சூரியன்FM + நான் - பாகம் 7

இந்த சர்ச்சை அமைதியாகி நீண்ட நாட்கள்...

ஆனாலும் முடிந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விழித்துக் கொள்ளலாம்..

நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தப் போது, 'தொடருந்து' என்ற சொல்லை சூரியன் எப்.எம். செய்திகள் பாவிக்க ஆரம்பித்தது.


அப்போது வகுப்பில் எமது பொருளாதார ஆசிரியர் (சிவா சேர்) அதைவைத்துக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்.

நான் செய்திகள் கேட்பதில்லை என்பதால் அப்போது புரியவில்லை.

அதுபோலதான் மகிழுந்து என்பதும்...

சூரியன் செய்திகளோடு இணைந்துக் கொண்டப்போது எனக்கு சொல்லப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்று, சூரியன் பயன்படுத்துகின்ற சொற்களை அவ்வாறே கடைபிடித்தல்...

ஆரம்பத்தில் எனக்கு முரண்பாடு இருந்தது...

பின்னரும் அந்த முரண்பாடு முற்றாக நீங்கிவிடவில்லை.

தொடருந்து என்பது எனக்கு சரியெனப்பட்டது.

காரணம் தற்போது புகைவண்டி என்றோ புகையிரதம் என்றோ பாவிப்பது அத்தனைப் பொருத்தமில்லை.

பழையகாலத்தில் 'கரிகோச்சி' என்று சொல்லப்பட்ட வண்டியில் வெளியாகும் அதீத புகையால் இந்த பெயர் பொருத்தமாக இருந்திருக்கலாம்.

தொடருந்தை ஏற்றுக் கொண்ட அளவுக்கு வானூர்தி என்பதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பியதில்லை. அதனை விமானம் என்றே பயன்படுத்தலாம்.

இப்போதும் அப்படித்தான் பயன்படுத்துகிறோம்.

அகதி என்பதைக் காட்டிலும் ஏதிலி என்பது அர்த்தமுள்ளதாகப் பட்டது. ஆகவேதான் ஏதிலி என்றச் சொல்லை பயன்படுத்த முடிவு செய்திருந்தோம்.

சூரியனில் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்த முதல்நாளே (ஏனைய இணையத்தளங்கள் ஏலவே அந்த சொல்லைப் பயன்படுத்தி வந்துள்ளன) பிரச்சினை ஏற்பட்டது.

அது, அந்த நபருக்கு அந்த சொல் செவிவழி சென்றதில் ஏற்பட்ட குழப்பத்தால் விளைந்தது.

பின்னர் தீர்ந்தது.

அதுசார்ந்து கட்டுரை வெளியிட்ட சிலர் சொன்ன விடயம், சூரியன் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதாகவும், செய்திகளில் மக்களுக்கு புரியாத சொற்களை பயன்படுத்தக்கூடாது என்பதுமாகும்.

அப்போது விளக்கப்படுத்த விரும்பவில்லை. இப்போதும்தான்...

ஆனால் ஒன்றை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்...

காலம் மாறிவிட்டது... மக்கள் முட்டாள்கள் அல்ல.. எழுதும், அறிவிக்கும் எம்மைக் காட்டிலும் அதனை வாசிக்கும், கேட்கும் மக்கள் புத்திசாலிகள்....

ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டோ, அல்லது அவர்களுக்கு தெரிந்தவற்றை மாத்திரம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய யுகம் இதுவல்ல.

மற்றையது, மக்கள் பிரசித்தம் பெற்ற ஊடகம் என்ற அடிப்படையிலும், தமிழ் ஊடகம் என்ற அடிப்படையிலும், இவ்வாறான சில சொற்களை தமிழ் சமுகத்திற்குள் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பும் எமக்கு இருக்கிறது.

மீண்டும் அதே வசனம்தான்... காலம் மாறிவிட்டது... ஊடகத்தின் பொறுப்புகள், பணிகள் மாறிவருகின்றன...

முன்னைய காலத்தில் ஒரு கடுமையான சொல்லை பயன்படுத்துவதால், அதன் பொருளை தேடி அறிய மக்கள் சிரமப்படக்கூடும்.

தற்காலம் அப்படி இல்லை. அத்தோடு மக்களுக்கு தேடி அறியும் பண்பையும் அதிகரிக்கிறோம் என்பது முக்கியமானது...

ஒருகாலத்தில் தொடருந்து என்ற சொல் குறித்து கேள்வி எழுந்ததுதான்...

ஆனால் தற்போது பரவலாக பல இடங்களில் தொடருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

அண்மையில் எங்கோ ஒரு இடத்தில் 'தொடருந்து கடவை முன்னால்' என்ற எச்சரிக்கை பலகையை பார்த்த நினைவு இருக்கிறது.

மகிழுந்தும் அப்படிதான்...

செய்திகள் எல்லா இடத்திலும் சொல்லப்படுகின்றன.

செய்திகளை அறிந்துக் கொள்வதற்கான வழிகள் சமுக வலைத்தளங்களால் தற்போது அதிகரித்துவிட்டன.




இப்போது செய்திகளை சொல்வதோடு மட்டுப்படாமல், தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் ஊடகங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

புதிய கலைச்சொற்களை உருவாக்கி வைத்துக் கொண்டிருப்பதால் அவற்றின் பயன்தான் என்ன...

மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போதுதான் கலைச்சொற்கள் பெறுமதியுடையனவாகின்றன. நீட்சிப்பெறுகின்றன.

அந்த பணியை சூரியன் செய்கிறது... ஏனைய ஊடகங்களும் செய்கின்ற... செய்ய வேண்டும்.

அதற்காக தமிழ்ப்படுத்துகிறோம் என்று சம்மந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும் நெடுஞ்சொற்களை பயன்படுத்தி, தமிழ் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடவும் கூடாது....

மீண்டும் அதேவாசகம்,

காலம் மாறிவிட்டது.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக