ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறதா?

2016ம் ஆண்டு எழுதப்பட்டு தினக்குரலில் வெளியான கட்டுரை

ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களால் வௌ;வேறு வகையான நிலைப்பாடுகள் வெளியாக்கப்படுகின்றன.


இலங்கையைச் சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் இரண்டு வருடங்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

இலங்கையைச் சேர்ந்த 32 பேர் சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதனை அடுத்து சில முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் யாரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணையவில்லை என்பது சில முஸ்லிம் அமைப்புகளின் வாதமாக இருக்கிறது.

இந்த நிலையிலேயே கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அமைச்சர் விஜயதாஸ முன்வைத்த கருத்தை நிராகரித்திருந்தார்.

இலங்கையில் இருந்து யாரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணையவில்லை என்றும், இதனை தேசிய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் ராஜித்த கூறி இருந்தார்.

இது இலகுவாக கடந்து போகக்கூடிய விடயமா?


ஆனால் இது இலகுவாக கடந்து போகக்கூடிய விடயம் இல்லை என்பது பலரதும் நிலைப்பாடாக இருக்கிறது.

காரணம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இலங்கையை தொடர்புபடுத்தி வெளியிடப்படுகின்ற நாளாந்த செய்திகள்.

சிரியாவையும் ஈராக்கையும் மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதம், தற்போது உலகெங்கும் வியாபித்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.

ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ஒஸ்ட்ரேலியா, பங்களாதேஸ், இந்தோனேசியா, ஜேர்மனி என பல நாடுகளில் அவர்களின் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அவர்களின் தாக்குதல் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கு தவிர்ந்த ஆசிய நாடுகளில் குறைவாகவே இதுவரையில் இருந்துள்ளது.

ஆனால் தீவிரவாதிகளின் இலக்கில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முக்கிய இடத்தை கொண்டிருப்பதாக, சர்வதேச ஐ.எஸ். தீவிரவாதம் குறித்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


இந்தியாவில் ஐ.எஸ். செயற்பாடும் இலங்கையும்


இவ்வாறான நிலையில், இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக இலங்கையுடன் தொடர்புபட்ட இரண்டு முக்கிய சம்பவங்கள் இந்தியாவில் இடம்பெற்றுள்ளன.

அதில் ஒன்று, பூனேயில் வைத்து கடந்த வருடம் 16 வயதான சிறுமி கைது செய்யப்பட்டமை.

குறித்த சிறுமி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைய விருப்பம் கொண்டிருந்த நிலையில் இந்திய தீவிரவாத எதிர்ப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் இலங்கையில் உள்ள ஐ.எஸ். முகவர் ஒருவருடன் கொண்ட தொடர்பின் மூலம் குறித்த அமைப்பு தொடர்பில் தகவல்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளார். (படம் 1-2)








 அத்துடன் தாம் ஃபிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர், இலங்கை ஊடாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த சம்பவம் இந்த வருட(2016) நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இலங்கையின் காவற்துறையினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.

அவ்வாறு கேரளாவைச் சேர்ந்த யாரும் இலங்கைக்கு பிரவேசித்து, இங்கிருந்து ஆப்கானிஸ்தான் ஊடாக சிரியாவுக்கு சென்றமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று காவற்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.எஸ்ஸும் யாழ்ப்பாணமும்


ஆனால் இந்த விசாரணைகளை கையில் எடுத்துள்ள இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக பல்வேறு கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் வெளியிட்ட தகவல் அடிப்படையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிற நாடுகளுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தை பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.

இது சார்ந்த செய்திகளை இந்திய ஊடகங்கள் தேசிய புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளன.

டுபாய் மற்றும் பங்களாதேஸ் ஊடாக ஆப்கானிஸ்தான் செல்வது இலகுவானது எனினும், அங்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது இந்தியாவில் இருந்து ஐ.எஸ். உடன் இணைந்துகொள்ள முயற்சிக்கின்றவர்கள் யாழ்ப்பாணத்தைப் பயன்படுத்துவதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரவின் சிரேஷ்ட்ட அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். (படம்-3)



ஆனால் இது தொடர்பில் இலங்கைக் காவற்துறையினரோ, பாதுகாப்பு தரப்பிலோ எந்த கருத்தும் வெளியாக்கப்படவில்லை.


யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த இருவர்


இந்தியாவில் செயற்படும் இஸ்லாமிய ஆராச்சி நிறுவனத்தின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள இருவர் இலங்கைக்கு பயணிக்க நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து, இஸ்லாமிய மதப் போதகர் ஷாகிர் நாயக்கிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்டிராவைச் சேர்ந்த அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பேரும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். (படம் - 04)





ஐ.எஸ். உடன் இணைந்து மரணித்த முதலாம் இலங்கையர்?


இவை இவ்வாறிருக்க, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட முதலாவது இலங்கைப் பிரஜை கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

கலேவலையைச் சேர்ந்த 37 வயதான அபு சுரா செலானி எனப்படும் சப்ராஸ் நிலாம் முஹ்சின் என்பவர், கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் நடத்தப்பட்ட அமெரிக்க கூட்டுப் படையினரின் வான் தாக்குதலில் சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அவர் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தி, ஐ.எஸ்.தீவிரவாதிகளால் இயக்கப்படுவதாக நம்பப்படும் பேஸ்புக் தளம் ஒன்றில் அவரது புகைப்படமும், விபரங்களும் கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன.
(படம் - 05)



6 பிள்ளைகளின் தந்தையான அவர், தமது குடும்பத்தாருடன் துருக்கி ஊடாக சிரியா சென்று, தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் ஐரோப்பிய நாடுகளுக்கான வீசாவை கொண்டிருந்தமையை இலங்கையில் உள்ள துருக்கித் தூதுவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். (படம் - 06)



இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக அரசாங்கத்தினால் கூறப்பட்டிருந்த நிலையிலேயே, 32 இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துக் கொண்டிருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, 36 இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்திருப்பதற்கான தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். (படம் - 07)




இலங்கைக்கு ஆபத்தா?


சூழ்நிலைகள் இவ்வாறு இருக்க, ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரதான மையமாக காணப்படும் சிரியா மற்றும் ஈராக் என்பவற்றில் அந்த இயக்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஈராக்கில் ஏறத்தாழ ஐ.எஸ். தீவிரவாதிகள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அவர்கள் வெளிநாடுகளை நோக்கி நகரும் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் அவர்கள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்;வாறான நிலையில் இலங்கையும் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் உன்னிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் விடுதலைப் புலிகள் எழுந்துவிடக்கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும் தற்போது காலம் மாறியுள்ளது.

தீவிரவாதம் என்பது மாற்றுவழியில் இலங்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறான நிலையில் இலங்கையும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான தமது அவதானத்தை சர்வதேசமயமாக்க வேண்டும்.

இதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பரிமாற்றிக் கொள்வது அவசியமாகிறது.

இது தொடர்பில் அரசாங்கம் நிலையான நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானதாகப் படுகிறது.

விக்கிவிக்னேஷ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக