாக, எதிர்வீட்டு யன்னல் வரையில் என் கண்கள் செல்லும்…

இது கண்டிப்பாக இரவு வேளை இல்லை…


சூரியன் மறைகிறதா, உதிக்கிறதா? என்பதும் தெரியவில்லை.
அடிவானில் இருப்பது சூரியனா? என்றும் புரியவில்லை….

புரிந்து கொள்ளும் நோக்கில் சற்றே யன்னலை எட்டிப் பார்க்கிறேன்…
இரு வீட்டு யன்னல்களுக்கும் இடையில் நீளமான ஒரு கம்பி……

எதிர்வீட்டு யன்னலில் ஆரம்பிக்கின்ற அந்த கம்பியின் முனையில் எலிசபெத் நிற்கிறாள்….
யாரிந்த எலிசபெத்..?

கொழும்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறாள்..

வர்த்தக நிறுவனங்களின் செய்தியாளர் சந்திப்புகளுக்கு ஒழுங்கு செய்து கொடுப்பது அவளின் வேலை…
நானும் பத்திரிகையாளன் என்பதால் அவள் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பாள்…

பெரும்பாலும் நான் செல்வதே இல்லை.

நேற்றைய விருந்து ஒன்றுக்காக சில வாரங்களுக்கு முன்னதாகவே அவள் அழைத்திருந்தாள்.
நான் செல்லவில்லை என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.

கோபித்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்…

“ஹேய் நிக்ஷன், நேற்று ஏன் பார்டிக்கு வரல…. நா ரொம்ப ஹேர்ற் ஆகிட்டேன் உன்னால”
கம்பியில் ஒற்றைக்காலில் நின்றுக் கொண்டு கூவினாள் எலிசபத்….

“ஹேய்… லூசா உனக்கு? முதல்ல கம்பியவிட்டு இறங்கு” – (நான்)

கட்டிலில் இருந்து இறங்கியபடி யன்னலுக்கு மிக அருகில் தாவினேன்…
எனக்கும் கட்டுப்பாடு இருக்கவில்லை.

என் வீட்டு யன்னலில் இணைக்கப்பட்டிருந்த கம்பியின் ஒருமுனையில் என் கைகள் பட்டு அதிர, மறுபக்கம் ஒற்றைக் காலில் நின்றிருந்த எலிசபெத் தடுமாறி கீழே விழுவதற்குள், அவள் கழுத்து கம்பியில் சிக்கி துண்டானது…

“எ..லி..ச…ப…..த்…….”

முடிந்த அளவு சத்தமாக கூவி மறுபடி என் கட்டிலில் இருந்தே வழித்தெழுந்தேன்…

எனக்கு பின்னால் இருந்த யன்னல் இப்போது இருக்கவில்லை….

“எவ(ள்) அவ(ள்) எலிசதபத்?”

பக்கத்தில் படுத்திருந்த என் மனைவி திவ்யா கேட்டாள்….

கண்ட கனவை விபரிக்க முன்னர், எலிசபத் யாரென்று விபரித்தேன்….

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு பதிலாக என் மனைவியின் கைப்பேசிக்கு அழைத்துதான் இந்த விருந்து குறித்த தகவலை எலிசப் கூறி இருந்தாள்…

நானும் மனைவியும் நேற்று திருமண வீடொன்றுக்கு சென்றதால், அந்த விருந்தை புறக்கணித்துவிட்டேன்…

“ஓ… அந்த பொண்ணா… நீ ஏ(ன்) அவள நினைச்ச? – (திவ்யா)

“ஹையோ… பார்ட்டிக்கு கூப்பிட்டிருந்தா(ள்)… நா போகாமவிட்டுட்டேன்… இனி கதைக்க 
மாட்டாளா இருக்கும்னு நினைச்சிட்டே தூங்கினே… அதான் கனவுல…..”  – ( நான்)

நான் சொல்லி முடிக்க முன்னர்,

“என்னோட பேர சொல்லி என்னைக்காவது இப்படி கத்தி இருக்கியா நீ….? எல்லாம் நடிப்பு”
(திவ்யா…)

என் பதட்டத்தில் இவள் வேறு….

ஆனால் அவளது கோபத்தைவிட இந்த கனவு என்னை வாட்டியது….

உண்மையில் எலிசபத்துக்கு ஏதோ நடந்திருக்குமோ…?

எனக்கு அவளின் பெயரும், தொலைபேசி இலக்கமும் மட்டும்தான் தெரியும்…
மற்றது அவள் பணிபுரியும் நிறுவனம்..

அவளை நான் நேரில் கண்டதில்லை…

மின்னஞ்சல் அனுப்பும் போது அவளின் உருவப்படம் வரும்… அதன் மூலம் அவள் முகத்தை பார்த்திருக்கிறேன்.
அவளுக்கு அழைத்து பேச வேண்டும்; போல் இருந்தது எனக்கு.
இப்போது நேரம் அதிகாலை 1 மணி.

அநேகமாக இந்த நேரத்தை எங்கள் வீட்டில் கடிகாரத்தில் நாங்கள் பார்ப்பது மிகவும் அரிது.
இன்று பார்த்தேன்…

“பரவால்ல… கோள் பண்ணி பாப்போம்….”

தொலைபேசியில் அவளின் இலக்கத்தை அழைத்தேன்…. அந்த பக்கம் மணி ஒலித்தது…. அழைப்பு ஏற்கப்படவில்லை….

அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டேன்….

ஆனாலும் மறுபடியும் முயற்சிக்கிறேன்….

“ஹலோ நிக்ஷன்” – (அவள்)

“ஹேய் எலிசபத்… ஈஸ் எவ்ரிதிங் ஓகே?” – (நான்)

“நோப்… நொட் ஓகே” 

“ஏன்…? என்ன நடந்தது…” 

“நான் விஷம் குடிச்சிட்டன்” 

——–
தூக்கி போட்டது போல் இருந்தது எனக்கு..

ஒரு பக்கம் என்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, நான் பதற்றத்துடன் எழுந்த அவசரம் கண்டு திகைத்துப் போனாள்….

“ஹேய் என்ன சொல்றீங்க?” – (நான்….)

“ஓ.. நிக்சன்… ரைம் ஈஸ் ஓவர், பட் இப்ப சாக விருப்பம் இல்லாம இருக்கு… பிளீஸ், முடிஞ்சா என்ன காப்பத்துங்க… பிளீஸ்…”
அவள் நடிப்பதாக தோன்றவில்லை… நடித்தாலும் பரவாயில்லை… நான் உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்….

ஆனால் அவள் முகவரி கூட எனக்கு தெரியாது… எப்படி காப்பாற்றுவது…

“ஓகே… ஓகே… உங்கட எட்ரஸ சொல்லுங்க….” – நான்….

“பீப்.. பீப்….”

தொடர்பு துண்டிக்கப்பட்டது….

எனது கைப்பேசியில் பணம் தீர்ந்துப் போனது…

“திவ்யா… உன்ட மொபைல தா… குயிக்….” – நான்
ஏதோ பதற்றமான சூழ்நிலை என்பதை புரிந்து கொண்ட என் மனைவி தனது தலையணைக்கு கீழே வைத்திருந்த கைப்பேசியை எடுத்து நீட்டினாள்….
இந்த கைப்பேசி கொஞ்சம் புதிதாக இருப்பதை போல இருந்தது.
ஆனால் பதற்றத்தில் அதைபற்றி யோசிக்கவில்லை….
எலிசபத்தின் இலக்கத்துக்கு அழைத்தேன்….
மீண்டும் மீண்டும் அழைத்தேன்… பதில் இல்லை….
இப்போது எப்படி அவளை காப்பாற்றுவது?
என் கணினியை திறந்து அவள் அனுப்பிய மின்னஞ்சல்களை சோதித்து அவளின் அலுவலக இலக்கத்தை கண்டுபிடித்து அழைத்தேன்…
“ஹலோ…..”
மறுபக்கம் ஒரு ஆணின் குரல்… அநேகமாக அந்த நிறுவனத்தின் காவலாளியாக இருக்க வேண்டும்..
“ஹலோ…. உங்கட ஒப்பீஸ்ல வேர்க் பண்ற எலிசபத் சூசைட் பண்ணிக்கிட்டாள்…. பிளீஸ் அவள்ட அட்ரச தாங்க… இல்லான பொலீசுக்கு சொல்லுங்க….” – நான்
அவர் நம்ப மறுத்தார்…… மதுபோதையில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்…
தொலைபேசியை துண்டித்துவிட்டார்…
அவளை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டே இருந்தது..
கண்களும் ஈரமாகி கிடந்தன…
செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று அறிந்த போது மனைவி கடவுளை வணங்கலானாள்..
நான் அடிப்படியே கட்டிலில் அமர்ந்து கைப்பேசியை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்…
இப்போது எலிசபத்திடம் இருந்து அழைப்பு…
“எலிசபத்… ப்ளீஸ் உங்கட அட்ரஸ்ஸ சொல்லுங்க.. நான் உடனே வாறேன்..” – நான்
“ப்ளீஸ் என்ன காப்பாற்றுங்க” என்றவள் தன் முகவரியையும் கூறினாள்…
அவளது வீட்டுக்கு சற்று தொலைவிலேயே என்னுடைய வீடும்..
மனைவியும் நானும் மகிழுந்தில் ஏறி அவள் சொன்ன முகவரிக்கு சென்றோம்…
அவளின் வீட்டை நெருங்கினோம்…
“இவ்வளவு பெரிய வீட்ல இவ மட்டும்தான் இருக்காளா?” – திவ்யா…
எனக்கு மனதில் தோன்றிய சந்தேகத்தை அவள் கேட்கிறாள்..
நான் ஒன்றும் கூறவில்லை.
வீட்டின் வாயிற் காவல் கதவு திறந்தே கிடந்தது…
உள்ளே சென்று மகிழுந்தில் இருந்து இறங்கி கதவை தட்டினோம்.. யாரும் திறக்கவில்லை….
வெளியில் தாழ் இடப்பட்டிருந்தது…
வீட்டுக்கு வெளியே தாழிடப்பட்டிருந்தால், அவள் எப்படி உள்ளே இருப்பாள்…
எனது மனைவிக்கு அச்சம் வந்தது…
எலிசபத்தின் தொலைபேசிக்கு மீண்டும் அழைத்தேன்…
அவள் பதிலளித்தாள்..
“ஹேய்… வீட்டுக் கதவு பூட்டு போட்டிருக்கே… எப்படி உள்ள வாரது…” – நான்
“பின்னாடி கதவால வாங்க…” – எலிசபத்
“சரி… ஓகே…” – நான்
அழைப்பைத் துண்டித்துவிட்டு பின்பக்கமாக ஓடினேன்..
திவ்யாவும் என்னைத் தொடர்ந்தாள்…
“அவளால உனக்கு கதைக்க முடியும்னா, அவள் ஹொஸ்பிட்டலுக்கோ, பொலிஸ்க்கோ அழைச்சிருக்கலாம்தானே… எனக்கென்னவோ டவுட்டா இருக்கு…” – திவ்யா…
ஒருக்கணம் நின்று யோசித்தேன்… அதுவும் சரிதான்… ஆனாலும் தாமதிக்க மனம் வரவில்லை.
அவள் உண்மையில் ஆபத்தில் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது…
பின்கதவு திறந்தே கிடந்தது…
உள்ளே மேல் மாடியில் இருப்பதாக கூறிய அவளின் அறைக்கு சென்ற போது, வாயில் வெள்ளை நுறை வெளியேறி பாதி மயக்கத்துடன் கிடந்தாள் எலிசபத்…
அழகான முகம் அவளுடையது… அவள் செத்துப் போய்விடக்கூடாது…
அவளுக்கு அருகில் சற்றுத் தொலைவில் அவளின் கைபேசி கிடந்தது…
“எந்த மருந்த குடிச்சீங்க…” என்று கேட்டபடியே அவளை தூக்க முற்பட்டேன்… அவள் அவ்வளவு பாரமாக இல்லை… காற்றைவிட மிதமாக இருந்தாள் என் கைகளில்…
அவள் பதில் சொல்லும் நிலையை கடந்துக் கொண்டிருந்தாள்..
பக்கத்தில் திறந்து கிடந்த விசக் குப்பியை திவ்யா எடுத்துக் கொண்டாள்…
இருவரும் கீழே இறங்கி, மகிழுந்தின் பின்னால் எலிசபத்தை ஏற்றினேன்..
திவ்யா அவளை பார்த்துக் கொண்டாள்…
நாங்கள் புறப்படும் போது ஒரு நோயாளர் காவுகை வண்டி (அம்பூலன்ஸ்) வரும் சத்தம் கேட்டது.
எலிசபத்தின் வீட்டை நோக்கிதான் வந்தது…
நான் மகிழுந்தை விட்டு வெளியில் இறங்கிய போது, வாசலைத் தாண்டி அந்த வண்டி உள்ளே வந்துவிட்டது..
அதில் இருந்து ஒருவர் வேகமாக இறங்கி ஓடி வந்தார்…
“யார் நீங்க?” – அவர்
“எலிசபத் விசம் குடிச்சிட்டதா சொன்னாள்.. அதான் ஹொஸ்பிட்டல் கூட்டிட்டு போக வந்தன்…” – நான்..
“தேங்ஸ் சேர்… நா எம்புயுலன்ஸ எடுக்க முதல்ல உங்களுக்கு கோல் பண்ணீட்டாள் போல.. நா அவள்ட அண்ணன்தான்… நான் பாத்துகிறேன்… “ – அவர்
நாங்கள் பேசிக் கொண்டு தாமதிக்க விரும்பவில்லை…
எனது மகிழுந்தில் இருந்து அவளை இறக்கி காவுகைவண்டியில் ஏற்றிய பின்னர், எங்களை அவர் போகச் சொல்லி வற்புறுத்தினார்…
என்னுடன் வந்த திவ்யாவும் வீட்டுக்கு செல்வோம் என்று கூறவே நானும், மகிழுந்தில் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டோம்…
————–
இப்போது நேரம் 2 மணி..
வீட்டில் ஒரே அமைதியாக இருந்தது..
திவ்யாவுக்கு அங்கு நடந்த விடயங்களில் சந்தேகமாகவே இருந்தது…
அதைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தாள்…
“பயத்தில நிறைய பேர்க்கு கோள் பண்ணி இருப்பாவா இருக்கும்… நீ அதபற்றி யோசிக்காத… காலையில போய் பார்ப்பம்..”
நான் அவளை சமாதானப்படுத்தி உறங்கசெய்து, நானும் உறங்க முயற்சித்தேன்…
இருவருக்கும் தோல்விதான்…
அவள் காப்பாற்றப்பட்டாளா? என்பதே எங்கள் சந்தேகமாக இருந்தது…
கட்டிலில் சாய்ந்தபடி எலிசபத் குறித்து நானும் திவ்யாவும் பேசிக் கொண்டே இருந்தோம்…
எலிசபத்தும் நானும் நேரடியாக சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும், அவள் அன்பானவள்…
என்னுடன் மிகவும் அன்பாக பேசுவாள்…
எனது காரியாலயத்தில் எல்லோருடனும் அவள் தொலைபேசியில் பேசினாலும் கூட, என்னோடு பேசுவதைப் போல அவள் மற்றவர்களுடன் பேசுவதில்லை..
நான் அவதானித்திருக்கேன்…
என்னிடம் அவள் சற்று விசேடமாக நடந்து கொண்டாள்..
அவள் அழைத்த எந்த விருந்துக்கும் நான் சென்றதில்லை..
ஆனாலும் அவள் அதற்கு பின்னரும் அழைக்காமல் விட்டதில்லை.
முன்னர் நான் பாவித்த கையடக்க தொலைபேசி இலக்கத்தைதான் என் மனைவி திவ்யா சில வாரங்களாக பாவித்து வருகிறாள்.
சில வாரங்களுக்கு முன்னர் எலிசபத் நேற்றைய விருந்துக்கு அழைப்பதற்காக எனது பழைய இலக்கத்துக்கு அழைக்க என் மனைவியே பதிலளித்தாள்…
அவளிடம் என் இலக்கத்தை வாங்கிக் கொண்டு எனக்கு மீண்டும் அழைத்தாள் எலிசபத்…
“நா மற்ற நம்பர்க்கு கோள் பண்ணேன்… யார் அது… தங்கச்சியா?” – எலிசபத்…
“இல்ல… வைஃப்” – நான்
“அஹ்… ஓகே.. நீங்க கல்யாணம் பண்ணீட்டிங்களா? சொல்லவே இல்லையே…” – அவள்…
“யா…. கல்யாணம் பண்ணி 5 மாசம் ஆகிட்டு… பட் சொரி.. சொல்ல கிடைக்கல்ல” – நான்…
“சரி… நான் வக்கிறன்..” – அவள்…
உணர்வே இல்லாமல் இருந்தது அவளின் வார்த்தைகள்…
அதற்கு பிறகு அவள் என்னோடு கதைத்திருக்கவில்லை.
ஏறத்தாழ ஒரு மாதமேனும் இருக்கும்…
இடையில் புதுவருடத்துக்கு வாழ்த்து கூறி குறுந்தகவல் அனுப்பிய போது கூட அவள் மறுவாழ்த்து சொல்லி இருக்கவில்லை…
நானும் பெரிதாக தொலைபேசியில் அவளுடன் கதைக்க முற்பவில்லை…
நான் திருமணம் செய்துக் கொண்டதை தெரிந்துக் கொண்ட பின்னர்தான் அவள் என்னோடு பேசவில்லையோ? என்று தோன்றியது…
திவ்யாவுக்கும் அப்படியே தோன்றியது…
“அவ உன்ன லவ் பண்ணி இருப்பாளோ..?” – திவ்யா…
“யாருக்கு தெரியும்…” – நான்
“எனக்கென்னவோ அப்படிதான் தோனுது… இல்லனா அவள் ஏன் உனக்கு கோள் பண்றாள்..” – திவ்யா
“சரி அத விடு…”
அதை நான் பெரிது படுத்திக் கொள்ள விரும்பவில்லை…
கட்டிலில் இருந்து எழும்பி சற்று வெளியில் செல்வோம் என்று நினைத்த போது, காலை 3 மணி… இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும்…
விடிந்ததும் அவள் வீட்டுக்கு சென்று என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள நினைத்தேன்…
இப்போது சற்றே கண்கள் அயர எத்தனித்தன..
—————
விழித்து பார்த்த போது நேரம் 8 மணி…
இன்று வேலைக்கு போகும் எண்ணம் இல்லை. உடனே தயாராகி எலிசபத்தின் வீட்டுக்கு செல்ல நினைத்தேன்…
அவளை எந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை..
ஆனால் வீட்டுக்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்…
அப்போதும் திவ்யா உறங்கிக் கொண்டே இருந்தாள்…
நான் தயாராகிய பின்னர் அவளை எழுப்பி…
“திவி… வாரியா… எலிசபத் வீட்ட போய்ட்டு வருவம்..” – நான்
“நா வரல… நீயே உன் கேர்ள்பிரண்ட பார்த்துட்டு வா…” – திவ்யா…
மறுப்பக்கம் திரும்பி உறங்குவதை போல பாசாங்கு செய்தாள்…
நான் கட்டில் அறையை விட்டு முன்னறைக்கு நகர்ந்து வெளிக்கதவை திறக்கும் போது, ஓடி வந்த திவ்யா….
“கவனமா போ… எதும் பொலிஸ் கேஸ்னு வராம பாத்துக்க…”
அவளின் அன்பை அப்படியே வெளிப்படுத்தினாள்…
“ஒன்னும் ஆகி இருக்காது… நா போய் பாத்துட்டு கோள் பண்றேன்..”
அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு தைரியம் இல்லாமல் நான் நகர்ந்தேன்…
——-
எலிசப்பத்தின் வீட்டுக்கு சென்ற போது, வெளிச்சத்தில் அவள் வீடு இன்னும் பிரமாண்டமாய் இருந்தது…
வெள்ளை நிறம் மட்டுமே பூசப்பட்ட பழங்காலத்து கட்டிடம் போல இருந்தது….
சுத்திகரிக்கப்பட்டு நீண்டநாட்களாய் இருந்திருக்க வேண்டு;ம்..
வாயிற் கதவு திறந்தே கிடந்தது…
வீட்டு வாசலில் மகிழுந்தை நிறுத்தி விட்டு இறங்கி முன்கதவை பார்த்தேன்… இரவைப் போன்றே அப்போதும் கதவு பூட்டிக் கிடந்தது…
நேற்று அவள் இருந்தாள், பின் கதவு வழியாக போனேன்… இன்று யார் இருப்பாரோ…?
ஆகவே பின்கதவு வழியாக செல்ல துணியவில்லை…
மீண்டும் மகிழுந்தில் ஏற கதவை திறக்கும் போது,
“யார் பிரதர் நீங்க…”
பின்பக்கமாக வந்த குரலை கேட்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்…
திரும்பி பார்த்தேன்…
அது எலிசபத்தின் அண்ணன்… நேற்று இரவு அவர்தான் எலிசபத்தை வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்…
“நான் நிக்ஷன்.. எலிசபத் எப்படி இருக்காங்க…?” – நான்…
“யாரு நீங்க…” – அவர்
“என்ன பிரதர்… நேற்று இரவு நாம மீற் பண்ணோமே… எலிசபத் விசம் குடிச்சதால அவள ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக வந்தேனே..” – நான்…
“வட்… ஆ யு கிரேசி… எலிசபத் செத்து போய் நேற்றோட 30 நாள் முடிஞ்சிது…” – அவர்….
———
ஒருக்கையால் திறக்கப்பட்டிருந்த மகிழுந்தின் கதவு என்னை அறியாமலே மூடப்பட்டது..
“என்ன சொல்றீங் பிரதர்… நேற்று நான் என் கையாலதானே அவள தூக்கிட்டு வந்தேன்… என்னோட வைஃப்பும் வந்திருந்தாங்களே…?” – நான்…
“கனவெதுக கண்டுருப்பீங்க பிரதர்… நான் மட்டும்தான் இந்த வீட்ல இருக்கேன்… அப்படி நேற்று ஒன்னும் நடக்கல…” – அவர்…
“ஆனா… பிரதர்… என்னால நம்பவே முடியல… எனக்கு எலிசபத் கோள் பண்ணி பேசினாளே…” – நான்…
“இல்ல சேர்… எனக்கு தெரியாதா… அவ என் சொந்த தங்கச்சி… அவள் செத்துட்டானு நா ஏன் பொய் சொல்ல போறேன்? – அவர்
“எலிசபத் எப்படி செத்து போனோள்?” – நான்…
“குடும்பத்தில எல்லாரும் எக்சிடண்ட்ல செத்துட்டாங்க… அவளால தாங்கிக்க முடியல… தற்கொல பண்ணிக்கிட்டாள்…” – அவர்…
ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை…
இதனை திவ்யாவுக்கு சொல்லவும் தோன்றவில்லை…
“உங்களுக்கு டவுட்டா இருந்தா, வீட்டுக்குள்ள வந்து பாருங்க பிரதர்”
– மீண்டும் அவர் வீட்டுக் கதவை திறந்து கொண்டே அழைத்தார்…
அவர் உள்ளே போனார்…
நானும் போனேன்…
வரவேற்பரையின் மேல் சுவரில் எலிசபத்தின் பெரிய குடும்ப புகைப்படம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது…
அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மெழுதுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.
எனக்கு அருகில் நின்றிருந்த எலிசபத்தின் அண்ணன் சொன்னார்,
“நடுவில உட்காந்திருக்கது எலிசபத், இடதுபக்கம் அம்மா, வலதுபக்கம் அப்பா, பின்னால நிற்கிறது……. நான்…”

படத்தை விட்டு அகன்ற என் கண்கள், அருகில் நின்றிருந்த எலிசபத்தின் அண்ணனை தேடியது… அவரும் அங்கு இருக்கவில்லை…

குரல் மட்டும்தான் கேட்டது….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக