எம்மை நாமே ஏளனப்படுத்தாதிரல்


100 கெட்டவர்களை திட்டுவதை விட 10 நல்லவர்களின் மனம் கோணாது அமைதிகாப்பது சிறப்பானதாக நான் நினைக்கிறேன். மலையகத் தமிழர்களை ஏளனித்து காணொளிபரப்பிய அந்த நபர் இவ்வாறான பல இகழ்வாதக்குணத்தோரின் ஒரு பிரதிபலிப்பு. அந்த நபரை திட்டி அவர்போல நடந்துக் கொள்வதும், அந்தக் காணொளியை மேலும் மேலும் பகிர்ந்து அவரை புகழடைய நாமே காரணமாவதும் மடைமை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
மலையகத்தோரை இகழ்வாக கருதும் வடக்கு மக்களின் மனநிலை முழுமையாக மாறிவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் சிலர் பிரதேச பிரிவினைகளைத் துறந்தவர்களாக இருக்கிறார்கள் என்து மனநிம்மதி. கடந்த மாதம் ஒரு நிகழ்வொன்றில் இருக்கும் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர் மிகுந்த தமிழ்தேசியக் கொள்கைவாதியும், யாழ்ப்பாண மமதை பெருகியவருமாகவே என்னால் அறியப்பட்டிருந்தார். கடும் பிரதேசவாத குணமுடைய அவர் என்னோடு பழக ஆரம்பித்தகாலம் முதல் தன்னை மாற்றிக் கொள்வதாக சொல்லி வந்திருந்தார். அதுபடியே சிலசமயங்களில் நடந்தும் இருக்கிறார். குறித்த நாளில் எனக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அவர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதிகள் ஊடாக பயணித்துக்கொண்டிருந்தார். 'விக்கி, எங்க்ட சனம் சொல்றபடி இங்கட சனம் அவ்வளவு மோசமாக இல்லையடா. நல்லாதானே இருக்கினம்? அவர்கள் எங்கட சனத்தவிட எதில குறைஞ்சிருக்கினம்? ஏன் இவங்களயும் எங்கட சனத்தோட சேர்த்துகொள்ள கூடாது? நான் இவ்வளவு காலம் விசரா இருதுட்டன். நான் இங்கேயே தங்கி எதாவது செய்யலாம் எண்டு இருக்கன்' என்று சொன்னார்.... அந்த தருணத்தில் அவர் மீது பெரும் மதிப்பே ஏற்பட்டது. ஆனால் அந்த சமயம் எனக்கு விரிவாக எதும் பேசக்கிடைக்கவில்லை. பண்பாட்டு ரீதியாக மலையக மக்கள் எந்த தமிழ் சமூகத்துடன் குறைந்து போய்விடவில்லை. இதனை நேரில் வந்து பார்த்தே புரிந்துக் கொள்ள வேண்டும். நம்மிலும் குறை இருக்கிறது. நாம் மலையகத்தின் ஒரு இருண்ட பக்கத்தை மாட்டுமே வெளி உலகத்துக்கு முதன்மைப்படுத்தி காட்டி வந்திருக்கிறோம். எம் மக்களின் செழுமையான பாரம்பரியம், கலை, பண்பாடு, நம்பிக்கைகளை நாம் போதிய அளவு வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டவில்லை என்ற ஆதங்கம் அண்மைக்காலமாக எனக்கு அதிகம் இருக்கிறது. நாம் காட்டியதெல்லாம் மலையகத்தின் சம்பள போராட்டமும், வறுமையும், அசுத்தமும்தான்... இதனையே பலர் மலையக மக்களின் அடையாளமாக இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எம் மக்களும் தங்களின் உரிமைகளை மறந்து, வேதனத்துக்காக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை போராடி இசைவாக்கம் அடைந்தவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அண்மைய சில மாதங்கள், அப்படியானதாக இல்லை. மக்கள் தங்களது உரிமைகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவை மீறப்படும்போது அதற்கு எதிராக கிளர்ந்தெழ ஆரம்பித்திருகிறார்கள். தமது உலகத்தை தாண்டி வெளியுலகத்தை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களை இன்னொரு சமுகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு எமது நிலை முன்னேறுகிறது. எமது போராட்டங்களை தன்னலமற்று வழிநடத்துவதற்கான தலைவர்கள் மிகவும் அரிதாகவே தோன்றி இருக்கிறார்கள். அவர்களின் பின்னால் எங்களது இன்னல்களைப் போக்கிக் கொள்வதற்காக தாய்நாட்டுக்கு எதிராக ஆயுதங்களை தூக்கியதில்லை. வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டக் குரல்களுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கைப் போராட்டம் மங்கிப்போகிறதே என்று அவர்கள் கவலைக் கொள்ளவில்லை. மலையக நிலைக்கண்டு இன்னோர் நாட்டுக்கு ஓடிச் சென்று அங்கிருந்து இன்னொரு சமுகத்தை திட்டிக் கொண்டு இருப்பதும் இல்லை. வடக்கு கிழக்கு உரிமை போராட்டத்துக்காக மலையகத்தவர்கள் பலர் சிறைக்கு சென்ற சம்பவங்கள் இருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழவேண்டிய நிலைமை பலருக்கு ஏற்பட்டிருக்கின்றன. இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, மலையக மக்களை ஏளனம் செய்த குறித்த நபரை இணையத்துக்கு வெளியில் தண்டிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. அவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. நாகரீக தன்மைகள் பண்புகள் இல்லாத காட்டுமனிதனைப் போல கருத்து வெளியிட்டிருக்கும் குறித்த நபர், மலையகத்தவர்களை காட்டான் என்று சொல்வதற்கு எந்த தகுதியும் அற்றவர். ஆனால் மலையகத்தைச் சேர்ந்த சிலரே தோட்டக்காட்டான் என்ற சொல்லின் வலியை உணராமல் அதனை மேன்மைப்படுத்தி பதிவிட்டிருப்பதை பார்த்தப் போது ஆத்திரம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அதற்கு அவர்கள் கூறுகின்ற வியாக்கியானங்களும் எரிச்சல் படுத்துகின்றன. நாம் ஒன்றும் பண்பற்ற காட்டுமனிதர்கள் இல்லை. பழங்குடியினர் கூட காட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்கும் தனிக்கலாசாரத்தையும் பண்பாட்டையும் கொண்டிருப்பதாலேயே அவர்களை காட்டுவாசிகள் என்று சொல்வது உரிமை மீறலாக கருதப்படுகிறது. எம் மக்களை நாமே ஏளனப்படுத்தாமல் இருப்போம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக