அடேய் தம்பி...

அடேய் தம்பி... 
அங்கு ஏன் சென்றாய்....?
முகமறியாமல்,
முகவரி அறியாமல், 
சிதைந்து போனப் பின்னே
சிந்திக்க வைத்தாயே... 

உன்னைச் சுற்றி
உன் ஊரில்
எத்தனை அன்பு இருந்திருக்கும்...
நீ எத்தனை அன்பை சுற்றி இருந்திருப்பாய்?
என்னென்ன கனவுகளை
எங்கெங்கே சேமித்திருப்பாய்?
அம்மாவுக்கு சேலை,
அப்பாவுக்கு சாரம்,
சகோதரர்களுக்கு இனிப்பென்று?
எதை வாங்க நினைத்திருப்பாய்?
அத்தனை சுவற்றுக் கற்களுக்கும்
அடியில் நீ கிடைந்திடையில்?
எத்தனை நினைவுகளில் - மனம்
ஏங்கி வாட்டியிருக்கும்?
நினைக்கையில் என் நுரையீரல்
நிராகரிக்கிறது காற்றை.. 
இறுதி கணத்தில் உன் வலியை
எண்ண முடிகிறதே ஒழிய,
ஏற்க முடியவில்லையாடா?
அந்தச் சரிவின் மொத்த பாரத்தையும்
உந்தி உதைத்து மேலெழுந்த
உன் உயிருக்கு,
உடலையும் சேர்த்தே மேலிழுக்கும் வலு இல்லையா?
போடா தம்பி...
கொழும்புக்கு ஏன் வந்தாய்?
குப்பைகளை சேர்த்து
தானே தன் தலையில் கொட்டிக்கொள்ளும் தேசமிது.....
சட்டங்களை மீறி கட்டிடம் கட்டும்
சமாதிகளின் ஊர் இது...
எதனை நம்பி இங்கு வந்தாய்... 
உன்னை நான் அறியேன்...
உன் முகத்தை நான் பார்த்ததில்லை.
உன் வயதில் எனக்கும் தம்பி இருக்கிறான்..
உன் வயதை கடந்துதான் நானும் இவ்வயது கண்டேன். 
உன் அம்மாவின் கண்ணீரில்,
அப்பாவின் கையறு நிலையில்,
நண்பர்களின் அழுகுரலில்...
உன்னைக் காண்கிறேனடா... 
உன் கனவுகளையும் ஆசைகளையும்
நானும் சுமந்திருக்கிறேன்...
இறக்கும் தருணத்தில்,
இதையெல்லாம் நினைத்திருப்பாயே...
அழுது அழுது கண்ணீர் வற்றி இருக்குமே... 
தாகம் தணிக்க
நாக்கு வரைக்கும்
கண்ணீர் கூட நீண்டிருக்காதே...
உயிரோடு இருக்கும் போதே
உடல் உக்குவதாய் உணர்ந்திருப்பாயே... 
ஒளியே இல்லாமல் அஞ்சி இருப்பாயே அடா...
சே... 
உனக்காக உருக முடிந்த எனக்கு,
காக்கும் சக்தி
கடுகளவும் இல்லாதிருந்திருக்கிறேனே...
வெட்கமாய் இருக்கிறது தம்பி.... 
சரி... நீ போய்விட்டாய்...
போ...
அங்கிருந்து பார்...
உன்னை கொன்றவர்கள் எல்லாம்
ஒருவர் பின் ஒருவராக விரல் காட்டி தப்பிக்க பார்ப்பார்கள்... 
பெரும் நகைச்சுவையாய் இருக்கும்...
இந்த
அவமான அரசியல் பார்த்து
அங்கிருந்து சிரி... 
அனுமதிப்பெற்று கட்டவில்லை என்கிறார்கள்...
கட்டிய கட்டிடத்தை
மாயாஜாலம் செய்து
மறைத்தா வைத்திருந்தார்கள்...
கண்களில் தெரிந்தும்
கட்டுவதை ஏன் நிறுத்தவில்லை? 
இதெல்லாம்
வக்கற்றவர்களின் வார்த்தைகள் தம்பி... 
அவர்களை பார்த்து
அங்கிருந்து உமிழ்.... 
பத்தாயிரம் கட்டிடங்களை இடிப்பதாய்
பாட்டலி சொல்கிறான்..
பார்ப்போம்,...
ஒரு செங்கல்லையேனும் அசைக்கிறானா? என்று.. 
நீ உமிழ் தம்பி...
எச்சில் கொண்டு என்னையும் நனை...
நானும் வெட்கம் கெட்டவனாய் கூனிக்குறுகுகிறேன்..
உன் அன்னையின் அழுகை,
இன்னும் குடைகிறது...
நண்பர்களின் அழுகுரல்
செவிடாக்குகின்றன... 
நீ அமைதியாய் இரு...
உன்னை வைத்தேனும் உலகம் கற்கட்டும்...
நீதி மீறிய கட்டிடங்களை
நீக்க.....


வெள்ளவத்தை கட்டிடச் சரிவில் (18-05-2017) உயிரிழந்த பத்தனை - க்றேக்லி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இராமர் நிரோஷன் என்ற இளைஞனின் நிமித்தம் எழுதியது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக