கைப்பேய்‬


12356957_504487463057154_4506605144855243332_o

 உலகெங்கும் கையடக்க தொலைபேசியின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
யாரும் இதனை வெறுப்பாரில்லை.

அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக கையடக்க தொலைபேசி மாறி, தற்போது மனிதர்களின் அங்கங்களின் ஒன்றாகவே ஆகிவிட்டது.


ஆனால் கைப்பேசிகளை வெறுத்த சில நாட்களும் வந்திருந்தன.

2017ம் ஆண்டில் ஜுன் மாதம் தொடங்கி சில வாரங்கள்...


அனைத்து கையடக்க தொலைபேசிகளையும் பொது மக்கள் அணைத்துவிட்டு பாதுகாப்பு தேடிய ஒரு காலகட்டம் இருந்தது.

அப்போது நான் விஸ்டு எனப்படும் உலக இணையத்தள பாதுகாப்பு புலனாய்வு பிரிவில்

(World‬‪ Internet‬Security‬Detectives‬Unit‬) மென்பொருள்‬ முறைப்பாட்டு பகுப்பாய்வாளராக இருந்தேன்.

இப்போது இல்லை...

எனது பெயர் விஷ்வா – வயது 29.

கலிஃபோர்னியா ‪#‎கணினி‬ பல்கலைக்கழகத்தில் மென்பொருள் கட்டுமானத்தை படித்துக் கொண்டிருந்த கையோடு, அமெரிக்காவின் ஓஎஸ்எஸ் புலனாய்வு பயிற்சி கூடத்தின் கற்கையிலும் ஈடுபட்டேன்.

அதன் விளைவே சிறுவயதிலேயே இந்த உயர் பதவி.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் எமது நிறுவனத்தினால் கைப்பேசி வாடிக்கையாளர் குறித்த ஆய்வென்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது.

இதன்படி 2017ம் ஆண்டில் கைப்பேசியின் பாவனைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.

ஒரே மாதத்துக்குள் நூற்றுக் கணக்கான ‪#‎கைப்பேசி‬ இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
பின்னர் அது ஆயிரக்கணக்காக மாறின.

கைபேசி இணைப்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் இது குறித்து ஒன்றும் புரியாமல் இருந்தது.
இது மனிதர்களின் மனோநிலைமாற்றமாக இருக்குமா?

2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதி உலகளவில் மேற்கொள்ளப்பட்ட கைப்பேசி பாவனை குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியானது.

இதன்படி அந்த காலப்பகுதியில் 6.8 பில்லியன் கைப்பேசி சேவை வாடிக்கையாளர்கள் பதிவாகி இருந்தனர்.

2017ம் ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்த பட்சம் 1 பில்லியனால் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் அது நடந்திருக்கவில்லை.

கைப்பேசி வலையமைப்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள் எங்களை நாடின.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறுங்காலத்தில் லட்சக்கணக்கில் வீழ்ச்சி அடைவதற்கான காரணத்தை ஆய்வு செய்ய விரும்பின.

இந்த காலப்பகுதியில் கைப்பேசி பாவனையாளர்களின் எண்ணிக்கை 4 பில்லியனாக குறைவடைந்திருந்தமை மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் வாய்பு எனது தலைமையில் இயங்கிய பகுப்பாய்வு குழுவுக்கு கிடைத்தது.

சாதாரண அழைப்புகளுக்காக மட்டுமே உருவாகி இருந்த கைப்பேசியில் பின்னர், எஸ்.எம்.எஸ்.,
தொடர்ந்து எம்.எம்.எஸ்., மொபைல் விளையாட்டுக்கள் என்று ஒவ்வொரு வசதியாக புகுத்தப்பட்டு, ஒரு கணினியின் சிறிய வடிவமாய் ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் திறன்பேசிகள் வந்துவிட்டன.

இதற்கு மனிதர்கள் அடிமையாகி, காலத்தை விரயம் செய்து முன்னேற்றத்தை மறந்து போய், சமுக வலைத்தளங்களிலும், திறன்பேசி விளையாட்டுகளிலும் லயித்துப் போய் இருந்தனர்.

இந்த வாழ்க்கை மனிதர்களுக்கு ஒருவித தெகிட்டலை தந்திருக்குமா?
நாங்கள் மேற்கொண்ட ஆய்வு உலக அளவில் தொடர்ந்தது.

இதற்காக புதிதாக தொலைத் தொடர்பை துண்டித்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் பலரை அழைத்து உலக அளவில் நாங்கள் கருத்துபதிவு செய்ய வேண்டியதாக இருந்தது.

விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கூறியவிடயம், தங்களின் ‪#‎பிரைவசி‬ எனப்படும் தனியுரிமைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது.
இது மனநிலை மாற்றம் தானே?

இலகுவாக எங்கள் அறிக்கையை நிறைவு செய்ய நாங்கள் தீர்மானித்தோம்.

ஆனால் தொலைபேசி பாவனையில் இருந்து விலகிக் கொண்டதன் பின்னர் திடீரென தற்கொலை செய்து கொள்கின்வர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு, இந்த பணிகளை அவ்வளவு இலகுவானதாக முடித்துவிட தடையாக இருந்தது.

'றென்சம்வெயார்' (‪#‎Ransom‬-ware)

இதற்கு முன்னர் கேள்வி பட்டிருக்க கூடும்.

2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அளவில் இந்த மென்பொருள் குறித்து அமெரிக்காவின் இணைய பாதுகாப்பு பிரிவான சீஸ்கெய்லர் (zscaler) எச்சரித்திருந்தது.

அந்த நாட்களில் கணினி மற்றும் மடிகணினிகளில் ஊடுறுவ ஆரம்பித்த இந்த றென்சம்வெயார் என்ற மென்பொருள், 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் தீவிரமாக அண்ட்ரொயிட் கைப்பேசிகளுக்கும், பின்னர் ஐஃபோன்களுக்கும் பரவின.

றென்சனம்வெயர் எனப்படுவது, கப்பம் பெறும் மென்பொருட்கள்.

உங்களைக் கேளாமலேயே உங்களின் கைப்பேசியில் பதிவாகிக் கொள்ளும்.

தவறுதலாகவோ, தெரிந்தோ நீங்கள் விடும் சிறிய தவறுகளால் இந்த பெரிய தவறு இடம்பெற்றுவிடுகிறது.

இது நிகழுவும் போது வாடிக்கையாளர்களால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே அந்த தற்கொலைகளுக்கான காரணம்.

இவ்வகையான பல எண்ணிக்கையிலான அப்லிகேசன்கள் (APPs) உருவாக்கப்பட்டு வெவ்வேறு வழிகளில் பலவந்தமாக திறன்பேசிகளில் புகுத்தப்பட்டன.

இவற்றை அண்ட்ரொயிட் (Android) இயங்குமென் பொருளுக்கான அனுமதிக்கப்பட்ட கூகுகள் பிளேயில் (GOOGLE PLAY) இருந்து தரவிறக்கம் செய்ய முடியாது.

ஆனால் மாற்று இணையத்தள பிரவேசங்களின் போது நீங்கள் சொடுக்கும் தவறுதலான லிங்க்குள் (Link) எனப்படும் தொடரிகளால் உங்களது திறன்பேசியில் இது பதிவாகிக் கொள்ளும்.

ஐ.போன்களின் (iPhone) இறுக்கமான எப்ஸ்டோர் (AppStrore) கட்டுப்பாட்டின் காரணமாக இது முதலில் ஐபோன்களில் பரவாதிருந்தாலும், பின்நாட்களில் ஜெயில்பிரேக்கர் போன்ற போலி மென்பொருட்களை ஐபோனுக்குள் பதிவிட பயன்படுத்தும் மூன்றாம் நிலை மென்பொருட்களின் பயன்பாட்டால், இது ஐபோன்களையும் விட்டுவைக்கவில்லை.

இவ்வாறு விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து வகையான திறன்பேசிகளும் பாதிக்க ஆரம்பித்தன.
இந்த மென்பொருட்கள் திறன்பேசிகளில் பதிவானதன் பின்னர், திறன்பேசியின் அனைத்து கட்டுப்பாடுகளையும் அது பெற்றுக் கொள்ளும்.

உங்களது இரகசிய, அந்தரங்க விடயங்களான புகைப்படங்கள், எஸ்.எம்.எஸ்.கள், வங்கி கணக்குகள், ஏன் மின்னஞ்சல் மற்றும் சமுக வலைதளங்களின் கணக்குகளுக்கான கடவுச் சொல் உள்ளிட்ட அனைத்தையும் இது ஒரு பிரதான சேர்வருக்கு (Server) தரவேற்றும்.
இந்த பிரதான சேர்வர் ஒன்றுதான் என்று கூறுவதற்கில்லை.
பலவாகவும் இருக்கலாம்.

அங்கு உங்கள் தரவுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரத்துக்கு ஏற்ப உங்களிடம் கப்பம் கோரப்படும்.

கப்பம் தர மறுத்தால், அந்த அந்தரங்க தகவல்கள் அனைத்தும் இணையத்தளங்களில் உங்கள் புகைப்படங்களுடன் வெளியாக்கப்படும்.

உங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை, உங்களுக்கு இரகசியங்களே இல்லை என்றாலும், உங்களது கைப்பேசியில் இருக்கும் முக்கியமான புகைப்படங்கள், தொடர்பிலக்கங்கள் போன்றவற்றை அழித்துவிடுவதாக எச்சரித்து, அழிக்காமல் இருக்க கப்பம் கோரும்.

தரமறுத்தால், உங்கள் தரவுக்களுக்கு அதோகதிதான்..

இந்த சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொண்டவர்களின் தற்கொலைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருந்தன.

எயார் வேர்ல்ட், ஏயார் மாஸ் போன்ற உலகின் மிகவும் பிரபலமான பல தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்துமே, தங்களின் வாடிக்கையாளர்களை படிப்படியாக இழக்கலாகின.

அதனால் அவற்றின் பங்குசந்தை பெறுமதியும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இதற்கான காரணம் தெரிந்து போனது.

யாரும் தங்களின் இரகசியங்கள் வெளியில் தெரிவதை விரும்பவில்லை. சிலர் கப்பம் வழங்கி தப்பினர்.
ஆனால் தொடர்ந்தும் அவர்கள் கப்பம் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டி இருந்தது.
அந்த மென்பொருளை நீக்கும் வழி தெரியவில்லை.

கையடக்க தொலைபேசிகளை முடக்கி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
முடக்கினால் மாத்திரம் போதுமா என்ற சந்தேகத்தில் பலர் கைபேசிகளை உடைத்தெரிந்திருக்கிறார்கள்.

பலர் புதிய கைப்பேசிகளை வாங்கிக் கொண்டு மாற்று நெட்வேர்க் (Network) எனப்படும் வலையமைப்பினை நாடி இருக்கிறார்கள்.

அதுவும் ஒரு வகையில் இன்னொரு வலையமைப்பை பாதித்திருந்தது.
இந்த கப்பம் பெறும் மென்பொருட்களின் பின்னால் யார் யார் செயற்படுகிறார்கள்?
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆகும் போது எனது முதல் அறிக்கை தயாராகிவிட்டது.

எனது அறிக்கையில் இதற்கான தீர்வும் முன்வைக்கப்பட்டது.
 
றென்சம்வெயார்கள் பலவகையான அப்லிகேசன்களாக தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் ஒரே எப்மேக்கர் (App Maker) எனப்படும் அப்லிகேசன்களை உருவாக்கும் மென்பொருளை பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது.

அத்தனைக்கு ஒரு பலவீனம் இருப்பதை அடையாளம் கண்டு, அதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்தி அழிக்கும் அன்டிமெல்வெயார் (anty Malware) எனப்படும் ‪#‎தீம்பொருள்‬ எதிர்ப்பு #மென்பொருள் ஒன்றையும் தயாரித்திருந்தேன்.

இவை இன்னும் வெளியாக்கப்படவில்லை.
ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் உலகில் உள்ள அனைத்து தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் ஒரு நிறுவனம் அதிசயமாக எழுந்தது.
'மாஸ்நெட்'
அமெரிக்காவில் இருந்து சேவை வழங்கும் தொலைபேசி இணைப்பு வலையமைப்பு நிறுவனம்.

தாங்கள் றென்சனம்வெயார்களில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தரும் சேவையை உலக அளவில் வழங்கவிருப்பதாக அதன் உரிமையாளர் ஜோர்ஜ் மாஸ்மென் அறிவித்தார்.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் வரையில் அது ஒரு சாதாரண நிறுவனம்.
பெரிதாக அறியப்பட்டிருக்கவில்லை.

பங்குச் சந்தையில் அதன் பெறுமதி வெறும் 2 டொலர்கள்..

றென்சம்வெயார் குறித்து அவர் அறிந்து கொண்டது ஒன்றும் விசித்திரம் இல்லை.

அதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்து, உலக அளவில் சேவையில் இறங்குவதும், எனக்கு அதிசயமாக படவில்லை.

சொன்னது போலே அந்த வலையமைப்பை உபயோகிக்கும் திறன்பேசி வாடிக்கையாளர்களுக்கு றென்சம்வெயாரின் பாதிப்புகள் ஏற்படவில்லை.

ஆகஸ்ட் மாதம் வரையில் எனது அறிக்கை அப்படியே கிடப்பில் இருந்தது.
எனது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த றென்சம்வெயார்களை முடக்கி அழிக்கும் வழிகளைளையே, மாஸ்நெட் நிறுவனம் பின்பற்றி இருந்தது.

இதற்காக பிரத்தியேகமாக நான் எழுதிய என்டிமெல்வெயாரையே மாஸ்நெட் நிறுவனம், தமது வாடிக்கையாளர்களின் திறன்பேசிக்கு வழங்கிய மென்பொருள் புதுப்பித்தலுக்கு (Update) வழங்கி இருந்தது.

இதுவே என்னை அதிர்சியில் தள்ளியது.

இந்த விடயங்கள் அனைத்தும் எனக்கும், எனது குழுவினருக்கும் மட்டும்தான் தெரியும்.
எனது குழுவினர் நம்பிக்கையானவர்கள்.

அவர்களின் வாயிலாக இந்த இரகசியகள் கசிய வாய்ப்பில்லை.

இந்த தொழில்நுட்பத்தையே தாம் சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகளுக்கும் வழங்கி, றென்சம்வெயாரில் இருந்து பாதுகாத்தது.

இரண்டு மாதங்களில் அந்த நிறுவனத்தின் பங்கு பெறுமதி பல நூறுமடங்கு பெருகியது.
சொன்னபடி ஒருசில மாதங்களிலேயே உலகம் முழுவதும் மாஸ்நெட் கைப்பேசி சேவையை வழங்கியது.
அனைத்து நாடுகளிலும் அதன் சேவைகள் கிடைத்தன.

ஏனைய வலையமைப்புகள் முடங்கி போயின.

நானும் மாஸ்நெட் நிறுவத்தின் வலையமைப்புக்கே எனது கைப்பேசியை மாற்றிக் கொண்டேன்.
நாங்கள் பகுப்பாய்வு செய்து தயாரித்த அறிக்கையை, செப்டம்பர் மாத இறுதியிலேயே எமது நிறுவனத்துக்கு நான் வழங்கினேன்.

அறிக்கையின் இறுதியில் சில சந்தேகங்களை முன்வைத்தேன்.
நான் எழுதிய தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள் குறித்து மாஸ்நெட் நிறுவனம் எப்படி அறிந்து கொண்டது?

வெறும் 2 டொலர் பங்கு பெறுமதியை கொண்டிருந்த அந்த நிறுவனத்தினால் ஒரே மாதத்துக்குள் உலகம் முழுவதும் ஒரே பெயரில் சேவை வழங்க எப்படி முடிந்தது?

இன்னும் நிறுவனத் தலைவருக்கே வழங்கப்படாத அறிக்கை எவ்வாறு மாஸ்நெட்டுக்கு கிடைத்தது?
அறிக்கை முன்வைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு, நிறுவனத் தலைவர் சைமனின் செயலாளர் என்னை அழைத்து மிகபெரிய வெகுமதி ஒன்றை கொடுத்தார்.

நான் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக கூறினார்.
அறிக்கையில் நான் முன்வைத்த கேள்விகளே என்னிடம் கேட்கப்பட்டன.

நிறுவனத்தின் வளத்தை பயன்படுத்தி இன்னொரு நிறுவனத்துக்காக வேலை பார்த்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டேன்.

எனக்கு எதிராக நிறுவனத்துக்குள்ளேயே விசாரணை இடம்பெற்றது.
என் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

சில வாரங்களின் பின்னர் எனக்கு தரவேண்டிய கொடுப்பனவுகளை வழங்கி, வேலையில் இருந்து வெளியேற சொன்னார்கள்.

கற்றது புலனாய்வுத்துறை என்று வெளியில் தெரிந்தால், எங்கும் நடமாடமுடியாது.

இத்தனை நாட்களை ஒவ்வொரு நாட்டிலும் கடத்திவிட்டோம். எங்கு போவதென்று தெரியவில்லை.
நிறுவனத்தில் என் கணக்குகளை முடித்துக் கொண்டு கட்டிடத்தில் இருந்து வெளியில் வரும் போது, இரண்டு கறுப்பின மனிதர்கள் என்னை அழைத்தார்கள்.

முதலில் அன்பாக இருந்தது, அடுத்தது அன்பு சற்று பலவீனப்பட்டு போவதாய் தெரிந்த போது நான் அவர்களோடு செல்ல சம்மதித்தேன்.

அவர்களின் கப்பல் போன்ற மகிழுந்தின் உள்ளே மாஸ்நெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோர்ஜ் மாஸ்மென் அமர்ந்திருந்தார்.

அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கர்.

திடீர் பணக்காரர்களுக்கே உரிய பகட்டான ஆடை, காருக்குள்ளும் குளிரூட்டும் கண்ணாடி... கைநிறைய மோதிரங்கள் என ஒரு மார்க்கமாக தெரிந்தார்.

அவரது மாஸ்நெட் நிறுவனத்தின் இந்த குறுங்கால முன்னேற்றத்துக்கு அவர்தான் பிரதான காரணம் என்று நம்பக்கூடியதாக அவரது தோற்றம் இருக்கவில்லை.

ஆனால் அவர்தான் ஜோர்ஜ் மாஸ்மென் என்பதில் சந்தேகம் இல்லை.

'உங்கள வேலையவிட்டு தூக்கீடுவாங்கனு எனக்கு தெரியும்' ஜோர்ஜ் மாஸ்மென் என்னிடம் சாதாரணமாக சொன்னார்.

'எப்படி'– நான்
'ஹ...ஹா... இதெல்லாம் ஒரு கேள்வியா... எவ்வளவு அறிவாளி நீங்க..?'

எனக்கு புரிந்தது. நான் அமைதியாக சில நொடிகள் இருந்த போது..
'நீங்க எங்கள்ட்ட வேலைக்கு வந்துடுங்க..' என்றார்.

'என்ன வேல'– நான்

'எங்களோட இருந்தா மட்டும் போதும், பெரிய திறமைசாலியாமே'– அவர்

'அப்படியெல்லாம் இல்லை. ரகசியங்கள கசிய விடுற அளவுக்கு முட்டாள்'– நான்

'அப்படி சொல்லாதீங்க.. உங்க திறமைய பற்றி எனக்கு நல்லா தெரியும்..' என்றவர்
 
தமது மகிழுந்தின் சாரதி அமரும் பக்கத்தில் போடப்பட்டிருந்த கறுப்பு கண்ணாடித் திரையை விளக்கி சற்று சத்தமாக 'என்ன மைக்கேல்' என்றார்.

மைக்கல் எனது பகுப்பாய்வு குழுவின் ஒரு நம்பிக்கையான இளைஞன்.
 
இப்போது அவன்தான் நம்பிக்கை துரோகி என்று தெரிந்தது.

அவன் துரோகம் வெளியில் தெரியும் படிக்கு பின்னால் திரும்பி என்னை பார்த்து சிரித்தான்..
'ஓ.. இவர்தான் அந்த கறுப்பு ஆடா'– நான்

'அப்படி நினைச்சிங்கனா அது உங்க தவறு'– ஜோர்ஜ்.

'அப்ப இன்னொருத்தரும் இருக்காரோ'– நான்

'ஹா...ஹா... அத நீங்களே தெரிஞ்சிப்பிங்க... இப்ப என்ன சொல்றீங்க... எங்களோட சேர்ந்துக்கிறீங்களா?'

நான் இரண்டு விடயங்களை யோசித்தேன்...

நான் கற்றது புலனாய்வு கற்கை.. வெளியில் தெரிந்தால் சுதந்திரமாக நடமாட முடியாது. ஒரு நிறுவன பாதுகாப்பு கட்டாயம் தேவை.

மற்றது, இப்போதைக்கு உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துவரும் நிறுவனம் இந்த மாஸ்நெட்.. இதில் தேடி வந்து வேலைத் தரும் போது தட்டிக்கழிக்கும் முட்டாளாக இருக்க நான் விரும்பவில்லை.

'ஓகே... ஆனா ஒரு கண்டிசன்'– நான்
'என்ன'– ஜோர்ஜ்
'எனக்கு வேலைவெட்டி செய்யாம சும்மா எல்லாம் இருக்க முடியாது... சோ.. என்னோட படிப்புக்கு

ஏற்ற வேலைய கொடுங்க...'– நான்
'கண்டிப்பா'– அவர்

மாஸ்நெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இறங்கி, அதன் உரிமையாளர் ஜோர்ஜ் மாஸ்மென்னுக்கு நெருக்கமாக நடந்து உள்ளே சென்றோம்.

ஜோர்ஜின் அறைக்குள் சென்ற போது எனக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
உள்ளே சைமன் அமர்ந்திருந்தார்.

இதற்கு முன்னால் நான் பணியாற்றிய உலக இணைய பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவரே அவர்தான்.

அவர்களின் கூட்டும், மாஸ்நெட் நிறுவனத்தின் குறுங்கால வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்றும் எனக்கு இப்போது நன்கு புரிந்தது.

என்னை கண்டதும் எழுந்து நின்று வரவேற்றார்.
என்னை அமரச் சொன்னார்.

அவரை பார்க்க எனக்கு ஏதோ இளக்காரமாக இருந்தது.
ஒன்றும் சொல்லாமல் அமர்ந்து கொண்டேன்.

அவருக்கு முன்னால், மேசையில் இருந்து கண்ணாடி உருண்டையை சுழற்றிவிட்டு, பின் நிறுத்தி என்னை நிமிர்ந்து பார்த்தார்..

'எப்படி எங்க விளையாட்டு'– என்றார்.

பக்கத்தில் அமர்ந்துக் கொண்ட ஜோர்ஜ் மற்றும் சிலர் சிரித்தார்கள்.
நானும் சிரிப்பை சற்று வெளியேற்றினேன். பின்னர் அடக்கிக் கொண்டேன்..

'நா தப்பே பண்ணலனு தெரிஞ்சும் ஏன் என்ன வேலையவிட்டு தூக்கினீங்க' சைமனிடம் கேட்டேன்.
'நீங்க அதி திறமையானவர்.. அங்க இருக்க வேண்டிய ஆள் இல்ல' என்றார்.

எனக்கும் சற்று பெருமையாகதான் இருந்தது..
'என்னால நம்ப முடியல்ல' என்றேன்..

'எத நம்பமுடியல்ல' என்றவாறே சைமன் தம் கதிரையில் பின்னால் சாய்ந்து நிமிர்ந்து என்னை பார்த்தார்.
அறிக்கை கசிந்த விடயத்தில் எல்லாம் எனக்கு சந்தேகம் ஒன்றுமே இல்லை. மைக்கல் என்ற துரோகி கூடவே இருந்திருக்கிறான்.

'இந்த மூனு மாசத்துக்குள்ள எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி'
'நீங்க இத கேட்பிங்கனு தெரியும்...' என்றபடி எழுந்தவர் தொடர்ந்து பேசிக் கொண்டே என் அருகில் வந்தார்...

'நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் மூனு மாச வளர்ச்சி இல்லை மிஸ்டர் விஷ்வா. 15 வருச வளர்ச்சி.'
'15 வருசாமா?'
'யஸ்.. மாஸ்நெட் ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு நாட்டுலயா லைசன்ஸ் வாங்கி, ஒவ்வொரு திட்டமாக செதுக்கி செதுக்கி இந்த வளர்ச்சிய நெருங்கிக்கிட்டு இருந்தோம்'

என்று சொல்லிக் கொண்டே தனது கைப்பேசியை எனக்கு முன்னால் வைத்து அதன் திரையில் சில தரவுப் படங்களை போட்டுக் காட்டினார்.
மாஸ்நெட் நிறுவனத்தின் 15 வருட முன்னேற்றங்களும் சூழ்ச்சிகளும் அதில் இருந்தன.

'றென்சம்வெயார உருவாக்கினதே நாங்கதான். அத எல்லா நெட்வேர்க்குக்கும் பரப்பினோம். எங்க மேல சந்தேகம் வந்திடாமா இருக்க ஒரே மாதிரி ஆயிரக் கணக்கான அப்லிகேசன்ஸ்ஸ டிசைன் பண்ணினம். அதுல இருந்து மாஸ்நெட் மட்டும் தப்பிக்கிறமாதிரி ஒரு பலவீனத்தையும் வச்சம். அந்த வழிய நீங்க எப்படியோ கண்டுபிடிச்சிட்டிங்க. யு ஆர் க்ரேட் மிஸ்ட்டர் விஸ்வா' சைமன் சொல்லி முடிக்க,
'முழுக்களும் தங்கமா மிஸ்டர் சைமன்'

அவரது கைபேசியை பார்த்து கேட்டேன்..

'யஸ்.. 24 கரட் தங்கம். இந்த மாஸ்நெட் சாம்ராஜ்சியமே இதுக்குள்ள அடங்கி இருக்கு. இத வச்சிதான் 3 வருசத்துக்கு முன்னுக்கு றென்சம்வெயார நானும் ஜோர்ஜும் க்ரியேட் பண்ணினம். றென்சம்வெயார் சேர்வரோட டிரக்ட் லிங்க் இதுல இருக்கு. அது எப்பவும் என்னோட கன்ட்ரோல்லயே இருக்கும்.

அதுக்கு உரிய மரியாதைய தரவேணாமா? அதுதான்... தங்கத்துலயே...'

என்று சிரித்துக் கொண்டே கைப்பேசியை தமது வாயால் ஊதி, கோர்ட்டில் துடைத்து தூய்மைப்படுத்தியபடி, அவரது கதிரையில் அமர்ந்தார்.

'அப்படினா இனி உங்களுக்கு யாருமே போட்டி இல்ல இல்லையா? – அடுத்த கேள்வியை கேட்டேன்..
'இருக்கு.. ஜியோ வேர்ல்ட்...'

'ஜியோ வேர்ல்ட்' என்பது உலகின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம்.

உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சேவையை வழங்கும் திட்டத்தை அவர்கள் தான் முதலில் அறிவித்தார்கள்.

ஆனால் இவர்கள் முந்திக் கொண்டார்கள்.

'அவங்களும் றென்சம்வெயார பிரேக் பண்ற மாதிரி ஒரு அப்லிகேசன செய்திருக்காங்கள்' சற்று களக்கத்துடனேயே தொடர்ந்தார் சைமன்...

'அதுனால என்ன மிஸ்டர் சைமன். நீங்கதான் சந்தைய பிடிச்சிட்டிங்களே. அவங்க புதுசா எதையும் செய்தா கூட உங்கள இனி பிடிக்க வழி இல்லையே..'– நான் கேட்டேன்

'அப்படி இல்ல.. நாம செய்திருக்க மெல்வெயார் ப்ரொடெக்டர் மாஸ்நெட், நெட்வோர்க்குள்ள மட்டும்தான் வேல செய்யும். ஆனா அவங்க செய்திருக்கது எல்லா நெட்வோர்க்குக்கும் வேலை செய்யும். அவங்க அத லோன்ச் பண்ணினா, முடங்கி போன எல்லா நெட்வேர்க்ஸும் மறுபடி பிறந்தமாதிரி ஆகிடும். மக்கள் தங்களோட பழைய நம்பர்ஸ்ஸதான் விரும்புவாங்க. எல்லாரும் அவங்க அவங்க நெட்வோர்க்ஸ தேடிட்டே போய்டுவாங்க. மறுபடி நாங்க முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்..'
சைமன் சொல்லி முடிக்கவில்லை.

'அதனாலதான் உங்கள நாங்க இங்க கூட்டிட்டு வந்தோம்' எனது இடது பக்கத்தில் இருந்து ஜோர்ஜின் குரல் வந்தது.

ஜியோவேர்ல்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு திட்டத்தை நான்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன்.
அது இவர்களுக்கு தெரியும்.

'இந்தா பாருங்க விஷ்வா.. நா நேரா விசயத்துக்கு வாரேன். நா உங்கள பரிபூரணமாக நம்புறன். நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இல்லை. அதனாலதான் இந்த கம்பனியோட அத்தன சீக்ரட்சயும் நா உங்களுக்கு சொல்லீட்டன். நீங்கதான் ஜியோவேர்லட் சைபர் வோல்ல (Cyber wall) செய்திங்க. இப்ப அத ப்ரேக் பண்ணனும்' சைமன் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

அவர் அதனை கேட்பார் என்பது எனக்கு முன்னவே தெரியும்.

'எனக்கு கொஞ்சம் டைம்வேணும்.'– நான்

'பிரச்சினையில்ல. ஆனா அவங்களோட அப்லிகேசன் லோன்ச் ஆக முதல்ல, நீங்க இத பண்ணியே ஆகனும். அப்படி செய்தீங்கனா, நீங்களும் நாங்களும் பார்ட்னர்ஸ்' ஜோர்ஜ் இடதுபக்க காதில் மகிடி ஊதினார்.

'எனக்கு இந்த டீல் பிடிச்சிருக்கு.. ஆனா ரெண்டு நாள் டைம் தாங்க..'

'கண்டிப்பா... ரெண்டு நாளைக்கு நாங்க வெயிட் பண்றோம்'– சைமன் மனநிறைவோடு பேசினார்...
'அப்போ நா போய்ட்டு வாரேன்'
அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு மாஸ்நெட் தலைமையகத்தின் தரையில் மெதுவாக நடந்தேன்...

இத்தனை சர்ச்சைக்கும் காரணமான திறன்பேசி எனும் கைபேசி என்னிடத்திலும் ஒன்று இருக்கிறது. அதனை எடுத்து பார்த்தபடியே அருகிலும், எனக்கு முன்னாலும், பின்னாலும் என்ன வருகிறது, எதை கடக்கிறேன் என்றே தெரியாமல் நடந்து போய் கொண்டிருந்தேன்..

கட்டிடத்துக்கு வெளியில் வந்து சில நிமிடங்கள் நின்றிவிட்டு மீண்டும் கட்டிடத்துக்குள் பார்த்தேன்.
அவசர அவசரமாக சிலர் ஓடிவந்தார்கள்.
சைமனை அவர்களில் சிலர் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்கள்.

வேகமாக சென்று அவரது காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்கள்.
அருகில் இருந்த மைக்கலை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டேன்.
'சைமனுக்கு ஹார்ட் அட்டேக்'
'எப்படி'

'எப்படினு தெரியல்ல.. அவர்ட ஃபோன பார்த்துக்கிட்டே இருந்தார்.. திடீர்னு இப்படி ஆகிட்டு'
மாஸ்நெட் சாம்ராஜ்சியம் அழிந்துவிட்டது என்பது தெளிவாக தெரிந்தது.
 
எப்படி..?

ஒன்றுமில்லை. மாஸ்நெட் நிறுவனத்தின் அன்டிமெல்வெயார் (Malware) எனப்படும் தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருளை அழிக்கும், மற்றுமொரு கடுமையான றென்சம்வெயார் ஒன்றை சைமனின் கைப்பேசிக்கு அனுப்பிவிட்டுதான் கட்டிடத்தில் இருந்தே வெளியில் வந்தேன். இன்னேரம் இணையத்தளங்களில் அவரின் சூழ்ச்சிகள் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்.


இப்போது நான் நின்றிருந்த வீதிக்கு முன்னால் வந்து நின்ற மகிழுந்தில் யாருமே பலவந்தப்படுத்தாமல் ஏறி அமர்ந்துக் கொண்டேன்.

எனக்கு அருகில் எனது நண்பர் ஜியோவேர்ல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜீ.ஈ.ஓ. குரேரோ என் கையை குழுக்கி அன்பாக வரவேற்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக