தலைப்பிழந்த கதை 02

அந்த மனிதர் சாரத்தை மடித்து அதன் ஓட்டைகள் தெரியாதபடிக்கு மேல் தூக்கி கட்டி இருந்தார்.

சாரத்தில் படிந்திருந்த அழுக்கு அதன் உண்மை நிறத்தை மாற்றி இருந்தது...

சட்டையின் மேல் பொத்தான்கள் இல்லாமல் பாதி திறந்த நிலையில் இருந்தது.


பச்சைக் கயிறும் அதன் முனையில் தொங்கிய தாயத்தும் ஈரமாக இருந்தன...


கறுப்பும் பழுப்புமான அவரது தலைமயிர்களுடன் ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகளும் நீட்டிக் கொண்டிருந்தன.

கோட்டை நோக்கி செல்லும் பேருந்தின் யன்னல் வழியாக ஒற்றைக் கண்ணால் அவரின் செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்...

கொச்சிக்கடை தாண்டி பழைய மீன்சந்தை பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அவரை அடிக்கடி காணக்கிடைக்கும்..

முன்னே இருந்த நீண்ட வாகன நெரிசல் அவரை முழுமையாக அவதானிக்க செய்தது...

இடதுக்கையை இடுப்பில் வைத்திருந்த படியே அவர் அந்த பிரதேசத்தின் எட்டு திசைகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்...

யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வி நிலையில் இருந்தன அவரது கண்கள்..

பேருந்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை..

நான் இங்கனம் மாயாவியாய் இருந்தேன்...

அவருக்கு முன்னால் ஒரு குப்பை வண்டி நின்றிருந்தது...

அதனை நிறுத்தி வைத்த குப்பைக் திரட்டும் பெண், அருகில் இருந்த கட்டிடத்தை கூட்டிக் கொண்டிருந்தாள்..

இடுப்பில் இருந்த அவரது இடக்கை எதனையோ இரகசியமாக எடுத்து அந்த குப்பை வண்டியில் போடுவதைக் கண்டேன்...

அது நேற்று இரவு அவர் பாவித்த போதைப் பொருளின் மீதமாகவோ, ஆணுறையாகவோ இருந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தேன்..

என் ஒற்றைக்கண் பார்வை மூன்றாம் பரிமாணத்தை இழந்திருந்தது.

பேருந்து ஒரு சில அடிகள் நகர்ந்தது.

இப்போது நான் அவர் அருகிலேயே இருக்கிறேன்..

இரண்டு கண்களும் அவரது செய்கை பார்த்துக் கொண்டிருந்தது..

மூன்று பரிமாணங்களும் தெளிவாக தெரிந்தன.

அவரது கையில் ஒரு பொலித்தீன் பை இருந்தது...

குப்பை வண்டியில் கிடந்த ரொட்டித் துண்டு ஒன்றை எடுத்து அந்த பைக்குள் போட்டவாறே சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்...

பேருந்து வேகமெடுக்க ஆரம்பித்தது..

கொழும்புக்கே உரிய அவசரம், பேருந்தில் இருந்து இறங்கி சில ரூபாய்களை கொடுத்து வரவும்

அவகாசம் இருக்கவில்லை...

எனக்குள்ளேயே தலைகுனிந்து கொண்டேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக