சொற்பேச்சுகேளா மகன்...


நாளாந்தம் அந்த பாதையின் ஊடாக பயணிக்கிறேன்..

வாரத்தில் இரண்டு தடவைகளாவது, பேருந்தின் இடது பக்க யன்னல் இருக்கையில் அமரும் போதெல்லாம், அதே இடத்தில் அந்த பெண்ணையும், அவள் தம் குழந்தைகளையும் காண்கிறேன்..

இன்று வரையில் சுமார் 3 மாதங்களாக அவளை கண்டபடியே இருக்கிறேன்.



அவளும், அவளது இடிப்பில் தொங்கும் ஒரு குழந்தையும், அவளது சொல் கேளாத ஒரு மகனுமாக எப்போதும் அந்த பேருந்து தரிப்பின் ஓரத்தில் இருப்பார்கள்.

அன்னையின் எந்த சொல்லையும் கேளாத அந்த மகனுக்கு 5 வயதிருக்கும்.

அன்னையைப் போலவே முகசாடை. நான் காணும் போதெல்லாம் அன்னையின் எந்த அழைப்புக்கும் அவன் செவிகொடுத்ததில்லை.
ஆனால் தூரம் சென்றுவிடுவதும் இல்லை.

அன்னையைச் சுற்றியே அங்கும் இங்குமாய் ஓடித்திரிவான்.
வீதி ஓரத்தில் என்றாலும், அன்னையின் நெஞ்சம் பதறியப்படிதான் இருக்கும்.

அவர்கள் தங்கி இருந்த பேருந்து நிலையத்தை விட்டு நகர்ந்தால், இரவில் தங்குவதற்கு வேறொரு இடத்தை தேட நேரும்.

அதனால் அவர்கள் எங்கும் செல்வதில்லை.

அவர்களுக்கு யாசகம்தான் வருமான மார்க்கமாக இருக்கக்கூடும்.

சில நேரங்களில் சோற்றுப் பொதி, சில நேரம் சிற்றுண்டிகளையும் அவர்களுக்கு அருகில் இருக்க காண்பேன்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அன்னையின் கைகள் ஏந்திய படியும், குழந்தைகளின் முகங்கள் ஏங்கியப் படியும் இருப்பனக் கண்டு சோர்வதுண்டு.

சில மனிதர்களின் நிலைமைகள் என்னை சோர்ந்துவிடச் செய்கிறது.

இவர்களைப் போன்றோரை காணும் போதெல்லாம் என்னென்னவோ விவாதங்கள் மனதில் ஏற்படும், பின் மறையும்.

சிலநேரம் நாள் முழுக்கவும் அதே நினைப்பில் வேறொன்றுக்குள்ளும் மனதை கொண்டுச் செல்ல முடியாத படிக்கு தொந்தரவு செய்யும் வகையினவாய் இருக்கும்.

அவர்களை காணும் போது நாத்திகனாகவும், கடந்து சென்று சில மீற்றர்களுக்கு அப்பால் உள்ள ஆலயத்தைக் காணும் போது ஆத்திகனாகவும் மாறிக் கொள்வது என் வாடிக்கையாக இருந்தது.

என் பேருந்து பயணங்களில் இவ்வாறான எத்தனையோ புதுமைகளை நாள்தோறும் கண்டுகொண்டுதான் பயணிக்கிறேன்.

ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு ஞானத்தை உணர்த்தும், பின்பு அங்கனமே மறந்து போகும்.

மீண்டும் மறுநாள் ஞானோதயம்.

போதி மரம் ஒன்றைத் தேடி அமர்ந்தபடியே ஞானம் கிடைத்தால் மட்டும்தான் அது நிரந்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இல்லையென்றால், பேருந்து பயணங்களில் எத்தனையோ புத்த பகவான்கள் தோன்றி இருக்கலாம்.

அன்றொருநாள் அந்த அன்னையின் கரங்கள் ஏந்திய படி இருந்தன.

சொற்பேச்சு கேளாத மகனும் கூட அன்னையின் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

மழை பெய்ய தயாராவதைப் போல இருந்தது.

அன்று அவர்களுக்கு எந்த கடவுளும் போஜனம் தரவில்லை போலும்.

பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே ஒரு பெரிய மதவாலயம் உண்டு.
மாதத்துக்கு இரண்டு தடவைகள் அங்கு திருவிழா நடக்கும்.

அன்றும் ஏதோ ஒரு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சாலையில் வாகனங்கள் நிற்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தன.

கரங்கள் ஏந்தியபடி அமர்ந்திருந்த அன்னையையும், அவள்தம் பிள்ளைகளையும் அன்று நன்கு காணக் கிடைத்தது 3 மாதங்களில் அதுதான் முதல்தடவை.

அந்த அன்னையின் கண்கள் என் கண்களை கடந்து சென்று மீண்டும் என்னை நோக்கியே திரும்பியது.

அவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஒருசில நிமிடங்களும் நானும் அவரது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை என்னால் மனதளவில் சற்றும் ஊகிக்க முடியவில்லை. ஆனால் மூளை சொல்லிற்று, 'பிச்சை எடுப்பவள் வேறென்ன நினைக்கப் போகிறாள், ஐந்தோ, பத்தோ.. அதனிலும் அதிகம் கிடைத்தால் இன்னும் நலம்...'

ஆனால் அவர் வார்த்தைகளால் எதனையும் கேட்கவில்லை. என்னைப் பார்த்துக் கேட்பதற்கு கூச்சமாய் இருந்திருக்கும். பாவம்...

பேருந்து கட்டணத்தை செலுத்தி மீதமாய் வழங்கப்பட்ட சில்லறைகளை சேர்த்தால் 9 ரூபாய் இருந்தது.

கையில் எடுத்து யன்னல் வழியாக வீசிவிடத்தான் நினைத்தேன்..

இரண்டு விடயங்கள் தோன்றின...

ஒன்று அந்த 9 ரூபாய் அவர்களுக்கு போதுமா?

இரண்டு, யன்னல் வழியே வீசி எறிவது அன்னைக்கு செய்யும் மரியாதையாகுமா?

மறுப்பக்கம் திரும்பிக் கொண்டேன்.

சில்லறைகளை வீசவும் இல்லை.

இறங்கிச் சென்று பிச்சையிடும் அளவுக்கு என் மனம் வளர்ந்திருக்கவில்லை.

மனம் குறுகிய பரப்பிலேயே யோசித்துக் கொண்டிருந்த போதே, பேருந்து வேகமெடுத்திருந்தது.

அன்றைய நாள் முழுவதும் அந்த அன்னையின் கண்களே நினைவில் இருந்தன.

அவள் பார்க்க 30 வயதுக்குள் இருப்பாள். இரண்டு பிள்ளைகள்.

யாரால், எந்த சூழ்நிலையில் கைவிடப்பட்டவரோ? ஏன் அவருக்கு இந்த நிலைமை? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு வருந்துகின்றவன், குறைந்தபட்சம் யன்னல் வழியாகவேனும் அந்த 9 ரூபாய்களை வீசி இருக்கலாம் என்று எண்ணியப் போது, என்னையே திட்டிக் கொண்டேன்.


சில தினங்களாகவே அவளை காண முடியவில்லை.

வேறு இடத்துக்கு சென்றிருக்க கூடும் என்று எண்ணி இருந்தேன்.

இனிமேல் கண்டால் ஒரு வேளை உணவுக்குப் போதுமான அளவு பணம் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அந்த 9 ரூபாய் சில்லறைகளைக் கூட அவருக்கென்றே பணப்பையில் ஒதுக்கி வைத்திருந்தேன்.

இப்போது நாளாந்தம் இடப்பக்கம் யன்னல் இருக்கை இருக்கும் பேருந்துகளில் மாத்திரம்தான் பயணப்படுகிறேன்..

வழமைப் போல பேருந்தும், அதற்கு முன்னால், பின்னால் இருந்த வாகனங்களும் அல்லாடிக் கொண்டிருந்தன.

தொலைவில் இருந்து கேட்ட அழுகுரல், ஏதோ மனதை வாட்ட ஆரம்பித்தது.

வேண்டப்பட்டவர் யாரோ அழுவதாகவே தோன்றியது.

பேருந்தில் இருந்து இறங்கி சற்று முன்னால் நடந்தேன்.
நீண்ட வாகன வரிசைக்கு முன்னால் ஒருப் பெண் தரையை அடித்தடித்து அழுதுக் கொண்டிருந்தாள்.

அவள் அந்த அன்னையேதான்.

முன்னால் அவளது சொல்பேச்சு கேளாத மகன் இரத்தத்தில் நீந்திக் கொண்டிருந்தான்.

எவனோ, தன்பிள்ளைக்காக ஓடித்திரியும் ஒருவனின் வாகனம், ஊரார் பிள்ளைதானே என்று இடித்து தள்ளி இருக்கக்கூடும்.

சுற்றி நின்ற சனத்தில் சிலர் அந்த அன்னையைதான் திட்டிக் கொண்டிருந்தனர்.

'பிள்ளைய வளர்க்க முடியல்லனா ஏன் பெத்துகிறீங்க' என்றொரு குரலும் வந்தது.

சிலர் கண்களில் கண்ணீரும் வந்தன. பொலிசாரோ, வாகன நெரிசலை சீர் செய்வதில் குறியாக இருந்தனர்.

பேருந்தினுள் இருந்து யாரோ வீசி எறிந்த சில்லறைகளை திரட்டச் சென்ற போது, அவன் மோதுண்டதாக தகவல் கிடைத்தது.

மனம் பதபதைத்தது. அந்த சில்லறைகளை நான் வீசி எறியவில்லை என்பது ஒரு பக்கம் பாரத்தை குறைப்பதாக இருந்தது.

சில நிமிடங்களில் கூட்டம் கலைந்தது.

அன்னை தன் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்தபடி, இன்னொரு கரத்தில் தன் மகனின் கரம்பற்றி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் என் கண்களை உற்றுப் பார்த்தபடியே என்னைக் கடந்து சென்றாள்.

மகன் எழுந்துவிட்டான் என்ற பேரானந்தம் அவள்தம் கண்களில் பிரகாசமாக தெரிந்தது.

ஆனால் இப்போது கூட அவன் அன்னையின் சொற்பேச்சு கேளாதவனாய் அன்னையோடு செல்லாமல் சடலமாகவே கிடைக்கிறான்.

அந்த இறுக்க நிலையில் இருந்து விடுபட்டு வழமைக்கு திரும்ப மனதுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.

சமீபநாட்கள் வரையில் அந்த பாதை ஊடாக பயணிப்பதை நான் தவிர்த்து வந்தேன்.

அந்த அன்னையை காண வேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு.

ஏதோ ஒரு வலி தொடர்ந்து அந்த பாதையைப் புறக்கணித்துக் கொண்டே இருந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அவ்வழியேச் சென்றேன்.

அந்த பேருந்து நிலையத்துக்கு கீழ் அந்த அன்னையும், அவரது கைக்குழந்தையும் அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த குழந்தையின் கைகள் ஏந்தியப்படி இருந்தன.

அன்னை தன் பேச்சைக் கேளாத மகனை கூவி அழைத்தபடியே இருந்தாள்.

அவன் அவள் கண்களுக்கு மட்டும்தான் தெரிவான்.

இப்போது பேருந்தில் எனக்கு அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற பிரம்மையை உணர்ந்தேன்..

பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று இரண்டு சோற்றுப் பொதிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு செல்கிறேன்.

இதற்காகவே இனி இவ்வழியே செல்வேன்..

--------------------------------



05-10-2017 உதயசூரியன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக