பட்டம் - சிறுகதை


அறைவாங்கிய கன்னம் சிவந்திருந்தது. அழுதபடியே உறங்கிப் போன சோபனாவின் கண் ஓரத்தில் ஒரு நீர்த்துளி உயிர்ப்புடன் இருந்தது. அருகில் வந்து படுத்த சுந்தர், தலையணைக்கும் சோபனாவின் கழுத்;துக்கும் இடையில் கையை செருகி, அணைத்துக் கொள்ள முற்பட்டான். உறக்கத்தில், அடித்தான் என்பதை நினைத்தும் பார்க்காமல் சோபனா தாமாக சுந்தரின் கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டாள். சோபனாவின் கண் ஓரத்தில் உயிர்ப்புடன் இருந்த கண்ணீர்த்துளியும், கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் அச்சும் சுந்தருக்கு நீர்த்தாரைப் போல கண்ணீரைப் பெருக வைத்தது.

சுந்தரம் சீனிவாசன் முழுப்பெயர். சுந்தர் என்பர். நன்கு சிவந்த முகம், திடகாத்திரமான உடல், பெயருக்கு ஏற்றாற் போலவே அவன் ஆண்களில் அழகானவன். 30 வயதுக்குள்ளான இளம் தந்தை. பெரிதாக படிப்பில்லை. உயர்தரத்தை பாதியில் விட்டதோடு, தலவாக்கலை நகரில் முச்சக்கரவண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். கொழும்பு நகர நாகரிக்கத்துக்குள் மிக அண்மையிலேயே புகுந்துக் கொண்டவன். திருமணத்துக்கு முன்னம் கொழும்பு வாழ்க்கை குறித்து நினைத்தும் பார்த்ததில்லை.

கொழும்பில் இருந்து இரவு வேளைகளில் தலவாக்கலை நகருக்கு வருகின்ற பேருந்துகளில் அநேகமானவர்கள் முச்சக்கரவண்டியில் செல்பவர்கள். 5 வருடங்களுக்கு முன்னர் தமது முச்சக்கர வண்டியுடன் சவாரிக்காக காத்திருந்த சுந்தரத்தின், வாழ்க்கை சவாரிக்கான துணையும் கொழும்பு பேருந்தில் இருந்தே இறங்கியது. லீலா அவளின் பெயர். 8ம் வகுப்பு வரையில் சுந்தரும் லீலாவும் ஒன்றாக படித்தவர்கள். வகுப்பில் இருவருக்கும் இடையிலான பார்வை பரிமாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. எட்டாம் வகுப்புடன் லீலா பாடசாலையில் இருந்து விலகியப் பின்னர் லீலாவிற்கு என்னாது? என்று சுதந்தரத்துக்கு தெரியாது. மிகநீண்ட இடைவெளியின் பின்னர் அன்றுதான் சந்தித்துக் கொண்டார்கள். பாடசாலை நாட்களை விட நன்கு சிவந்த முகத்தோடு, ஒரு திரைப்பட நடிகையைப் போல இருந்தாள் அவள். அந்நேரத்தில் பெரிதாக வெளிச்சம் இல்லையென்றாலும் ஒருவரை ஒருவரை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். பொதுவாக மனதுக்கு பிடித்தவர்களுடனான சந்திப்புகள் இனிமையானவை. அதிலும் திட்டமிட்டு நிகழாத சந்திப்புகள் மேலும் இனிமையானவை. அன்றைய சந்திப்பிலேயே அவர்களுக்கு இடையிலான காதலும், பின்னர் மாதங்கள் கடந்து திருமணமும் நிகழ்ந்துவிட்;டது.

லீலா தம் பெற்றோருடன் அவிசாவளைக்கு சென்று குடியேறியப் பின்னர் கொழும்பிலேயே தங்கி படித்தாள். அவளும் உயர்தரம்வரையில் கற்றதன் பின்னர், அலங்கார வகுப்புகள், கணினி என்று தற்கால தேவைகளை பூர்த்திக் செய்துக் கொண்டவளாக இருந்தாள். பின்நாட்களில் கொழும்பில் அழகுநிலையம் ஒன்றை திறக்கும் எண்ணத்தில் இருந்தப் போதும், சுந்தருடனான காதல் அந்த திட்டத்தை மறக்கச் செய்திருந்தது.

திருமணத்துக்குப் பின்னர் குழந்தை உண்டானதும், முச்சக்கர வண்டியை மட்டும் வைத்து சுந்தரால் காலம் தள்ள முடியவில்லை. சுதந்தருக்கு பின்னர் இரண்டு தங்கைகள். குடும்பத்தார் யாருக்கும் சுந்தர் லீலாவை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை. ஆனாலும் ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டார்கள். திருமணத்தின் பின்னர் வேறுபடுத்தி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இது சுதந்தருக்கும் லீலாவுக்கும் இடையில் மனக்கசப்பையும், அநாதரவாக்கப்பட்டு விட்ட அச்சத்தையும் உண்டுப் பண்ணிக் கொண்டிருந்தது.

மகளுக்கு 3 வயது ஆனது. மகள் பெயர் சோபனா. சுந்தரையும், சோபனாவையும் சம அளவில் கலந்து செயயப்பட்ட பதுமையைப்போல அவள் இருந்தாள். சோபனாவை முன்பள்ளிக்கு சேர்க்க இருவரும் ஒன்றாகத்தான் தீர்மானித்தனர். ஆனால் சுந்தருக்கு அது அத்தனை இஸ்ட்டமானதாக இல்லை.

சுந்தர் முதலாம் வகுப்பு படிக்கும் வரையில் முன்பள்ளிக்கெல்லாம் சென்றதில்லை. உயர்தரம் வரையில் எந்த மேலதிக வகுப்புக்கும் போனதில்லை. ஒருவேளை அதற்கெல்லாம் போய் இருந்தால் தமது தற்போதைய நெருக்கடி நிலை இருந்திருக்காது என்று நினைத்தான். அதனால் இப்போதிருந்தே சோபனாவை தயார்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டான்.

சோபனாவை கொழும்பில் படிக்க வைக்க வேண்டும் என்று லீலா விரும்பினாள். தொடர்ந்து 3 ஆண்டுகளாக அவள் இந்த யோசனையை அறிவுறுத்தியபடியே இருந்தால்.  அது சுந்தருக்கு இன்னும் நெருக்கடியை கொடுத்தது. உதவுவார் யாரும் இல்லை. குடும்பத்தில் சண்டை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். 3 வயதிலேயே ஆங்கில மொழியில் கொழும்பில்...... இப்படியே லீலாவின் அறிவுறுத்தல்களுக்கு பின்னர் சுந்தரும் செவிசாய்த்தான்.

வருமானத்துக்கு வழிசெய்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை விற்றுவிட்டு அந்த பணத்தில் கொழும்பில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்தார்கள். சுந்தர் ஒரு புடவைக் கடையிலும், லீலா அழகுநிலையம் ஒன்றிலும் சேர்ந்துக் கொண்டனர். வருமானத்துக்கு பெரிதாக குறைவு இருக்கவில்லை. சுந்தராலும் அவ்வப்போது குடும்பத்தாருக்கும் பணம் அனுப்ப முடிந்தது. லீலா அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவளுக்கு கொழும்பு சூழ்நிலை பிடித்துப் போய் இருந்தது. இயல்பில் அவள் ஒன்றும் அத்தனை இறுகியமனம் படைத்தவள் இல்லைதான். பிள்ளையின் படிப்புக்காக கொழும்பிற்கு குடிப்பெயர்ந்துவிட்டோம் என்பது அவர்களுக்கு ஒருவித பெருமிதமாக இருந்தது.

வீட்டுக்கு சமீபத்தில் இருந்த ஒரு முன்பள்ளியில் சோபனாவை சேர்த்துவிட்டார்கள். ஆரம்ப நாட்களில் மிகவும் ஆர்வத்தோடு முன்பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தாள் சோபனா. ஆர்ப்பாட்டமாக திருவிழாவிற்கு போவதைப் போல பாதையில் போவோர் வருவோருக்கெல்லாம் வணக்கம் வைத்து, பள்ளிக்குச் செல்லும் சோபனாவை கூட்டிச் செல்வதில் சுந்தருக்கு பெருமிதம்தான். அவள் பள்ளிக்கு செல்வதற்கு காட்டிய விருப்பினால் அவள் படிப்பதற்கென்றே பிறந்தவள் என்று கருதினான். வீட்டிலும் தொலைகாட்சியில் சிறுவர் பாடல்களும், கார்ட்டுன்களுமாக ஒரே ஆங்கிலப் பாடசாலைக்கணக்காய் தென்படும்.

தற்கால வாழ்க்கைக்கு லீலா ஏற்கனவே பழக்கப்பட்டவளாக இருந்தாலும், சுந்தரம் புதிதாக இணைந்துக் கொண்டவன். அரிதாக சோபனாவைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வார்கள். இருவருமே தொழில்புரிபவர்கள் என்பதால் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கவே விரும்புவார்கள். ஓய்வுப் பொழுதுகளில் தங்களின் கைப்பேசிகளுடன் இருவரும் வௌ;வேறு மூலைகளில் அமர்ந்துக் கொண்டிருப்பார்கள்.

பிள்ளைக்கு விளையாட்டு பொருட்கள் வாங்குவதை அநாவசியம் என்று கருதினான் சுந்தர். அதற்கு பதிலாக படிப்புக்கு பொருத்தமான விடயங்களைதான் வாங்கிக் குவிப்பான். புத்தங்கள், விளையாட்டுக் கட்டுமானப் பொருட்கள், இப்படி ஒரு சிறிய முன்பள்ளியே வீட்டில் இருந்தது.

சோபனாவோ பள்ளிக்குச் செல்ல மறுத்து திடீரென்று குழப்பம் பண்ணினாள். பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கலானாள். ஒருவாரத்தில் அதுசரியாகிவிடும். பின்னர் அவள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிப்பதில்லை என்றாலும், முன்னரைப் போல விருப்பத்துடன் செல்வதாக படவில்லை. அடிக்கடி பள்ளியில் ஆசிரியை அடிப்பதாக சொல்வாள். சுந்தருக்கும் லீலாவுக்கும் நெஞ்சு உடைவதைப் போல இருக்கும். அவர்கள் பள்ளிக்குச் சென்று கேட்க திட்டமிட்டிருக்கவில்லை. பாடசாலை என்றால் அடிக்கத்தான் செய்வார்கள் என்பது சுந்தரின் புரிதல். அதற்காக முன்பள்ளியிலேயேவா? இது லீலாவின் சந்தேகம்.

என்றாலும் மனம் கேளா ஒருநாள் பகல் பொழுதில், 'பிள்ளையை அடித்தீர்களா' என்று லீலா வகுப்பு ஆசிரியைக் கேட்டுவிட்டாள். இல்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால் மறுநாள் காலை பள்ளியின் அதிபர் சுந்தரையும் லீலாவையும் சந்திக்கச் சொல்லி இருந்தார். அன்று காலை அவர்களிடம் சோபனா குறித்த நீண்ட குற்றச்சாட்டு பட்டியலை அதிபர் முன்வைத்தார். ஓரிடத்தில் நின்று படிப்பதில்லை, மற்றையப் பிள்ளைகளிடம் வன்முறையாக நடந்துக் கொள்கிறாள், என்று அந்த பட்டியல் தொடர்ந்தது. குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு சுந்தரும் லீலாவும் தயாராக இல்லை. சோபனாவின் சேட்டைகளை சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகி இருந்தால் காட்டச் சொன்னார்கள். அதிபர் தயங்கினார். பின்னர் வழிக்கு வந்தார். அடித்ததை ஒப்புக் கொண்டார். நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அந்த பிரச்சினை அன்று முடிவுக்கு வந்தது.

விளையாடித் திரிய வேண்டிய இந்த வயதில் பள்ளிக்கு அனுப்பிதான் ஆக வேண்டுமா? என்ற சிந்தனை அப்போது சுந்தருக்கு ஏற்பட்டிருந்தது. முதலாம் தவணைக்கு விடுமுறை வழங்கப்பட்ட போது மீண்டும் ஊரில் தங்களின் வீட்டுக்குச் சென்றார்கள். முடிந்த 3 மாதங்களாக இல்லாத சந்தோஷத்தை எல்லாம் சோபனா ஒருமாத காலம் அனுபவித்துவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பினாள். இரண்டாம் தவணைக்கு முதல் இரண்டு வாரங்கள் ஒழுங்காக சென்ற சோபனா மீது மீண்டும் குற்றச்சாட்டு.

ஒருநாள் காலை சுந்தரை மட்டும் அதிபர் வரச்சொல்லி இருந்தார். சுந்திருக்கு அலுப்பாக இருந்தது. லீலாவையும் கூட்டிக் கொண்டே அதிபரை சந்திக்கச் சென்றிருந்தான். சோபனாவை மனநல மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கும் படி சொன்னார். இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள். தமக்கு தெரிந்த மனநல மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும், அவரே இலங்கையில் சிறந்தவர் என்றும், அவரிடம் இருந்து மனநல அறிக்கை ஒன்றைப் பெற்று வருமாறும், அல்லாவிட்டால் சோபனாவை பள்ளியில் வைத்திருக்க முடியாது என்றும் அதிபர் சொன்னார். ஒன்றும் பேசாது இருவரும் எழுந்து வந்தனர். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. சோபனாவை பள்ளிக்கு அனுப்ப விருப்பம் இல்லாமல் இருந்தது. வீட்டில் சமத்தாக, அவள்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கும் சோபனா, பள்ளியில் அவர்கள் குற்றம் சொல்லும்படி நடந்துக் கொள்கிறாளா? நம்ப முடியாமல் இருந்தது.

ஆனால் வீட்டில் சோபனா செய்கின்ற சின்னச்சின்ன சேட்டைகளும் சுந்தரத்துக்கு பெரிதாக தோன்ற ஆரம்பித்தது. இன்று காலையில் உறக்கத்தில் இருந்து ஏலவே எழுந்துக் கொண்ட சோபனா சுந்தரத்தை வேலைக்கு செல்லவிடாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களாக பொறுத்துக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு எங்கிருந்து கோபம் வந்ததோ தெரியாது. முழு பலத்தையும் பிரயோகித்து கன்னத்தை பொத்தி பளார் ஒன்று அறைந்து கீழே தள்ளிவிட்டு அதேவேகத்தில் வேலைக்கு போய்விட்டான். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது சோபனா உறங்கிப் போய் இருந்தாள். இந்த கணம் வரையில் அவளை அறைந்த கரம் கணந்துக் கொண்டே இருந்தது.

நேற்றுமுந்தினம் அதிபர் சொன்ன மனநலமருத்துவர் இல்லாமல் வேறொரு மனநலமருத்துவரிடம் சோபனாவை காண்பித்தார்கள். வீட்டில் நடந்துக் கொள்ளும் முறைமையும், பாடசாலையில் அவள் நடந்துக் கொள்வதாக சொல்லப்பட்ட முறைகளையும் விளக்கினார்கள். மருத்துவரால் தீர்க்கமான ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. என்றாலும் சேட்டைகள் செய்வது குழந்தைகளின் இயல்தான் என்பதை சுந்தரத்துக்கும், லீலாவுக்கும் விளக்கினார். விசேடமாக கவனம் செலுத்தும் அளவுக்கு சோபனா மனவளப்பிரச்சினை எதற்கும் உட்படவில்லை என்றும் கூறினார். பின்பு ஏன் பள்ளியில் இவ்வாறு சொன்னார்கள்.?

அவர்கள் வசித்த வீட்டுக்கு அருகிலேயே இன்னும் சிலரது பிள்ளைகளும் அதேமுன்பள்ளியிலேயே கற்றுவந்தனர். அவர்கள் யார்மீதும் இப்படி குற்றம் சொல்லப்படவில்லை என்று சுந்தரும், லீலாவும் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று காலை அந்த நினைப்பு முறிவடைந்தது. அந்த பள்ளியில் இருந்து தமது பிள்ளையை வேறொரு பள்ளிக்கு மாற்றிய ஒருவர், சுந்தரத்தை எதேட்சையாக சந்தித்த போது, தமக்கு நடந்த விபரீதத்தை சொன்னார். தமது பிள்ளையையும் மனநல மருத்துவரிடம் காட்டி அறிக்கை தரும்படி அந்த அதிபர் சொன்னதாகவும், தாம் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக அந்த வைத்தியரை நாடிய போது அவர் நீண்ட இழுப்பறிகளை செய்து, பல லட்சங்களை கரந்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் ஒருநாள் அந்த அதிபரும், மனநல மருத்துவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர் என்றும், அந்த மருத்துவருக்கு வாடிக்கையாளர்களாக பள்ளியின் மாணவர்களை அனுப்பி வைப்பது அவர்களுக்கு இடையிலான வியாபாரத் திட்டம் என்பதை தாம் கண்டுகொண்டதாகவும் அவர் சொன்னார்.

சுந்தரம் கொழும்பு நகரில் அநாதரவாக தனித்துவிடப்பட்டவன் போல உணர்ந்துக் கொண்டிருந்தான். ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள். ஒரு குழந்தையை பாதிக்கச் செய்துதான் அவர்கள் பணம் பார்க்க வேண்டுமா? அவர்களை என்னதான் செய்யலாம்? என்னென்வோ யோசித்துக் கொண்டபடியே சுந்தர் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் வீட்டை அடைந்திருந்தான். முதல் வேலையாக சோபனாவைதான் வந்துப்பார்த்தான். தற்போது அவனது கையில் உறங்கும் சோபனாவின் காலை பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். அறையப்பட்ட கன்னத்தில் முத்தம் கொடுத்தான். லீலாவும் அருகில் வந்து அமர்ந்திருந்தாள்.

தன் நண்பர் கூறிய விடயத்தை லீலாவிடம் சுந்தர் சொன்னான். பின்னர் இருவரும் சேர்ந்து அழுதார்கள். அந்தப் பள்ளி சரியில்லை என்றால் லீலா. இதைவிட நல்ல பள்ளியொன்றில் சேர்க்கலாம் என்று வாதிட்டாள். சுந்தருக்கோ பள்ளியே தேவையில்லை என்று தோன்றியது. இந்த பணம் தேடும் முதலைகளுக்கு மத்தியில் எம் குழந்தையின் குழந்தைத் தனத்தை கொலை செய்துக் கொண்டிருக்கிறோம் என்றான் சுதந்தர். இந்த வயதில் இருந்தே படித்தால்தான், நல்ல பிரபலமான பாடசாலையில் சேரவும், சிறந்த புள்ளிகளுடன் பட்டம் பெற்றுக் கொள்ளவும் உதவியாய் இருக்கும் என்று லீலா வாதிட்டாள். நாம் இருவருமே அரைக்குறையாய், தரமில்லாத பாடசாலையில் கற்றதால்தன் இப்படி சீரழிய நேரிட்டிருக்கிறது என்றும் கொழும்பில் சிறந்தப் பாடசாலை ஒன்றில் இடம்கிடைப்பது அத்தனை சுலபம் இல்லை என்றும் அவள் சொன்னாள். சுந்தர் அமைதியாகவே இருந்தான். பின்னர், சோபனாவை இன்னொரு பள்ளியில் சேர்த்தால், அவர்கள் மட்டும் பணத்தைப் பறிப்பதற்காக இவ்வாறெல்லாம் நாடகம் நடத்தமாட்டர்கள் என்பதில் என்ன நிச்சயம்? என்ற ஐயத்தை வெளியிட்டான். இப்போது லீலா அமைதியாக இருந்தாள். சற்று அழுதாள். பின்பு என்னதான் செய்வது என்று கேட்டாள். அவளும் கையறுநிலையில் இருந்தாள். சுந்தரிடமும் பதில் இல்லை. சரியாக கற்றுக் கொள்ளாத தங்களின் நிலைமை சோபனாவிற்கும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணமே அவன் சிந்தையை ஆக்கிரமித்திருந்தது. குழந்தை விழித்துக் கொள்ளாதிருக்கும் அளவுக்கு அவர்களின் அழுகையிலும், விவாதத்திலும் அமைதி இருந்தது. அப்படியே மூன்று பேருமாக உறங்கிப் போனார்கள்.

மாலை 5 மணி, மாலைக்காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. கடல் அலையின் வேகமும் கடுமைப் பெற்றிருந்தது. மழை பெய்வதற்கு வானம் தயாராக இருந்தது. கரையின் மணலை ஈரமாக்கி வாரிச் செல்கின்ற அலைகளுக்கு மத்தியில், சுந்தர் சோபனாவைத் தூக்கியபடி நின்றிருந்தான். அலைகளைக் கடந்து ஆழ்கடல் திசையில் பயணித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகுகளை சோபனாவிடம் காட்டி, 'அங்கே போவோமா' என்று கேட்டான். இதமான அந்த காற்றில் உச்சி வானில் சுதந்திரத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்த சோபனா, தமக்கும் அதில் ஒன்றை வாங்கித் தருமாறு அடம்பிடித்தாள். குழந்தையை கரையில் விட்டு சிறிது தூரம் நடந்த சுந்தர் மறுபடி பட்டத்;துடன் வந்துசேர்ந்தான். பட்டத்தைப் பார்த்த சோபனாவின் கண்களும், இதழும் விரிந்ததைப் போன்றே, சுந்தரின் மனமும் விரிந்தது. அருகில் நின்றிருந்த லீலாவிடம் இனி இவளுக்கு நான்தான் ஆசிரியன் என்றான்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக