தீ (சிறுகதை)


Image result for fireஅந்த முற்றம் அவனுக்கு புதிதாய் இருந்தது. பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே மேற்சட்டைகளை அணிந்தவர்கள், அரையும் குறையுமாக ஆங்கிலத்தில் பீத்தியப்படி அங்கிங்கும் அலைந்தனர்.

அவர்களுக்கு பின்னால் புரிந்தும் புரியாமலும் தலையை சொறிந்தபடி திரிந்தவர்கள் மட்டும் அவனுக்கு பழக்கப்பட்டவர்களாக இருந்தனர்..

'இங்க பார்டா... நம்ம மொக்கு'

இரண்டு இளைஞர்கள் இவனைப்பார்த்து ஏளனித்துச் சென்றனர்..

அவன் பெயர் மொக்கு இல்லை.. முத்து... பிறக்கும் போது வேறொதுவோ பெயர்தான் வைக்கப்பட்டது.

அவனது தந்தையான ரஜினிப்பிரியன், முத்துபடம் வெளியானப் போது இந்த பெயரை வைத்துத் தொலைத்தார்.

அவனது செயல்களே பின்னர் 'மொக்கு' என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தது.

22 வயதாகிறது..

இன்னும் கூட உதட்டை பிதிக்கி உர்ர்ர்ர் என்று சத்தமிட்டு கையில் இருக்கும் தடியை முறுக்கி உந்துருளி ஓட்டும் விளையாட்டுப் பிள்ளையாய் இருந்தான்..

அவன் குறித்து கவலைப்படுவது அவனது அம்மா மட்டுத்தான்..

அப்பாவிடம் கேட்டால், 'அவன் ரஜினிடி... எப்பிடியும் பொழைச்சிக்குவான்' என்பார்...

அம்மா 10வது வரையில் படித்தவர்.. கல்வி குறித்த விழிப்புணர்வு கொண்டவராக இருந்தார். ஆனால் முத்துவால் அம்மாவின் உந்துதலுக்கு ஏற்ப படிப்பில் எந்த எல்லையையும் தாண்ட முடியவில்லை.. முக்கித் திணறி 11 வரையில் படித்துவிட்டான்..

சில ஆண்டுகளாக தோட்டத்தில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவனை கங்காணியார் பார்த்து கொழுந்தெடுக்க சொல்லி நேற்றுதான் அறிவுரை வழங்கினார்.

இதனைக் கேட்ட அம்மாவுக்கு கோபம் வந்து அவனையும் தோட்டத்தில் தள்ளிவிடக் கூடாது என்பதற்காக எதாவது அலுவலகத்தில் சேர்த்துவிட நினைத்து இங்கு கூட்டி வந்தார்.

இது கதாராமின் இடம்...

அரசாங்கத்தில் முக்கிய அமைச்சரான அவரது இல்லமும் அலுவலகமும் அருகருகே இருந்தன...

சில வருடங்களுக்கு முன்னர்தான் அரசியலை ஆரம்பித்தார்.

என்ன மர்மமோ தெரியவில்லை, மலையகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் மாறித்தொலைத்தது மக்களின் போதாகாலம்..

இது தவிர்த்து அவருக்கு மேலும் பல வீடுகளும் இருந்தன.. இது அவரது தொகுதிக்காக கட்டிக் கொண்டிருக்கும் வீடு.. இன்னும் கட்டி முடிக்கப்பட்டிருக்கவில்லை...

முத்துவுக்கும் அவருக்கும் இடையில் பெரும் வேறுபாடு கிடையாது.

என்றாலும் கதாராமின் அருகில் இருந்தவர்கள் அந்த வேறுபாட்டை மறைத்து, அவரை ஒரு அறிவாளி என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டனர்.

முற்பகல் 11 மணியாக இருந்தது.

'காலையிலேயே போனா கண்டுக்கலாம்னு இந்த சனியபுடிச்சவன் பேச்ச கேட்டுக்கிட்டு 6 மணிக்கெல்லாம் வந்தா, இந்தாள இன்னும் காணம்'

முத்துவின் அம்மா முணங்கும் போதே 'பீப்...பீப்...' என்ற வாகன ஒலி அவளை ஆசுவாசப்படுத்தியது..

கறுப்பு நிறத்தில் அவள் கண்டிராத நவீனத் தேர் ஒன்றில் அமைச்சர் வந்திறங்கினார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை பத்திரத்தைக் கொண்டு புத்தம் புதிதாக இறக்கப்பட்ட வண்டி அது..

வாகனத்தில் இருந்து இறங்கி வேகமெடுத்த கதாராமன் கடைக்கண் முத்துவின் காரோட்டும் அழகைக் கண்டு ஒருகணம் சிரித்து பின் தனக்குள் ஒழித்துக் கொண்டது.

முத்துவும் அவனது தாயாரும் வந்தவிடயத்தை கதாராமன் அவர்களை கடந்து போன போது உதவியாளரால் காதில் ஓதப்பட்டது.

பின்னர் உதவியாளர் முத்துவை நோக்கி கையைக் காட்டி கொஞ்சம் பொறுங்கள் என்று சைகைப்பண்ணி கடந்து போனார்.

வேகமாக நேரே வீட்டினுள் சென்ற கதாராமனுக்கு வீட்டின் முன் அறையிலேயே வைக்கப்பட்டிருந்த அந்த பொதிகளைக் கண்டதும் கொஞ்சம் விரக்தியாய் இருந்தது.

கடந்த வாரம் அரசாங்க செலவில் சீன தேசம் சென்றிருந்த போது வாங்கப்பட்ட பொருட்கள் அவை..

தெருவோரத்தில் ஒன்றுவாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிகத்தில் இருந்து விடுபடாதவராய் இருந்ததால், அவர் சீனாவில் வாங்கிக் குவித்து வரியின்றி இறக்கிக் குவித்து, மனைவியிடம் திட்டு வாங்கி வைத்திருந்தவை அவை.

அதனை எங்காவது கொடுத்து தொலைக்க வேண்டும் என்பது மனைவியின் உத்தரவு...

அதை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வீட்டின் முன்னாலேயே அடுக்கி வைத்திருந்தார்.

சில படுக்கை விரிப்புகளும், தரம் குறைந்த உடைகளும் போக, இனாமாக கிடைத்த சில பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களும் அந்த பொதிகளில் நிறைந்திருந்தன..

சட்டென்று ஏதோ உதயம் பெற்றவராய் முத்துவை உள்ளே அழைத்தார்...

முத்துவும் தாயாரும் உள்ளே வர முத்து மாத்திரம் வந்தால் போதும் என்று சொல்லப்பட்டது.

தலையைக் குணிந்தபடியே தன் வீட்டினுள் சென்று பழக்கப்பட்ட முத்துவுக்கு தலை நிமிர்த்தி உள்ளே செல்லும் அளவுக்கு அந்த வீட்டின் நுழைநிலைக்கதவு உயரமாய் இருந்தது புதினமாய் தெரிந்தது...

வீட்டின் உள்ளே வேலைபாடுகள் நடந்த வண்ணம் இருந்தன...

வேலைபாடுகள் முடிந்துவிட்டால் இன்னும் எப்படி ஆடம்பரமாய் இருக்கும் என்பதை அவனால் கற்பனை செய்துக் கொள்ள முடியாது தவித்தான்...

'உள்ள வா முத்து'

அமைச்சருக்கு தன் பெயர் தெரிந்திருக்கிறது...

நல்ல அமைச்சர் என்று முடிவு செய்த போதே அவனது கரங்கள் தன்தைத் தானே அணைத்துக் கொள்ள கழுத்தின் உயரம் குன்றி தலை கீழ் இறங்கி நின்றான்..

'வா உட்காரு... சாப்பிட்டியா'

அமைச்சர் அமர்ந்திருந்த ஷோஃபாவில் அவனையும் சமமாக அமர அனுமதித்த போது அங்கிருந்தவர்கள் கூட கொஞ்சம் அதிர்ந்தனர்.

இத்தனை நாட்களில் இப்படி யாருக்கும் அமைச்சர் அனுமதி கொடுத்ததில்லை..

முத்து சற்று தயங்கிய போது அமைச்சரே எழுந்து கையைப்பிடித்து அமரச் செய்து, பின்னர் தானும் அருகில் அமர்ந்தார்.

'தயங்காத முத்து.. நாமெல்லாம் ஒரே இனம்.. இந்த பதவி பட்டம் எல்லாம் நான் பாக்கிறது இல்ல..'

அமைச்சர் சொன்னார்..

'தோட்டத்துல சொன்னாங் சேர்... நீங்க ரொம்ப நல்லவர்னு...' முத்து சொன்னபோது அவனது இடப்பக்க வாயில் எச்சில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது.

அதை நம்பும் அளவுக்கு அமைச்சர் விசயம் தெரியாதவரும் இல்லை...

'சரி... எனக்கு நேரம் இல்ல.. நீ என்னோடயே வேலைக்கு சேர்ந்துரு.. முதல்ல உனக்கு நா தர போற வேல என்னனு நினைக்கிற?'

'ஐயா, நீங்க என்னா குடுத்தாலும் செய்வேங்க' என்றவனை பார்க்க அமைச்சருக்கு உள்ளம் குளிர்ந்தது...

மேலே நிமிருந்து பார்த்து தமது செயலாளரைத் தவிர ஏனையோரை வெளியில் போகச் சொல்லி கண்சிமிட்டினார்.

உத்தரவின் படி எல்லோரும் போனப் பிறகு சொல்லலானார்..

'இங்க பாரு முத்து... போன கிழம உங்க ஊருக்கு வந்து பார்த்தன்.. லயமெல்லாம் என்ன அப்பிடி இருக்கு...?'

அதாங்க ஐயா, நீங்கதான் எதாவது செஞ்சி குடுக்கனும்..

மொக்கு முத்து ஒருகணம் மொத்த தோட்டத்துக்குமான குரலாய் மாறிப் போய் இருந்தான்...

'அதான் நானும் சொல்லவாரேன்.. அதெல்லாம் உடைச்சிட்டு புதுசா கட்டனும்.. ஆனா உடைக்க போனா உங்க ஆளுங்க ஒத்துக்க மாட்டாய்ங்க..'

'ஆமாங்க ஐயா..'

'அதுக்கு ஒரு வழி வச்சிருக்கன்..'

'சொல்லுங்க ஐயா' ஆர்வத்துடன் கேட்டான் முத்து...

'ஒரு லயத்துக்கு நெருப்ப வச்சிடுவோம்.. எரிஞ்சவொன்ன புதுசா கட்டிக் கொடுப்பம்...'

முத்து ஒன்றும் பேசாதவனாய் இருந்தான்... ஓரத்தே வலிந்த எச்சிலைத் துடைத்துக் கொள்வதில், மறுகேள்வி கேட்பதற்கு நேரம் இல்லாமல் இருந்தது...

அதற்குள் அமைச்சர்,

'எல்லாம் நம்ம சனங்கதானே முத்து... நாமதான் எதாவது நல்லது செய்யனும்'

'எங்கவீடும் எரிஞ்சிடுங்களா'

'என்னா முத்து எங்க வீடு உங்க வீடுனு பிரிச்சிக்கிட்டு.. நம்மவீடு முத்து... எல்லாம் நம்ம வீடுதான்... இப்ப இதயே எடுத்துக்க... இதுவும் நம்ம வீடுமாதிரிதான்... கட்டி முடிக்க வசதி இல்லாமதான் அப்படியே கிடக்கு.... அரசாங்கத்துக்கிட்ட போய் லயத்த உடைச்சி கட்டனும்னு காசு கேட்டா தரவா போகுது? ஆனா நெருப்பு வச்சி எரிச்சிட்டா, காசு குடுத்துதானே ஆகனும்...'

அமைச்சர், முத்துவுக்கு புத்திசாலியாகத் தெரிவித்தார்...

அரசியல் புரியாதவன் சரி என்றுவிட்டான்...

முத்துவின் காதருகே வந்து எப்படி தீ வைப்பது என்ற ரகசியத்தையும் அமைச்சரே சொல்லிக் கொடுத்தார்... சட்டை பையில் சில நாணயத்தாள்களை செருகி வழி அனுப்பி வைத்தார்...

இரவு 9 மணி...

தோட்டத்து லயம்...

உறங்கலுக்கும் உறங்கா நிலைக்கும் இடையில் அந்த லயம் தத்தளித்துக் கொண்டிருந்தது...

அமைதி கெட்டிராத அந்த பொழுது, அடுத்து நிகழவிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை...

அமைச்சர் கதாராமனின் வாகனம் அந்த தோட்டத்தை நோக்கி பயணிக்கத் தயாராக இருந்தது.

நகரில் இருந்து ஹார்ட்வெயர் கடைக்கு அழைப்பை எடுத்த அமைச்சர், 10 வீடுகளை கட்டுவதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அது அவரது மைத்துனரின் கடை...

அமைச்சரது மனைவியின் நச்சரிப்பால் வீட்டின் முன்னறையில் வைக்கப்பட்டிருந்த சீன தேசத்து இலவசப் பொருட்கள் எல்லாம் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டிருந்தது..

'அவன்கிட்ட கதைச்சிங்களா? வேலை முடிஞ்சிருக்கும்தானே?'

அமைச்சர் பரபரப்பாக இருந்தார்..

'போற வழியில ஒரு கல்யாண விருந்து இருக்கு.. அதுல கலந்துட்டு போனா நேரம் சரியா இருக்கும்...'

செயலாளர் சொல்வதைக் கேட்டப் படியே அமைச்சர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்... வாகனம் வேகமெடுத்தது....

இரவு 9.30

அதிசொகுசு வண்டியில் சென்றாலும் அந்த பாதை அமைச்சருக்கு குடலேற்றத்தை ஏற்படுத்திவிடும் போல் இருந்தது..

முத்துவின் தோட்டத் தலைவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.... வேலை முடிந்துவிட்டது என்பதை அமைச்சர் புரிந்துகொண்டார்...

'சொல்லுங்க தலைவரே... இப்ப அங்கதான் வந்துக்கிட்டு இருக்கோம்.. இன்னும் 5 நிமிசத்துல அங்க இருப்பம்...'

தலைவருக்கு இருப்புகொள்ளவில்லை... அமைச்சர் வருவதற்குள் வரவேற்க ஏற்பாடு செய்துவிட வேண்டும்.. அங்கிருந்த சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரது வாகனம் நிறுத்தப்படும் இடத்துக்கு விரைந்தார்...

அமைச்சரும் வந்து சேர்ந்தார்...

தீ வைக்க சொல்லி இருந்த லயத்தை பார்த்தபடியே வேகமாக அமைச்சர் தரையிறங்கினார்.

ஆனால் அந்த லயம் அமைதியாக இருந்ததைக் கண்டு திகைத்தார்..

ஒன்றும் புரியாதவராய் இருந்தார்...

அந்த ஐந்து நிமிடத்துக்குள் தயாரிக்கப்பட்ட கொழுந்து மாலை அமைச்சரின் கழுத்தை பாரமாக்கியது.....

அமைச்சர் எதுக்காக வந்தார் என்பது தலைவருக்கும் புரியாமல் இருந்தது...

எரிக்கும்படி அமைச்சர் உத்தரவிட்ட லயன் அறையோ எரியாமல் இருந்தது.

'இங்க கல்யாண விருந்து ஒன்னுக்கு வந்தோம்.. அப்படியே உங்களையும் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்'

அமைச்சர் சொன்னார்.. அவர்களும் நம்பினர்....

'ஆமா நீங்க ஏன் கோல் பண்ணுனிங்க?' அமைச்சர் கேட்டார்...

'மகளுக்கு வேல விசயமா பேசி இருந்தேங்களே....' இழுத்தார் தலைவர்...

அமைச்சருக்கு பொறுமை எல்லைக் கடந்திருந்தது.

'சரி ஒஃபீசுக்கு வாங்க.. பேசலாம்' என்றவர் பின்னர் அங்கிருந்தவர்களுக்கு கைலாகு செய்துவிட்டு கடந்து போனார்....

பாதி தூரம் செல்லும் போது 'மொக்கு' முத்து ஓடி வருவது தெரிந்தது...

வாகனத்தை நிறுத்தி முத்துவை வழிமறித்து பிடித்தார்கள்...

'ஐயா.. நீங்க சொன்ன மாதிரி நெருப்பு வச்சிட்டேங்க'

என்னடா சொல்ற... இப்பதானே அங்க இருந்து வாரோம்.. ஒன்னும் எரியல்லயே...

'அது இல்லிங்க ஐயா.. டவுன்ல இருக்க நம்ம வீட்டுக்குதான் வச்சேன்...'

முத்துவின் சட்டையை பிடித்து எழுத்தார் அமைச்சர்...

'ஐயா நீங்கதானே சொன்னிங்க.. நெருப்பு வச்சிட்டா வீடு கட்ட அரசாங்கம் காசு தரும்னு... எங்களுக்காக எவ்வளோ செஞ்சிருக்கிங்க.. நீங்க காசு இல்லாம அந்த வீட்ட கட்ட முடியாம இருந்திங்க.. அதாங்க.. நம்ப வீட்டுக்கே நெருப்பு வச்சிட்டன்'

முத்துவை வீதியில் தள்ளிவிட்டு வாகனத்தில் வேகமெடுத்தார் அமைச்சர் கதாராம்....

--------------------முடிந்தது--------------

இந்த சிறுகதை 2017- ஆகஸ்ட் 6ம் திகதி ஞாயிறு தினக்குரலில் வெளியானது. 

உங்கள் கருத்துக்கள் தொடர்ந்து எழுத உந்துதலாக அமையும்.... 

https://www.facebook.com/vikey.wignesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக