நியாயமான தாமதம்............?

வெளிச்சம் நீரில் நனையும் போது ஒளிமங்கிவிடுகிறது...

அன்றும் இதுபோலவே ஒரு மழைநாள்...

பகல்பொழுதும் சற்று இருண்டிருந்தது...

பேருந்து யன்னல் ஓரக் கம்பியில் கை வைத்து தலைசாய்ந்தபடியிருக்க எண்ண ஓட்டங்கள் கட்டுக்கடங்காமல் பயணித்திருந்தன...



பேருந்துகளின் யன்னலோர இருக்கைகள் எப்போதும் கட்டுக்கடங்காத கற்பனைக் குதிரையை தட்டிவிடவல்லன.

அன்றும் அப்படித் தட்டிவிடப்பட்ட குதிரை ஓடிக் கொண்டிருந்த போது, அந்த குரல் அதனை நிறுத்தியது..

ஆதரனிய அம்மே, தாத்தே................

சில நொடிகளில் என் மடியில் போடப்பட்ட ஒரு துண்டு சீட்டு...

வேறென்ன?, குழந்தை ஒன்று – அதற்கு இதயம் பாதிப்பு – சத்திரசிகிச்சைக்கு பல லட்சம் தேவை – உதவுங்கள் - இதோ தொலைபேசி இலக்கம்....

நான் 10 ரூபாவை எடுத்து வைத்துக் கொண்டேன்...

அந்த சீட்டை மீளப்பெற்றுக் கொள்ள அந்த நபர் வரும் போது அதனை கொடுப்பேன்...

ஆனால் எனக்கு முன்னால் ஆசனத்தில் இருந்தவர் அப்படி இல்லை..

பேருந்தில் எழுந்து நின்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்..

அந்த தொலைபேசி இலக்கம் தமது உறவினர் ஒருவருடையது என்றும், அந்த சீட்டில் அச்சிடப்பட்ட குழந்தையின் படம் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், இதற்கு முன்னரும் அவர்கள் இவ்வாறு போலியாக பிரசாரம் செய்து பேருந்து ஒன்றில் பணம் பெற முயற்சித்ததாகவும் கூறினார்.

அவர்களில் ஒருவர் இவ்வாறு உண்மையைக் கூறியவரை தாக்குவதற்காக பாய்ந்தார்.

பேருந்தே உசார் ஆனது... அருகில் இருந்த அனைவரும் அந்த நபர்களில் ஒருவரை பிடித்துக் கொண்டனர்.

மற்றையவர் பேருந்தில் இருந்து குதித்து ஓடினார்.

பேருந்து வேகமாக அவரை துரத்தியது.

ஒரு பள்ளத்தில் இறங்கி அவர் ஓடித்தப்பிய போது, எல்லோரும் சேர்ந்து திருடன் திருடன் என்று கூச்சலிட்டோம்.

ஊர்மக்களை அவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததாக பின்பு அறிந்தேன்...

அந்த சம்பவத்துக்குப் பின்னர் பேருந்தில் சீட்டைக் காட்டி யார் பணம் கேட்டாலும் கொடுப்பதில்லை.

இப்போதும் என் மடியில் அவ்வாறான சீட்டு ஒன்று இருந்தது.

வைத்துவிட்டுச் சென்றவர் ஒன்றும் அவ்வளவு பாதிக்கப்பட்டவராக தெரியவில்லை.

கையில் எடுத்தும் பார்க்கவும் இல்லை.

ஆனால், உள்ளுக்குள் ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

10 ரூபாய்தானே, கொடுத்துவிடுவோமா?

ஒரு ஏமாற்றுக்காரனிடம் எமது பணமும் செல்ல வேண்டுமா?

இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பது மிகப்பெரிய சவால்.

எதாவது ஒன்றை மனம்திறந்து விட்டுக் கொடுத்துவிட வேண்டும்.

ஒன்று 10 ரூபாய், அல்லது இரக்கம்...

நான் இரக்கத்தை விட்டுக் கொடுத்துவிட்டு இருந்தேன்...

அவர் மீண்டும் சீட்டை பெற்றுக் கொண்டு சில நொடிகள் என்னைவிட்டு நகர தாமதப்படுத்தினார்.

நியாயமான தாமதம்...

நானோ மறுபக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்...

பேருந்தில் இருந்து நானும் அவரும் ஒன்றாகவே இறங்க நேர்ந்தது...

சில மீற்றர்கள் ஒன்றாகவே நகர்ந்தோம்...

பாதையைக் கடக்கும் மஞ்சள் கோட்டுக்கு அருகில் இன்னுமொரு யாசகர்...

கால்கள் இல்லை, கையொன்றும் இல்லை. அமர்ந்தபடியே இருந்தார்...

பேருந்தில் வைத்து மேற்கொண்ட தீர்மானம் இன்னும் மாறாமல் ஜீவித்தது...

மஞ்சள் கடவையைத் தாண்டி மறுப்பக்கம் மாறிக் கொண்டு திரும்பினேன்.

பேருந்தில் சீட்டைக் காட்டி பணம் பெற்றவர், தம் பையில் இருந்த பணத்தை அந்த யாசகரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்......

அவரை கடந்துச் செல்ல சில நொடிகள் தாண்டியும் தாமதித்தேன்...

இதுவும் நியாயமான தாமதமாகத்தான் படுகிறது.