கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பின் இன்பம்

இப்போதெல்லாம் எந்தன் துவாலையை பார்க்கும் தருணங்களிலெல்லாம் கலக்சிக்கு போய் திரும்புவோமா என்றொரு சிறுபிள்ளை எண்ணம் தோன்றுவதுண்டு...

கந்தசாமியும் கலக்சியும் படித்துவிட்ட எல்லோருக்கும் சில நாட்களுக்கு இப்படி ஒரு மாயச்சிறுமனம் ஒட்டிக் கொண்டிருக்கும்... பின் விடுபடும்...

பொதுவாகவே நான் ஜே.கே அண்ணாவின் அபிமானி.

அவர் அரசியல்வாதி அல்லாவிட்டாலும், அவருக்கே வாக்கு என்ற நிலை..

ஆகவே கந்தசாமியும் கலக்சியும் புத்தகம் வெளியாவதற்கு முன்னமே அது பிடித்துவிட்டது.


அதே அளவுக்கு வாசிக்கும் போதும் பிடிக்குமா என்றொரு சந்தேகம் சில சமயம் தெரியாத்தனமாக வந்து கொண்டிருந்தது.

புத்தகத்தை இணையத்தளத்தில் வாங்கினால் விரைந்து கிடைக்கும் என்றோர் நம்பிக்கையில் இருந்த போதும், ஒரு வாரத்தின் பின்னரே அது கைக்கு கிடைத்தது எனக்கு மட்டும்தான்.

மற்ற எல்லோருக்கும் முதல்நாளே கிடைத்தது என்பது ஒரு பெரிய ஏமாற்றம்.

புத்தகம் கிடைத்த முதல்நாளே 100 பக்கங்களைக் கடந்துவிட்ட போதும், பின்னர் ஏற்பட்ட சில நிகழ்வுகள் வாசிப்பை பூரணப்படுத்த சில நாட்களை எடுத்துக் கொண்டன..

மீண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் என்று மூன்று முறை வாசித்த பின்னரும், தாகம் தாகம் தலைக்கேறி இன்னொருமுறை வாசிப்போமா என்றும் தோன்ற வைத்துவிடுகிறது...

என் வாசிப்பு நேரத்தை தின்று தொலைக்கும் வேலைப்பளுவை நினைத்து, இப்போதெல்லாம் விரக்தி அடைந்து கொள்கிறேன்...

எப்போதும் ஒரே புத்தகத்தை எடுத்து வைத்து வாசித்து அதற்குள் மூழ்கிப் போய்விட விரும்புகின்றவன் அல்ல நான்...

ஒரு சமயத்தில் 2 அல்லது 3 புத்தகங்களை வாசிக்கும் பழக்கம்..

புத்தகத்தில் தொலைந்து போய்விடாமல் பார்த்துக்கொள்ள முனைவேன்..

ஆனால் என்னை இரண்டு வாரங்கள் ஒரு புத்தகம் கட்டிப் போட்டு வைத்திருந்தது என்றால், அது கந்தசாமியும் கலக்சியும்தான்...

இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு கருத்தாடலில் தெரிவிக்கப்பட்ட விடயம் இதுதான்...

'கந்தசாமியும் கலக்சியும் வரட்டும், பலருக்கு அது புரியப்போவதில்லை, பின்னர் எங்கனம் இலக்கிய விமர்சனங்கள் வருமெனப் பார்க்கலாம்'

இதற்காகவே நான் பல விமர்சனங்களை எதிர்பார்த்திருந்தேன்..

ஒரு புத்தகத்தை வெளியிட்டவர் மீண்டும் வாசிக்கும் முன்னரே தூக்கி அடித்து அது 'மொக்கை, தட்டை' என்றெல்லாம் சொல்லிடும் துணிச்சல் அதிகம் உள்ள உலகம் இது..

அதனாலேயே நான் கலக்சிக்குள் எங்காவது புகுந்து கொண்டுவிட அடிக்கடி நினைப்பதுண்டு...

கந்தசாமியுடன் நான் சென்ற கலக்சி மிகப் பாதுகாப்பானது..

அங்கு விமர்சனங்களுக்கு அடிவிழும்... துவாலை கழற்றப்பட்டு சூடு வைக்கப்படும்...

ஒரு சாதாரண தமிழனின், அல்லது எந்த ஒரு பாதிக்கப்பட்ட இனத்துக்காரனின் ஏக்கமான ஒரே ஒரு வரிதான் இந்த மொத்த நாவலும் என்பது என் கருத்து...

'சே... இப்படி நடக்காம இருந்திருந்தா, எங்களுக்கு இந்த நிலைமையா...?'

ஒரு செய்தியாசிரியனாக இருக்கும் போது நான் அடிக்கடி கேள்வியுறும் கூற்று இது...

ஒவ்வொருவரின் எண்ணப் பிரகாரம், நடந்திருக்கக்கூடாத அந்தச் சம்பவம் மாறுபடும்...

அவ்வாறான நடந்திருக்கக்கூடாத ஒரு சம்பவத்தைக் குறித்தது இந்த நாவல்...

இந்த ஒற்றை வரி வாசிப்பவரைப் பல நாட்கள் அமர்ந்த இடத்தில் அங்கிங்கு நகராதபடிக்கு அப்படியே வைத்திருக்கும்.

இந்த நாவலை ஒரு வரலாற்றுப் புனைவாக, விஞ்ஞானப் புனைவாக, சமுகப்புனைவாக, நகைச்சுவைப் புனைவாக, அரசியல் புனைவாக, என்று எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது கூடுதல் வசதி...

எனக்குப் பிடித்த எழுத்தாளர், எனக்குப் பிடித்த கலக்சி, எனக்குப் பிடித்த கருந்துளை, எனக்குப் பிடித்த கரும்பொருள், ஹொலோவேல்ட், கணினி, கடவுள் எனும் கருத்தியல், என்று ஒரு அண்டவெளி இந்தப் புத்தகத்தில் உண்டு...

இதுநாள் வரையில், நகைச்சுவையைப் பார்த்து ஒரு நமட்டு சிரிப்போடு கடந்து சென்றுவிடும் பழக்கம்தான்; இருந்தது..

இந்தப் புத்தகத்தை வாசித்து பக்கத்துக்கு பக்கம் விழுந்து விழுந்து சிரித்ததை மறைந்திருந்து ரசித்த என் மனைவியைக் கண்டேன்...

மகிழ்ச்சி...

வலிகள் புனைவுகளில் சொல்லும் போது வாசிப்பவனை வலிக்கப் பண்ணக்கூடாது என்பது என் எண்ணம்...

அந்த வலியை அவன் வாசிப்பு அனுபவமாகப் பெற வேண்டும்..

அந்த அனுபவம் இன்பமாக இருக்க வேண்டும் ( pleasure of reading என்றால் எல்லோருக்கும் தெரியும்)

அந்த இன்பம் இங்கு ஏராளம்...

இந்த நாவலை ஒரு விஞ்ஞானப் புனைவு என்று மட்டும் சொல்லி என்னால் கடந்து போய்விட முடிந்தால், என்; அரசியல், வரலாற்று அறிவை வெட்கப்படும் வகையில் ஒருமுறை முறைப்பேன்.... தேவைப்பட்டால் உமிழ்வேன்....

இதில் சமுக ஏக்கமும், அரசியலும் வரலாறும் படிமமாய் சொல்லப்பட்டிருப்பதாய் என் சிறு அறிவுக்குப் படுகிறது.

நிற்க...

நான் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, வழங்கப்பட வேண்டிய 'ப்ரொஜெக்ட்டுக்காக' தெரிவு செய்த கருப்பொருள் 'பேய்'

அதனாலேயே என் பாடசாலையில் நான் பிரபலம்...

பேய்கள் பற்றிய நீண்ட ஆய்வுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்...

'பேய்களுக்கென்று ஒரு உலகம் உண்டு. அது சாதாரண மனிதனின் கண்ணுக்கு தெரிவதில்லை. பேய்களின் கண்களுக்கு மனிதனின் உலகம் தெரிவதில்லை. இந்த இரண்டு உலகத்தில் உள்ளவையும் ஒன்றை ஒன்று அறியாமல், ஊடறுத்துச் செல்கின்றன. ஏதோ ஒரு ஏதேட்சையான சந்தர்ப்பத்தில், இரண்டு உலக நபர்களும் சந்திக்க நேர்கின்றன. அதுதான் பேயை மனிதனும், மனிதனைப் பேயும் அறிந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும்......'

இப்படி,

கந்தசாமியும் கலக்சியையும் படிக்கும் போது எனக்கு இந்த நினைவு வந்தது...

இதில் அப்படி ஒரு சுதந்திர உலகம் உண்டு...

நாவலின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது 'உள்ளேன் ஐயா' என்பது போல ஒவ்வொரு பேஸ்புக் நிலைத் தகவல்களை பதிந்துவிடத் தோன்றும்...

கவனம் சிதறாதிருக்க அப்படியே வாசிப்பில் நின்றுபிடிப்பேன்...

வாசித்து முடித்தப் பின்னர் இந்தப் புத்தகத்துக்கு கொடுத்த முத்தத்தைக் கண்டு, என் வீட்டின் அடுக்கில் உள்ள ஏனையப் புத்தகங்கள் பொறாமைப்பட்டிருக்கக்கூடும்...

இதனை வாசிக்கின்றவர்களுக்கு நான் சொல்லும் பரிந்துரை...

புத்தகத்தை மூன்று முறை வாசியுங்கள்..

முதலில் புரிந்துக் கொள்ள...

இரண்டாம் முறை சுவைக்க...

மூன்றாம் முறை இன்னும் இன்புற...


எல்லோரும் சொல்வதைப் போல, நாவலை இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்...

அடுத்த நாவலுக்குக் காத்திருப்பு...


https://www.facebook.com/vikey.wignesh


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக