தலைப்பிழந்த கதை 01

மாலை 7 மணி இருக்கும்....

மாலுக்கடை தாண்டி ஐந்துலாம்பு சந்தியோடு செல்லும் ஏதோ ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன்.

மதுக்கடை முன்னால்...


மதுபான போத்தலை சுமந்த கையொன்று கடையில் யன்னல் வழியே வெளியில் தெரிந்தது.

போத்தலை வாங்க வேண்டிய அவரது கைகள், சட்டை பையையும், காற்சட்டை பையையும் மாறி மாறி தேடிக் கொண்டிருந்தன.

சற்றே அருகில் சென்றேன்....

அவரது பணப்பை எங்கோ விழுந்துவிட்டதை அறிந்து கொண்டேன்..

அங்கும் இங்கும் நானும் சற்று தேடினேன்...

சிறிது தூரம் நடந்த போது, சம்மந்தமில்லாத கையொன்றில் அந்த பணப்பை இருப்பதை கண்டேன்...

அந்த கை பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பையை வீசி எறிந்துவிட்டு, வேகமெடுத்தது...

அந்த கைக்குரிய நபரை பின்தொடர்ந்தேன்...

கிழிந்த காற்சட்டை, இடைவெளி விடாத மூச்சித்திணறல், நொண்டியடிக்கும் ஒரு கால்.....

வேகமாக போக முயன்றும், என் வேகத்தை அவரால் தாண்ட முடியவில்லை...
அவர் ஒரு கடைக்கு முன்னால் போய் நின்றார்...

குழந்தை பால் மாவும், இன்னும் சில உணவுப் பொருட்களும் வாங்கிக் கொண்டு புறப்பட்டார்....
அவரை விடுவதாய் இல்லை...

பின்னே தொடர்ந்தேன்....

பஞ்சிகாவத்தையில் சந்துபொந்துகளை சுற்றி ஏதோ ஒரு இடத்தில் அவரது வீடு...
கதவு திறந்தே கிடந்தது..

ஒரு கால் நீக்கப்பட்ட மனைவி, வாசலில் அமர்ந்திருந்தார்..

மூன்று பிள்ளைகளில் ஒன்று மனைவியின் மறுக்காலில் படுத்து உறங்கியது...

தந்தையை கண்ட மற்ற இரண்டு பிள்ளைகளும் ஓடி வந்து கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டன...

திருட்டுப் பணம்தான்...

மதுக்கடையை விரும்பாத அந்த பணம், போய் சேர வேண்டிய இடத்துக்கு சென்றுவிட்டதாய் ஒரு திருப்தி...
திரும்பி வந்துவிட்டேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக