பெண்களின் அரசியல் பங்கேற்றல் ஏன் முக்கியப்படுகிறது?



Image result for women in politics

சர்வதேச அளவில் தற்காலத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்றல் அதிகரித்து வருகிறது.

பலநாடுகளின் தலைவர்களாக தற்போது பெண்கள் பதவி வகிக்கின்றனர்.

ஒருநாட்டின் தலைவராக பெண் ஒருவர் பதவி வகிப்பதால் அந்த நாட்டின் பெண்களின் அரசியல் பங்கேற்றல் அதிகம் இருக்கிறது என்று கொள்ள முடியாது.


முன்னைய காலங்களில் மன்னர் ஆட்சிக் காலத்தில் பல நாடுகளை பெண்களே தனித்து ஆண்ட நிலைமைகள் இருந்துள்ளன.

மன்னனே இருந்த போதும் மஹாராணியின் அதிகாரம் மேலோங்கி இருந்த காலகட்டங்களும் இருந்துள்ளன.

ஆனால் இவற்றை எல்லாம் பெண்களின் முழுமையான அரசியல் பங்கேற்றல் என்று எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

பெரும்பாலான நாடுகளில் பெண்கள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டும் வரும் நிலைமை அதிகரித்திருந்தது.

ஆனால் தற்காலத்தில் இந்த நிலைமை பெரும்பாலான நாடுகளில் மாற்றம் அடைந்து வருகிறது.

அரசியல் சார்ந்த விழிப்புணர்ச்சி பெண்கள் மத்தியில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.

அரசியல் செயற்பாடுகளைப் போலவே, அரசியல் பேச்சிலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு மேலோங்கி இருக்கிறது.

இதற்கு சமுக வலைத்தளங்களும், அதன் ஊடான கருத்தறிதல் வசதி மற்றும் சுதந்திரம் என்பதோடு, கருத்துக்களை தெரிவிக்கும் வசதி மற்றும் சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக அமைகிறது.

அத்துடன் தற்காலத்தில் பெண்களின் கல்வி அறிவு மட்டமும் இதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

இவ்வாறான நிலையில், பெண்களின் அரசியல் பங்கேற்றலின் முக்கியத்துவம் என்னவென்பதை ஆண்களும் பெண்களும் அறிந்திருப்பது அவசியமாகிறது.

பெண்களால் வித்தியாசமான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியும்.

ஆண்களிலும் பார்க்க பெண்களுக்கான தேவைகள் வித்தியாசப்படுகின்றன.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட விடயங்களில் ஆண்களிலும் பார்க்க பெண்களே அதிக அக்கறைக் காட்ட முடியும்.

குறிப்பாக நாளாந்த பராமரிப்பு, பால்நிலை சமத்துவம், பெண் உரிமைகள், வயதானவர்களின் பராமரிப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு உள்ளிட்ட விடங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான விடயங்கள் பெண்களையே அதிகம் தாக்கத்துக்கு உள்ளாக்குகின்றன.

எனவே இந்த விடயங்களில் அவர்களால் கூர்ந்து அவதானம் செலுத்த முடியும் என்பதோடு, அதனை அணுகும் கோணங்களையும் இயல்பாகவே அவர்கள் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறான விடயங்களில் அரசியல் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பெண்களின் அரசியல் பங்கேற்றல் அதிகம் இருக்க வேண்டும்.

பெண்களின் ஆளுகைத் திறன் வேறுபட்டது.

பெண்கள் ஆட்சி செய்கின்ற அல்லது நிருவகிக்கின்ற முறைமையில் ஆண்களைக் காட்டிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களால் மாறுபட்ட வகையில் கொள்கைகளை வகுக்க முடியும்.

அதேநேரம் வித்தியாசமான ஆளுகைத் திறனையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

'லின் கேத்லீன்' என்ற அமெரிக்க ஆய்வாளர் நடத்திய ஆய்வின் பிரகாரம், பெண்கள் ஆண்களைக் காட்டிலும் வித்தியாசமான தலைமைத்துவ பாங்கை கொண்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது.

குறிப்பாக பெண்கள் இணக்கப்பாடுகளை கட்டியெழுப்புகையில், ஒத்துழைப்புடனும் அழுத்தமானதுமான அணுகுமுறையை பின்பற்றுகின்றனர்.

எனினும் ஆண்கள் ஆக்ரோஷமான தன்மையைக் கொண்டிருக்கின்றனர் என்று அவரது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குறைந்த அளவிலேயே ஊழல் செய்கின்றனர்

பெண்கள் மிகவும் குறைந்த அளவிலேயே ஊழலில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இணையத்தளங்களின் வாயிலான அறிய முடிகிறது.

பெண்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்பதற்கில்லை.

ஆனால் ஒப்பீட்டளவில் குறைவான ஊழல்களே அவர்கள் தரப்பில் இடம்பெறுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

அதிக அளவான பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட நாடுகளில் ஊழல் குறைந்த அளவில் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறைமட்டத்தில் உள்ள பெண்களின் அரசியல் பங்கேற்றல் நிலைமை மேலோங்கச் செய்யப்பட வேண்டியது அவசியப்படுகிறது.

காலாகாலமாக கலாசாரக் கட்டுப்பாடுகளின் மீது முன்வைக்கப்படுகின்ற பெண்ணடிமைத்தன குற்றச்சாடுகள் நீங்குவதற்கு, அரசியல் பங்கேற்றலின் முக்கியத்துவம் குறித்து இருபாலாரும் அறிவது அத்தியாவசியப்படுகிறது.

பெரும்பான்மையான ஆண்களே ஆட்சியில் இருக்கும் போது, கொள்கை வகுப்பு, ஆட்சி முறைமை, நலன்திட்டங்கள் என அனைத்திலும் பெரும்பான்மையான ஆண்சிந்தனைகளே மேலோங்குகின்றன.

இதனால் பெண்கள் கோணத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்களில் பெண்தன்மை அற்று, ஆண் தன்மை வலுத்ததாக உள்ளன.

எனவே இந்த இறுக்கச் சூழலில் இருந்து பெண்களால் விடுபட முடியாத தன்மை காணப்படுகிறது.

வெறுமனே ஆண்களை மாத்திரம் இந்த விடயத்தில் குறைசொல்லிவிட்டுக் கடந்து செல்ல முடியாது.

எந்த நாட்டிலும் ஏறத்தாழ 50 சதவீதம் ஆண்களும் 50 சதவீதம் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்களில் ஏறத்தாழ ஆண்களும் பெண்களும் சமமான அளவில் வாக்காளர்களாகவும் இருக்கிறார்கள்.

அவ்வாறான நிலையில் பெண்கள் தங்களது வாக்குகளைக் கொண்டு ஏன் பெண் பிரதிநிதிகளை உருவாக்க முடிவதில்லை? என்ற கேள்வி எழுகிறது.

இங்கு பெண் வேட்பாளர்களுக்கு கூறத்தக்க அளவுக்கு பஞ்சமும் இருப்பதாக தெரியவில்லை.

பெண்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில், அரசியல் கட்சிகளும் பெண் வேட்பாளர்களை அதிகரிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளும் என்பது இயற்கையான தந்திர நியதி.

இதற்கு சட்டத்தில் பெண்களுக்கான விகிதாசாரத்தை ஒதுக்க வேண்டியது அவ்வளவு கட்டாயம் இல்லை.

ஆனால், பெண்களின் அரசியல் பங்கேற்றல் தொடர்பான விழிப்புணர்வை இருபாலாரும் பெற்றிருக்க வேண்டும்.


தினக்குரல் - 05-02-2017




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக