யூஓன்

'இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்' 

யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்... 

யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்...

ஹுஆ என் பெயர்.. 

பேஸ்புக்கில் நாங்கள் சந்தித்து இன்றுடன் 3 வருடங்கள். 

நேருக்கு நேர் சந்தித்ததில்லை.

இன்று சந்திப்பதாய் திட்டம்.
யுஓன், நாஞ்சிங் நகரின் ஒரு முள்...
ஹுஆ ஆகிய என்னை பாதுகாக்கவே படைக்கப்பட்டவன்.
அவனின் பாதுகாப்பிலேயே வளர ஆசைப்பட்ட பூ நான்...

யுஓன் ஒரு பொறியியல் மாணவன், மூன்று வருடங்களுக்கு முன்பு.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேநாளில், நள்ளிரவு என் மெசேஞ்சருக்கு வந்த யூரியுப் லிங்கை கிளிக் செய்து பார்த்தேன்... 

முற்றிலும், இருட்டு, தீடீரென ஒரு மெழுகுவர்த்தி ஒளிபெறுகிறது.
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கீழே ஒருவித வர்ணத்திலான ஏதோ....
மேலே உயர்த்தப்படுகிறது.

மெழுகுவர்த்தியின் ஒளியில் யுஓனின் அழகு முகம்.

'ஹெப்பி அனிவர்சரி ஹுஆ' – (யுஓன்)

நாங்கள் இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாகி ஒருவருடம் நிறைவடைந்ததை கொண்டாடி அனுப்பிய காணொளி அது.... 

அவனின் பாச முகம் எனக்கே சொந்தம் என்று எண்ணிக்கொண்டே, மெசஞ்சரில் சொன்னேன்...

'இதெல்லாம் ஒரு பொழப்பா?' - (நான்)

'இத தாண்டி எனக்கென்ன பொழப்பு?' - (யுஓன்)
..........
..........
..........
நான் ஒன்றும் சொல்லவில்லை.... 

அன்று வரையில் அவனுடன் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் பார்க்க வேண்டும் போல் இருந்தது... 

மெசெஞ்சரில் இருந்த பழையனவற்றை திருப்பி பார்த்தேன்...

எத்தனை அழகாக, வெளிப்படையாக, மரியாதையாக, பக்குவமாக, வர்ணனையாக, பாசமாக, அன்பாக, காதலாக.....!

ஆ... அவன் காதலாகவும் பேசி இருக்கிறானே....
ஆனால் அவன் காதலுக்கு நான் பதில் கூறியதில்லை.
அன்றே பதில் கூற வேண்டும் போல் நினைத்தேன்....
'நாளை காலை எழும் போது மெசேஞ்சரை பார்த்தால் உனக்கு நல்ல சேதி கிடைக்கும்'
மெசேஞ்சரில் நான் அனுப்பிய செய்தி பார்க்கப்படாமலேயே இருந்து...
அவன் பார்க்கும் வரையில் என்னால் உறங்கவே முடியவில்லை...
மறுநாள் காலை மெசேஞ்சரில் அடித்த டிங் என்ற மணி என்னை எழுப்பியது, அவனை எழுப்பியது போலவே...

'என்ன நல்ல சேதி? ஒன்னையும் காணலயே?' - (யுஓன்)

உடனேயே சொல்லி விட்டால், பணிந்து போய்விடுவோமா என்றொரு எண்ணம்....

சொல்லாமல் விட்டால், அவன் பறந்து போய்விடுவான் என்று இன்னொரு எண்ணம்... 

பறந்து போய்விடுவதை காட்டிலும், பணிந்து போய் விடுவது மேலென நினைத்தேன்... 

'தனியே வாசம் வீசும் இந்த பூவுக்கு, துணையாய் இருப்பாயா யுஓன்?' – (நான்)

'என் பூவை காப்பதை தவிர, இந்த முட்களுக்கு வேறென்ன வேலை ஹுஆ?' – (யுஓன்)

பேஸ்புக்கில் சந்தித்து ஒருவருடமும், ஒருநாளிலும் எங்கள் காதல் சொல்லிக்கொள்ளப்பட்டது...
அவன் எனக்காகவே படைக்கப்பட்டவனாகத்தான் நினைத்தேன்...

எங்கள் சந்திப்பின் இரண்டாம் வருடமும், காதலின் முதலாம் வருடம் நிறைவடையும் நாள் வரையில் எங்கள் வீட்டுக்கு இது தெரிந்திருக்கவில்லை. 

கடந்த வருட நள்ளிரவு கொண்டாட்டம், ஃபேஸ்ரைம்லேயே நேரடியாக நடந்து கொண்டிருந்த போது, அப்பா கண்டுவிட்டார்.... 

எவ்வளவு பாசமான அப்பா என்றாலும், மகளுடனான பாசத்தை முறித்துக் கொள்ளும் ஒரு தருணம் அதுவாகத்தான் இருக்கும்... 

என் ஐஃபோனை வாங்கி 

யாரென கேட்டார்... சொன்னேன்...
தூக்கி எறிந்தார்... 

சாவேன் என்றேன்... சாவென்றார்.... 

சில நாட்கள் வீட்டில் அடைத்தார்.... உண்ணாமல் இருந்தேன்....
-----------

'அந்த பையன் என்ன செய்றான்?' சில நாட்களுக்கு பின்னர் அப்பா கேட்டார்...

'எஞ்சினீரிங் படிக்கிறான்... நஞ்சிங்ல இருக்கான்... அப்பா அம்மா யாரும் இல்ல. இந்த வருசத்தோட படிப்பு முடிஞ்சிரும்...' – (நான்)

'அவர என்னோட பேச சொல்லு' – (அப்பா)

எந்த மகளினதும் முதல் காதலன் அப்பாதான்... நான் அழுதால் அவர் தாங்க மாட்டார்... நான் உண்ணாத இந்த மூன்று நாட்கள், அவரும் உண்டிருக்க மாட்டார் என்பதில் ஐயமில்லை.... 

பின்னர் யுஓன் பேசினான்... கரையாத என் மனதையே கரைத்தவன், அப்பாவை கரைப்பது அவ்வளவு கடினமாய் இருந்திருக்காது... 

இப்போது என்னை விட என் அப்பாவிடம்தான் அவன் அதிகம் பேசுகிறான்...

இன்று எங்கள் காதலுக்கு இரண்டு வயது... நாங்கள் சந்தித்து மூன்று வருடங்கள்...
சோங்குயிங்கில் உள்ள எங்கள் வீட்டுக்கு வருவதாக கூறி இருக்கிறான்..

அவன் ஊரையும், எங்கள் ஊரையும் இணைக்கும் யாங்ஷே நதியில் கப்பல் ஊடாக வருவதற்கு முன்னர் அனுப்பிய தகவல்தான் அது... 

'இன்னும் 10 மணித்தியாலத்தில் என் பூவை சந்திப்பேன்...'

தகவல் அனுப்பி 12 மணித்தியாலங்களுக்கு மேல் கடந்து விட்டது. 

இந்நேரம் வந்திருக்க வேண்டும்...
அவனின் தொலைபேசிக்கு அழைத்தேன்...
நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
கதவை உடைத்துக் கொண்டு வேகமாக வந்த அப்பா கூறினார்,

'யுஓன் வந்த ஈஸ்ட்ரன் ஸ்டார் கப்பல் ஜியான்லீயில கவிழ்ந்திருச்சி.... இன்னும் எந்த தகவலும் கிடைக்கல...'

தன் மருமகனுக்கு இல்லை, தன் மகனுக்கு என்ன ஆனதோ என்ற படபடப்பு அப்பாவுக்கு.
நொருங்கி போன இதயத்தோடு வெளியில் போய் நின்றேன்... 

எவ்வளவு வேகமாக சென்றாலும், கப்பல் மூழ்கிய ஜியான்லிக்கு செல்ல குறைந்தது ஆறு மணித்தியாலங்கள் செல்லும்.. 

ஆனாலும் பரவாயில்லை.. நான் அங்கு போயே ஆக வேண்டும்...
அப்பாவிடம் அடம்பிடித்தேன்...
அம்மாவும் வருவதாக சொன்னார்..

எல்லோரும் புறப்பட்டோம்...
அப்பா முடிந்தமட்டில் வேகமாக வாகனத்தை செலுத்தினார்.

ஜியான்லியை அடைய அப்பா எடுத்துக் கொண்ட ஆறு மணித்தியலங்களும் எங்கள் மனங்களில் நொடித் தவறாமல் இருந்தது யுஓனுக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது என்ற நினைப்புதான்... 

யாங்ஷே நதியில் கப்பல் கவிழ்ந்து கிடப்பதை பார்க்கவே தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்து...
எனக்கு முன்னரே வந்த நூற்றுக் கணக்கானவர்கள் அங்கு குழுமி இருக்கிறார்கள்... 

தூரமாய் ஒரு ஓரமாய் நின்று கப்பலையே பார்த்துக் கொண்டிருப்பதை தவிர, வேறு என்ன செய்ய?
நேராக சந்தித்துக் கொள்ளாமலேயே என் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான் யுஓன்... 

நான் நினைக்கும் போதெல்லாம் யுஓனிடம் இருந்து அழைப்புகள் வரும், மெசேஞ்சரில் தகவல் வரும்.
இப்போது நான் உட்பட மூன்று பேர் ஒரே நேரத்தில் உனக்காக தவமிருக்கிறோம்...
வந்துவிடு யுஓன்... ப்ளீஸ்... 

உன் பாதுகாப்பிலேயே வாழ துடிக்கும் பூ நான், உன் அரவணைப்பிலேயே மலரத்துடிக்கிறேன்...
யுஓன்... பளீஸ்..

என்னைவிட உனக்கு அங்கு என்ன அப்படி வேலை?
என்னிடமே வந்துவிடு.... 

என்னைப்போலவே ஏங்கும் இன்னும் 450 பேரின் உறவுகளின் புலம்பல்கள்...
காதுகளை கீறி துளையிட்டுக்கொண்டே இருக்கின்றன.
அதிகாரிகள் போகிறார்கள், வருகிறார்கள், 

கவிழ்ந்து கிடக்கும் கப்பலில் இருந்து யாரையாவது மீட்டு படகில் ஏற்றி வரும் போது அது என் யுஓனாக இருக்க வேண்டும் என்றே நினைப்பேன்...
அதுவே யாருடையதோ சடலமாக இருந்துவிட்டால்...
ஐயோ... 

கப்பல் 18 மணித்தியாலங்களாக கவிழ்ந்து கிடக்கிறது...
இன்னும் என் யுஓனை காணவில்லை.
18 மணித்தியாலங்கள் அவனால் நீருக்குள் மூச்சடக்க முடிந்திருக்காது.
ஆனால் அவன் மூச்சை அடைக்கின்ற அளவுக்கு கப்பலினுள் நீர் புகாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
வருகிறார்களே சிலர் உயிருடன் திரும்பி..

வருவான் யுஓனும்....

முன்னர் உயிருடன் திரும்பியவர்கள் அதிகமாக இருந்தாலும் 18 மணித்தியாலங்களின் பின்னர் இப்போது சடலங்களே அதிகமாக வருகின்றன...
அவற்றில் ஒன்றிலும் யுஓன் இல்லை...
அது மட்டும்தான் அந்த பொழுதுவரையான ஆறுதல்...
அவன் உயிர் என்னைவிட்டு போகாது...
'பொஸிடோன்' என்றொரு படம் பார்த்தேன்... 

அதில் பெரிய கப்பல் ஒன்று கடலில் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும்... இது போலதான்....
புத்திசாலியான ஹீரோவும் குழுவினரும் கப்பல் ஆழத்துக்கு செல்வதற்கு முன்னமே, மேலே ஏறி அடிப்பாகத்தில் உள்ள உந்து விசிரியின் ஊடாக தப்பி வெளியில் வந்துவிடுவார்கள்.
இந்த எண்ணம் எனக்கு வந்துவிட்டது... 

உனக்கு வராதா யுஓன்... ?
மனத்துக்குள் புலம்பல் அதிகரித்து, நாக்கு நடுங்கி, உடல் உருகி, கால்கள் வெறித்து, கீழே அமர்ந்தேன்... 

'கப்பல் கவிழ்ந்து ரெண்டரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் இவனுங்க வந்துருக்கானுங்க... முன்னவே வந்திருந்தா எல்லாரையும் காப்பாத்தி இருக்கலாம்...'

மூழ்கி கிடக்கும் கப்பலில் சிக்கியுள்ள யாரோ ஒருவரின் உறவினர் கூட்டத்தில் வைத்து சத்தமாக அழுதார்...
அவரை சுற்றி பலர் கூடி விசாரித்தார்கள்...

அதிகாரிகளின் தாமதத்தால்தான் இத்தனை உயிர்களும் பலியானதாக சொன்னார்கள்...
மக்கள் ஆவேசம் கொண்டார்கள், முண்டி அடித்து அதிகாரிகளை தாக்க முற்பட்டார்கள். 

என் யூஓனையும் அதே அதிகாரிகள் தானே காப்பாற்ற தவறிவிட்டார்கள்... 

ஆவேசத்துடன் பாய்ந்த ஆயிரம் பேருடன் நானும் பாய்ந்தேன்...
முன்வரிசையிலேயே நான்... 

தடியோடு ஒரு அதிகாரி என்னை தாக்க வருகிறான்..
அம்மாவை தாக்கிவிட்டான்...
அடுத்து நான்தான்...

ஆனால்,
அங்கே ஒரு படகு.... உறவுகளின் இரைச்சல்களைத் தாண்டி ஒரு அமைதி...
தனித்து வருகிறது அந்த படகு, 'அது யுஒனாய் இருக்குமா?'
தெளிவாக தெரியவில்லை... 

தாக்க வந்த அதிகாரியை தாண்டி குதித்து பார்க்கிறேன்...
உள்ளுர விரிந்த மகிழ்ச்சி, முகம் முழுவதையும் ஒளிர செய்தது...
அங்கே யுஓன் தெரிகிறான்.... 

என் அருகில் அம்மாவும் தெரிந்தார்,
எனக்கு பின்னால் என் பிணமும் தெரிந்தது.... கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக