திரட்டுவது குப்பை......


இவர்கள் இருவரும் சற்றே குழப்பம் நிறைந்தவர்கள்..

குறிப்பிட்டு சொல்லும் வகையில் அவர்கள் யாரும் விசேடமானவர்கள் இல்லை என்றுதான் சாதாரணமாக பார்க்கையில் தோன்றும்.

ஆனால் கொழும்பு நகரைப் பொருத்தவரையில் இவர்களுக்கு தலைவணங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலை...


நான் வசிக்கும் வீட்டுக்கு முன் உள்ள பிரதான தெருவின் ஓரமாய் சில மீற்றர்கள் தொலையில் அமைந்துள்ள 10 சதுர அடி விரிவான அறைக்குள் ஒண்டி வாழும் நபர்கள்...

குப்பைகளை சேகரிப்பதும், சுத்திகரிப்பதும் அவர்களின் தொழில்...

எமது வீட்டுக்கு வேறொரு குப்பை சேகரிப்பாளர் வருவதால், இவர்களுக்கும் எமக்குமான தொடர்பொன்றும் இல்லை.

ஆனால் இந்த தெருவிற்கு அருகில் வசிக்க ஆரம்பித்த ஆறு வருடங்களாக அவர்களை அறிவேன்..

என்னைக் காணும் போது பல சமயங்களில் கண்டுகொள்ளாத அவர்கள், சில சமயங்களில் 'லொக்கு மஹாத்தியா' என்று பல்லிழிப்பதுண்டு....

அந்த சில சமயங்கள்தான் அவர்கள் மதுமயக்கம் தெளிந்திருப்பர்...

முன்னால் செல்லும் அந்த ஆண், ஒரு அரசன்,

பின்னால் செல்லும் பெண் அவரது மனைவியாகிய சேவகி...

இன்று காலையிலும் நான் அலுவலகம் நோக்கி நடந்த போது, என்னைக் கடந்து சென்றார்கள்...

அப்போதும் அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் பலமாக இருந்தது...

எதைப்பற்றி என்று தெரியவில்லை, ஆனால் இருவருக்கும் இடையில் காரசாரமான உரையாடல், தடைசெய்யப்பட்ட(?) பீப் வகை அடைமொழி வார்த்தைகள் சர்வசாதாரணமாக இருவரின் வாய்களும் பொழிந்தன..

அவர்களின் சண்டை நான் அறிந்த அளவில் ஒன்றும் பெரியவிடயம் இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ஓர்நாள் அவர்களது வீட்டுக்கு(?) முன்னால் உள்ள மீன்கடையில் இருந்து அந்தப் பெண் ஒரே ஒரு மீனை வாங்கிக் கொண்டுச் சென்றார்.

அதை நான் கண்டபோதும் எதனையும் விசாரிக்கவில்லை..

ஆனால் அவராகவே வந்து என்னிடம் பேசினார், 'அப்பே மஹாத்திய மாலு நெத்தங் கண்ணேஹேனே... மொனவா உனத் விசிக்கரனவா... ஏக்காய் கொஹோம ஹரி மம மாலு கேமக் அதன்னே...'

(எனது கணவர் மீன் இல்லாமல் உண்ணார், எதுவானாலும் தூக்கி எறிந்துவிடுவார், அதனால்தான் எப்படியாவது மீன் சமைத்துவிடுவேன்)

அவரிடம் நின்று பதிலளிக்கும் வகையில் நேரம் இருந்தாலும், உள்ளுக்குள் தொங்கிய வறண்ட கௌரவம் விட்டுக் கொடுக்கவில்லை.

பதில்சொல்லாமல் சிரித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டேன்...

சுமப்பது குப்பை........................ என்று மனதில் நினைத்துக் கொண்டேன்...

அது குறித்து நான் யோசிக்காத நாள் இல்லை...

என் மனைவி எப்படி என்னை கவனிக்கிறாரோ, அப்படியே அவர் அவரது கணவன் குறித்து அக்கறையாய் இருக்கிறார்.

அந்த மனிதனும் ஏனைய குப்பை சேகரிப்பவர்கள் போன்றவர் இல்லை.

அவருக்கு என்று ஒரு கௌரமான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றுகிறது.

அவர் சொல்வதைத்தான் ஏனையவர்கள் கேட்கிறார்கள்.

சின்ன விடயத்துக்கும் ஒலிபெருக்கி கட்டியதைப் போல அவரது குரல் தொனி சில சமயம் உயர்ந்து விடும்.

அந்த சுற்றுப்புரமே அமைதியாகிவிடும் அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் இருந்தார்...

இப்போது கூட அப்படித்தான், இரண்டு பேரும் கடுமையான தூசன வார்த்தைகளுடன் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு முன்பின்னாக நடந்து செல்கின்றனர்...

அதோ, அந்தப் பெண்ணின் காலை ஒரு போத்தலோடு கிழித்தது...

ஹே...பீப்..பீப்...பீப்... கேனியே... பலலா என்ட பெரிதடீ....'

விளக்கம் வேண்டியதில்லை...

வீதியோரமாய் அமரவைத்து அவரது காலை தன் மடியில் ஏந்தி கையால் இரத்தத்தை துடைத்து கட்டிட்டார்....

முரண்டுத்தனமான அவர்கள் இருவரின் அன்பு வாழ்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக