விண்கல்லும் வித்தக பெருமாளும் பாகம் 1

2103 ஜனவரி 10
காலை ஆறு மணிக்கெல்லாம் அவர் தயாராகிவிட்டார்.
வழமையாக அணியும் காலின் கால்பங்கை மறைக்கும் பாதணி, அதற்கு மேல் மறைக்க றப்பர் காற்சட்டை, மேலே றப்பர் கோர்ட் என்று எல்லாம் இருளின் நிறத்தில் இருந்தது.

அவரின் பெயர் மட்டும்தான் வித்தக பெருமாள்..


சரியாக 150 வருடங்களுக்கு முன்னர் வித்தக பெருமாளுக்கு ஒற்றைப் பிள்ளையாய் பிறந்த செம்பக பெருமாளின் வழியில் வந்த சுத்த தமிழர்.

இந்த பெருமாள்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய ஆரூடர்களாக இருந்தார்கள்.

கலப்படத் தமிழில் 'வில்லேஜ் விஞ்ஞானிகள்' எனலாம்.

அதாவது 'கிராமத்து சயன்டிஸ்ட்டுகள்...'


வித்தக பெருமாளும், செம்பகப்பெருமாளும் எழுதி வைத்த தமிழ் மரபு இலக்கியங்களை, தவறுதலாக வாசித்து விட்டு, தற்போது தமிழ் பித்து கொண்டு திரிபவர்.

இதன் காரணமாகவே, 22ம் நூற்றாண்டின் இனிய தமிழ் பெயரான ஸ்ரீவன் என்ற தன் இயற்பெயரை, வித்தக பெருமாள் என்றே மாற்றிக் கொண்டார்.

நாம் அவரை வித்தகர் என்றே அழைப்போம்..

இத்தனை வருடங்களில் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுவிட்ட மாற்றத்தை சற்றும் சகித்துக் கொள்ளாமல், பண்டைத் தமிழை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சிவந்த முகம், தாடி மீசை, 45 வயதிருக்கும். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

நிறைய கற்றவர், சற்று மந்த கதியில் இயங்குபவர்.

தமிழ் மேல் இருக்கும் பற்றின் அளவுக்கு, வேகமாக தமிழ் வாசிக்க தெரியாது.

உலகின் மரியாதைக்குரிய ஒரு மனிதர்.

வீட்டில் இருந்து வெளியில் மேன்மாடத்துக்கு வரும் போது அவரது ஆளில்லா மகிழுந்து வீட்டுக் கூரையில் இருந்து அப்போதுதான் அந்தர தரைக்கு இறங்கியது.

1000 மாடிகளைக் கொண்ட தொடர்மனையின் 600 மாடியில் அவரது வீடு...

மகிழுந்துக்கு அருகில் அவர் நடந்து செல்லவும் அதன் கதவு திறந்துக் கொள்ளவும் நேரம் சரியாக இருக்கும் படிக்கு அதில் சென்சார்கள் வேயப்பட்டிருந்தன.

நொடிப்பொழுதில் மணிக்கு 300 மைல் வேகத்தை அடைந்து பறக்கும், சில வருடங்கள் பழமையானது அந்த வண்டி.

இப்போது வந்துள்ள புதிய வகை வண்டிகள் மணிக்கு 500 மைல்கள் பறப்பன..

இங்கு எல்லா வாகனங்களும் பறப்பனதான், ஊர்ந்து செல்வதற்கு பாதை அமைக்கும் அளவுக்கு நிலம் இல்லை.

எல்லா நிலமும் கடலால் மூடப்பட்டு, ஏதோ கொஞ்சத்தை இருக்கும் சனத்துக்காக மிச்சம் வைத்திருக்கிறது.

அதுவும் அடுத்த தலைமுறை வரையில் தாங்கும் என்ற நம்பிக்கை வித்தகருக்கு இல்லை.

அதனால் தான் ஸ்ரீவன் என்ற வித்தக தமிழன் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

அவர் வண்டிக்குள் ஏறிய உடனேயே நாள்தோறும் அவர் கேட்கும் செய்திகள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மீள ஒலிபரப்பாகின.

அன்றைய முக்கிய செய்தியாக பிரபல ஹொலிவுட் நடிகை சமீலா கலவை மொழி திரைப்படம் ஒன்றில் நீச்சல் உடையில் தோன்றி நடத்தமை பரபரப்பை ஏற்படுத்திய செய்தி இருந்தது.

உடையே இல்லாமல் வரும் இந்த கால திரைப்படத்தில் இப்படி ஒரு நடிகையா என்று எல்லோரும் மூக்கின் மீது கையுறைகளை வைத்துக் கொண்டு பேசியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அதுபோக சில செய்திகளுக்கு பிறகு முக்கியமே இல்லாத ஒரு செய்தியாக, குழாய் போன்ற மர்மமான விண்பொருள் ஒன்று இன்று உலகில் விழ விருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனிதன் கடந்த 150 வருடங்களாக விண்ணில் சேர்த்து வைத்துள்ள குப்பைகள் ஒவ்வொன்றாக பூமியில் விழுந்துக் கொண்டிருப்பதால், அந்த செய்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.

அப்படியே விழுந்தாலும் அது எங்கோ ஒரு கடல் பரப்பில் விழும், அல்லது விழுவதற்கு முன்னதாககே சாம்பலாகிப் போகும்.

இது வாடிக்கைதானே...

வித்தகர் கூட, ஒருவேளை மீதமிருக்கின்ற தரைப் பகுதியில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்று ஒரு நொடி யோசித்தாலும், அடுத்தடுத்த செய்திகளுக்கு போய்விட்டார்.

நேரம் காலை 6.30

வித்தகரின் வீட்டில் இருந்து 100 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இன்னுமொரு நிலப்பகுதிக்கு வண்டியில் பறந்தே வந்து சேர்ந்தார்.

அது 150 வருடங்களுக்கு முன்னர் செம்பக பெருமாளின் ஆய்வு கூடம் இருந்த பகுதி.. 

அந்த காலத்தில் அது பிரதான நிலத்துடன் இணைந்திருந்தாலும், இப்போது கடல்சூழ்ந்து தீவாக மாறி இருக்கிறது.

அங்கு அவரின் பல இலக்கியப் புதையல்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

அங்கு ஏற்கனவே இன்னும் சில தமிழ் ஆர்வளர்கள் கூடி இருந்தார்கள்.

பேச்சுவார்த்தைகள் ஒன்றும் இல்லை.

வண்டியை அந்தரத்தில் நிற்கவிட்டு, லேசர் ஒளிக்கற்றைகள் கொண்டு அமைக்கப்பட்ட படிக்கட்டுகளின் ஊடாக கீழே இறங்கி நிலப்பகுதியைச் சேர்ந்தார்.

அங்கிருந்து தோண்டப்பட்டுள்ள 100 அடி சுரங்கத்துக்குள் சென்று இன்றைய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

150 வருடங்களுக்கு முன்னர் வரையில் பாதுகாக்கப்பட்டு வந்த இலக்கியங்கள் எவையும் மிச்சமிருக்கும் என்ற நம்பிக்கையில், நிலம் நீண்டநாட்களாக தோண்டப்படுகிறது.

மேலோட்ட தோண்டலில், ஸ்ரீவன் என்ற பெயர் வித்தகர் ஆகும் வரையில் தமிழ் கிடைத்திருகின்றது

நிலத்தடி நீரும் முற்றாக வற்றிவிட்டதால், வரண்டுபோன தரையாகவே இருந்தது.

ஆனால் தோண்டும் ஒவ்வொரு அடியும் ஏதோ நூறாண்டுகள் பின்னால் சென்று கொண்டிருப்பதாக அவர்களுக்குள் ஒரு நினைப்பு..

ஊடகங்கள் நடிகை சமீலாவின் நீச்சல் உடை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், இங்குள்ள மனிதர்கள் பேசிக் கொண்டிருப்பது என்வோ அந்த விண்பொருள் குறித்த செய்திதான்..


'காலையில் செய்தியில் கூறினார்கள். ஏதோ மர்மப்பொருளாமே? என்னவாக இருக்கும்' 


சுத்த தமிழில்தான் பேச வேண்டும் என்பது வித்தகரின் உத்தரவு...

அவர்தான் இந்த இலக்கிய சுரங்கத்தின் தலைவர்.



'எதோ ஒரு விண்ணோடத்தின் பாகமாகத்தான் இருக்கும்'

அவர்களுக்கு இடையே நடந்த சம்பாஷனையின் பக்கம் செவியை சாய்த்த வித்தகர்,


'ஒருவேளை அது நிலத்தில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?'

அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.

'அதுபற்றி பிரச்சினை இல்லை. விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே சொல்லிவிடுவார்கள். நாம் நம் கட்டிடங்களுக்குள் வழமைப் போலவே மறைந்துக் கொள்ள வேண்டியதுதான். நமது கட்டிடங்களில்தான் லேசர் தடை இருக்கிறதே. சந்திரனே விழுந்தால்கூட லேசரை முறிக்க முடியாது என்றுதானே சொல்கிறார்கள்.'

அவர்களில் ஒருவர் விளக்கினார்.

வித்தகர் சிரித்தார்.

'கட்டிடங்களை மாத்திரம் காப்பாற்றினால் போதுமா? மீதமிருக்கின்ற நிலம், அந்த நிலத்தில் இருக்கின்ற ஏழைகளின் உயிர்கள், விலங்குகள், இயற்கை, எல்லாவற்றுக்கும் மேலே இங்கே புதைந்துக் கிடக்கும் தமிழ் சுவை இலக்கியங்கள்...?'

வித்தகர் கேட்டார்...

எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.

அவரும் பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை.

100 அடி பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது தோண்டும் வாகனத்துக்குள் ஏறி, தோண்டப்பட்டிருந்த குகையின் சுவரை ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.

ஏனைய பக்கங்களில் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய வாகனங்களில் லேசர் கற்றைகளை பாய்ச்சி மண்ணை வெட்டி எடுத்து வெளியில் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

வித்தகரின் லேசர் ஸ்கேனரில் திடீரென ஒரு பொருள் அகப்பட்டது.

அது வழங்கிய சமிஞ்கை எல்லோரையும் அவர் இருக்கும் திசைக்கே அழைத்து வந்தது.

வித்தகரின் வாகனத்தில் இருந்த கணினித் திரையில் சில நொடிகளின் பதிவேற்றலின் பின்னர் மண் சுவரில் மறைந்திருந்த செதுக்கப்பட்ட கல் ஒன்று தெளிவாக தெரிந்தது.

அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது அவ்வளவு தெளிவாக இருக்கவில்லை.

அலுங்காமல் அந்த கல்லைத் தோண்டி எடுக்கும் படி உத்தரவிட்டார்.

வண்டியை விட்டு இறங்கி, அந்த கல் தோண்டி எடுக்கப்படும் வரையில் அவர் காத்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் லேசர் இயந்திரங்கள் செதுக்கப்பட்டக் கல்லை கச்சித்தமாக பெயர்ந்து கொண்டுத் தந்தன.

மேலே ஒட்டப்பட்டிருந்த மண்ணையும் ஸ்கேன் செய்யும் கருவைக் கொண்டு சுத்தம் செய்து, எழுதப்பட்டிருந்த சொற்கள் தெளிவாக தெரிந்தன...

தமிழ் மொழியில் வெண்பாவின் ஒரு பகுதி..

மண்ணன்று மற்ற மனி தன்செய்க் குழலாய்

விண்னின்று வீழும், வீழுமுன் மாழும் - கண்ணுற்ற

ஈரொரு நாளாகி இச்சக மேவு மொருகல்.......


செதுக்கப்பட்ட கல் பாதியாக உடைந்திருந்தது.

வெண்பாவின் கடைசி வரி உடைந்த பாகத்தில் இருக்க வேண்டும்...

எனினும் முதல் மூன்று வரிகளில் பொருள் படுவதாக இருந்தது.. 

எழுதப்பட்டிருந்தவற்றின் பொருளை மெதுவாக வாசித்து புரிந்துக் கொண்ட வித்தகர்,

'புரிகிறதா இதன் பொருள்'

அருகில் நின்றவர்களை கேட்டார்..

'மண்ணால் அல்லாமல், மனிதனால் செய்யப்பட்ட குழாய் போன்ற ஒரு பொருள் பூமியில் விழும். விழுவதற்கு முன்னர் அழிந்து போகும். பின்னர் ஓரிரு நாட்களில் இன்னுமொரு கல் விழும்' 

ஒருவர் சொன்னார்..

கல்லை ஸ்கேன் செய்த விபரங்களின் படி அது 1300 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்று காட்டியது.

வித்தகரும், மற்றவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

-------தொடரும்-----------

இதன் இறுதி பாகம்

விண்கல்லும் வித்தக பெருமாளும் பாகம் 2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக