கலை கலை கலை....

எப்படிபட்ட படைப்பாளியாக இருந்தாலும், அவருக்கென்று ஆதரவு, எதிர் குழுக்கள் இருக்கும்...

இரண்டு தரப்புமே அவரின் வாசகர்கள் அல்லது ரசிகர்கள்தான்...

ரசனையின் உச்ச கட்டம் தான் விமர்சனம் என்பேன்..

ஆதரவானாலும், எதிர்ப்பானாலும் இரண்டுமே படைப்புக்கான பலன்...


எல்லா படைப்புகளுக்கும் பலன்கள் உண்டு..

ஒரு கட்டத்தில் படைப்பதை விடுத்து, முன்னர் படைத்தவற்றுக்கான பலனை மட்டும் அனுபவித்துக் கொள்ள முனைவதால் படைப்புகள் முடங்குகின்றன.

என் சொந்த அனுபவம் இது.

கலைஞர்கள் இதனை தாண்டி வெளியில் வரவேண்டும்..

கலைத்துறையோடு ஒட்டி வாழ்பவர்கள் இதற்கு இடம் தர வேண்டும்.

கலைத்துறையின் வளர்ச்சியில் படைப்புகள்தான் முதலிடம் பெறவேண்டும்..

அதுதான் இயந்திரமாக இருந்து எல்லாவற்றையும் இழுத்துச் செல்லவேண்டும்..

இலாப நோக்கமும், புகழ் நோக்கமும், பிறநோக்கங்களும் முன்னுரிமை பெறுதல் ஆகாது...

அவை பின்னால் இருந்து கலையை முன்தள்ளலாம்...

கலை முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியம்...

நல்ல சினிமாவின் மீது அன்பு கொண்டவர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்புமே, தற்போது வழிப்போக்கு சினிமாவாதிகள் கூட லாபம் பெறக்கூடிய வகையில் கோடம்பாக்கத்தை வளர்த்தெடுத்திருக்கிறது..

எல்லா இடத்து சினிமாக்களும் இப்படித்தான்...

எல்லா கலைகளும் இப்படித்தான்...

கலைகள் மீது அதீத அன்பு கொண்டு, எந்த வேற்று நோக்கங்களும் இல்லாதவர்களால் வளர்க்கப்பட்ட கலைத்துறையில் இப்போது கனிப்பறித்து, பூப்பறித்து, நிழல்; பெற்று, கிளைப்பெற்று வாழ்கிறோம்...

இலங்கையின் கலைத்துறையிலும் இப்படி கலை அன்பர்கள் இருந்தார்கள்,... இருக்கிறார்கள்....

ஆனால் தாழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் இடையிலான போராட்ட இடைவெளிக்குள் புகுந்துக் கொண்ட சில குறுலாப நோக்கிகளால், இலங்கையின் கலைத்துறை சின்னாப்பின்னமாகிக் கொண்டுச் செல்வதாக ஒரு கவலை...

உள்வீட்டு மோசடிகள், திரைமறைவு அரசியல் என்று இந்த துறை வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்திலேயே சிதைக்கப்பட்டும் கொண்டிருக்கிறது...

கலை அன்பர்களின் உழைப்பு ஏதோ ஒரு தரப்பின் குறுகிய லாபத்துக்கான சிற்றுண்டியாகிக் கொண்டிருக்கிறது..

ஊடகங்களா? ஊக்குவிப்பு களங்களா? அனைத்திலும் இந்த பிரச்சினை தொடர்கிறது...

ஊடகத்தில் தெரிந்த ஒருவர் இருந்தால் போதும், நீங்கள் கிறுக்கும் எதுவும் கவிதையாகவோ, சிறுகதையாகவோ, எதுவாகவோ நீங்கள் சொன்னபடிக்கு பிரசுரமாகும்..

நீங்கள் வாசித்து அனுப்பிய ஒலி நாடாகூட பாடல் என்று ஒலிபரப்பாகும்...

விருதுகள் கிடைக்கும்...

படைப்புகளில் எது சிறந்தது என்று அதனை பதிப்பிக்கும் ஊடகத்தின் ஆசிரியரே தீர்மானிப்பார்....

இந்த தீர்மானம் ஆசிரியருக்கு தெரிந்தவர் என்ற மட்டத்தை தாண்டி நகர்வது அரிது...

இதனால்தான் பல மெய்யான மேன்மையான படைப்புகள் பேஸ்புக்கையும், ப்ளொக்ஸ்பொட்டையும் தாண்டி பயணிப்பதில்லை...

இலங்கையில் சினிமா என்ற ஒன்று வளர்ந்துக் கொண்டிருக்கும் போதே, அதன் வெகுமானத்தை அடைந்துவிட ஆசைப்படுகின்றவர்கள் அதிகம்..

நடிகை ஆவதற்கு முன்னரே சர்ச்சை, வெளியாவதற்கு முன்னரே விருது... இப்படி எத்தனையோ...

'மொக்கை' படைப்புகளை சுமந்து செல்லும் பத்திரிகைகளையும், தட்டையான படைப்புகளை அடையாளம்காட்டும் ஏனைய ஊடகங்களாலும் மக்கள், உண்மையான ரசனையை மறந்து ஏதோ ஒரு உலகத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்..

இதையெல்லாம் கடந்து கலைஞனாக எப்படி ஜீவிக்கப் போகிறோம் என்பதை நினைக்க தலைவலிக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக