அவளின் கடிதம் 2


சரி வேண்டாம் விடு

நான் என் படத்தை அனுப்பவில்லை..

நீயும் உன் படத்தை அனுப்ப வேண்டாம்...

நீ சொன்னபடியே இந்த காதலுக்குள் தொலைந்து சாவோம்...



ஒருவரை ஒருவர் காணாமலே தொடரலாம்...

ஆனால் எத்தனை நாட்களுக்கு என்பதைச் சொல்?

இதன் அந்தம்தான் என்ன?

தொலைந்தும், தொலைந்த இடத்தில் நின்று இன்னும் தொலைவதும்தான் நீ சொல்லும் காதலா?

அதனை புரிந்துக் கொள்ளும் நிலையில் நான் இல்லைப் போல் தெரிகிறது.

ஆனால் உன்னை இலகுவாக கடந்தவிட்டுச் செல்லவும் முடியாமல் தவிக்கிறேன்..

கடந்த கடிதத்துக்கு நீ இன்னும் பதிலிடவில்லை..

நீண்டநாட்களாய் காத்திருந்தேன்.. இதோ, நானே எழுதுகிறேன் இன்னொருமுறையும்.

உன் அடையாளங்கள் எதனையும் என்னிடம் சொல்லாதே...

அதனை நீ விரும்பவில்லை என்பதை நான் அறிந்துக் கொண்டேன்..

பரவாயில்லை...

நீ எங்கு வசிக்கிறாய் என்பதை எனக்கு சொல்லாதே...

எந்தெந்த இடங்களை கடந்துச் சென்றாய் என்று மட்டும் சொல்...

நீ நடந்த பாதைகளைச் சொல்..

நீ நின்று கடந்த இடங்களில் இடைவெளிகளில் நானும் நிற்கிறேன்.. அந்த இடைவெளிகளை என் விம்பம் நிரப்பட்டும்..

நீ சுவாசித்து மிச்சம் விட்டுச் சென்ற காற்றின் ஒரு பங்கை நானும் உள்ளீர்த்துக் கொள்கிறேன்...

நீ நடந்தத் தடங்களை என் பாதங்கள் பரிசீலிக்கட்டும்...

உன் உருவம் நடந்துச் சென்றப் பின்னர் ஒளியில் ஏற்பட்ட சிறிய இருளை, என் உருவம் வெளிச்சப்படுத்தட்டும்...

உன் முகம் புதைந்த காற்றுப் படுக்கையில் என் முகம் புதைத்து, என் விம்பத்தை உனக்கு அனுப்புவேன்...

நீ என்னை உணர்வாய்...

இவ்வழியின் உன்னை நான் அடையாளம் காண்பேன்...

இதற்கும் அஞ்சிகிறாயா?

என் பெண்மை திமிர் துறந்து இந்த கடிதம் வரைகிறேன்..

உன் ஆணாதிக்கத்துக்குள் சிக்கிக் கொள்வதிலும் அவ்வப்போது சுகமாய் இருக்கிறது..

பதிலனுப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக