ஒருமுறை

அப்போது அவன் மனக்கலக்கத்துடன் தெருவோரம் நடந்துக் கொண்டிருந்தான். காற்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. சிக்கினால் சின்னாப்பின்னம்தான் என்ற நிலை. சாமுவேல் அவன் பெயர். 30 வயது. ஜெல் வைத்து வாரிய தலை மயிருள் ஒருசில நரைபெற்றிருந்தன. கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். நீலநிற ஜேசியும், அதேநிறத்தில் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான்.

நகர மத்தியில் உள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றில் முகாமையாளராகவும், சமுகத்திலே கொஞ்சம் மரியாதையுடன் வாழ்க்கை நடத்தி வந்தான். சமுகத்தில் அவனுக்கு இருந்த மரியாதைக்கு ஏற்ற அளவில் வருமானம் இருக்கவில்லை. மனைவி கீதா. காதல் திருமணம்தான். 5 வயதில் ஒரு மகன். சமயத்தில் மனைவி, பிள்ளையின் தேவைகளை நிறைவேற்றக் கூடவருமானம் இல்லாத நிலை தொடர்ந்தது. 

நகரத்தின் பிரதான வீதியில் அன்று அத்தனை கூட்டம் இருக்கவில்லை. அநேகமாக அவன் தனிமையிலேயே நடந்துக் கொண்டிருந்தான். பனிசூழ்ந்த அந்த பொழுதும், குளிர்ந்த காற்றும் புண்பட்ட அவன் மனதுக்கு ஆறுதல் தருவனவாக இருந்தன. நீண்ட சிந்தனையுடன் நெடுதூரம் நடந்துவந்த களைப்பு அவன் முகத்தில் தெரிந்தது. என்றாலும் அவன் உற்சாகமாகவும், அச்சமும் ஒருங்கே பெற்றவனாக இருந்தான். 

'அப்பா, ட்ரெயின் வாங்கிட்டு வாங்கப்பா...' சாமுவேலின் மகன் இன்று காலையும் கேட்டிருந்தான். நேற்றும், நேற்று முன்தினமும் கூட இதனையேதான் கேட்டான். வாங்கி வருவதாக உறுதியளித்துவிட்டு, வீடு திரும்பும் போது சாமுவேல் வெறுங்கையுடனேயே செல்ல நேர்ந்தது. 'அப்பா ட்ரெயின் எங்க' என்று மகன் கேட்கும் போது அவனை முகம் கொடுக்க முடியாதவனால் இதயம் சுக்குநூறாக சிதையும் வேகத்தோடே தனது அறையில் சென்று அடைந்துக் கொள்வான். பின்னர் நாளை நாளை என்று மகனைத் தேற்றி சில வாரங்களை கடத்திவந்தான். எத்தனைக் காலத்துக்குதான் இப்படியே விருப்பங்களை ஒத்திப்போட்டுக் கொண்டிருப்பது? 

இது மத்திய வகுப்பு குடும்பங்களுக்கு விதிக்கப்பட்டது. வறுமையை காட்டிக் கொள்ளவும் முடியாது, போக்கிக் கொள்ளவும் முடியாது. எண்ணத்தில் மாற்றம் ஏற்படும் வரையில் அப்படியேதான். வாங்கிற சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கும், இன்னொரு பகுதி வங்கிக் கடன்களுக்கும், கட்டணங்களைச் செலுத்தவும் போய்விடும். ஏனையத் தேவைகளுக்கு கடனேகதி. ஆனால் வெளியியில் காட்டிக் கொள்ள முடியுமா என்ன? கௌரம் என்று நினைத்துக் கொள்ளும் ஏதோ ஒரு அர்ப்பத்துக்காக செல்வாக்குடன் வாழ்வதாக காண்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது அந்த குடும்பங்களுக்கு. அப்படியான ஒரு குடும்பமே சாமுவேலுடையதும். 

நகரத்தின் பிரதான வீதி ஊடாக சில மீற்றர்கள் நடந்து, உபவீதி ஒன்றுக்குள் பிரவேசித்து அதன் ஓரத்தில் வெள்ளை நிறம் பூசப்பட்டிருந்த வீட்டின் கதவைத் தட்டிக் காத்துக் கொண்டிருந்தான். அவன் அந்தவீட்டுக்குச் செல்லும் இரண்டாவது முறை இது. சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை அங்கு வந்திருந்தான். அப்போது அவனுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் இந்த முறை சற்று குறைவாகத்தான் இருந்தது. அந்த வீட்டின் பின்னால் இருந்த படிகளில் ஏறினால் ரயில் நிலையத்துக்கு சென்றுவிட முடியும். ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டிடத்தின் பாகம் ஒன்றிலேயே அந்த வீடு அமைந்திருந்தது. பிரதான வீதிக்கு அருகிலேயே என்றாலும் அதிக சனப்போக்குவரத்து இல்லாத இடம். பெரும்பாலும் ரயில் வண்டியில் டிக்கட் எடுக்காமல் செல்லும் பயணிகள் இரவு வேளையில் தப்பியோடுவதற்காக இந்த பாதையின் ஊடாக வருவார்கள். மற்றபடி யாசர்களின் இருப்பிடமாகவும் அந்த பிரதேசம் இருந்தது. 

கதவு திறக்கப்பட்டது. மதியச்சாப்பாட்டை பாதியில் வைத்தவாறு கையையும் கழுவாத ஒருவன் கதவைத் திறந்து முன்னே வந்தான். நீண்ட தலைமுடியும், கூர்மையான தாடியுமாக அவன் இருந்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. சாமுவேல் நேராக வீட்டுக்குள் போனான். காற்சட்டைப் பையில் இதுவரையில் உறுதிக் கொண்டிருந்த பொதியை எடுத்து அவனிடம் கொடுத்தான். பொதியை சோதனை செய்யுமாறு இன்னொருவனுக்கு பணிக்கப்பட்டது. சாமுவேல் பொதியை ஒரு மேசையில் வைத்து திறந்தபோது, அதில் சுத்தமான கஞ்சா இலைகள் பதப்படுத்தப்பட்டு இருந்தன. சில இலைகளை எடுத்து மூக்கின் அருகில் கொண்டு முகர்ந்து பார்த்தவன் திருப்தியை வெளியிட்டான். சாமுவேல் மீண்டும் இலைகளை இட்டு பொதியை சுற்றி அவனிடமே கொடுத்தான். கஞ்சா இலைகளைத் தொட்ட தன் கையை காற்சட்டையில் துடைத்துக் கொண்ட போதுதான், பொலிஸாரின் மோப்பநாய் குறித்த நினைவு வந்தது. அச்சம் தலைக்கேறி இருந்தது. இருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை.

அந்த வீட்டில் நிறைய பேர் இருந்தார்கள். எல்லோரும் அவனை பார்த்து கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்ணை அவன் அறிவான். சாமுவேல் வசிக்கின்ற வீட்டுக்கு அருகில் உணவு விடுதியொன்றில் அவளை அடிக்கடி காணக்கிடைக்கும். அவள் சாமுவேலை உற்றுப்பார்த்தப்படி கடந்துப் போனாள். சாமுவேல் இவ்வாறான செயல்களை செய்யக்கூடியவனா? என்ற சிந்தனை அவளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இருவருமே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் போல காட்டிக் கொள்ளவில்லை. அது மிகவும் ஆபத்தான இடம். 

எதனைவிடமும் இரகசியம் பேணப்படுவது முக்கியம். அதற்காக கொலைகூட செய்யக்கூடிய இடம் அது. 

கையில் 6000 ரூபாய் பணம் தரப்பட்டது. பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, அடுத்தது எப்போது என்று கேட்டார்கள்? இதுதான் கடைசி என்றான் சாமுவேல். அவன் சரி என்றான். அவனது முகத்தில் பரிகாசம் நிறைந்த புன்னகைத் தவழ்ந்தது. சாமுவேலுக்கு அவமானமாக இருந்தது. இதற்கு முதல் கஞ்சாவை கொண்டு சேர்த்தப் போதும் சாமுவேல் இதனைத்தான் சொன்னான். சாமுவேல் இதனை விரும்பி செய்கிறானா? விரும்பாமல் செய்கிறானா என்றெல்லாம் அவன் யோசித்ததில்லை. அவனது வீட்டுக்கு அருகில் உள்ள விடுதி உள்ள ஒருவரால் தரப்படுகின்ற கஞ்சாவை இந்த வீடுவரையில் கொண்டுவர வேண்டும். அவ்வளவுதான். ஆனால் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஒருநாள் தேவைக்காக முதலும் கடைசியுமாக இதனை செய்வோம் என்று நினைத்து இறங்கியவன், இன்று இரண்டாம் தடவையாக வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டிருக்கிறான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட சாமுவேல் அந்த வீட்டில் இருந்து வெளியேறி, அருகில் இருந்த படிகள் ஊடாக ரயில் நிலையத்தை அடைந்தான். ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அங்காடியில் மகன் கேட்ட விளையாட்டு ரெயிலைத் தேடி அலைந்து வாங்கிக்; கொண்டான். வீட்டுத் தேவைக்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தான். பணம் எங்கிருந்து கிடைத்தது என்று மனைவி கேட்டபோது மௌனம் காத்தான். எங்காவது கடன் வாங்கி இருப்பான் என்று அவள் நினைத்திருப்பாள். மகன் கேட்ட ரயிலை அவனிடம் கொடுத்த போது அவன் அத்தனை பரபரப்பைக் காட்டவில்லை. ரயிலைக் கொடுக்கும் போது மகன் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளை ரசிக்க காத்திருந்த சாமுவேலுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. மகனின் எதிர்பார்ப்பு அந்த தருணத்தில் மாறி இருக்கவேண்டும். குழந்தைகள் அப்படித்தான். அடிக்கடி மனத்தை மாற்றிக் கொள்வார்கள். அன்று இரவு ஏதோ ஒரு திருப்தியோடு கழிந்தது.
காலையில் சாமுவேல் வேலைக்கு செல்லும் போது, 'அப்பா சைக்கிள் வாங்கித் தாரிங்களா?' என்றான் மகன்.
சாமுவேல் சட்டைப் பையைத் தடவினான். அங்கு ஒன்றும் மீதமில்லை. மூன்றாவது முறையாகவும் அந்தவீட்டுக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தான். இந்தமுறை நிச்சயமாக இதுதான் கடைசி தடவை என்று நினைத்துக் கொண்டான்.

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக