குடைக்குள் மழை

குடைக்கு கீழ அவளோட போக கூச்சமாகவே இருந்தது...

மழை ஒருபக்கம் நனைச்சதாலும், குடை ஒருபக்கம் மறைச்சதாலும் அர்த்தநாதீஸ்வரரப் போல இருந்தேன்..

அவளும்தான்...

பஸ்ல இருந்து இறங்கி ஸ்டேண்டல நின்று மழையை பார்த்து பயந்தப்போ, அந்த இரக்கம் பிறந்திருக்கனும் அவளுக்கு...தனியா நின்றிட்டு இருந்த என்ன அவள்தான் குடைக்குள்ள கூப்பிட்டாள்...

வகுப்பறையில அடுத்தடுத்து உட்கார்ந்திருக்கும் போது கூட இந்த அளவு நெருக்கமா இருந்ததில்ல...

2003 அளவிலயே அவவ தெரியும்...

முதன்முதல்ல தனியா டவுனுக்கு போக ஆரம்பிச்ச காலம்..

டவுன்ல பார்க்குற பொண்ணுங்கள் எல்லாம், எதிர்காலத்துல இதுதான் நம்ம 'கேர்ள்ஃப்ரண்டா' வருமோனு தோனும்....

ஓ.எல். படிச்சிட்டு கம்பியுட்டர் க்ளாஸ் போய்க்கிட்டு இருந்தன்...

க்ளாஸ் முடிய பஸ் ஏற வரும் போது அவள கண்டன்..

பெரிய நெற்றி, சின்னதா விபூதி

சின்ன உருவம், ஜேசி போட்டு, புத்தகத்தை நெஞ்சோட வச்சி கையகட்டிட்டு என்ன பார்க்காம நேர போய்ட்டாள்....

அதுக்கு பிறகு நாங்கள் எல்லாம் ஒண்ணா படிப்போம்னு நினைக்கல்ல...

ஒண்ணா படிச்சோம்னு சொல்லலாமானு தெரியல்ல...

2 வருசம் பழக்கம் முடிஞ்ச பிறகும் மறக்க முடியாத ஒரு முகமா அவளோட முகம் இருந்தது...

அது ஒண்ணும் அவ்வளவு அழகா இருக்காது...

கொஞ்சம் கூட அழுக்கே இல்லாத மனசு அவள்ட முகத்தில் வெட்டவெளிச்சமா தெரியும்...

அவ்வளவுதான்...

அயன் பண்ணாத உடுப்பு, பின்னி முடியாத சடை.... கோணம் பார்த்து பதியப்படாத குட்டி பொட்டு, இதெல்லாம் அவளோட அடையாளம்...

காலை வணக்கம் எனக்கு எப்பவும் அவள்ட்ட இருந்துதான் முதல்ல கிடைக்கும்....

ஸ்கூல்ல ஒருமாதிரியும், வகுப்புல ஒருமாதிரியுமா திரியும் என்னோட வித்தியாச மாயைகள் எல்லாம் அவளுக்கு அத்துபடி...

என்னோட இழப்புக்கு வந்தவங்கள்ல அவளோட வருகைய பார்த்தப்பதான் எனக்குள்ள மின்சாரம் பாய்ஞ்சது....

இப்ப குடைக்குள்ள...

தோள்ல கைய போட்டாலே ஒழிய அந்த மழை ரெண்டு பேரையும் நனைக்காமவிடாது...

ஆனா போடல்ல... - தோனல்ல...

அவளோட காதுக்கு மிக பக்கத்துலதான் என்னோட வாய் இருந்தது....

அப்பவே சொல்லி இருக்கனும்...

கடந்துபோக இன்னும் தூரம் இருக்கென்ட தைரியத்தில கொஞ்சமா தள்ளி போட்டன்...

எனக்காக அவ என்னென்ன செய்திருக்கா...?

நீளமா ஒரு பட்டியல் போடலாம்...

சின்ன விதைக்குள்ள அவ்வளவு பெரிய மரம் எப்படி மறைஞ்சி இருக்குமோ, அந்த மாதிரிதான் இதுவும்...

இந்த சின்ன ரெண்டு வருசங்களுக்குள்ள அவ எனக்காக பண்ணின பட்டியல்...

அந்த ரெண்டு வருசமா அந்த பட்டியல் எனக்கு வெறும் விதையா மட்டும் தெரிஞ்சதுதான் ஆச்சரியம்...

எல்லாம் முடிஞ்சி இதுதான் கடைசி நாள்னு ஆனப்போ என் கைய பிடிச்சி

'அவன என் பின்னால வர வேணானு சொல்லு'

அப்படினு அவள் சொன்னப்ப கூட எனக்கு புரியல்லயே...

வகுப்பு முடிஞ்ச பிறகு எனக்காக காத்திட்டு இருந்து பஸ்ஸ விட்டு நின்னிட்டு இருந்தப்போ கூட கிண்டல் அடிச்சன்...

ஆடிக்கும் அமாவாசைக்குமாதான் வகுப்புக்கு போனாலும்கூட எல்லா நோட்ஸும் என்னோட கொப்பியில எப்படி வந்துச்சினு தேடினா, அதுக்கு காரணம் அவளாதான் இருப்பாள்...

ஒரு முரட்டு மங்கி 'லவ் லெட்டர்' கொடுத்து அவள்ட்ட கொடக்க சொன்னப்போ, நான் ஏன் கொடுக்காம விட்டேனு தெரியல்லயே...

'இவன மாதிரி ஒருத்தன் அவள கட்டீடகூடாது கடவுளேனு' கேட்டதும் ஏன்னு தெரியல்ல...

'மற்றவங்கள விடு, நீ கூட ஏன் இப்படி செய்த'னு அவ கேட்ட பிறகு அவ வீட்டில இருந்து வேன்ல ஏறி மனச முழுக்க அவக்கிட்ட விட்டுட்டு வரதான் முடிஞ்சிது...

கைய பிடிச்சு ஆறுதல் சொல்லி இருக்கனும்...

இல்ல, 'நீ போடு நான் சாப்பிடுறேனு' சொல்லி சாப்பிட்டு இருக்கனும்...

அத செய்யலயே....

இதோ, இப்போ ஒரே குடைக்கு கீழ....

இப்பவும் ஒண்ணும் பேசாமதான் வாரன்...

அவளும் பேசுறதா தெரியல்ல...

அவ போட்டுருக்க தோடு, நான் சொன்னதுக்காக அளவ பெரிசாக்கின நெற்றி பொட்டு, என்ன மாதிரியே பேச்சு கேட்காம அடம்பிடிக்கிற முடி.. எல்லாமேதான் என் கண்ணுக்கு தெரியுது...

அவ எனக்கு சேர்த்து ரோட பார்த்து நடந்து போறாள்...

அவளோட காதுக்கும், என்னோட வாய்க்கும் இடையில இருந்த தூரத்தோட அளவுக்கே, நான் குடையில இருந்து வெளியேற வேண்டிய தூரமும் குறைஞ்ச பிறகுதான் பகீர்னு இருந்தது...

ஆனா அப்பவும் சொல்லவே இல்லயே...

ஒரு நன்றி கூடவா...?

சே...

வீடு வரைக்கு வாறேனு சொன்னாள்...

நான்தான் வேணானுதான் சொன்னன்..

திரும்பி பார்த்து மழையில நனைஞ்சி நின்னப்பதான் தெரிஞ்சது...

அவ என்னவிட அதிகமா நனைஞ்சிருந்தாள்...

அவளும் நகராம, நானும் நகராம ஒருத்தர ஒருத்தர் பார்த்துட்டு 5 நிமிசம் நின்னுருப்பம்..

அப்ப கூட சொல்லலயே...

'கொழும்புக்கு போறது சரி, கூடாத பழக்கம் எதயும் பழகிக்க போறான்...'

இப்படி, என் அக்காகிட்ட அவ சொன்னப்போ கூட கோல் பண்ணவோ, போய் பார்க்கவோ தோனவே இல்லயே...

ஒன்றுமே சொல்லவும் தோனல்லயே...

அவள் கல்யாண பத்திரிகைய பார்த்தப்போ மாப்பிள்ளை யார்னு தேடி மகிழ்ச்சியில பொங்கினப்போ கூட தோனல்லயே...

ஏன் அப்படி சந்தோசப்பட்டேனு..

இதோ...

இப்ப தோனுது...

யூ ஆர் மை பெஸ்ட் ஃப்ரண்ட் டீ...

உன்னோட அளவுக்கு என்ன புரிஞ்சிகிட்ட யாருமே இல்ல.....

இத அன்றைக்கு குடையில ஒன்றா போகும் போதே சொல்லி இருந்தா கூடவே இருந்திருப்ப...

இத புரிய வக்கதானே பாடாபட்ட...

நாம துரத்துறவங்க நம்மல துரத்திவிட்ட பிறகுதான், நம்மல துரத்தினவங்க நினைவுக்கே வாராங்க...

இப்ப சொல்லி கேட்கவா போகுது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக