மட்டக்குச்சி

காலடிகளே படாத அந்த பாதையின் கடைசி பகுதி எப்படி இருக்குமோ?

அவ்வப்போது என்மனம் ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் கேள்வி அது.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் என் மகளின் எதிர்காலம், அந்த கடைசிப் பகுதியில்தான் இருக்கும்.

தேயிலைத் தட்டும் மட்டுக்குச்சியின் உயரத்துக்கே வளர முடிந்த இந்த வீட்டுக் கூரையுள், கூனிகுறுகி வளராத எங்கள் காலத்தை, பிள்ளையின் வழியிலாவது வளர்த்துவிட பாடாதபாடு படுகிறேன்...

'ஆறு மணி ஆகிருச்சி, இந்த புள்ள இன்னும் எழும்பாம இருக்கு... மலரு.... மலரு... எழும்பும்மா.... ஸ்கூலுக்கு நேரமாகிறிச்சி... - (நான்)

'இன்னைக்கி மட்டும் வீட்டில இருக்கேம்மா...' – (மலர்)

'இப்படி சொல்லிதானே நேத்தும் வீட்டில இருந்த... இன்னைக்கு மட்டும்தானே ஸ்கூல், நாளைக்கு லீவுதானே.. இன்னைக்கு ஒருநாளைக்கு போய்ட்டு வாம்மா... எனக்கும் பெரட்டுக்கு நேரமாச்சி....' – நான்

இந்த பிள்ளையின் கனவை நான்தான் காண்கிறேன்...

இவள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

இவளை எப்படியாவது கரை சேர்த்துவிடத்தான், என் நாட்களை எல்லாவற்றையும் கரைத்துக் கொண்டிருக்கிறேன்..

ஆனால் அவள் இப்படி தூங்குவதை பார்க்க எரிச்சலாக இருந்தது...

அடித்து எழுப்புவதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை.

பெரட்டு களத்தில் கொஞ்சம் சுணங்கினாலும் வேலை இல்லை, அரைபேரு என்று என் கனவுக்கு குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளையே கேட்க வேண்டி வரும்...

எங்களை நாங்களே மட்டம் தட்டிக் கொள்ளும் வரிச்சிக்குச்சியை எடுத்து பிள்ளையின் பின்பக்கத்தில் நான்கு போட்டேன்...

'எத்தன முறை சொல்றது உனக்கு.. நீ படிக்கனுதானே நா மாடா உழைக்கிறேன்... எழும்பி பொய்ட்டு பொறப்படு...' – (நான்)

அடி உதவுவதை போல எதுவும் உதவாது..

அம்மாவின் பேச்சை கேட்காமல், மட்டக்குச்சியின் பேச்சைக் கேட்டு எழுந்து போன மகளை பார்த்துக் கொண்டே அவளுக்கு கொடுத்த நான்கு அடிகளை எட்டாக நான் எனகே கொடுத்துக் கொண்டேன்..

காடு மலை ஏறி கடினமாகிப் போன என் கால்களுக்கே இத்தனை வலி என்றால், என் மகளுக்கு எப்படி இருந்திருக்கும்?

மலைக்கு கொண்டு செல்ல கட்டி வைக்கப்பட்டிருந்த ரொட்டித்துண்டுகளை கூட எடுத்துச் செல்ல மனம் வரவில்லை.

அம்மாவிடம் அவளை பாடசாலைக்கு அனுப்புமாறு கூறிவிட்டு பெரட்டுகளத்துக்கு ஓடினேன்.

எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமதம்தான்...

ஆனாலும் சிலநேரங்களில் அந்த ஐயாமாருக்கு இரக்கம் வரும்.

இன்றும் வந்திருக்கிறது போலும், ஒன்றும் சொல்லாமல் என்னையும் சேர்த்து இன்னும் கொஞ்சம் பேரையும் ஏழாம் நம்பர் மலைக்கு போகசொன்னார்.

இருக்கும் மலைகளிலேயே ஏழாம் நம்பர் மலைதான் உயர்ந்த இடத்தில் இருக்கிறது.

இதில் ஏறி இறங்குவதற்குள் பாதி உயிர் பறிபோய்விடும்.

எல்லாம் என் பிள்ளையின் வயிற்றுக்கும், எதிர்காலத்துக்குமாக எண்ணி நடையை கட்ட வேண்டியதுதான்...

சாரத்தை மடித்து தலையில் கட்டி தேயிலைக் கூடையை தலையில் மாட்டிக் கொண்டு நடையை கட்டும் போது...

'ராஜேஸ்வரி.... எங்க ஓடுற...?'

என் பக்கத்துவீட்டு சரோஜா..

அவளும் ஏழாம் நம்பர்தான் போல... எனக்கு முன்னரே வந்துவிட்டாள்.

நானும் அவளும் முன்னர் பள்ளித் தோழிகள். ஐந்தாம் வகுப்போடு நான் நின்றுவிட்டேன். சரோஜா பத்தாவது வரை படித்தாள்.

இப்போது மலைத்தோழிகள்...

'ஏன் ஒருமாறி இருக்க? எதும் பிரச்சினையா' – (சரோஜா)

'இல்லடீ.. காலையிலயே புள்ளய அடிச்சிபுட்டேன்... அதான் ஒரே கொடச்சலா இருக்கு...' – (நான்)

'ஏன்... ஸ்கூல் போகமாட்டடேனு கரைச்சகுடுத்தாளோ' – (சரோஜா)

'ம்ம்...' – (நான்)

'சரி விடுடீ... என்னமோ நாமெல்லாம் எந்தநாளும் ஸ்கூல் போன மாரி... ஆடிக்கு ஒருக்காலும் அம்மாசிக்கு ஒருக்காலுந்தான் நம்மலே ஸ்கூல் போனோம்... மறந்துட்டியா?' – (சரோஜா)

'அப்ப நம்மல மாதிரியே அவளயும் கொழுந்தெடுக்க விட சொல்றியா' – (நான்)

'நம்ப புள்ளைக வேற என்னத்த செய்ய போகுதுக... அஞ்சாவது படிச்ச நீயும் கொழுந்துதான் எடுக்குற, பத்தாவது படிச்ச நானும் கொழுந்துதான் எடுக்குறேன்.. உன் புள்ளமட்டும் என்னத்த செய்ய போகுது...?' – (சரோஜா)

'சீ... வாய மூடு...' – (நான்)

அந்த இடத்தில் எனக்கு வேறு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை.

அவள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

இந்த தோட்டத்தில் படித்த யார்தான் இதைவிட்டு வெளியில் சென்று சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறார்கள்.

எல்லோரும் இதே வேலைதான்.

மிஞ்சி மிஞ்சி போனால் திருமணம் முடித்துக் கொண்டு வெளியேறுவார்கள்.

அவர்களும் வேறொரு தோட்டத்துக்கு சென்று கொழுந்துதான் எடுப்பார்கள்.

என் மகளுக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது.

காலையிலேயே அவள் வாயால் இப்படி சொன்னதை கேட்க மனம் பதைபதைத்துக் கொண்டே இருக்கிறது.

கரிநாக்குகாரி வேறு. அவள் சொல்வது மட்டும் உண்மையாகிவிட்டால்...

நினைக்கையிலேயே நெஞ்சம் குமுறுகிறது.

என்னையோ, கண்ணையோ அறியாமலேயே வந்துவிட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து வேகமாக நகர்ந்தேன்.

ஏழாம் நம்பர் மலையும் வந்துவிட்டது.

தேயிலை செடிகளுக்குள் கால்வைக்கவே அறுவெறுப்பான இடம் அது.

பச்சை நிரைகளுக்கு உள்ளே போய்விட்டால், பாதம் முதல் இடுப்பு வரை ஒன்றுமே தெரியாது.

கடலில் மூழ்கி தத்தளிப்பது போலதான் கிட்டத்தட்ட தேயிலைக்குள் சிக்கி சீரழிவதும்.

செடிகளுக்கு உள்ளே நடக்கும் போது பாதம் புஸ்பத்தில் படுகிறதா? அசிங்கத்தில் படுகிறதா? என்பதைக் கூட அறிய முடியாது.

சில நேரம் குழிக்குள் விழும், சில நேரம் கல்லில் அடிபடும்.
இதற்கு வெட்டுக்கிளிகளாக பிறந்திருக்கலாம்.

அதற்கு கால்களில்தான் கண்களாமே...

இதையெல்லாம் தாண்டி ஏழாம் நம்பர் மலையை நான் அடியோடு வெறுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

இந்த மலையில் மரம் வெட்ட சென்ற போதுதான் என் கணவர் மரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

அவர் இறந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.

அவர் இருந்திருந்தால், என் கனவு கொஞ்சம் இலகுவாகி இருந்திருக்கும்.

இதை சொன்னால் என்னை வேறு மலைக்கு அனுப்பவா போகிறார்கள்?

நாங்கள் உணர்வு உள்ள மனிதர்கள் என்பதையே ஏற்றுக்கொள்ளாத இனங்கள் இந்த அதிகாரிகள்.

என்வீட்டு பிள்ளை படித்து பெரிய தொழிலுக்கு போய் சேர்ந்துவிடுவாள் என்ற நம்பிக்கை மாத்திரமே இந்த கஷ்ட்டங்களை எல்லாம் தாங்கிக் கொள்ளச் செய்கிறது.

என்கடினப் பாதையின் கடைசி பகுதியாக அதுதான் இருக்கும்.

அதுவரையில் விடாது நடக்க வேண்டியதுதான்...

மலைக்குள் நுழைந்து மட்டக்குச்சியை வைத்து கொழுந்து பறிக்க ஆரம்பித்தோம்...

சரோஜாவும் எனக்கு அடுத்த நிரைதான்.

ஆனால் அவள் முகத்தை நான் பார்க்கவே இல்லை.

என் கணவர் இறந்த பிறகு எனக்கு இருந்த ஒரே ஆறுதல் சரோஜாதான்.

ஆனால் அவளே இப்படி என் பிள்ளை குறித்து அவநம்பிக்கையோடு பேசும் போது என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை.

சரோஜா என்னை முறைத்தப்படியே ஏதோ பக்கத்தில் இருக்கும் ராமாயி அக்காவிடம் கிசுகிசுத்துக் கொண்டே இருக்கிறாள்.

எதாவது என் மகளை பற்றித்தான் சொல்லிக் கொண்டிருப்பாள்.

என் மகள் படிப்பு முடிந்து பெரியவளாய் ஆனப்பிறகு இவர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூச வேண்டும்.

உச்சி மலையில், உச்சி வெயிலில் தாங்கிக் கொள்ள முடியாத சூடு.

சரியாக தலையிலேயே குத்தும் சூரியனின் ஒளிக்கற்றைகளை தாங்கிக் கொண்டு மதியம் வரை கொழுந்து பரித்தாயிற்று..

வீட்டுக்கு போனால் பிள்ளையும் வந்திருப்பாள்.

காலையில் அடித்த அடி இன்னும் எனக்கு வலிக்கிறது.

என்னை கண்டால் நான் அடித்த அடியெல்லாம் மறந்து விட்டு ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொள்வாள்.

அழுகையை அடக்கக்கூட முடியாத அளவுக்கு கண்களில் கண்ணீர் மேகம் கட்டி இருக்கிறது.

கொஞ்சம் வேகமாக ஓடினால்தான் பிள்ளையுடன் கொஞ்ச நேரமாவது இருக்க முடியும்.

கொஞ்சம் தொலைவில் இருந்தே பிள்ளையை கண்டுவிட்ட நான், அருகில் வேகமாக ஓடினேன்..

எனக்கு பின்னே சரோஜாவும் வந்துக் கொண்டிருந்தாள்.

என் பிள்ளை நின்றிருந்த கோளம், என் நம்பிக்கை அத்தனையையும் சிதறடிப்பதாக இருந்தது.

அப்பாவின் அழுக்கு சாரத்தில் தலையை சுற்றி, அம்மாவின் பழைய தேயிலைக் கூடையை தலையில் மாட்டியபடி கொழுந்து எடுத்து விளையாடுகிறாள் என் பிள்ளை...

என் கனவுகள் அத்தனையும் கறுப்பாகி போவதாய் ஒரு மாயை.

அருகில் வந்த சரோஜா,

'என்னமோ படிச்சி கிழிப்பானு சொன்னே... இந்தா இப்பவே பேரு பதிய ரெடி ஆகிருச்சி'

சரோஜாவின் வார்த்தைகள் சரங்களாய் பாய்ந்தன.

கையில் இருந்த மட்டக்குச்சியை எடுத்து பிள்ளையை மீண்டும் கதறகதற அடித்துவிட்டு நானும் கத்தினேன்...

'இதுக்கு நீ செத்து போய் இருக்கலாண்டி...'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக