ஐம்புலனும் அகத்தடக்கி

அத்தைக்கு ஆக்கிவச்சேன்,
ஆட்டுக்கும் புல்லுவச்சேன்,
அர வயசு புள்ளைக்கும்
அலுக்காம ஊட்டிவிட்டேன்.
சித்தைக்கு வளருமந்த
சீவனுக்கு சோறுவச்சேன்,
சித்தம் வச்சி செஞ்சதெல்லா,
சீக்கிரமா தீர்த்துட்டிக.
ஒத்தசொல்லும் சொல்லாம
உங்க பாடு போறிகளே,
ஒருத்தி இங்க நின்னுருக்கா,
ஒங்க வாயி தெறக்காதோ?

காலையில எந்திரிச்சி
களத்துக்கு போகனுமே,
கண் அயர முன்னுக்கே
கண்முழிச்சி நா எழும்பி,
வேலைகள செஞ்சி வச்சி,
வீட்டுக்குள்ள வரும் போதே,
வீம்பாத்தான் உங்க அம்மா
வெறும்பேச்சி பேசுறப்போ,
சேலையில மூக்க சிந்தி
செஞ்சதெல்லாம் பிதற்றுரப்போ,
திமிராத்தான் போறிகளே,
செவிடாத்தான் போனிகளோ?

வாங்கிவந்த மருதாணி
வருசமாகி காஞ்சி போச்சி.
வாடா பூ செண்டு
வாசணையும் கெட்டுப் போச்சு.
காங்கும் சீவனெல்லாம்,
கண்ணயர துவங்கீறிச்சி,
கண்ண சுத்தி எனக்கும்,
கடுந் தூக்கம் வந்திருச்சி
நீங்க வந்து தூங்க மட்டும்
நின்றிருந்து பார்த்தேனே...
தீண்டாம போறிகளே,
தேக மணம் கெட்டுறிச்சோ?

கள்ளுர வேணுமுன்னா
கள்ளுமரம் தவம் கிடக்கு?
கமக்கார மாட்டுக்கும்,
காதலிக்க துண இருக்கு.
எள்ளுரண்ட கண்ணுக்கு
எத்தனையோ பசி இருக்கு.
இருந்தாலும் ஒவ்வொன்னா
இந்த பொண்ணு அடக்கிருக்கு.
உள்ளுணர்வு சொல்லயா
ஒருத்தி உசுர் காத்திருக்கும்?
உம்முகட்டி போறிகளே,
உணர்ச்சி கெட்டு போனிகளோ?

காசுத்தான் வேணுமுன்னா
கண்டவன கட்டிருப்பேன்,
காமந்தான் வேணுமுன்னா
கண்டவன தொட்டிருப்பேன்,
ஆசத்தா முக்கியம்னா
அடுத்த நாளே ஓடிருப்பேன்,
ஆனாலும் ஒன்னவிட்டு
அடி எடுத்து வக்கலயே,
பாசந்தான் வேணுங்குது
பாவிபுள்ள என் மனசு,
பார்க்காம போறிகளே
பார்வையில கோளாறோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக