வராது போன வசந்தம்…

‘யாரப்பன் நீர்’
மா பிசைந்த கையோடு அந்த பாட்டி கேட்கும் கேள்வி புரிகிறது…. பதில் புரியவில்லை… யோசித்து பார்ப்பதற்குள்,

‘பசியோடிருக்கிறான் பாவம்’

தாத்தாவின் குரல் எதிர்திசையில்….

‘ஃ வடிவில்’ அடுக்கப்பட்ட கல்லடுப்பில், விறகுக் கட்டையை விட்டு, பாதி எழுந்தவாறு
‘இவனுக்கு எதாச்சும் சாப்பிட கொடுமன்’



உத்தரவு குரல் ஒருகணம் பணிந்தது….
‘பார்க்க நம்மட புள்ள மாதிரி இருக்கான் உயிரோட இருந்தால் இவன போல இருந்திருப்பான்…ம்…’
பார்த்த சில நொடிகளிலேயே பரிவு காட்டும் காரணம் புரிகிறது எனக்கு…. இழப்புகளை மட்டுமே சந்தித்த இதயங்கள் தான் இப்படி செய்யும்…
தடயங்கள் நிறைந்த முகத்தில் தமிழன் என்றும் தெரிந்திருக்க வேண்டும்…!
‘எங்க இருந்து வாராய் நீ, ஏன் உப்படி அடிப்பட்டு கிடக்கு?’
உடைந்து போன பற்களின் ஓட்டைகளுக்கு இடையில் சில வார்த்தைகள் உயிரிழந்து போயின…. மீதமிருந்த வார்த்தைகள் மட்டும் காதுகள் வரையில் கேட்கலாயின….. பக்கத்தில் வந்த தாத்தா, என் பின்னந்தலையின் மயிர் விலக்கி, காயங்களைக் கண்டார்….
‘இஞ்ச இவன யாரோ அடிச்சிரிக்கினம் போல’
சாப்பாட்டு தட்டோடு வந்த அவரது வயதான மனைவியிடமும், ஆச்சரிய பகிர்வு….
‘வேற ஆர் அடிக்கிறது? எல்லாம் அவங்களாத்தான் இருக்கும்’
அறுதியிட்ட சிந்தனையுடன் அவர்…. நீட்டிய சாப்பாட்டு தட்டு நீண்டநாள் பசியை நினைவுப் படுத்தவும், என் முன்னே நின்றிருந்த பாட்டி, தாத்தாவை மறக்கவும் செய்தது.
‘இஞ்சே… அவனை சாப்பிட விட்டுட்டு, ஒரு துணிய எடுத்து வாரும், உவன்ற காயத்துக்கு மருந்த போடுவம்’
000
புசித்து முடித்த பின்னும் பசிக்கு முடிவு இல்லை…
‘காணுமோ அப்பன்’
மீண்டும் கேட்க தோன்றினாலும், ‘போதும்’ என்றேன்; பாட்டியிடம்….
மறுபடி கேட்டால் இருக்குமா? என்பது சந்தேகம்…. தட்டை ஒரு கையில் வாங்கிய பாட்டி, மறு கையில் தாத்தாவிடம் பழைய துணி துண்டை கொடுத்தார். அந்த பாட்டியிடம் இருந்த சேலையில் ஏதோ ஒரு பாகமாக இருக்கலாம்…
நீண்டு வளர்ந்த பனை மரத்தில் இருந்து வீழ்ந்த கிளைகளை வைத்து வேயப்பட்ட மதில்கள், ஓலைகளில் பின்னிய கூரை போன்ற ஒரு அமைப்பு… மழையே வராது என்ற நம்பிக்கையில் கட்டியிருக்க கூடும் இந்த கூட்டை… இந்த கூட்டில் இந்த இரண்டு கிளிகள் தான் போல…. குஞ்சிகள் பறந்திருக்கும், அன்றேல் இறந்திருக்கும்…
உண்டப்பின் ஓரளவு தெளிந்தாலும், யாரென்று உணரவில்லை நான்… என் யோசனை எங்கோ செல்ல, தலையை சுற்றி தாத்தா இறுக்கிய துணி, மீண்டும் அந்த கூட்டுக்கே அழைத்து வந்தது…. ஏதோ வைத்தியம் செய்திருக்கிறார்…
‘நோவுதா’
தாத்தாவின் கேள்வி கிண்டலாய் தெரிந்தது எனக்கு… சிரித்தேன்… அந்த வலியை விட இது பெரிதாய் இருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்…
‘அப்பன் இந்தாரும், இந்த தண்ணிய குடிச்சிட்டு அங்கால படு… கன நாள் நித்திரை கொள்ளயில்ல போல…’
பனை மரத்துக்கு அடியில் பரவிக் கிடந்த மணலை கூட்டி சமப்படுத்திய பாட்டி இதனை சொன்னாள்….
மேற்கில் சூரியன் முழுவதுமாய் இறங்க இன்னும் சில நொடிகள் தான்…. பாட்டி சீர் செய்த இடத்தில் படுத்து உறங்கிட முயற்சிக்கிறேன்… எத்தனை நாட்கள் இதற்கு முயற்சித்திருக்கிறேன்? இன்றாவது கைகூடுமாக இருந்தால் சந்தோசம்தான்…..
0000
ஆழ்ந்த உறக்கத்தில் தாழ்ந்த நேரம் தெரியவில்லை…. சோம்பல் முறிக்க கைவிரல்களை கோர்த்து தலைக்கு மேல் தூக்கி, பின் இறக்கி,
‘பாட்டி, நான் இங்கையே தங்கட்டுமா?’
தாத்தாவின் ‘ஃ வடிவ’ அடுப்பில் விறகை எரித்து ஏதோ செய்து கொண்டிருந்தவரிடம் கேட்டு வைக்கிறது என் நாக்கு… குழி விழுந்த கன்னங்களில், ஒளி விழுந்து தெறிப்பதை போல் ஒரு ஆனந்தம்….
‘உத நீ கேக்கோணுமா, இஞ்சயே இரும்… இஞ்ச நானும் அவரும்தான்…. உன்ன பார்க்கேக்க என்ட பிள்ளைட ஞாபகம் வருது… அவரும் உததான் சொல்றவர்…’
அடுப்பை கிண்டிய கையுடன், பாட்டி சொல்லி முடிக்க முன், ‘உங்க மகனுக்கு என்ன நடந்தது?’  – நான்…
கண்டிப்பாக அசம்பாவிதம் ஒன்றுதான் என்று தெரியும். ‘தொலைச்சி போட்டன்…. நான் தான் அவன தொலைச்சி போட்டன்…’
‘தாத்தா எங்க பாட்டி….’ – நான்..
கடைக்கு போனவர்.. வந்துடுவார்… நடந்து வர சுணங்கும்… – பாட்டியின் மறுபதில், அவரையேனும் தொலைத்துவிடக் கூடாது என்பதை போல் இருந்தது…
‘நீர் குளிச்சுப் போட்டு வாரும்… நாளைக்கு ஊர்ல விஷேசம்…. அதான் எல்லார் வீட்டையும் ஆயித்தம் செய்யினம்’
பாட்டியின் பேச்சை கேட்டபடியே எழுந்து கிணற்றடியை நோக்கி நடந்தேன்… தாத்தாவின் ‘ஃ அடுப்பு’ எரியும் வெளிச்சத்தால் கிணற்றடி வரையில் தடக்காமல் நடக்க முடிந்தது…..
0000
நான் நீராடி திரும்பிய போதும் தாத்தா திரும்பி இருக்கவில்லை… வயதானவர் என்றாலும் சற்று திடமானவராகத்தான் தெரிந்தார்…
‘தாத்தா வர இன்னும் சுணங்குமா பாட்டி’
‘இப்ப வரோனும் அப்பன்…. அதான் பார்த்திட்டு இருக்கன்’
பாட்டியின் பேச்சிலும், பார்வையிலும் பதட்டம் தெரிந்தது….
‘நான் போய் பார்த்திட்டு வரட்டுமா பாட்டி….’
‘வேணாம் அப்பன்… புதுசா வந்திருக்கிற நீ…. இருட்டுல தனிய போக வேணாம்…’
புதிய மகனையும் பாதுகாக்க நினைக்கிறார் போலும்…
அடுப்பில் தீயும் எதையோ கருகல் மணம் காட்டிக் கொடுத்தது….
அடுப்பின் அருகில் சென்று, விறகுகளை வெளியில் எடுத்து அடுப்பின் அனலை குறைத்தேன்…
டுப்பு… டுப்பு…. டுப்பு….
தொடர்ச்சியான சத்தம், வாசலுக்கு முன் வந்து நிற்கின்றன சில புல்லட் ரக உந்துருளிகள்.
‘அம்மா… ஆரது புதுசா….’
இருளில் உந்துருளியில் அமர்ந்திருந்த ஒருவர் எழுப்பிய குரல் கேட்டது…. உருவம் தெரியவில்லை…. என்னை விட சிறிய வயதாகத்தான் இருக்க வேண்டும் அவருக்கு….
‘என்ட சொந்தகார பொடியன்தான்…. இன்டைக்குதான் வந்தவன்…’
‘அவங்களோடு சேர்ந்தவனில்லையே’
‘இல்லையப்பன்,..’
உந்துருளியை விட்டு இறங்கி நேரே என்னிடம் வந்தவர், மின்சூழ் ஒளியால் என் முகத்தை பார்த்தார்… நான் நினைத்தது சரிதான், அவர் என்னைவிட சிறியவர்…. நீண்ட பெருமூச்சைவிட்டு…
‘ஐயா எங்க போனவர்?’
‘கடைக்கு போனவர் இன்னும் வரேல்ல’
‘சரி நான் பார்த்திற்று போறன்…’ மீண்டும் விரைகிறார் உந்துருளியை நோக்கி…..
உந்துருளியில் ஏறி உதைத்து இயக்கத்தை ஆரம்பித்து…
‘அம்மா… அந்த அண்ணையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கோ… அவங்கள் கண்டா கொன்று போடுவாங்கள்’
உந்துருளிகள் ஒன்றின் பின் ஒன்றாக வீதியில் ஒடுங்கி பறந்தன…. அவர் கூறியது என்னை அவர் ஏற்கனவே அறிவார் போல இருந்தது….
‘யார் பாட்டி அது’
உந்துருளிகளின் சத்தம் ஓயும் வரையில் காத்திருந்த பாட்டி….
‘அவரையும் உனக்கு தெரியாதா? அவரை தெரியாதவங்களும் இருக்கினமா?’……
டுப்பு….டுப்பு….டுப்பு…..
மீண்டும் உந்துருகள், முதல் போன திசையின் எதிர்திசையில்….. அமைதியாக இருந்த இந்த நொடிகள் அமைதி இழந்தன…
‘அம்மா….  அண்ணையை ஒளிச்சு வையுங்கோ… ஒளிச்சு வையுங்கோ’
உந்துருளியில் சென்றவர்களின் ஒருமித்த குரல்…. பாட்டி அங்கும் இங்கும் ஓடினாள்….
‘ வீட்டுக்க வாரும்’
ஒரு கையில் எரிந்துக் கொண்டிருந்த விறகுடன் மறுக்கையில் என் கையை பிடித்து இழுத்து கும்மிருட்டு அறைக்குள் சற்றே ஒளியைப் பாய்ச்சி தரையை தடவி எதையோ இழுத்தார் அந்த பாட்டி….. கீழே ஒரு கிடங்கு… பதுங்கு குழியாய் இருக்கும் போல…
‘உதுக்குள்ள ஒளிஞ்;சிரும்’
பாட்டி என்னை வேகமாக இழுத்து குழிக்குள் தள்ளினார்…
‘பாட்டி என்ன நடக்குது? ஏன் என்ன இதுகுள்ள ஒளிய சொல்றீங்க’
‘பேசாமல் இரு….’
பதுங்கு குழிக்கு மேலே பலகைகளையும், தகரத்தையும் போட்டு மறைத்தார்…
‘பாட்டி ஆபத்துனா நீங்களும் வாங்க…’
‘இல்லையப்பன், அவர இன்னும் காணல்ல…. அவர் வரட்டும்….’
‘நா போய் அவரையும் கூட்டி வாரன்….’
குழிக்கு மேலே மூடப்பட்ட பலகைகளை தள்ளி மேலெழ நினைக்கிறேன்…. மேலே பாரமான எதையோ வைத்திருத்திருக்க வேண்டு… படுத்திருந்தபடி அதனை அசைக்க முடியவில்லை…. பாட்டியின் சத்தமும் கேட்வில்லை…. அமைதியாக அங்கேயே இருக்க வேண்டும், இல்லை என்றால், அமைதியின்றி அங்கும் இங்கும் ஓடித் திரிய வேண்டும்…
இந்த வயதிலும் தன் கணவன் மீது அவருக்கு எத்தனை பாசம்….. கீழே கும் இருட்டும், வடிக்கப்பட்ட சத்தங்களாக சில டோம்கள்…. சில டுமீல்கள்…. பல கதறல்கள் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை..
நாளைய தினம் ஏதோ விசேஷம் என்றாரே பாட்டி? அதற்குள் இப்படியா? என்ன நடக்கிறது வெளியில்;…. உந்துருளியில் ஒருவர் வந்தாரே? அவர் என்னை சகோதரன் என்கிறார்? அவர் என்னை முன்னமே அறிவாரா? அவர் ஏன் என்னை மறைத்து வைக்க சொன்னார்?…… பதில்கள் இன்றி மலட்டுக் கேள்விகள் இனப்பெருக்கம் செய்து கொண்டே போகின்றன….
மேலே இடைவிடாது ஒலித்த கதறல்கள், எனக்கு எதை எதையோ நினைவுப் படுத்துகின்றன…. இது போன்ற சூழ்நிலையை இதற்கு முன்னமும் சந்தித்திருக்கிறேனா? இங்கும் கேள்வியா?….. யோசிக்காமல் இருந்துவிடுவோம்….. கேள்விகளே வேண்டாம்…. மன சஞ்சலம், மதி மயக்கம், தீவிர போராட்டம்…. யார் இதை செய்கிறார்கள்…. அந்த உந்துருளியில் வந்தவர்களா? இல்லை அவர்களாய் இருக்காது…. அவர்கள்… என்னை மறைத்து வைக்கதானே சொன்னார்கள்….. அப்பாடா… ஒரு கேள்விக்கு பதில் கிடைத்தது…. ஆங்கிலப் படங்களில் வருவதை போல ஏதும் மிருகங்களாக இருக்குமோ… அல்லது மிருகத்தை போன்ற குணம் கொண்ட ஏதாவதாக இருக்குமா? அப்படித்தான் தோன்றுகிறது…. இரண்டாம் கேள்விக்கும் பதில்….
உடம்பின் ஒரு பக்கத்தில் அச்சமும், மறு பக்கத்தில் ஆத்திரமும்… இரண்டும் சந்திக்கும் தருணம்தான் நான் யாரென்று அறியும் தருணமாக இருக்கும்……
ஐயோ… கடைக்கு போன தாத்தாவின் நிலை என்ன? அவரையே பார்த்திருந்த பாட்டி… இவ்வளவு நேரம் என் காதுகளை கிழித்த கதறல்களில் அவர்களின் குரலும் இருந்திருக்குமோ? சோர்வோடு வந்த என்னை சில நொடிகளில் தன் மகனைப் போல பார்த்தார்களே…. அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும்…. இதற்கு மேலும் பொறுத்திருக்க வேண்டுமா? அச்சத்தை ஆத்திரம் விழுங்கிவிட ஆரம்பிக்கிறது…. என் உடல் வலிமைகளை ஒன்று திரட்டி, மேலே போட்டிருந்த தடுப்பை தள்ளினேன்… இலகுவாக அசைந்து கொடுத்தன தடைகள்…. எழுந்து பார்த்ததில்….
விடிந்துவிட்டதா?
00000
இருளாய் இருந்த அந்த பொழுது, வெளியில் எரிந்துக் கொண்டிருக்கும் தணல்களுக்கு மத்தியில் போலியான ஒரு பகலாய் தெரிந்தது….. புயலா இது…. புயல் இது போல் நெருப்பை கக்காதே….
குண்டெறிந்திருக்கிறார்களா? ஆமாம் குண்டெறிந்துதான் இருக்கிறார்கள்….. என் பாட்டி எங்கே…? இந்த குண்டுகள் இரண்டு வயதான கிளிகளின் கூட்டையும் அழித்து விட்டன…. எல்லாமே அங்கே அனைத்துமே மாறிப் போய் கிடந்தன….
ஏன்? நானும் தான்….. அதோ…. சிதறிக்கிடக்கிறார் சின்னாபின்னமாக…. என்பாட்டி… என்னை பாதுகாக்க குழிக்குள் தள்ளி மேலே தடுப்பாய் அமர்ந்து இருந்தது இவர்தானோ?…. இன்னும் தாத்தா வரவில்லையா? இந்த இடத்துக்கு தாத்தா வராமல் இருந்திருந்தால், அவராவது உயிரோடு இருப்பார்….. சிதறிக் கிடக்கும் உடலத்தை ஒன்று சேர்த்தால் உயிர் வரவா போகிறது….. வரவிருந்த வசந்தத்துக்காக தயாரிக்கப்பட்ட சில பொருட்கள் தாறுமாறாய் வெளியில் கிடந்தன…. தாத்தாவின் ‘ஃ அடுப்பருகே’ விரல்களும், கொஞ்சம் பாதமும் கொண்ட ஒரு செருப்பு….. அது தாத்தாவுடையதா? சற்று அருகில் சென்று பார்க்கலாம்… ஆம்… தாத்தா உடையதுதான்….. காத்திருந்த பாட்டியை அவர் மட்டும் தனித்து விடுவாரா என்ன? அவரும் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் போலும்… அவரின் உடலும் இங்கே கிடக்கும் கல்லோடும், மண்ணோடும், நெருப்பு துண்டுகளோடும் கலந்து கிடக்கும்….
கதறல்கள் அடங்கின… குண்டு மழை ஓய்ந்தது…. வீட்டுக்கு முன்னே சென்ற தெருவில் நடக்கலானேன்… சிறிது தூரம்… சக்கரங்கள் சுழன்றும் நகரமுடியாத நிலையில், உந்துருளிகள் கவிழ்ந்து கிடக்கின்றன… அவர்கள் என்னை மறைந்திருக்குமாறு எச்சரித்து சென்றவர்களாயிற்றே…. அப்படி என்றால் அவர்…. உந்துருளிகள் சென்ற திசையில் நாமும் செல்லலாம்… முடிவு ஒன்று கிடைக்காமலா போய்விடும்……
0000
அந்த வனத்தை விட்டு வெளியே வருகிறேன்….
போலியான பகல் பொழுது மறைந்து, நிஜக் காலை பொழுது…
‘என் வீட்டுச் சுவற்றை இடித்து உங்களுக்கு பாதை போட்டுக் கொடுக்கிறேன்… அடுத்த தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள்… இல்லை என்றால், உங்கள் எதிர்காலம் பாழாகிடும்….’
தூரத்தே தங்குவதற்கு குடிசைகள் கூட இல்லாத மக்கள் நடப்பதற்கு வசதியான தெருக்கள்…. யாரோ ஒரு அரசியல் தலைவர்…. தலைவரா? அப்படித்தான் சொல்கிறார்கள்…
வந்த திசையை திரும்பி பார்க்கிறேன்… நான் மட்டும்தான் வந்திருக்கிறேன்…. ‘வராது போன வசந்தம்’…. திரையில் தெரிகிறது…..