இதோ என் கதை

சற்று முன்னர் நடந்த சம்பவம் என்னவென்று புரியவில்லை இன்னும்.

ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்யங்கள் கோர்வையாக நினைவில் வந்து போயின.

முன்னறையின் ஷோஃபாவில் அமர்ந்த படியே யோசித்தேன்..


கால்களை கீழ் ஊன்றி அமரவும் அச்சமாய் இருந்தது..

மேலே உயர்த்தி மடக்கி, கீழிடையோடு சேர்த்துக் கொண்டேன்...

சந்திரிக்கா யார்? அவள் அப்பா யார்? சற்று முன்னர் வந்த கார்த்திகா யார்...

மனிதர்களாகவே காட்சி தந்தாலும் அமானுஷ்ய அனுபவங்களை தந்துவிட்டு செல்கிறார்கள்..

அவர்களில் யாருக்கு அஞ்ச வேண்டும் என்று கூட தெரியவில்லை...

என்னோடே திரிவுந்தில் ஒன்றாக வந்து பழகிய சந்திரிக்கா ஏற்கனவே இறந்து போனவள் என்று ஒருவர் மரண அறிவிப்பை காட்டுகிறார்..

மரண அறிவிப்பை காட்டியவர்தான் இறந்து போன தன் தந்தை என்று சந்திரிக்கா சொல்கிறாள்...

நானே என்னைக் கண்டு அஞ்சும் நள்ளிரவில் என் வீடு தேடி வந்த சந்திரிக்கா, மறுநாள் புகைப்படத்தில் அவளின் தந்தையாக தெரிகிறாள்...

கனவில் வந்த அவள் தந்தை என்னையே கல்யாணம் செய்துக் கொள்ள சொன்னதாக சொல்கிறாள்...

முகம் கூட மறந்து போய்விட்ட கார்த்திகா ஆறு வருடங்களுக்கு பின்னர் எதற்காக வந்தாள்...

சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்த சந்திரிக்கா என்னை கட்டி அணைத்திருந்த போது, பியானோ கண்ணாடியில் ஏன் அவளது தந்தையாக தெரிந்தாள்.?

எல்லாமே குழப்பமாக இருந்தது.

ஆனால் சந்திரிக்கா எனக்கொரு போதையாகி போனாள்..

எல்லா நொடிகளிலும் அவளின் முகம் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது...

அவள் நினைவில் இருந்து மீள முடியவில்லை..

சந்திரிக்கா பேயாக இருக்கக் கூடுமா?

இருக்கவே கூடாது....

அவள் என் காதலியாக இருக்க வேண்டும்.

இதுதான் என் விருப்பம்..

குழப்பம் பெருகி சோஃபாவில் கால் நீட்டி படுக்கலானேன்....

வராத தலைவலி வந்து சேர்ந்தது...

கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தேன்...

வீட்டில் யாரும் இல்லை..

சற்றுமுன்னர் வந்த கார்த்திகாவும் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டாள்..

அவள் இனி இங்கு வருவாள் என்று தோன்றவில்லை..

அவள் அச்சத்தின் உச்சத்துக்கே போய் இருப்பாள்..

போகும் போது தொலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டாள்....

அம்மாவிடம் பேசி 2 நாட்களுக்கு மேலாகிவிட்டது நினைவுக்கு வந்தது...

அம்மா ரதிதேவி...

வத்தளையில் உள்ள வீட்டில் இருக்கிறார்...

அதுதான் எங்கள் பூர்வீக வீடு...

எனக்கு தொழிலுக்கு சுகம் என்பதால் வெள்ளவத்தையில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறேன்..

அம்மா சில மாதங்களுக்கு ஒருமுறை வந்து போவதுண்டு;..

அவருக்கு வெள்ளவத்தை பிடிப்பதில்லை...

ஆனால் வெள்ளவத்தை பெண் ஒருத்தியை கட்டி வைத்துவிட்டால் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.

அவர் காட்டும் புகைப்படங்கள் எதுவும் எனக்கு பிடிப்பதில்லை...

இனி புகைப்படங்களை காட்டாது, அவரையே ஒரு பெண்ணை தெரிவு செய்யும்படி கூறி இருந்தேன்...

சந்திரிக்காவின் விடயம் உறுதியாகிவிட்டால், அவரிடம் சொல்லி மகிழலாம் என்றிருந்தேன்..

ஆனால் நிலைமை எனக்கு சாதகமாக இல்லை.

வழமையாக அம்மா நாளாந்தம் கைப்பேசிக்கு அழைத்து பேசுவார்..

ஆனால் சமீபகாலமாக அப்படி இல்லை..

அவராக தொலைபேசி அழைப்பை எடுப்பது குறைவு..

நானாக எடுத்தால் மட்டுமே பேசுகிறார்...

இன்னும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்ற கோபம் அவருக்கு...

வீட்டு இலக்கத்துக்கு அழைப்பை எடுத்தேன்...

மறுபக்கத்தில் அம்மா பேசினார்...

வழமையான நல விசாரிப்பு மட்டுமே நடந்தது...

சந்திரிக்காவுடன் பேசுவதற்கு இருந்த விடயத்தை விட, அம்மாவிடம் பேசிக் கொள்ளவிருந்த விடயங்கள் மிகக் குறைவாக இருந்தன.
ஏனோ தெரியவில்லை..

இங்கு நடந்த எதனையும் சொல்ல நினைக்கவில்லை..

'டொக்.... டொக்... டொக்...'

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது...

ஒரு கணம் அதிருந்து மறுகணம் எழுந்து யன்னலில் பார்த்தேன்...

வெளியே சந்திரிக்கா நின்றிருந்தாள்..

எனக்கு சுவாரஷ்யம் அற்றுப் போய் இருந்தது.

அம்மாவிடம் பிறகு அழைப்பதாக சொல்லிவிட்டு கைப்பேசி அழைப்பைத் துண்டித்தேன்...

அவள் சந்திரிக்காவாக இருக்குமா? அல்லது அவளது தந்தையாக இருக்குமா?

சந்தேகத்தோடு கதவைத் திறந்தேன்...

சோர்வாக இருந்த முகத்தை அவள் கண்டு கொண்டாள்..

'ஏன் ஒரு மாதிரி இருக்க..? எதயும் கண்டு பயந்துட்டியா'

'இல்ல... லேசா தலை வலி... அதான் படுத்திருந்தன்..'

அவள் உள்ளே வந்தாள்..

முதல்முறை வீட்டுக்குள் வருவதைப் போல அமராமல் நின்றிருந்தாள்...

நீண்ட சோஃபாவின் ஒரு மூலையில் நான் அமர, மறு மூலையில் அவள் அமர்ந்து என்பக்கம் திரும்பிக் கொண்டாள்..

'அப்பறம்... ஏன் சைலன்ட்டா இருக்க.? நான் வந்தது பிடிக்கல்லயா?'

'சே...சே.. அப்படியில்ல...'

'பின்ன என்ன.... காலையில மொபைல்ல பேசின மாதிரி இப்ப இல்லையே'

எனக்கு சந்திரிக்காவை இழந்துவிட விருப்பம் இல்லை..

ஆனால் குழப்பத்துடனேயே தொடர்ந்து இருக்கவும் விரும்பவில்லை.

நேரடியாக கேட்டுவிட நினைத்தேன்..

என் கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை காட்டினேன்..

நேற்று இரவு எடுத்துக் கொண்ட தாமே (செல்ஃபி) அது...

அதில் நானும் சந்திரிக்காவின் தந்தையும் இருந்தோம்..

புகைப்படத்தை பார்த்தவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்..

பின் அருகில் வந்து அமர்ந்தாள்...

'என்னடா இது... க்ரஃபிக் எதும் செய்தியா'

'க்ரஃபிக் செய்றதுக்கு உன் அப்பாட படத்துக்கு எங்க போவன்'

'ஆமா இல்ல...'

நேற்று இரவு சந்திரிக்கா இங்கு வந்து என்னோடு சில மணி நேரத்தை கழித்ததையும், பின்னர் நானே அவளை வீடு வரை கொண்டு சென்று விட்டுவந்ததையும், ஆனால் நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் சந்திரக்கா இல்லாமல் அவளது தந்தையே இருந்தார் என்பதையும் கூறினேன்....

அவள் கண்ணில் இருந்து நீர் துளி விழுந்தது...

ஆனால் அதனை அவள் காண்பிக்கவிரும்பவில்லை..

துடைத்துக் கொள்ளவும் இல்லை..

'ஏன்டா என்னோட அப்பா உன் பின்னாடியே வாரார்'

'அது இருக்கட்டு;ம்.. இப்ப நான் யார நம்புறது...'

என்ன சொல்ல வார?

பார் சந்திரிக்கா, நான் வெளிப்படையா இருக்கதான் விரும்புறன்.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... உன்ன இழக்க துளி கூட விருப்பம் இல்ல.. உன் ஒரு நொடிக்கூட என்னால மறக்க முடியல்ல..... ஐ...ஃபீல் லைக் யு ஆர் மை சோல்...

என்று சொல்லும் போதே அவள் அருகில் வந்து இடக்கைப் பிடித்து மேற்தோளில் சாய்ந்து கொண்டாள்...

எனக்கும் நீ என்னோட உயிர் மாதிரிதான் தோனுது...

என்னுள் அன்பு பெருக்கெடுத்து, அடிவயிற்றில் ஏதோ கிளர்ந்து, உடல் முழுவதும் வியாபித்து, கண்களில் கண்ணீர் பொங்கியும், உடல் மயிர் சிலிர்த்தும் வெளிப்பட்டது...

அன்பே ஆருயிரே என்று கொஞ்சத்தான் தோன்றியது...

'ஆனா நீ வெறும் உயிரா மட்டும் இருந்துடுவியோனு பயமா இருக்கு'

'என்ன சொல்ற'

'அதாவது நீ ஆவியா இருப்பியோனு சந்தேகமா இருக்கு'

அவள் சிரித்தாள்... நான் சுவாரஷ்யமற்றிருந்தேன்...

இப்படி நீ ரெண்டாவது தடவையா கேட்குற... அன்றைக்கு ட்ரிசோல வச்சி கேட்டியே நினைவிருக்கா?

அன்று திரிவுந்தில் வைத்து நாங்கள் பேசிக் கொண்டது அவளுக்கு மட்டும்தான் தெரியும்..

ஆகவே வந்திருப்பது உண்மையா சந்திரிக்காதான் என்று உறுதிப்பட்டுக் கொண்டேன்...

என் தோளில் இருந்து எழுந்திருந்த அவள் தலையை மீண்டும் அழுத்தி தோளோடு பதித்தேன்...

என் இடக்கை அவள் வலக்கையை பற்றிக் கொண்டது..

'நானும் சில உண்மைகள உனக்கிட்ட சொல்லிடனும்.. அதுக்குதான் வந்தன்..'

சந்திரிக்காவே சொல்ல முனைவது இந்த அமானுஷ்ய புதிர்களுக்கு விளக்கமாக இருக்கும் என்று கருதினேன்..

'என் அப்பாட பேர் கதிர், அம்மா வனிதா... என்னோட அண்ணா குணா... அவர் ஒரு எக்சிடன்ட்ல செத்து போய்ட்டார்... ஆனா அவர யாரோ கொன்றுட்டதா சொல்றாங்க... இன்னும் வழக்கு போகுது...

அண்ணா இறந்த பிறகு நான் மட்டுந்தான் அவங்களுக்கு மூத்தபிள்ளை, இளையபிள்ளை எல்லாம்..

நம்ம வீட்டில வாழ்ந்த இன்னொரு உயிர், அப்போட ட்ரிசோதான்... அண்ணா இறந்த பிறகு அவரோட இன்சூரன்ஸ் பணத்தில அத வாங்கினதால அப்பா அத எங்க அண்ணாவாவேதான் பார்த்தார். எங்களோட எல்லா கஷ்ட்டத்தையும் அந்த ட்ரிசோதான் தீர்த்து வச்சது.. அண்ணா மாதிரியே... நாங்க எல்லாமே அத நேசிச்சம்... என்ன ஒரு ஆன்ரி தன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி வக்கிறதுக்காக அப்பாக்கிட்ட கேட்டிருந்தாங்க. ஒருநாள் அப்பா அவங்களோட கெஸ்வல் மீட்டிங்கு ஏற்பாடு பண்ணி இருந்தார். நான், அப்பா, அம்மா எல்லாரும் எங்க ட்ரிசோவில போனோம்... அப்போ ஒரு ஜீப் வண்டி வந்து எங்க ட்ரிஷோவ மோதிட்டு போய்டிச்சி... அம்மாவும் அப்பாவும் அந்த இடத்திலயே செத்துட்டாங்க... எங்கள பார்க்க வர சொல்லி இருந்த அந்த ஆன்ரியும் அடிபட்டுட்டாங்க...

'அம்மாவும் செத்துட்டாங்களா?'

'ம்ம்ம்'

'ஆனா இன்றைக்கு காலையில மொபைல்ல பேசும் போது, அம்மா வாராங்க பிறகு எடுக்குறேன்னு சொன்னியே'

'சும்மா சொன்னன்... மொபைல கட் பண்றதுக்காக..'

அவள் என் தோளில் கண்ணீரை சிந்தியபடி சொல்லிக் கொண்டிருந்தாள்....

எனக்கும் கண்கள் களங்கின...

ஆறுதல் கூற எனக்கும் வார்த்தைகள் இல்லை...

தோளில் சாய்ந்தபடி என் இதழ்களுக்கு நேரே இருந்த அவளின் தலையை வலக்கையால் தடவிவிட்டபடி, முத்தத்தை பதித்தேன்...

அவள் ஆழமாக அழுதாள்...

அவளது வலது கையை இறுகப்பிடித்தபடி இருந்தேன்...

அழவேண்டாம் என்று கூறும் அளவுக்கு நான் தைரியமாக இருக்கவில்லை..

அவள் சோகத்தின் உச்சியில் இருப்பது தெரிந்தது.

இந்த அழுகையோடு அவளது மனதில் மறைந்திருந்த அழுத்தங்களும் கரையட்டும் என்று விட்டிருந்தேன்...

சில நிமிடங்களில் அழுகையை விடுத்து அவள் தொடர்ந்தாள்...

'அந்த எக்சிடன்ட்ல எனக்கு சின்னதாதான் காயம் பட்டது... அம்மா என்ன கட்டிப்பிடிச்சி அடியெல்லாம் அவங்களே தாங்கிக்கிட்டாங்க... என்ன காப்பாற்றிவிட்டுட்டு அவங்க போய்ட்டாங்க...

மீண்டும் மீண்டும் அழுதபடியே அவள் பேசிக் கொண்டிருந்தாள்..

'ரெண்டு கிழமை ஹொஸ்பிட்டல்ல இருந்தேன்... அடிக்கடி மயக்கம் வந்திட்டே இருந்தது.. அம்மா அப்பாட டெட்பொடிஸ கூட பார்க்க கிடைக்கல்ல.. நான் குணமாகுறதுக்கு முதல்லயே புதைச்சிட்டாங்க.. நான் அநாதை மாதிரி இருந்தன்...'

'அந்த ஆன்ரிக்கு என்னாச்சி..?'

கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டதைப் போல என்னையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்..

'அவங்களுக்கு சுயநினைவு இல்லாம போய்ட்டு... அவங்க இப்ப என்னோடதான் இருக்காங்க.. எனக்கு யாருமே இல்ல... இப்போதைக்கு அவங்க மட்டும்தான் இருக்காங்க...'

'அவங்கள யாரும் தேடல்லயா?'

'இதுவரைக்கும் யாரும் தேடி வரல்ல... பேப்பர்ல அட்வடைஸ் பண்ணலாம்னு நினைச்சன்.. ஆனா இப்போ எனக்கு இருக்க ஒரே சொந்தம் அவங்கதானு தோனினதால, பண்ணல்ல... அவங்களுக்கா நினைவு வரட்டும்னு இருக்கன்...'

அவள் கண்ணீர் என் தோளில் விழுந்து சட்டையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது..

வலது கையில் இருந்து கைப்பேசி அதிர்ந்தது...

புதிய இலக்கமாக இருந்தது...

கார்த்திகாவாக இருக்குமென்று நினைத்தேன்...

அழைப்பை ஏற்றேன்...

'ஹாய்... நான் சந்திரிக்கா... சொரிடா, இன்றைக்கு வர முடியாம போய்ட்டு... நாளைக்கு மீட் பண்ணுவோம்.. கோபிக்காத... ப்ளீஸ்...'

இடது பக்கமாய் திரும்பி பார்த்தேன்..

இதுவரையில் அழுது கொண்டிருந்த சந்திரிக்கா அங்கு இருக்கவில்லை..

அவள் வடித்த கண்ணீர் மட்டும் அப்படியே இருந்தது...

தொடரும்.......

முதல் 3 பாகங்களுக்கும்.....

http://www.vikeywignesh.com/p/blog-page_5.html

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக