அழிப்பு

தரையில் கிடக்கும்
தலைகளையெல்லாம்
நான்தான் துண்டித்தேன்...

வண்டிகளின் சக்கரங்களையும்
துண்டிக்கச் செய்தது
நான்தான்...

என் முன்னே
துப்பாக்கியை நீட்டிய
சின்னப்பயல் சிப்பாயைக்கூட
சின்னாப்பின்னம் செய்தேன்...



முரசு கொட்டி
உரச வந்தவனுக்கு
சிரச்சேதம் செய்துவிட்டேன்...

ஆடைகிழிந்த
அந்தப் பெண்ணை
காலை முறித்து,
கையைத் திருப்பி
வேண்டுமென்றே
வீசியெறிந்தேன்...

பளிங்குத் தரையில்
குலுங்கி நடந்த
யானையையும்,
அந்த மானையும்
தூக்கி எறிந்து
துவம்சம் செய்ததும்
நானேதான்...

வகைதொகையின்றி
புத்தகக் கட்டுகளை
புரட்டிப் போட்டு
வடிவம் மாற்றினேன்...

ஏன்?

என்னிலும் பார்க்க
சின்னதாய்த் தெரியும்
இவைகளை
எனக்குப் பிடிக்கவில்லை...

இந்தத் தனிமை
எனக்கு
இன்னுமே பிடிக்கவில்லை...

பார்க்கும் சடப்பொருளெல்லாம்
பல்லிளித்து,
கேலி செய்வதாய்த் தோன்றுகிறது...

உடைத்துப்போட்ட தலைகளும்
புரட்டிப்போட்டதில்
சில்லு முறிந்த
சிறுவண்டிகளும்
துப்பாக்கி இழந்த சிப்பாய்களும்
என்னையே பார்த்து
ஏளனிக்கையில்...


என்ன செய்ய முடியும்
என்னால்?
இந்த சிறுபொருட்களை அடக்க
என்னாலாகாது...

ஆ... வென கத்தி – என்
அம்மாவை அழைத்தேன்...

ஓடி வந்த வேகத்தில்
ஒரு கையில் எனைத் தூக்கி
உரிமையோடு அதட்டினாள்...

'விளையாட்டு பொருளையெல்லாம்
இப்படியா உடைப்பது?'


1 கருத்து: