கணித மேதையின் முதல் காதல்

கணக்குகளை நீ எழுதும் அழகில் - எல்லாக்
கவிதைகளும் தோற்றுப் போகும்..
விரலுக்குள்ளேயே திரளும் சூத்திரங்கள்...
வாய்க்குள்ளேயே வாய்ப்பாட்டுக் பாத்திரங்கள்...

ஆஹா...
எத்தனை வேகம் -இந்த
கணக்கிடும் கைகளுக்கு...
எத்தனை கணக்குகள்,

எத்தனை சமன்பாடுகள்,
எத்தனை பிரதியீடுகள்..
குறியீடுகள்...???
****************
எக்சும் வையும்
என்னதவம் செய்திருக்கும்..
உன்னால் எழுதுபடவும்,
ஒரு கட்டத்தில் அழிபடவும்...
****************
ஒரே நிறுவலைத்தான்
உனை வைத்து நான் சொல்வேன்..
ஆக்குவதும் நீ
அழிப்பதுவும் நீ..
ஆகவே நீ கடவுள்..
****************
ஐயன்ஸ்டைன் தத்துவத்தை,
அடியோடு புரட்டிய உன்
கணக்குத் திறன் கண்டு,
காதலிக்க வந்தாராமே உன் வாத்தியார்....
****************
பைதகரஸ் தேற்றத்தையே,
பொய்ப்பிக்க செய்தாயே...
நியுட்டனின் விதிக்கு
நேர் எதிராய் நின்றாயாமே... ?
****************
பை - ஆர் வர்க்கத்தில்
வையாரை கோர்த்து - நீ
செய்த புரட்சியில்...
உய்வார் உளரோ உலகில்...?
****************
விட்டத்தைக் காணாமலே,
வட்டத்தின் அளவைச்
சட்டனெச் சொல்லும் - உன்
தரமே திறன்...
****************
அன்பே.. அழகே,
கணிதத்தின் கனவே...
அவ்வளவு எளிதா - உன்னை
அடைந்துவிடும் சமன்பாடுகள்...
****************
எத்தனை தடைகளைத் தாண்டி,
இவளை அடைந்திருப்பேன்..?
முன்வீட்டுக்காரன் முதல்,
முச்சந்தி பிச்சைக்காரன் வரையில்..
எவர்தான் உன்னை
சமன்செய்ய முனையவில்லை...
காண்கின்றவரெல்லாம்,
காதலை சொல்லாவிட்டாலும்,
கணக்கிட்டிருக்க வேண்டும்,
****************
இத்தனை திறனிருந்தும்,
என்னோடு ஏன் இணைந்தாய்..?
முதல்காதல் நீதான் என்று
முனங்கினேனே... அதனாலா?
****************
அடி முட்டாளே...
முதலாம் இலக்கத்துக்கு முன், பூச்சியமும்,
அதனோடு அரைக்காலும்...
இலக்கமென இருப்பதை
ஏனடி மறந்தாய்...?
****************
முதல் காதலுக்கு முன்னமே, - நான்
முயற்சித்து எறிந்த,
செய்கைவழி காகிதங்களை
சேர்க்காமலே விட்டாயோ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக